காலங்களில் நிகழ்காலமே வசந்தம்.

” என்னங்க… கொஞ்சமாவது ஓய்வு எடுத்தீங்களா….” என் மனம் என்னைத் தட்டி எழுப்பியது.

“ம்ம்ம் ….” சற்றே முனகிக்கொண்டே எழுந்தேன்…” தூக்கம் சரியாக இல்லை.. தூங்கும் போதுகூட நீங்க தொடர்ந்து எதையாவது செய்து கொண்டிருந்தீர்களானால் நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவது..”  என்  மனத்தைச் சற்றே சாடினேன்.

“எனக்குத்தான் நீங்கள் பிறந்ததிலிருந்து உங்கள் கடைசி நேரம் வரை ஓய்வே கிடையாதே… நான் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் கதி என்னாவது?”  என் மனம் நக்கலாகச் சிரித்தது.

உண்மைதான். நாம் தூங்கும்பொழுது கூட நமது மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கின்றது. நமது பழைய செயல்கள், நமது கடந்தகாலத் துன்பங்கள், நமது நிறைவேறாத ஆசைகள், நம்முடைய தோல்விகளின் நினைவுச் சிதறல்கள் உள்ளிருந்து நமக்கு மகிழ்ச்சியைத் தந்தவண்ணமோ அல்லது துன்பங்களைத் தந்த வண்ணமோ இருக்கின்றன.  இதை நம்மால் நிறுத்த முடியுமா? இதிலிருந்து விடுபட்டு நாம் வாழ முடியுமா?

“முடிந்து போன காலம் ஒரு சரித்திரம். வருங்காலம் ஒரு மாயை. நிகழ்காலம் ஒரு அன்பளிப்பு.” என்ற வார்த்தைகளை உணர்வது மிகவும் அவசியம். பல பேர்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் தங்களுடைய பழைய காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக இருக்கின்றார்கள். முடிந்தவைகளை முடிந்தவைகளாகக் கருதாமல் அவைகளின் சரித்திரத்தை பொன்னேடுகளில் போற்றி நித்தம் ஒரு முறை வழிபட்டுக்கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு சிறிய துன்பம் வரும் பொழுதும்  தங்களுடைய பழைய சரித்திரத்தை மீண்டும் மீண்டும் படித்து அந்தத் துன்பங்களின் நாளேடுகளில் தங்கள் பதிவுகள் எத்தனை முறை வந்திருக்கின்றன என்பதை நினைவுகூர்ந்து தங்களுடய நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி தங்களுடைய புதிய எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் தடைக்கற்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறு பழமையில் பொழுதைக் கழிப்பவர்கள் தங்கள் தோல்விகளுக்குத் தாங்களே முகாந்திரமாக இருந்து வருகின்றனர்.

நான் எனது மனத்திடம் கேட்டேன் “ஏன் நீ பழைய நினைவுகளை பிடித்துக்கொண்டு கட்டி அழுகின்றாய்? அவைகளை உதறி எறிய மாட்டாயா?”  என் மனம் என்னைக் கூர்ந்து நோக்கியது.

“என்ன சொன்னீங்க?  நான் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்று சொல்கின்றேனா? சற்றே யோசித்துப்  பாருங்கள்.நீங்கள் தான் அவைகளைக் கட்டி அணைத்து உங்களையே வதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அன்றே சொன்னேனே. எனது கடிவாளம் உங்கள் கையில் இருக்கின்றதென்று.”

நான் சற்றே யோசித்தேன். அது மீண்டும் தொடர்ந்தது.  “நீங்கள் ஒரு பலமான யானையைப் போல. உங்களிடம் எவ்வளவு சக்தி இருக்கின்றதென்று உங்களுக்கே தெரியாது. ஆனால் எப்படி ஒரு யானை ஒரு சிறிய கயிற்றினால் தூணில் கட்டப்பட்டிருக்கின்றதோ அதுபோல் நீங்களும் உங்கள்  பழங்காலத்தோடு கட்டப்பட்டிருக்கின்றீர்கள். அதை அறுத்து எறிந்துவிட்டு ஒரு சுதந்திரனாக மாறுங்கள். உங்கள் பழமையின் வலியும் தெரியாது. அதன் நினைவுகளும் வாட்டாது.”

என்னுடைய மனதின் வாதம் எனக்குச் சரியாகப் புரிந்தது.

நம்முடைய பழைய காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. அதை நிச்சயமாக மனதில் கொள்ளுதல் அவசியமே. ஆனால் அந்தப் பாடங்களுக்கு அப்பால் முடங்கிக்கிடக்கின்ற சிறிய தகவல்கள், அனுபவங்கள், உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள், அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் போன்ற பல நமக்கு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையற்றவை..எனவே அவைகளுடைய பாரத்தை நாம் சுமக்காக் கூடாது. அவை நம்மைப் பின்னோக்குப் பாதைக்குத் தள்ளிவிடும்.

தற்போதைய நிலையில் பல வெற்றிகளை சாதித்துக் கொண்டிருப்பவர்களும், சாதனைகளை படைத்துகொண்டிருப்பவர்கள், விழிப்புணர்ச்சியுடன் வருங்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களும் தன்னுடைய நிகழ்காலத்தின் பொன்னான நேரங்களை வருங்கால எதிர்பார்ப்புகளுக்கு  அடமானம் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வருங்காலத்திற்கான விழிப்புணர்ச்சி மிகவும்  தேவை. அதற்குத்  தேவையான அடித்தளங்களை உருவாக்குவதும் நிகழ்காலத்தின் ஓர் முக்கிய கடமை.

ஆனால்  நிகழ்காலத்தின் கடமைகளையும், அனுபவங்களையும், அதிசயங்களையும் நாம் வருங்காலத்திற்கான எதிர்பார்ப்புக்களுக்காக அடமானம் வைக்கக்கூடாது.

நிகழ்காலம் நம்மிடமிருந்து செயலை எதிர்பார்க்கின்றது. நிகழ்காலம் நமக்குக் கொடுக்கும் நேரத்தை புத்திசாலித்தனமாகவும் திறனுடனும் உற்பத்திப் போக்குடனும் செயல்படுத்த விழைகின்றது;. எனவே அதை உணர்ந்து நாம் செயல் பட வேண்டும்.

வருங்காலம் பல பேருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றது. வருங்காலம் பலருக்கு ஒரு இருள்படர்ந்த காடாகத் தென்படுகின்றது. வருங்காலம் பலருக்கு அச்சத்தோடு கலந்த ஒரு நிலையாமையை க்குறிக்கின்றது. இந்த அச்ச உணர்வுகள், நமது நிகழ்காலத்தின் விழிகளை மருள வைத்து அதன் பார்வையிலிருந்து நிகழ்காலக் கடமைகளை மறைத்து விடுகின்றது. அந்த அச்ச உணர்வு நிகழ்காலத்தில் நமது நடையில் தளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

எனவே வருங்காலத்தை சற்றே அமைதியாகக் காத்திருக்கும்படிச் செய்துவிட்டு நாம் நிகழ்காலத்தை நல்ல முறையில் அமைப்பதை கருத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.

“நான் கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன். ” என் மனது எனக்கு தைரியம் சொன்னது.

நீங்களும் உங்கள் மனத்தைக் கேட்டுப்பாருங்களேன்..

நிகழ்காலத்தில் நல்ல முறையில் வாழ்ந்து பார்க்கலாமே.. !

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *