தி.இரா.மீனா

பெண் வசனக்காரர்கள் :  நான் நான்  என்பதே  ஆன்மாவின்   மறுப்புதானே?

சாதிகளற்ற சமுதாயம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இருபாலாரும் சமம் என்ற கருத்து நிலைப்பாடு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவ சாரணர்களின் விருப்பமாக இருந்து அது செயல்படுத்தவும்பட்டது என்பதற்குச் சான்றாக பெண் வசனக் காரர்களின் பங்கையும் வெளிப்பாட்டையும் காட்ட முடியும். சமுதாய நலன் மற்றும் வேதாந்த நிலைகளில் பெண் தன் சிறப்பை வெளிப்படுத்த முடிந்தது பெண் வசனக்காரர்களின் மிகப் பெரிய வெற்றியாகும்.

கன்னட இலக்கிய, பக்தியுலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த ’வசனக்காரர்கள்’ என்ற அடைமொழிக்குரியவர்கள் வீர சைவர்களாக அமைந்து ’வசனங்கள் ’மூலம் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். வீரசைவ நெறியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் தமக்குள் சாதி, குலம் போன்ற பாகுபாடுகளைப் பார்க்கக் கூடாது என்பது வீரசைவத்தின் அடிப்படையான கொள்கையாகும். ஒருமுறை வீரசைவரான பிறகு அவர்கள் எல்லோரும் சமம். அதனால் பக்திக்கு முதலிடம் தந்து  அறிவையும் தொழிலையும் வீரசைவம்  பின்னிறுத்தியது. சாதி, பொருளாதார வேறுபாடுகள் இல்லாத தன்மை, பெண்ணை மாயையாக விரட்டாத உயர்வு, அவர்களுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய தன்மை ஆகியவை வீர சைவத்தின் தலைசிறந்த இயல்புகளில் முக்கியமானவையாகும்.

வசனக்காரர்கள் சொல்லவந்த  கருத்துகளை வசனங்கள் என்ற வடிவில் வெளிப்படுத்தினர். வசனம் என்பது உரைநடை மற்றும் பாடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நடைகொண்டது. கருத்துகளைச் சுருக்கமாகவும், எளிமையாகவும் நேரடியாகவும் கூறுவதான முறையிலமைந்தது. அறிவை வளர்க்கும் முயற்சியை விட, மனத்தை அறியும் முயற்சியை வெளிப்படுத்துவதுதான் அவற்றின் சிறப்பாகும். முற்போக்கான சிந்தனை வெளிப்பாட்டு நிலையில் பெரும்பாலான வசனங்கள் இருப்பதும் அவை நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துவதும் குறிப்பிடத்தக்கது.

பசவேசருக்கு முன்னாலேயே இந்த இலக்கிய வகை இருந்தாலும் அவரே இது வளரக் காரண கர்த்தாவாக இருந்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாதி வேறுபாடுகளால்தான் சமுதாயம் சீரழிகிறது என்ற கருத்தில் அவர் உறுதியாக இருந்ததால், எல்லாத் தரப்பு மக்களையும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேர்ப்பதன் மூலம் மனிதர்களிடையேயான வேறுபாடுகளை நீக்க முடியும் என்று நம்பினார். அதனால் அனுபவ மண்டபம் [திருச்சபை] என்ற அமைப்பு அவரால் உருவாக்கப்பட்டது. அதில் விறகுவெட்டி, படகோட்டி,  விவசாயி, மருத்துவன், மாடு மேய்ப்பவன் என்று அனைவரும் உறுப்பினர்களாக இருந்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் அவர்களிடையே இல்லை. ’செய்யும் தொழிலே தெய்வம்’’ [காயகவே கைலாசா] என்ற அடிப்படையில் எல்லாப் பணியும் சமமானதாகக் கருதப்பட்டதும் வீர சைவத்தின் சிறப்பம்சமாகும்.

தவிர ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்த பெண்ணின் தன்மையைப் பசவேசரும் பிற வசனக்காரர்களும் தம்முடைய அணுகுமுறையால் மாற்றினர். “பெண் மாயையல்ல. பார்ப்பதற்கு இரு கண்கள் தேவையானதைப் போல வாழ்வதற்கு ஆண்-பெண் என்ற இருவரும் வேண்டும். அவர்களிடம் காணப்படும் வேறுபாடு என்பது புறத் தோற்றத்தில் மட்டும்தான்’ என்று வலியுறுத்தி தம் அனுபவ மண்டபத்தில் பெண்களைப் பங்கேற்கச் செய்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் திருச்சபை ஒருவரையொருவர் விமரிசிக்கவும் குறைகளை வெளிப்படையாகச் சொல்லி மனிதர்கள் தம்மை மாற்றிக்கொள்ளவும் வழி வகுத்தது.

அனுபவ மண்டபக் கூட்டங்களில் கலந்து கொள்வது என்பதாக மட்டுமில்லாமல் விவாதங்களில் பங்கேற்பது, பணிகளில் உதவுவது, வாழ்வனுபவங்களை வசனமாகப் படைப்பது என்று பெண்களின் பங்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஏறக்குறைய முப்பத்து மூன்று பெண்கள், வசனக்காரர்கள் என்ற அடையாளத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களைப் படைத்துள்ளனர். அக்கமாதேவி, முக்தாயக்கா, பொந்தாதேவி, லக்கம்மாள், மூலிகே மகாதேவி, லிங்கம்மா, துக்களே,  சத்யக்கா, காளவ்வெ என்று ஒரு பெரிய பட்டியலை பெண் வசனக்காரர்களுக்குச் சானறாகக் காட்ட முடியும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரையுண்டு.

பெண் வசனக்காரர்களில் அக்கமாதேவி, மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் சிறந்த ஞானியாகவும் சிவபக்தியின் அடையாளமாகவும் இருந்தார். விருப்பமின்றித் திருமண வாழ்வில் ஈடுபடுத்தப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி அல்லமபிரபு, பசவேசர் ஆகியவர்களோடு சேர்ந்து அனுபவ மண்டபத்தில் பங்கேற்றுச் சிவனின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்தி, இறைவனோடு கலந்தார். இளம் பெண்ணாக இருக்கும் அவரை அல்லமாபிரபு, அனுபவ மண்டபத்தில் சேர்த்துக் கொள்ளும் போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அக்கம்மாவின் பேச்சுத் திறனுக்கும், சிந்தனை ஆற்றலுக்கும்  சான்றாகும்.

உருவமற்ற ஒருவனோடு உருவமான ஒன்று எப்படிச் சேரமுடியும் என்ற பிரபுவின் கேள்விக்கு, ”சந்தன மரம் துண்டு துண்டாக வெட்டப்படும் போது அதன் வாசனை குறையுமா? தங்கத்தை அறுத்துச் சுடும்போது அது அதன் பொலிவை இழக்குமா? கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டு சுடப்படும் போது அதன் சுவை குறையுமா? பாம்பின் விஷப் பல்லைப் பிடுங்கிய பிறகு யாரும் அதோடு விளையாடலாம். சதையோடு இருக்கும் தொடர்பு சரியாகப் புரிந்துகொள்ளப்படுமென்றால் அது சரியானது தான். தாய் அரக்கியாக மாறினால் அவளுடலின் உணர்ச்சிகளும் அரக்கத் தன்மை உடையதாகிவிடும். விருப்பப்படுகிறவனுக்கு உடல் உண்டென்று நினைக்கக் கூடாது. கடந்து போனவற்றைச் சொல்லி என் முகத்தில் அறைந்தாலும் இழப்பு உங்களுக்குத் தான். என்னைக் கொன்றாலும் அவன் மீது அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டேன். அவன் இளமையானவன், உருவற்றவன், இறப்பில்லாதவன், அளக்க இயலாதவனாகிய சென்ன மல்லிகார்ச்சுனன், என் கணவன்”  என்று சொல்லிக் கடவுளோடு  தனக்குள்ள உறவை வெளிப்படுத்துகிறாள். எளிமையான உவமைகள் கொண்டு வாழ்வின் தன்மையையும் வாழ்வின் பொருளையும்

“மலையில் வீடுகட்டும்போது
காட்டு விலங்குகளைப் பார்த்து பயப்படுதல் கூடாது
கடற்கரையில் வீடு கட்டும்போது
அச்சம்தரும் அலைகளைப் பார்த்து பயப்படக் கூடாது
சந்தையருகே வீடுகட்டும்போது  சத்தம் கேட்டு பயப்படக் கூடாது
சென்னமல்லிகார்ச்சுனா
உலகத்தில் பிறந்த பிறகு
புகழுக்காகவோ, குறைகளுக்காவோ  அமைதியை இழக்கக் கூடாது”

என்று ஒரு வசனத்தில் வெளிப்படுத்துகிறாள்.

அஜகணன் என்னும் சிவயோகியின் தங்கை முக்தாயக்கா. இளம் வயதில் பெற்றோர் இறந்துவிட அஜகண்ணன் அவளுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருக்கிறான். திடீரென்று அவன் இறந்துவிட, அந்தச் சோகம் அவளை வாட்டுகிறது. எதிலும் விருப்பமின்றி எந்த நேரமும் வருந்திக்கொண்டிருக்கும் அவளை வசனக்கார மும்மூர்த்திகளில் ஒருவரான அல்லமபிரபு பார்க்கிறார். ஒருவரின் முயற்சியாலும் பயிற்சியாலும்தான் மெய்யுணர்வு பெற முடியும் என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறார்.

மனம் குழம்பிக் கிடக்கும் அந்த நேரத்திலும் அவள் அல்லமபிரபுவுடன்  வாதம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். சரியான பயிற்சி செய்ய ஒருவருக்குக் கண்டிப்பாக ஒரு குரு தேவை என்கிறாள். வழிநடத்திய  தனது ஆசானும் அண்ணனும் இல்லாத வருத்தத்தை வாதமாக்குகிறாள். சிறிது கால கட்டத்திற்குப் பிறகு ஓரளவு ஆறுதலடைந்து வீரசைவப் பணிகளில் ஈடுபடுவதாக அவள் வரலாறு அமைகிறது. வேதாந்தமும் அதோடு மனித மனநிலையும் பொருத்தப்படுவதாக அவள் வசனங்கள் அமைந்துள்ளன. வாழ்வின் மிக உயர்ந்த தத்துவத்தை எளிமையாக அவள் சொல்லிய விதம் கீழ்வரும் வசனத்தில்:

 “நான் பேசமாட்டேன் என்னும்போதே
அதில் பேச்சிருக்கிறது
நான் செயல்படமாட்டேன் என்னும்போதே
அதில் செயலிருக்கிறது
நான் சிந்திக்கமாட்டேன் என்னும்போதே
அதில் சிந்தனையிருக்கிறது
எனக்குத் தெரிந்தது மறந்துபோனது என்னும்போதே
அதில் அறிவும் மறதியும் தெரிகிறது
உடலைத் துறந்தேன் என்னும்போது
உடலோடான நெருக்கம் அதிகமாகிறது
நான் நான் என்னும்போதே
அது ஆன்மாவிற்கு மறுப்பாகிறது.
ஓ..அஜகண்ணா! “

என்ற வசனம் மேலோட்டமாக மிகச் சாதாரண சொற்களைக் கொண்டு அமைந்துள்ளது போலத் தோன்றினாலும் அறிவுத் தெளிவும் ஆழ்ந்த பார்வையும் வெளிப்படுகிறது. இன்னொரு வசனத்தில் அறிவுப் பயிற்சிதான் அனைத்துக்கும் தூண்டுகோல் என்று உளவியல் இன்று சொல்வதை அன்றே வசனமாக்கியிருக்கிறார்.

“தீய சொற்களைப் பேசக் கூடாது;
தீய வழிகளில் நடக்கக் கூடாது.
பேசினால் என்ன ஆகும், பேசாவிட்டால் என்ன ஆகும்?
உறுதிமொழியை மீறாமல் செயல்படுவதே
அறிவின் பயிற்சியில்தான்
ஓ..அஜகண்ணா!“

ஒருமை அவர் சார்ந்த வாழ்வு. அந்தச் சிந்தனையில் இன்னொரு வசனம்

“இருமையை ஒழித்துவிட்டோம்
ஒருமையை நிறுவியிருக்கிறோம் என்று சொல்பவர்கள்
கனவு காணும் குழந்தைதான்
அவர்கள் அதைப்பற்றிப் பேசும்வரை
இருமையாளர்கள் அன்றி வேறென்ன?”

என்று அமையும் வசனமும் எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதாகும். பெண்கள் அத்வைத தத்துவார்த்தம் சார்ந்திருப்பது என்பது மிகச் சிறிய அளவில் என்றிருந்த காலக்கட்டத்தில், முக்தாயக்கா அவ்வழி வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்தக்கி மாரையன்  என்பவனின் மனைவி, லக்கம்மாள். அவன் பசவேசரின் வீட்டில் வீரசைவர்களுக்கு அரிசியைப் படியாலளந்து கொடுக்கும்போது கீழே சிந்தும் அரிசியைத் திரட்டிச் சுத்தம்செய்து வீட்டுக்குக் கொண்டுவருவான். அதுவே அவர்களது உணவு. ஒரு நாள் அவன் தங்களுக்குத் தேவையானதற்கு அதிகமாக அரிசியை வீட்டிற்குக் கொண்டு வந்தபோது லக்கமாள் சிவத் தொண்டர்களுக்கு பற்று இருக்கக் கூடாதென்று சொல்லி அதை மீண்டும் கொண்டு போய்வைத்துவிட்டு வரச்சொல்கிறாள். அவனும் உடன்படுகிறான். நிகழ்காலமே வாழ்க்கை என்பதும், சொர்க்கம் என்பது உழைப்புத் தான் என்பதையும் உணர்த்தும் அவள் கருத்து ஒரு வசனமாகிறது.

“செய்யும் வேலையும் சேவையும்
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்
என்று நினைக்கிறாயா?
உன்னுடைய கூலி மோட்சமென்று நினைக்கிறாயா
உழைப்பில் கவனம் வேண்டும்
எதிர்காலக் கனவு வேண்டாம்
இறந்தகால நினைவு வேண்டாம்
மாரய்யாபிரியா அமலேஸ்வரலிங்கா
எங்கிருக்கிறானோ அதுவே சொர்க்கம் “

என்ற மிக எளிமையான வசனம் மூலம் நிகழ்கால வாழ்வின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது. இது காலங்கள் கடந்தும் நிற்கும் வசனமாகும்.

வெற்றிலை— பாக்கு விற்கும் ஹடபதா அப்பண்ணாவின் மனைவியான லிங்கம்மா, அடிப்படைக் கல்வி இல்லாத போதும் தத்துவார்த்தமும் தெளிவும் உடையவள். தன் சம காலத்து வசனக்காரர்கள் போற்றுமளவிற்கு அவள் வசனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருள் நிறைந்ததும் தெளிவானதாகவும் உள்ள ஒரு வசனம் இங்கே.

“நிலையற்ற மனிதர்களே உங்கள் மனத்தைப்
புனிதப்படுத்திவிட்டதாகச் சொல்கிறீர்கள்
ஆனால் உடலை உருக்கியும்
மனத்தைத் துன்புறுத்தியும்
உங்கள் வழியறியாமல்..
சந்தேகத்தில் குழம்புகிறீர்கள் .
மனத்தை எப்படிப் புனிதப்படுத்துவது
என்று சொல்கிறேன் கேளுங்கள்
தண்ணீர் காற்றால் குலையாததைப் போல
சூரியன் மேகத்தால் மூடப்படாததைப்போல
கண்ணாடி உரசி சுத்தம் செய்யப்பட்டது போல
மனம் சுத்தம் செய்யப்படாத வரை
கடவுளைக் காண முடியாது
அப்பண்ணாபிரியா சென்னபசவண்ணா”

என்பது அவ்வசனமாகும்.

காஷ்மீர் அரச பரம்பரையைச் சேர்ந்த மாரய்யா- மொலிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச் சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்ற வரை சிவசாரணர்களுக்கு உணவு படைத்து, அன்பு காட்டி வாழ்ந்தனர். மொலிகே மகாதேவி, அறுபதுக்கும் மேலான வசனங்களைப் படைத்துள்ளார்.

“பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
செயல்படுதலும் அறிவும் இணையானவை
இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா”

என்று அறிவும் அதன் பின்னணியிலான செயலும் குறித்த சிந்தனாவாதத்தைப் புரிய வைக்கிறார்.

காமீரில் உள்ள மண்டாவ்பூர் அரச பரம்பரையில் வந்த பொந்தாதேவியின் இயற்பெயர் நிஜாதேவி. இளம் வயதிலிருந்தே சிவபக்தையான அவள் கல்யாண் வந்தாள். அவளுடைய பக்தியால் கவரப்பட்ட சிவன், உள்ளம் மகிழ்ந்து அவருக்கு ஒரு  போர்வை [பொந்தே] தந்ததாகவும் அது முதல் அவர் பொந்தாதேவி என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. மனிதர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அதைக் காட்டும் ஒரு வசனம் கீழே. எல்லா இடங்களிலும் அலைந்து திரிபவன் என்ற பொருளில் ’பிடாடி’ என்பது இவர் முத்திரையாகும்.

’வெற்றிடம் என்பது கிராமத்திற்குள் இருக்கிறதா?
வெற்றிடம் என்பது கிராமத்திற்கு வெளியில் இருக்கிறதா?
அந்தணர்பகுதி ஒரு கிராமத்திற்குள்ளா?
தாழ்ந்தவர்பகுதி கிராமத்திற்கு வெளியிலா?
எங்கே நீங்கள் போனாலும் வெற்றிடம் என்பது அதேதான்
சுவரைப் பிரிப்பதால்தான்
உள்வெற்றிடமும் வெளிவெற்றிடமும்
எங்கிருந்து பார்த்தாலும்
உங்கள் அழைப்புக்குச் செவிகொடுப்பது பிடாடிதான்”

என்பது அவ்வசனம். இன்றும் கன்னட மக்களால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் வசனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் ஆன்மாவின் வெளிப்பாடு என்ற நிலையில்தான் அவர்களால் வசனங்கள் படைக்கப்பட்டுள்ளன. நவீன சிந்தனையாளர்கள் சொல்லும் கருத்துகளையும் கூட அந்தக் காலக்கட்டத்திலேயே வசனங்கள் வெளிப்படுத்தியிருப்பது, அவர்களின் சிந்தனை ஆளுமையைக் காட்டுகிறது.

                     ——————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *