-விவேக்பாரதி

ஸ்ரீதர ஐயாவாள் கதை

காப்பு

கட்டளை யிட்டுக் கவியெழு தென்ற கவிஞரிடம்
தட்டா துடனே தனதொரு தந்தம் தனையுடைத்து
விட்ட யிடத்தை விரைவி லெழுது விநாயகனே
குட்டிக் கவிஞன் குறிக்கும் கதையில் குறையகற்றே!

கதை

திருவிசை நல்லூர் திருநக ரில்பொற் றிருச்சடையர்
உருவரு வாகும் உடையவர் மீதே உளமுருகித்
தெருவினில் பாடல் திரட்டு படைக்குந் திறமையுடை
ஒருவ ரிருந்தார் உயர்ஶ்ரீ தரனெனும் உண்மையரே! (1)

சிவன்புகழ் பாடும் தொழிலுடை யார்!பசிச் சீற்றமெனும்
அவமது நீக்க அடுப்பெறிப் பார்!வரும் அன்பருக்குச்
செவியும் வயிற்றையும் சேர்த்து நிறைக்கும் திருத்தொழிலே
சிவத்தொழி லென்று செலுத்திவந் தார்தன் சிரத்தையையே! (2)

ஊரார் புகழ உலகோர் புகழ உறுதியுடன்
பேரார்ந் திருந்த பெரியவர் செல்வம் பெரிதிழைத்துத்
தாரா ளமெனத் தணித்தார் பசிப்பிணி! தம்செயலால்
நேரா யிறையவன் நெஞ்ச மடைந்தார் நிகழ்வினிலே! (3)

ஐயர் பொறுமைக் களவையும் பக்தியின் ஆழத்தையும்
மெய்யாய்க் கணிக்க மெலிதாய் யொருசிறு நாடகத்தை
உய்வாய் எனச்சிவன் உள்ளத் தொருநினை வூன்றியதும்
செய்வோம் எனப்பொழு தங்கே யிறங்கித் திகழ்ந்ததுவே (4)

அதன்படி அன்றோர் அதிகா லைதனில் அரும்புதல்வர்
முதற்கட னாகிய முன்னவர்க் காற்றும் முழுக்கருமம்
விதிப்படி செய்யும் விசேஷத் திருநாள் விளைந்ததுவே
அதுபொருட் டையரும் ஆறடைந் தாருடல் ஆடிடவே (5)

மாமியும் போகும் வழியினில் நாமம் மடுத்துவிட்டால்
சாமியென் றங்கே ஜகம்மறக் காதீர் சிரார்தமுண்டு
தாமதம் வேண்டா தெளிநீர் குளித்துச் சிரத்தையுடன்
நாமிதுச் செய்வோம் நலமென அன்பில் நவின்றனளே! (6)

சரிசரி யென்றநம் ஸ்ரீதரர் ஆற்றில் திகழ்ந்திடும்போழ்
தரசிவ என்னும் அரவம் ஒலிக்க அகம்மறந்தார்
உரியநன் நேரம் உருண்டிட புத்தி உதித்தவராய்
விரைந்து குளித்து விசுக்கெனச் சென்றனர் வீட்டினுக்கே! (7)

சிந்தனை எங்கும் சிவன்புகழ் மட்டும் ஜனித்திருக்க
வந்திருந் தங்கு வழங்கினர் பிண்டம் வழங்கியதும்
முந்தி உணவிட முன்வந் தெழுந்த முதியவர்தாம்
அந்தணர் தம்மை அகன்றுண விட்டார் அடுத்தவர்க்கே! (8)

பித்துரு தோஷம் பிழையெனச் சொல்லிப் பிழையகற்ற
சுத்தமே வேண்டும் சுடர்விடும் கங்கைச் சுனையினிலே
இத்தரு ணம்நீர் இதன்பழி நீங்க இனிமுயல்வீர்
சித்தம் சினந்து திகழ்ந்தவர் அந்தணர் செப்பினரே! (9)

தங்கைப் பொருளால் தரணியோர் கொண்ட தணற்பசியை
மங்க இயற்றிய மாதவம் செய்து வளமையெலாம்
அங்கே இரைத்தவர் அன்றுதங் கைபொருள் அற்றமையால்
கங்கைக் கரைதனைக் காணா நிலையாற் கலங்கினரே! (10)

தன்னிலை மாறிச் சிவநினை வாலே திதிமறந்து
முன்னிலை தீர்ந்த முதியவர் ஏங்கி முனகினராய்த்
துன்ப முழன்று துயருடன் வீழ்ந்து துடிதுடித்து
அன்பரின் அன்பரை ஆதியை எண்ணி அழுதனரே! (11)

கிணற்றுக் கருகே கிடந்து சுருதிக் கிளரிசையும்
உணர்ந்து படித்தே உயர்த்திய பாட்டும் உணர்ச்சியுமாய்
மணத்தை இழந்த மலர்த்தா ரெனவவர் மண்விழுந்தார்
அணங்கும் தலைவரும் அந்நிலை கண்டே அறிந்தனரே! (12)

பக்தியின் ஆழமும் பாசமும் கண்ட பரசிவனார்
அக்கணம் அங்கே அடியினில் தண்ணீர் அமைகிணற்றில்
சக்தியின் ஆற்றல் சடுதியில் பாய்ச்சச் சரசரென
அக்கிண றான தமுதகங் கையென ஆர்ப்பரித்தே! (13)

நேசமும் நெஞ்சினில் நேர்மையும் தங்கி நிலைத்துவிட்டால்
வாசலில் மாயம் வழங்கும் இறைவன் வருவனெனப்
பூசைகள் ஆகமம் புண்ணிய நூல்கள் புகன்றமெய்யை
ஈசனின் ஆடலை யிங்குகண் டாருணர்ந் தேத்தினரே! (14)

ஸ்ரீதரர் ஈசன் சிறப்பை உணர்ந்து சிலிர்த்ததுபோல்
கீத விரும்பிகள் கேட்கச் சிலிர்ப்பு கிடைத்திடவும்
நாதன் இருக்கும் நலமுடைப் பாடல் நமக்களித்தார்!
ஆதலி னால்நம் அருஞ்செயல் ஈசன் அருட்தடமே!! (15)

-விவேக்பாரதி
05.11.2018

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *