புகையை அறிந்தவன், அக்னியை அறிந்தவனா?

2

-தி.இரா.மீனா

ஆத்மாவிற்கும் தனிப்பட்ட மனிதர் மற்றும் பொருட்களுக்கும் இடையிலான அன்பின் முக்கியத்துவத்தைச் செவ்வியலாக விரித்துரைக்கும் மிக உயர்ந்த நிலை கொண்டதாக பிரஹதாரண்ய உபநிடதத்தில் யாக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அமைகிறது. இதை ’பிரம்மத்தை ‘அறிவதான உரையாடல்’ என்று வேத உலகமும் அறிவுசார் ஆராய்ச்சியாளர்களும் காலந்தோறும் போற்றி வருகின்றனர்.

வைசம்பாயனரின் மாணவரான யாக்ஞவல்க்கியர் வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவற்றில் ஆழமான அறிவுடையவர். யஜுர் வேதத்தில் தன் குரு புகுத்திய சில திருத்தங்களை எதிர்த்ததால் குருவுக்கும் மாணவருக்கும் கடும் விவாதம் ஏற்படுகிறது. கோபம் அடைந்த குரு தான் கற்றுத் தந்த வேதங்கள், அதன் பின்னணியிலான அறிவு அனைத்தையும் திருப்பித் தர ஆணையிடுகிறார். குருவின் கட்டளைப்படி கற்றது அனைத்தையும் செரித்த உணவாக யாக்ஞவல்க்கியர் உமிழ்கிறார். பிறகு சூரியக் கடவுளிடம் இருந்து யஜுர் வேதம் அறிகிறார். இதனால் யஜூர்வேதம் கிருட்டிண யஜுர் வேதம், சுக்கில யஜுர் வேதம் என இரண்டாகப் பிரிந்தது என்பது ஆராய்ச்சியாளர் செய்தி. இவர் சதபத் பிரமாணம், பிரஹதாரண்ய உபநிடதம் போன்ற நூல்களை எழுதியவர்.

மிதிலை மன்னர் ஜனகரின் அமைச்சரான மித்திரர் வேதங்களில் தேர்ந்தவர் அவருடைய மகளான மைத்ரேயி சாத்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவள். அவளு டைய அத்தையான கார்க்கி வேத சாஸ்திரங்களில் மைத்ரேயி ஓரளவு பயிற்சி பெற உதவு கிறாள். மிதிலை நாட்டு மன்னன் ஜனகன் நடத்தும் யக்ஞத்திற்கு கார்க்கி தன்னுடன் மைத்ரேயியை அழைத்துப் போகிறாள். அந்த யக்ஞத்தில் பங்கு பெற யாக்ஞவல்க்கியரும் வருகிறார். அவர் ஜனகனின் குருவும் கூட. அந்த யக்ஞத்தின் போது பிரம்மத்தின் வியாப கத்தைப் பற்றி, பிரம்ம தத்துவத்தைப் பற்றி யாக்ஞவல்கியர் விவரித்ததையும், அங்கிருந்த வர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் அவர் விரிவான விளக்கம் தந்ததையும் கவனித்து மைத் ரேயி வியப்பு அடைகிறாள். இயல்பாகவே வேதப் பின்னணியுள்ள மைத்ரேயி பிரம்ம ஞானத்தைப் அவரிடமிருந்து பெற விரும்புகிறாள். கன்னிப் பருவத்தில் இருக்கிற ஒரு பெண்ணுக்கு குருவாக அவர் அமைவதில் உள்ள சிக்கல்களை நினைத்துப் பார்க்கிறாள். அவருக்கு மனைவியாக இருந்து தான் விரும்பியவற்றைக் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.எனவே அவருடைய முதல் மனைவியான காத்யாய னியி டம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.மைத்ரேயியின் உண்மையான ஆர்வத்தைப் புரிந்து கொண்டு காத்யாயனி தன் கணவனிடம் தானே பேசி அவர்கள் திருமணத்திற்கு உதவுகிறாள்.மைத்ரேயி அறிவு நிறைந்த மனைவியாய் வேதங்களில் தேர்ச்சி பெறுகிறாள் .குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யாக்ஞவல்கியர் தான் சந்நியாச வாழ்க்கையை மேற் கொள்ளப் போவதாகச் சொல்கிறார்.உலக நியதிப்படி தான் செல் வதற்கு முன்னால் தன்னிடம் உள்ள செல்வத்தை இரு மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்புகிறார். அவ்வாறு அவர் முடிவு செய்த பிறகு மைத்ரேயியை அழைத்துப் பேசுகிறார். அப்போது அவருக்கும் மைத்ரேயிக்கும் நடந்த உரையாடல் பகுதி இது.உலக வாழ்வின் நிலையில்லாத தன்மையை உணர்ந்து கொண்ட அறிவு நிறைந்த பெண்ணின் மன வெளிப்பாடாக வினாக்கள் அமைகின்றன.

யாக்ஞ: “ மைத்ரேயி! நான் இந்த வாழ்க்கையில் இருந்து விடை பெறப் போகிறேன். வாழ்க்கையின் நான்காவது படியான சந்நியாசத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறேன். போவதற்கு முன்னால் என் செல்வத்தை உனக்கும் காத்தியாயினிக்கும் பிரித்துத் தருவது என முடிவு செய்திருக்கிறேன்.”

மைத்: “ சுவாமி ! நீங்கள் வாழ்க்கையின் நான்காவது கட்டத்தில் அடி எடுத்து வைக்கப் போவதால் ,அது உங்களுக்கு முற்றிலும் புதியதான பார்வையைத் தரப் போகிறது. உங்களுடைய செல்வத்தை எங்கள் இருவருக்கும் தரப் போவதாகச் சொல்கிறீர்கள். அதை வைத்துக் கொண்டு நாங்கள் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்கிறீர் கள்.அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு நாங்கள் நிரந்தரமாக மகிழ்ச்சியாக இருப்ப தற்கான சாத்தியம் இருக்கிறதா? இந்தப் பெரிய உலகில் செல்வம் உடையவளாக நான் இருந்தால் ,எனக்கு நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்குமா? அழிவில்லாத வாழ்வு இருக்குமா? அல்லது வேறு ஏதாவது என் மகிழ்ச்சியில் குறுக்கிட முடியுமா?”

யாக்ஞ : “இல்லை மைத்ரேயி. நீ மகிழ்ச்சியாக இருக்க முடியாது. செல்வம் அதிகம் உடை யவர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமோ அது போல உன் வாழ்க்கையும் வசதியாகத் தான் இருக்கும்.ஆனால் மற்ற விதங்களில் நீ அதே நிலையில்தான் இருப்பாய். அது தான் சமுதாயத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களின் நிலை.மரணம் இல்லாத பெருவாழ்வை செல்வத்தால் ஒரு நாளும் தர முடியாது. மரணமில்லாத பெரு வாழ்க்கை முற்றிலும் வேறானது.”

மைத்: “ அப்படியானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன்? இறப்பு ஒருநாள் என்னை அழித்துவிடும் என்றால், உலகின் நிலையாமை என்னை அச்சுறுத்தும் என்றால் ,எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும்? எங்க ளுக்கு நல்லதைத் தர முடியும் ? மதிப்புடையதாக இருக்க முடியும்? திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? சுவாமி ! குழப்பமாக இருக்கிறது இது தொடர்பாக உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை எனக்குச் சொல்லுங்கள். என் மனதில் உள்ள சந்தேகம் என்னும் நோயை நான் தீர்த்துக் கொள்கிறேன். நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய நான் என்ன செய்ய வேண் டும்? எப்படிச் செயல் படவேண்டும் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு எதனிடம் இருந்தும் எனக்கு அச்சம் ஏற்படாது. இது சாத்தியமா? எப்படி நான் நிலைத்த திருப்தியைப் பெறுவது?”

யாக்ஞ: “மிக அருமையான கேள்வி மைத்ரேயி. நீ எப்போதும் எனக்கு அருமையான வளாகவே இருந்து வந்திருக்கிறாய். இதோ, இப்போதும் அப்படித்தான். அளவற்ற செல்வத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகும் போது இப்படி ஒரு கேள்வியை நீ கேட்பாய் என்று நான் நினைக்கவில்லை.இப்போது இது தொடர்பான எல்லா ரகசியத் தையும் உனக்குச் சொல்கிறேன். நான் சொல்வதை கவனமாகக் கேள். என் முன்னால் நீ வைத்துள்ள மிகப் பெரிய சிக்கலுக்கான ரகசியத்தைச் சொல்கிறேன். நீ கேட்ட கேள்வி மிக அர்த்தம் உடையது. செல்வத்தை வைத்திருப்பதன் மூலம் மக்கள் நிரந்தர மகிழ்ச்சியை அடைய முடியாது. கணவனுக்காக கணவன் மீது மனைவி அன்பு காட்டுவதில்லை. அவனுடைய ஆத்மாவை விரும்புவதால் அவள் கணவனை விரும்புகிறாள்.அது போலத் தான் கணவன் மனைவியை நேசிப்பதும். குழந்தைகளுக்காக யாரும் குழந்தைகளை விரும் புவதில்லை. ஆத்மாவை விரும்புவதால் குழந்தைகளை விரும்பும் தன்மை தான் அது. எனவே மைத்ரேயி நாம் காண வேண்டியது ஆத்மாவைத்தான் .உன் சிந்தனைகளும் ,தியா ன மும் நிலத்திருக்க வேண்டியது ஆத்மாவின் மீதுதான்.இந்த ஆத்மா, கேட்கப் படுவ தும்,காரணப்படுத்தப்படுவதும், தியானிப்பதும் ஆகும். ஒவ்வொரு முறையும் ஒரு பொருளைக் ’குறிப்புப் ’ படுத்துகிறோம்.அதைத் தன்னிடம் இருந்து வேறு படுத்துகிறோம். நான் ஒரு பெண்ணைக் காதலிக்க முயற்சிக்கிறேன்.அந்தப் பெண் என்ற குறிப்பு வந்த வுடன் ஆத்மா என்பதிலிருந்து அவள் விலகிவிடுகிறாள். அவளுக்கான என் காதல் அது. அது சோகத்தில் முடிகிறது. ஆனால் அந்தப் பெண்ணை நான் ஆத்மாவாகப் பார்க்கும் போது அந்தக் காதல் பூரணமாகிறது. துன்பம் எதுவும் அடைவது இல்லை.ஆத்மாவை விட்டு மற்றவற்றை விரும்பினால் உலகில் துன்பமும், வருத்தமும்தான். ஆத்மாவில் இருந்து எல்லாம் வேறுபட்டது என்று மனிதன் நினைக்கும் போது அவனை எல்லாம் கை விட்டு விடுகின்றன.ஆத்மாவை உணர்வதுதான் பேரானந்தம். இந்த நிலைக்குள் எப்படி வருவது? உலகம் எல்லையற்றது.ஆத்மாவை அறியாமல் எப்படி ஒவ்வொன்றிற்கும் உள்ள ஆத்மாவை அறிவது ?ஒரு முரசு இசைக்கப்படும்போது நாம் தொலைவில் இருந்தால் அந்த ஓசையைக் கேட்க முடியாது. அருகில் வந்து நம் கைகளை அதன் மீது வைத்தால் ஓசையை அனுபவிக்க முடியும்.இனிமையை உணர முடியும். சங்கு முழங்கும் போது அருகில் இல்லாதவரை அதன் முழக்கம் கேட்காது. அருகே வந்து தொடும் போது அதை உணர முடிகிறது. வீணை நாதத்தை உணர்வதும் இப்படித்தான். மற்ற பொருட்க ளில் பரம்பொருள் உள்ளூர உறைந்து இருப்பதை அறிந்து அதன் வழியாகவே அதனை அடைய முடியும். இதுதான் பரம் பொருளை அறியும் வழியாகும். ஈற வி்றகைப் பற்ற வைத்தால் அதனிடம் இருந்து எழும் புகை மேலே செல்வது போல பரம்பொருளில் இருந்துதான் வேதங்களும், ஸ்மிருதிகளும் உருவாயின. புகையை அறிந்தவன் அக்னியை அறிந்தவனாவான் என்று சொல்ல முடியாது.வேதங்களை அறிந்தால் மட்டும் போதாது. விறகு எரியும்போதுதான் அக்னியைக் காண முடிவது போல ஞானம் ஏற்படும் போதுதான் பரம்பொருளை காண முடியும்.எந்தத் தண்ணீருக்கும் கடலை அடைவதுதான் குறி. எல்லாத் தொடு உணர்ச்சிக்கும் தோல்தான் மூலம் .எல்லா நுகர்வுகளுக்கும் மூக்கு தான் மையம்.எல்லா சுவைகளுக்கும் நாக்குதான் அடிப்படை.எல்லா வடிவங்களுக்கும் கண் தான் மூலம்.எல்லா ஓசைகளுக்கும் காதுதான் அடையாளம். எல்லாச் செயல்களுக்கும் கைதான் மூலம் எல்லா எண்ணங்களுக்கும் மனம்தான் அடிப்படை. உப்பு தண்ணீரில் கரைந்த பிறகு முன்னிருந்த வடிவத்தில் இருக்காது . ஆனால் எங்கு தண்ணீரைச் சுவைத்தாலும் உப்புதான் மைத்ரேயி ! பரமாத்மா எல்லையற்றது. எந்தச் சேர்க்கையில் உருவம் படைத்தது போல இருந்ததோ அந்த பஞ்ச பூதங்களில் இருந்து பிரிந்து மீண்டும் விஞ்ஞான கனத்தில் அதிலேயே மறைந்து போகிறது.மரணத்தின் பின் உணர்வு நிலையில்லை.அறிவு இல்லை. ஆத்மா பரமாத்மாவை அடைந்த பிறகு தனித்து நிற்கும் உலகம் ஏது ? தான் ஏது? இதுதான் நான் உனக்குச் சொல்வது !”

மைத்: “மறைந்த பிறகு அறிவு இல்லை,உணர்வு இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தை தருகிறதே!”

யாக்ஞ: “நான் உன்னைக் குழப்பவில்லை மைத்ரேயி !ஞானம் அடைய ,உண்மை அறிவைப் பெற இது போதும் என்கிறேன். இருமை [இரண்டு என்ற நிலை] இருக்கும் போது ஒன்று மற்றொன்றைப் பார்க்கலாம். மற்றொன்றைக் கேட்கலாம். மற்றொன்றை நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஆத்மாவாய் இருக்கும் போது ,காணும் போது,உணரும் போது எதைப் பார்க்க முடியும்? அறிய முடியும் ? கேட்க முடியும்?எல்லாமும் யாரால் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறியமுடியும்?அறிவோனை எதைக் கொண்டு அறியமுடியும்?ஆத்மா தன்னையே வேறு ஒரு பொருள் போலக் காண முடியாது. அறிப வனும்,அறியப்படுபவனும் ஒன்றேயான பிறகு அறிதல் எப்படி நிகழ முடியும்? ஆத்மா ஒன்றை மட்டும் அறிந்து விட்டால் உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை.உலகமே ஆத்ம வடிவம்தான்.ஆத்மாவின் பொருட்டே அனைத்தும் பிரியத்துக்கு உரியதாகிறது. கண்ணெதிரில் காணக் கூடிய எல்லாமும் அழியக் கூடியது. ஆத்மா அழிவற்றது. அதை அறிவதே மோட்சம். மைத்ரேயி ! மரணத்தை வெல்வதற்கான வழி ஆத்மாவை ஆராய்ந்து அறிவதுதான்” என்று மனைவிக்கு யாக்ஞவல்கியர் சொன்னதாக பிரஹதாரண்ய உபநிடத்தில் ஒரு சிறு பகுதி அமைகிறது.
இதை அடுத்து யாக்ஞவல்கியர் சந்நியாசத்தை மேற்கொள்கிறார். வாழ்வின் உண்மையை அறிந்து கொண்ட மைத்ரேயி தானும் தவ வாழ்க்கையில் ஈடுபட்டதாக வரலாறு அமைகிறது.

image.png

வேதாந்தினியான மைத்ரேயி தன்னுடைய வேத ஞானத்தால் ’ரிக் வேதத்தில் ’பத்து பாடல்களைச் சொல்லிய பெருமைக்கு உரியவள் என்ற கருத்து உண்டு. ’மைத்ரேயி உபநிடதம்” என்ற உபநிடதத்தை உருவாக்கியவள் ,கார்க்கி மைத்ரேயி, போன்றவர்கள் ’ பிரம்மவாதினிகள்என்று அழைக்கப் பட்டிருக் கின்றனர். [பரம்பொருளை அறிய விரும்பியவர்கள் , வேத வியாக்கியானம் செய்தவர்கள்,: கற்றவர் சபைகளில் கலந்து கொண்டவர்கள் என்று இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.]

வேத காலத்திலேயே ,வேதாந்த அறிவுப் பசியில் வாழ விரும்பிய ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பிய வகையில் இடம் தந்து, அவள் விருப்பத்தை நிறைவேற்றியதற்கான சூழலில் இதைப் பெண் சிந்தனை உயர்வு, தன்னைப் பெண் உணர்ந்த விதம் என்று வகைக்குள் அடக்கி வேதகாலப் பெண் உயர்வை உணரலாம்.
————————–

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “புகையை அறிந்தவன், அக்னியை அறிந்தவனா?

  1. மிகச் சிறப்பான ஆழமான கருத்துள்ள பதிவு. எளிய முறையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

    க. பாலசுப்ரமணியன்

  2. விறகு எரியும்போதுதான் அக்னியைக் காண முடிவது போல ஞானம் ஏற்படும் போதுதான் பரம்பொருளை காண முடியும்.. ஆத்மாவை பற்றி உபநிடத்திலிருந்து உதாரணத்தை எடுத்துக்காட்டிய எழுத்தாளருக்கு நன்றி வணக்கம்

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

Leave a Reply to நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

Your email address will not be published. Required fields are marked *