சங்ககால சமுதாய ஆதிக்கப் போக்கும்….சித்தரிப்பும்…..

0

முனைவர் செ. பொன்மலர், உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, அகஸ்திஸ்வரம்,

அறிமுகம்

“பெண்மையிலும் மென்மையுண்டு

மென்மையிலும் மேன்மையுண்டு

கண்டிடுவார் யாரோ

கண்கலங்க வைப்பது கண்ணீரோ….”

மாதர் தம்மை  இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழங்கினார் நம் தேசக்கவி பாரதியார். பெண்ணுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார் பெரியார். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா என்று பெண்பிறப்பின் மகத்துவம் பேசினார் கவிமணி. இன்னும் பலரும் பெண்ணின் பெருமை குறித்துப் பேசியுள்ளனர். நாகரிகம் தோன்றிய காலத்தில் பெண்கள்  உரிமையோடு வாழ்ந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் பெண்களின் இயங்குதளம் விரிவடையும் போது பெண் அடிமைத்தனமும் பெருகி வந்துள்ளது. பெண் சார்ந்த சிக்கல்களும் அதிகப்படியான நிலையில் வளர்ந்து விட்டன. எனவே பண்டைய இலக்கியத்தில் ஆணாதிக்க போக்குடன் கூடிய சமுதாய சித்தரிப்பு இருந்துள்ளமையை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

பெண் ஒடுக்குமுறை

பெண்ணை ஒடுக்குமுறைக்கு உட்படுத்த ஆணாதிக்க சமூகம் எடுத்துக் கொண்ட ஆயுதம் அவர்களுக்கு இயற்கையாக நிகழும் உடலியல் மாற்றங்களான உபாதைகள் ஆகும். உடலியல் மாற்றத்தால் நிகழ்கின்ற பெண் பூப்படைதல் நிகழ்வு முற்காலத்தில் எல்லா இனக்குழு மக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கால மாற்றத்தால் ஆணாதிக்கச் சமூகத்தினால் பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தகாதது என்று கூறி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் வீட்டிற்கு வெளியே தனியாக அமர்த்தப்படுகின்றனர். இதனை “மனைச் செறிந்தனளே வாணுதல்”  (புறம், 337: 6௧2) என்ற புறப்பாடல் சான்றுபகர்கின்றது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கத்தினாலும் வைதீக ஆண் சமுதாயம் பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்திலும் தான் பூப்பு என்ற செயல் தீட்டாக மாறியுள்ளது. இதன் காரணமாக தற்போது பூப்புச் சடங்கினை மிக விமரிசையாக்க் கொண்டாடும் வழக்கம் குறைந்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களுக்கு மாதந்தோறும் வருகின்ற இயற்கை உபாதைகளில் மாதவிடாய் நிகழ்வும் ஒன்று. இக்காலங்களில் பெண்களைத் தீட்டு என்று ஆணாதிக்க சமூகம் கூறி ஒதுக்கியுள்ளது. இதனால் அந்தக் காலங்களில் வீட்டில் சமைக்கும் பாத்திரங்களைத் தொடக்கூடாது கோவிலுக்குச் செல்லக்கூடாது எனவும் சங்க சமூகம் புறந்தள்ளியுள்ளது. இதனை,

“தண்ணடை மன்னர் தாருடைப் புரவி

அணங்குஉடை முருகன் கோட்டத்துக்

லன்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே”  – (புறம் . 299)

என்ற பாடல் தெளிவுறுத்துகின்றது. நெய்யிட்ட உணவை உண்ட பகை மன்னரின் குதிரைகள் எல்லாம், முருகன் கோயிலிலே புகுந்த தூய்மையற்றார், கலம் தொடுவதற்கு அஞ்சினராக ஒதுங்கி நிற்றலைப்போல அஞ்சி ஒதுங்கி நின்றன காணீர், என்று பெண்ணை உவமையாக கூறியுள்ளமையைக் காணமுடிகின்றது.

ஆணாதிக்கம்

தந்தைவழி சமூக உருவாக்கத்தின் காரணமாக பெண்களை இழிவுப்படுத்தியும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும், ஆண்கள் தங்களின் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு ஆகும். ஆனால் சங்ககாலத்தில் பெண் குழந்தையின் பிறப்பு ஆண் குழந்தையின் பிறப்பைப் போல் மகிழ்ச்சி கொடுப்பதாக இல்லை. தாயினை அழைக்கும் போது கூட புதல்வனின் தாயே என்றே அழைத்துள்ளனர். ஆண் குழந்தையின் பிறப்பு மூலமே பெண் பெருமையடைவதை,

“புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

நன்ன ராட்டிக்கு அன்றியும்”        – (அகம்.184)

என்ற அகநானூற்றுப் பாடல் சான்றுபகர்கின்றது. பெண் பத்துமாதம் சுமந்து ஆண் குழந்தையினை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகிறாள் ஆனால் அந்த குழந்தை பிறந்ததினால் தான் பெண்ணுக்குச் சிறப்பு என்று வரையறைச் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.

சங்ககாலத்தில் பெண்களுக்குப் போரில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆணாதிக்க வெளிப்பாட்டின் காரணமாக போரில் எவ்வித பங்கும் பெறாத பெண்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நன்னன் என்ற மன்னன் போரில் தோல்வியுற்ற தன் பகையரசனின் உரிமை பெண்களை அழைத்து வந்து, அவர் தம் தலைக் கூந்தலை மழித்து, அந்த கூந்தலைக் கயிறாகத் திரித்து, அந்த கயிற்றால் பகை மன்னனின் யானைகளைக் கட்டியுள்ளான். இதனை,

“……………………………. நன்னன்

கூந்தன் முரற்சியிற் கொடிதே

மறப்பன் மாதோ நின்விறற் தகைமையே”  -(நற். 270.)

என்ற பாடல் மூலம் அறியலாம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாடக பெண்ணின் தலை மயிர் மழிக்கப்பட்டு அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளமை பெண்ணிய சிக்கல்களின் உச்சமாகக் கருதலாம்.

ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் பெண் கொலைச் செய்யப்பட்ட நிகழ்வும் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. நன்னன் என்ற மன்னனின் தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து காயொன்று அருகில் உள்ள ஆற்றில் தானே வீழ்ந்து மிதந்து வர, அதனை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்நாட்டுப் பெண்ணொருத்தி எடுத்து உண்டாள். அதனைக் கண்ட நன்னனின் காவலர்கள் அவளை மன்னன் முன் அழைத்துச் சென்று நிறுத்த, அவன் தன்னுடைய காவல் மரக்காயை உண்டதினால் அவளுக்குக் கொலைத் தண்டனை வழங்கினான். தண்டனையை அறிந்த அவளுடைய தந்தை அவளின் நிறைக்கு (எடைக்கு) ஒத்த பொன் பாவையும், 81 யானைகளையும் தண்டமாக தருவதாகக் கூறிய நிலையிலும் மன்னன் நன்னன் அவளைக் கொலைச் செய்வதில் உறுதியாக இருந்தான். இதனை,

“மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை

புனற்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்

கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை

பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்

பெண்கொலை புரிந்த நன்னன் போல”       –   ( குறு.292)

என்ற பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. பெண் அறியாமல் செய்த சிறிய செயலுக்காகக் கொலைச் செய்யப்பட்ட்டுள்ளமை ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டினைக் காட்டுகின்றது.

இல்லறம்

மானுடச் சமூகமானது குடும்பம் என்ற அமைப்பினுள் கட்டுண்டு காணப்படுகின்றது. இதனுள் திருமணம், பாலுறவு, குழந்தைப்பேறு முதலிய முக்கிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இதில் பெண் இல்லத்தரசியாக விளங்குகின்றாள். இல்லத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்ந்தாலும் இல்லத்திற்குரியவளாகப் பெண் மட்டுமே சுட்டப்படுகிறாள். இல்லத்தரசி என்று கூறினாலும் கணவன், மகன், தந்தை முதலியோர்க்குப் பணிச்செய்வதே இவருடைய பணியாக இருக்கின்றது.

குழந்தைப் பேறு

சங்க இலக்கியத்தில் பெண், குடும்பத்தில் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலை. எனவே பெண் குடும்பம், வீடு என்று குறுகிய பரப்பினுள் தங்களின் புழக்கத்தை அமைத்து கொள்ள வேண்டிய சூழல். இப்பரப்பினுள் குழந்தையைப் பெறுதல் என்பது முக்கிய செயலாக கருதப்பட்டது. அவ்வாறு குழந்தையைப் பெறும் போது ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதே சிறப்பாகக் கருதப்பட்டுள்ளது. பொன் முடியார் என்ற பெண்பாற் புலவர் பெண்களின் கடமைகளாக,

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”  – (புறம். 312)

என்ற பாடல்வழி உணர்த்துகின்றார். இதில் மகனைப் பெற்றெடுத்தல் மட்டும் தாயின் கடமையில்லை. அவனைச் சமுதாயத்திலுள்ள சிக்கல்களை எதிர்கொள்ளுகின்ற வகையில் உடல்வலிமையும், மனவலிமையும் உடையவனாக வளர்த்து, சமுதாயத்திற்கு வழங்குவதும் அவளுடைய கடமையாகும். இப்பாடலின் ஆசிரியர் பெண்பாற் புலவராக இருப்பதால் என் தலைக்கடனே என்கிறார். எனவே மறக்குடியில் பிறந்த பெண்கள் அனைவரும் சமூகக் கடமையுள்ளவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளமை காணலாம். இங்கு பெண், ஆண் குழந்தைகளைப் பெற்றுத் தருகின்ற இயந்திரமாக கருதப்பட்டுள்ளமைப் புலனாகிறது.

ஆண் குழந்தையினைப் பெற்றவர்கள் இவ்வுலகில் புகழோடும்,மறுஜென்மத்தில் வாழ்கின்ற பாக்கியத்தையும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை சங்க கால மக்களிடம் இருந்துள்ளது. இதனை,

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறுஇன்று எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர்”

என்ற பாடல் சான்று பகர்கின்றது. பகைவர்கள் விரும்பும் குற்றமற்றஅழகினையுடைய ஆண் குழந்தைகளை உடையோர், இவ்வுலகத்தே புகழோடும்விளங்குவர். அதோடு மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் என்று கோசிகன் கண்ணனார் என்ற கவிஞர் பாடியுள்ளார். இதிலிருந்து ஆண் குழந்தைப்பேறு கிடைப்பதைப் பாக்கியமாக பெண்கள் கருதும் அளவிற்கு ஆணாதிக்கச் சமூகம் நம்பிக்கையினை விதைத்துள்ளமையைக் காணமுடிகிறது.

குழந்தைப்பேறு சில பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளமையினை சங்க இலக்கியங்கள் பாறைச்சாற்றுகின்றன. பரத்தையர் ஒழுக்கம் என்ற பண்பாடு சங்ககாலத்தில் இருந்துள்ளது. இத்தகைய பரத்தையர் சமூக பெண்களுக்குக் குழந்தை பெற்றுத்தரும் தகுதியில்லை என்று ஆணாதிக்கச் சமூகம் வரையரை வகுத்துள்ளது. ஆனால் பரத்தையும் ஒரு பெண் தான் அவளுக்கும் எல்லா விதமான உணர்வுகளும் உண்டு. ஆணாதிக்கச் சமூதாயம் பரத்தையரை தங்களின் தேவைக்கான நுகர்பொருளாகவே, அடிமையாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய வரைமுறையினை உருவாக்கியுள்ளனர். பரத்தையும் தலைவியைப் போன்று குழந்தையின் மீது தீரா ஆசையுடையவளாக இருந்துள்ளாள். எனவே தலைவனின் புதல்வனைக் கண்ட போது அவனை அணைத்து இள்புறுகிறாள். இதனை,

“யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்

தேர்வழக்கு தெருவில் தமியோற் கண்டே

கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்

காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்

பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை

வருகமாள, என்உயிர் எனப் பெரிது உவந்து”     – (அகம். 16)

என்ற காகலாசனார் பாடல் மூலம் அறியமுடிகிறது. எல்லோரும் விரும்புகின்ற பொற்றொடி அணிந்த புதல்வனைச், சிறுதேர் ஓட்டி விளையாடுகின்ற தெருவிலே நின்றதைக் கண்ட காதல் பரத்தையானவள், இவன் காண்பதற்குத் தலைவனைப் போலவே இருக்கிறான் என்று போற்றினாள். எவரும் காண்பதற்கு இல்லாமையினால் துணிந்து அவனருகே சென்றாள். மிகுந்த மகிழ்ச்சியுடன் என் உயிரே என்னிடம் வருவாயாக என்று மார்போடு தழுவிக் கொண்டாள். பெண்களுக்கே உரிய தாய்மைப் பேற்றைப் பரத்தையர் சமூக மக்கள் ஆணாதிக்கச் சமூதாயத்தால் இழந்து தவிக்கின்ற ஆழ்மன ஓட்டத்தை இப்பாடல் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு பெண் தாய்மையடையும் போதுதான் முழுமை பெறுகிறாள். தாய்மையடைவது மறுக்கப்படும் போது பெண்ணிய சிக்கலாக மாறிவிடுகிறது.

விருந்தோம்பலும் சிக்கலும்

பழந்தமிழரின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெறுகின்றது. இவ்விருந்தோம்பலைப் பெண்களே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பெண்களைப் புற வெளியில் இயங்க விடாமல் வீட்டுக்குள்ளே அடக்கி வைப்பதற்கு அவர்களுக்கென்று சில பணிகளை வரையறை செய்தனர். இல்லத்தரசியின் கடமைகளாகத் தொல்காப்பியர்

“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்”  ( தொல்.கற்பு.1098:3)

என்கிறார்.  சங்ககால  குலமகளிர் தங்களின் வீட்டிற்கு வருகின்ற விருந்தினருக்கு அமிழ்தம் போன்ற உணவினை மகிழ்ந்து வழங்கியுள்ளனர்.

“அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கைமகளிர்”  -(புறம் )

என்ற பாடலின் முலம் மகளிரின் விருந்தோம்புகின்ற இயல்பினை அறியலாம். மேலும் சங்க மகளிர் தன்னுடைய இல்லத்திற்கு வருகின்ற விருந்தினரை மிகவும் முகமலர்ச்சியோடு உபசரித்துள்ளனர். தம்மிடம் உணவுப் பொருட்கள் இல்லாத வேளையில் விதைப்பதற்கு வைத்திருந்த தினையினை உரலில் இட்டு குத்தி உணவுத் தயார் செய்து உபசரித்துள்ளனர். இதனை

“வரகும் தினையும் உள்ளவை எல்லாம்

ரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்

குறுத்துமாறு எதிர்ப்பை பெற அமையின்

குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து

சிறிது புறப்பட்டன்றோ விலள்”                  – (புறம். 333 )

என்ற பாடல் சான்றுரைக்கின்றது. இன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெண்களிடம் இத்தகைய விருந்தோம்பல் பண்பாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவுரை

ஆதிக்கம் நிலைத்தால்

சாதிக்க முடியுமா!

சித்தரிப்புகள் வலையானால்

வாழத்தான் முடியுமா…!

காதலும், வீரமும் இரு கண்களெனக் கருதப்பட்ட காலம் சங்ககாலம். ஆணாதிக்க சமூகத்தின் உருவாக்கமே பெண்ணடிமைத்தனத்தின் தொடக்கம் என்று கூறலாம். சங்க காலத்தில் சமுதாய அமைப்பு போற்றதக்கதாய் இருந்தாலும் பெண்களின் நிலை சிக்கலுக்குரியதாகவே இருந்துள்ளது என்பதை சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

துணைநூற் பட்டியல்

  1. செயபால்.இரா ,    அகநானூறு ,  நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்(பி)லிட்  அம்பத்தூர்                    சென்னை 98,          முதற் பதிப்பு – 2004
  2. சோமசுந்தரனார், பொ.வே குறுந்தொகை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமி, திருநெல்வேலி – 6      சென்னை 1,                    முதற் பதிப்பு – 1965
  3. சோமசுந்தரனார், பொ.வே நற்றிணை,              திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .திருநெல்வேலி – 6, சென்னை, 1   முதற் பதிப்பு – 1961
  4. புலியூர்க் கேசிகன் புறநானூறு பாரி நிலையம்              184, பிராட்வே.; சென்னை – 600 108      முதற் பதிப்பு –      2011

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *