தமிழர் உணவுப் பண்பாடு: இலக்கியப் பதிவுகளும் வாசிப்பு அரசியலும்

0

கண்ணியம் அ. சதீஷ்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
மயிலம் – 604 304

பண்டைக் காலத்தில் தோன்றிய மூலப் பனுவலுக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து உரைகள் தோன்றின. உரைகள் தோன்றிய பல நூற்றாண்டுகள் கழித்து நாம் உரைகளின் ஊடாக மூலப் பனுவலை வாசிக்கின்றோம். அவ்வாறு வாசிக்கும் போது உரைகளின் மீதும் மூலப் பனுவல் மீதும் சமகாலக் கோட்பாடுகளின் ஊடான பார்வை தொழிற்படுவது இயல்பே. இப்படியான பின்புலத்தில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தமிழர் உணவுப் பொருட்கள் குறித்தும் இலக்கண நூல்கள் கருப்பொருட்களில் ஒன்றாக உணவைக் குறிப்பிட்டு நில அமைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு திணைக்குமான உணவு வகைகள் எவையெவை என்பதைக் குறிப்பிட்டுள்ளமை குறித்தும், இவற்றின்மீது இடைக்கால மற்றும் பிற்கால இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும் நிகழ்த்திய வாசிப்பு அரசியல் குறித்தும் விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பண்டைத் தமிழரின் வாழ்வியல் நிலம் சார்ந்த திணை ஒழுக்கவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதைத் தொல்காப்பியமும்  சங்கச் செய்யுட்களும் காட்டி நிற்கின்றன. அகம், புறம் என இரண்டு நிலைகளில் அவர்களின் வாழ்வியல் தொழிற்பட்டிருந்தது.

அக வாழ்வியல் எழு திணைகளின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை) அடிப்படையிலும் முப்பொருள்களின் (முதல், கரு, உரி)  அடிப்படையிலும் வகுத்துரைக்கப்பட்டது. முப்பொருட்களில் நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளும் தெய்வம், உணவு முதலிய கருப்பொருட்களும் அகவாழ்வியலே அன்றிப் புற வாழ்வியலுக்கும் அடிப்படையாக அமைந்தன. ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’  (தொல்.பொருள்.புறத்.நூ.2) முதலிய தொல்காப்பியப் புறத்திணை நூற்பாக்களே இதற்குச்      சான்றாக  அமைவதைக் காணலாம். தொல்காப்பியம்,

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப       (தொல்.பொருள்.அகத்.நூ.17)

என்ற நூற்பாவின் வாயிலாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, இசைக் கருவிகள், தொழில், பண் ஆகியனவற்றைக் கருப்பொருட்களாகக் கூறிப் பிறவும் என்று சுட்டியுள்ளது. இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர்,

முல்லை:  உணவு  –  வரகும்  முதிரையும்…  குறிஞ்சி:  உணவு  தினையும், ஐவனமும்வெதிர் நெல்லும்… பாலை: உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள்…மருதம்:உணவு- நெல்…நெய்தல்:        உணவு – உப்புவிலையும் மீன் விலையும் (தொல்.பொருள்.அகத்.நூ.17இளம்.உரை)

என்று ஒவ்வொரு திணைக்குமான உணவுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

மற்றோர் உரையாசிரியரான நச்சினார்க்கினியர்,

முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்…குறிஞ்சிக்கு உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்… மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்… நெய்தற்கு உணா,  மீன்  விலையும் உப்பு விலையும்… பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும் (தொல்.பொருள். அகத்.நூ.17நச்சர்.உரை)

என்று இளம்பூரணரைப் போன்றே நச்சினார்க்கினியரும் திணை அடிப்படையிலேயே உணவுப் பொருட்களைக் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்விருவர் உரையிலும் புலால் உணவுப் பொருட்கள் இடம்பெறாமைக் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தொல்காப்பியப் பொருளதிகார மரபியலில் நால்வருணத்தார் பற்றிய பகுதியில்  வணிகர்களுக்கு எட்டு வகையான உணவுப்பொருட்களை  உருவாக்கும் தொழில் உரியது என்பதைக் குறிக்கும்,

மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான                 (தொல்.பொருள்.மர.நூ.79)

என்ற நூற்பா உள்ளது. இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரது உரைகள் உள்ளன. இளம்பூரணர் ‘எண்வகை உணவாவன நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, போதும்பை இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு (தொல்.பொருள்.மர.நூ.79இளம்.உரை)’   என்றும், பேராசிரியர், ‘எண்வகை யுணவென்பன  பயறும் உழுந்தும்  கடுகும்  கடலையும்  எள்ளும் கொள்ளும் அவரையும் துவரையுமாம் (தொல்.பொருள். மர.நூ.78பேரா.உரை)’ என்றும், நச்சினார்க்கினியர், ‘நெல், காணம் (கேப்பை), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், போதுமை (தொல்.பொருள்.மர.நூ.79பேரா.உரை)’ என்றும் உரையெழுதி யுள்ளனர். மூவரில் இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும் ஒரே வகையான உணவுப் பொருட்களையும் பேராசிரியர் முன்னை இருவர் கூறுவனவற்றிலிருந்து வேறுபட்ட உணவுப் பொருட்களையும் குறிப்பிடுகின்றனர். இந்நூற்பாவிற்கு வடமொழி சார்ந்த விளக்கங்களும் காணப்படுகின்றமையை,

வடமொழி செவ்வியல் இலக்கியங்கள் தானியவகை, பருப்புவகை, காய்கறி, பழங்கள், மணப்பயிர், பால்தயிர், ஊன், போதை ஏற்றும் குடி வகை என எட்டுவகை உணவுகளைக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் குறித்த எட்டும் இவையாக  இருக்கலாமோ  என்ற  ஐயமும்  ஆய்வாளரிடத்தே உள்ளது.

(சங்கத் தமிழரின் உணவு மரபு – விவேகானந்தன் பொன்னையா, தாய்வீடு (கனடா) இதழில் வெளியான கட்டுரை, ஜுலை2014)

என்ற கருத்துரை காட்டி நிற்கின்றது. உணவு பற்றி இரண்டு நூற்பாக்களில் குறிப்பிடும் தொல்காப்பியம் உணவு என்ற பொதுச் சொல்லை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அவ்வுணவு வகைகள் எவையெவை என்பதைத் தொல்காப்பிய உரைகளின் வாயிலாகத்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடும் உணவு வகைகளில் புலால் பொருட்கள் இல்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் புலால் உணவுகள் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.

  • சில நூற்றாண்டுகள் இடைவெளி
  • நாடோடி – இனக்குழு – இனக்குழு தலைவன்- குறுநிலமன்னன் -மூவேந்தர்கள் என்ற பல வளர்ச்சிப் படிநிலைகள்,
  • நிலவுடைமைச் சமூகம் சார்ந்த தொகுப்பாக்கங்கள்

ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டமைந்தவை சங்க இலக்கியங்கள். இச்சங்கச் செய்யுட்களில் தொல்காப்பியக் காலத்திற்கு முந்தைய பாடல்களும் உண்டு. தொல்காப்பியக் காலப் பாடல்களும் உண்டு, தொல்காப்பியக் காலத்திற்குப் பிந்தைய பாடல்களும் உண்டு.

மூங்கில் அரிசி, தினை, சாமை, வரகு, இறுங்கு முதலிய அரிசி வகைகளும், எள்,  உழுந்து,  கொள்ளு  முதலிய  தானிய  வகைகளும், மா,  பலா,  வாழை,  காரை, துடரி, நாவல் முதலிய கனி வகைகளும், வேளை, வள்ளை, முஞ்ஞை முதலிய கீரை வகைகளும், அணில்வரி கொடுங்காய், நெல்லிக்காய், பாகற்காய் முதலிய காய் வகைகளும், வல்லிக் கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும், தேன் முதலியனவும் சங்ககால மக்களால் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைச் சங்கச் செய்யுட்கள் காட்டி நிற்கின்றன. இவை அனைத்தும் நிலத்தில் விளையக்கூடியனவும், இயற்கையாகக் கிடைக்கக் கூடியனவுமாகிய பொருட்களாகும்.

இயற்கை விளைபொருட்கள் அன்றி இறைச்சிப் பொருட்களையும் சங்ககால மக்கள் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் சங்கச் செய்யுட்களின் வழி தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு புலால் உணவுப் பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த முறைகளும், அவற்றை உணவாகச் செய்த முறைகளும், அவற்றை   உண்ட முறைகளும் விரிவான நிலையில் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலால் உணவுகள் சங்க இலக்கியங்களில் ஊன், புலால், புலவு, கொழுங்குறை (பொருநர்.105), பைந்தடி (புறம்.14 12), பைந்துணி (புறம்.44 17), உணங்கல் போன்ற பல்வேறு பெயர்களில் சுட்டப் பெற்றுள்ளன. விலங்குகளும் பறவைகளும் மீன்களும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும் பண்டைத் தமிழரின் முக்கியத் தொழில்களாக இருந்தன. சங்க இலக்கியத்தில் உணவுக்காக வேட்டையாடியமை குறித்தும், மீன் பிடித்தமை குறித்தும் மிகுதியான அளவில் பதிவுகள் காணக் கிடைகின்றன.

உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்
கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்                (நற்.59)

என்னும் நற்றிணைப் பாடலடிகளில் உடும்பு, நுணல், ஈயல், முயல் ஆகியவற்றை வேட்டையாடி வரும் வேட்டுவனின் செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது. விலங்குகளில் ஆட்டிறைச்சி (பொருநர்.103-140, புறம்.366:18-20, புறம்.261:8-9), ஆமான் என்றழைக்கபடும் காட்டுப்பசு இறைச்சி (சிறுபாண்.175-177), எலி இறைச்சி (நற்.83:4-9), பன்றி இறைச்சி (நற்.336:1-6, புறம்.374:8-10), முயல் இறைச்சி (புறம்.319:6-9), முளவு மா என்னும் முள்ளுடைய பன்றி இறைச்சி (ஐங்.364:1-2, புறம்.177:13-15, மலை.175-177), யானை இறைச்சி (அகம்.106:12, அகம்.169:3-7), மான் (இரலை, உழா, கடமா, நவ்வி, மரையான்) இறைச்சி (புறம்.150:5-15,  புறம்.152:25-27,  மலை.175-185,  அகம்.107:5-10)  ஆமை  (பட்.64, புறம்.42, புறம்.176), உடும்பு இறைச்சி (புறம்.325, புறம்.326, பெரும்பாண்.131-133, மலை.175-177) போன்றன உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

பறவைகளுள் அளகின் வாட்டு (கோழி) இறைச்சி (பெரும்பாண்.255-256), இதல் (கௌதாரி) இறைச்சி (புறம்.319:6-9), குறும்பூழ் (காடை) இறைச்சி (குறுந்.389:1-2), புறா இறைச்சி (புறம்.319:6-9) போன்றனவும், மீன் வகைகளுள் அயிலை மீன் (அகம்.70:2-4), ஆரல் மீன் (புறம்.212:3-4), இறால் மீன் (குறுந்.320:1-4, பட்.63-64), கெடிற்று மீன் (புறம்.384:8-9), சுறா மீன் (பட்.86-87, அகம்.10:10-12, நற்.103:9-11), வரால் மீன் (நற்.60: 3-6, அகம்.216:2-4), வாளை மீன் (புறம்.61:4-6, அகம்.320:1-4)போன்றனவும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

மேலும் நண்டு (அளவன், கள்வன், ஞெண்டு) (சிறுபாண்.194-195), ஈயல் (அகம்.394) போன்றவற்றையும் சங்ககால மக்கள் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர். இறைச்சியையும் மீன் வகைகளையும் பதப்படுத்தி வைத்திருந்து உணவாக உண்ட நிலையையும் (அகம்.20:2,   பெரும்பாண்.100-104)   சங்கச்   செய்யுட்களில்   காணமுடிகிறது.

புலால் உணவுகளைப் பச்சையாகவும், சுட்டும், வேகவைத்தும், சோறு சேர்த்தும், குழம்பு  வைத்தும்,  புலவு  செய்தும்  எனப்  பல  நிலைகளில்  உண்டனர் என்பதற்கான குறிப்புகள் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன. படிநிலை சார்ந்த நாகரீக வளர்ச்சியின் பின்புலத்தில் இவற்றைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். சோற்றோடு ஆட்டின் இறைச்சியைச் சேர்த்து உண்ட முறையை,

எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்விளை யாயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவர்            (சிறுபாண்.113)

என்னும் பாடல் அடிகளாலும், வெண்சோறோடு நண்டு கலந்து உண்ட செய்தியை,

அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையோடு பெறுகுவீர் (சிறுபாண்.194-195)

என்னும் பாடல் அடிகளாலும், ஈயலை வைத்துப் புளிக்குழம்பு செய்த நிலையை,

ஈயல்பெய் தட்ட இன்புளி வெஞ்சோறு             (புறம்.119 3)

என்ற பாடலடியாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

நீண்ட  காலப்  பரப்பையும்,  வெவ்வேறு  நிலவியல்  அமைப்பையும்,  நாகரீக வளர்ச்சிசார் படிநிலைகளையும் தன்னகத்தே கொண்டனவாகக் காணப்படும் சங்கச் செய்யுட்கள்,  அனைத்து  நிலப்  பரப்புகளிலும்  நாடோடி  முதல் மூவேந்தர் வரையிலான அனைத்து வகை மக்களும் இயற்கை உணவுப் பொருட்களே அன்றி இறைச்சிப் பொருட்களையும் உணவாக உண்டனர் என்பதைக் காட்டி நிற்கின்றன. ஐவகை நிலங்களுள்,

  • குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசிச் சோறு, உடும்பின் இறைச்சி, கடமான் இறைச்சி, பன்றியின் இறைச்சி,  நெற்கள்,  பலாக்  கொட்டை, மோர், நெய், தேன், கிழங்கு வகைகள் ஆகியனவும்,
  • முல்லை நிலத்தில் தினையரிசிச் சோறு,  ஆட்டு இறைச்சி, மான் இறைச்சி, முயல் இறைச்சி, வான்கோழி இறைச்சி, பால், தயிர், மோர், நெய், கும்மாயம், புளியங்கூழ் ஆகியனவும்,
  • மருத நிலத்தில் செந்நெல் சோறு, வெண்ணெல்  சோறு,  கோழி  இறைச்சி, ஆமை இறைச்சி, மான் இறைச்சி, பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியனவும்,
  • நெய்தல் நிலத்தில் கொழியலரிக் கூழ், மீனுணவு, பன்றி இறைச்சி, புளித்த கள், பனங்கள், நெற்கள் ஆகினயவும்,
  • பாலை நிலத்தில் வெண்சோறு, நிணச்சோறு, புல்லரிசிச்சோறு, பன்றியின் இறைச்சி, காட்டுமான் இறைச்சி, உடும்பின் பொரியல் ஆகியனவும்,

உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இயற்கை உணவுப் பொருட்களே அன்றிப் புலால் உணவுப் பொருள்களும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நிலத்திலும் எவையெவை உணவுப்பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றன என்பதைத் தே.நமசிவாயம் தமது நூலில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளமையும் (தமிழர் உணவு, 2003:22) இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள உணவு வகைகள் குறித்தும் அவை சமைத்த முறைமைகள் குறித்தும், சமையல் கருவிகள் குறித்தும், உணவு உண்ட முறைமைகள் குறித்தும் பக்தவத்சல பாரதி (தமிழர் உணவு), சு. அரங்கநாதன் (முல்லை நில உணவு முறைகள்), மா.இராசமாணிக்கனார் (சங்க காலத்து உணவும் உடையும்), அ.தட்சிணாமூர்த்தி (தமிழர் நாகரிகமும் பண்பாடும் – பண்டைய தமிழரின் உணவு), சி.சேதுராமன் (பண்டைத் தமிழர் உணவுகள்), சே. நமசிவாயம் (தமிழர் உணவு), பி.சரசு (தமிழ் இலக்கியத்தில் உணவியல்) ஆகியோர் விரிவான அளவில் தத்தம் நூல்களில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தமது நூல்களில் சங்க இலக்கியங்களில் காணலாகும் புலால் உணவுகள் குறித்தும் விரிவான   நிலையில்   பதிவு செய்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்கினியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்கச் செய்யுட்கள் மீதான தங்களின் ஆழ்ந்த வாசிப்பின் ஊடாகப் பல்வேறு சங்கப் பாடல்களை   உரைகளில்   மேற்கோள்களாகக்   காட்டியுள்ளனர்.

தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் இரண்டு இடங்களில் உணவைப் பற்றிப் பொதுமையில் சுட்டிச்செல்ல அவற்றை விவரிப்பவை இவர்களின் உரைகளே. மரபியலில் வரும் நூற்பாவிற்கு இம்மூவர் உரைகளும் உள்ளன. அகத்திணையியலில் வரும் கருப்பொருட்கள் குறித்த நூற்பாவிற்குப் பேராசிரியர் உரை கிடைக்கவில்லை. இரண்டு நூற்பாக்களுக்கான உரைகளிலும் புலால் உணவுப் பொருட்கள் பற்றிய எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. சங்கச் செய்யுட்களில் இருவகை உணவுகளும் பரவலாகக் காணப்பட அவற்றில் ஆழ்ந்த புலமையுடைய உரையாசிரியர்கள் உணவு குறித்த  நூற்பாக்களுக்கான  உரைப்பகுதியில் இயற்கையான விளைபொருள் சார்ந்த உணவுப் பொருட்களையே பட்டியலிடுகின்றனர்.

மரபியல் நூற்பாவிற்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒரே வகையான உணவுப் பொருட்களையே சுட்டியுள்ளனர். பேராசிரியர் இவ்விருவர் கூறும் பொருட்களினும் வேறான உணவுப் பொருட்களைச் சுட்டிச் செல்கிறார். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடும் கோதுமை என்னும் உணவுப் பொருள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில்  காணப்படாமையும், பேராசிரியர் வேறுபட்டு உரை எழுதியுள்ளமையும் தனித்த விவாதத்திற்கு உரியனவாகும்.

தொல்காப்பியம் அன்பின் ஐந்திணைக்கும் உரிய கருப்பொருட்களுள் ஒன்றாகச் சுட்டிய  உணவுப் பொருட்கள்  குறிஞ்சி  முதலாய  ஒவ்வொரு  திணைக்கும் எவையெவை என்பதை இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையுமே விவரிக்கின்றன. நிலத்தில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகள், இயல்பாகக் கிடைக்கும் தேன், பண்டமாற்றால் வரும் பொருட்கள், திருடுவதால் வரும் பொருள்கள் ஆகியன உணவுப் பொருட்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. புலால் உணவுகள் பற்றிய குறிப்பு இருவர் உரைகளிலும் இல்லை. மீன் விற்று அதன் மூலம் வரும் பொருளை  உணவுப் பொருளாகக் குறிப்பிடும் உரையாசிரியர்கள் மீனை  உணவுப்  பொருளாகக்  குறிப்பிடவில்லை.

உரையாசிரியர்களின் பார்வையில் தொல்காப்பியத்தை வாசிக்கின்ற பொழுது தொல்காப்பியம் குறிப்பிடும் உணவு வகைகளில் புலால் உணவுப் பொருட்கள் இல்லை என்றே பொருள்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தொல்காப்பிய இலக்கணத்திற்கு  இலக்கியமாகவும் அதன் காலத்தோடு ஒத்தியலும் இலக்கியமாகவும் விளங்கும் சங்க   இலக்கியத்தில் புலால் உணவுகள் பற்றிய குறிப்புகள் நிரம்பக் காணக் கிடைக்கின்றன.

தொல்காப்பிய அகப்புற வாழ்வியல் சார்ந்த இலக்கண வரையறைகளுக்குச் சங்கச் செய்யுட்களை அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு தங்களின் உரையை எழுதிச் செல்லும் உரையாசிரியர்கள் உணவுகள் பற்றிய வரையறைகளில்  சங்கச் செய்யுட்களில் பரவலாகக்   காணப்படும்  புலால் உணவுகளைக் குறிப்பிடாமல் சென்றதற்கான காரணங்களாக,

  • இயற்கை உணவுப் பொருட்களை மட்டுமே எடுத்துக்காட்டல்
  • சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை மட்டுமே எடுத்துக்காட்டல்

போன்றனவற்றைக் கூறி மிக எளிமையாக அவ்வுரைகளைக் கடந்து போக முடியாது. இளம்பூரணரும்  நச்சினார்க்கினியரும்  இவ்வாறு  உரையெழுதியதற்கான பின்புலத்தை,

  • தொல்காப்பிய மூல நூலுக்கும் உரையாசிரியர்களின் காலத்திற்குமான கால இடைவெளி
  • அக்கால இடைவெளியில் நிகழ்ந்த – தோற்றம் பெற்ற சமூக – அரசியல் – சமய மாற்றங்கள்
  • இடைப்பட்ட காலப்பரப்பில் தோன்றிய இலக்கண நூல்களின் கருத்தாக்கங்கள்
  • உரையாசிரியர்களின் சமகால சமூக – சமயச் சார்பு

ஆகியனவற்றின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். அவ்வகையில் தொல்காப்பிய – சங்க இலக்கியக் காலத்தை அடுத்ததான சங்க மருவிய காலத்தில் எழுச்சி பெற்ற சமண, பௌத்த சமய எழுச்சி, குறிப்பாகச் சமண சமய எழுச்சி, தமிழ்ச் சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. புலால் உண்ணுதலும் கள்குடித்தலும் குற்றங்களாக வரையறை பெற்றன. உயிர்க் கொலை கண்டிக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட அற இலக்கியங்கள் உருப்பெற்றன. சங்க கால அக வாழ்வியல் மாற்றம் பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டளவில் எழுச்சி பெற்ற வைதீகச் சமயங்களான சைவமும் வைணமும் சமண, பௌத்த சமயங்களை எதிர்த்தன. இருப்பினும் புலால் உண்ணாமையை இச்சமயங்களும் ஏற்றன. சைவத்தில் புலால் உணவு ஏற்றுக்கொள்ளப்பெற்றதற்கான குறிப்புகள் (கண்ணப்ப நாயனார் வரலாறு முதலியன) காணப்படினும் அவை விதி விலக்குகள் போன்றவை. அதன் தொடர்ச்சி இன்றுவரை சிறு தெய்வ வழிபாட்டில் தொடர்வதைக் காணலாம்.

உயிர்கொலை  மறுப்பு,  புலால்  உண்ணாமை  போன்றவற்றை  வலியுறுத்திப் பேசிய அவைதீக, வைதீக சமய இலக்கியங்களில் ‘யானை வேட்டுவன் யானையோடு வருதலும் உண்டு, குறும்பூழ் (காடை) வேட்டுவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு’ என்பன போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. இவை வேட்டைத் தொழில் குறித்த செயல்பாடுகளை அறக் கருத்தாக்கங்களை உருவாக்க எடுத்துக் கொண்டமையைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

தொல்காப்பிய மூல நூலுக்கும் உரையாசிரியர்களின் காலத்திற்கும் இடையில் அகப்பொருள் தொடர்பாகத் தமிழில் இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப் பொருள் போன்ற நூல்கள் தோன்றின. இறையனார் அகப்பொருள் மூல நூலில்  கருப்பொருட்களின்  பட்டியல்  இல்லை.  அதன்  பிறகு தோன்றிய   தமிழ்நெறி  விளக்கம்   என்னும் நூலில் கருப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதோடு ஒவ்வொரு திணைக்குமான பொருட்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. உணவு பற்றி,

தினையே தருப்பண முதிரை செந்நெல்
விலைகோ ளினையன மேவிய வுணவே          (தமிழ்நெறி.10)

என்ற  நூற்பா  காணப்படுகிறது. இதில்  ஒவ்வொரு திணைக்குமான உணவுப் பொருட்கள் வரிசையாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பிறகு இறையனார் அகப்பொருள் நூலுக்குத் தோன்றிய நக்கீரர் உரையில்,

குறிஞ்சிக்கு உணா, ஐவன நெல்லும் தினையும்… நெய்தற்கு உணா மீன் விலையும் உப்பு விலையும்… பாலைக்கு உணா ஆறலைத்தனவும் ஊரெறிந்தனவும்… முல்லைக்கு உணா வரகும் சாமையும்… மருதத்துக்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும் (இறையனார் களவியல் உரை, ப.22-24)

என ஒவ்வொரு திணைக்குமான உணவுப் பொருட்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறையனார் களவியல் என்னும் நூலும் அந்நூலுக்கான உரையும் சைவ சமயம் சார்ந்தவை. இறையனார் களவியல் உரைக்குப் பிறகு நம்பியகப்பொருள் தோன்றியது இந்நூல் ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருட்களை விரிவான நிலையில் நூற்பாக்களாக வரையறுத்துக் காட்டியது.

 குறிஞ்சி    –  வேரல் ஐவனந் தோரை ஏனல் (நூ.20)

 பாலை      –  வழங்குகதிக் கொண்டன செழும்பதிக் கவர்ந்தன (நூ.21)

 முல்லை    –  தாற்றுக்கதிர் வரகொடு சாமை முதிரை (நூ.22)

 மருதம்    –  செந்நெல் வெண்ணெல் அந்நெல் அரிக்கிணை (நூ.23)

 நெய்தல்    –   புலவு மீனுப்பு விலைகளிற் பெற்றன (நூ.24)

என்பன அந்நூலில் உள்ள ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருள் பற்றிய நூற்பாக்களுள் இடம்பெற்ற உணவு குறித்த அடிகளாகும். இந்நூல் வைணவச் சமயச் சார்பு கொண்டது.

மேற்கண்ட வைதீக, அவைதீக சமயங்களின் கொள்கைப் பரலாக்கமும், தொல்காப்பியத்திற்குப் பிந்தைய தம் காலத்திற்கு முந்தைய இலக்கண நூல்களில் உள்ள வரையறைகளும் இளம்பூரணருக்குப் பின்புலமாக அமைந்தன எனலாம். இளம்பூரணர் காலத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் உரையெழுதிய நச்சினார்க்கினியருக்கு இளம்பூரணர் உரையும் கூடுதலான பின்புலமாக அமைந்தது. இவற்றோடு உரையாசிரியர்கள் இருவரின் சம காலத்திய சமயப் பின்னணியும் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம்பூரணருக்குச் சமணச் சமயப் பின்னணியும் நச்சினார்க்கினியருக்கு வைதீகச் சமயப் பின்னணியும் இருந்தன. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் முதலிய ஐந்திலக்கண நூல்களும், மாறன் அகப்பொருள் என்னும் நூலும் முந்தைய நூல்கள், உரைகளின் கருத்துகளையே முன்னோர் மொழிப்பொருளாக அப்படியே ஏற்றுக் கொண்டன.

கால இடைவெளி, நிறுவனமயமாக்கப் பட்ட சமயப் பின்புலம், முந்தைய இலக்கண ஆக்கங்கள், உரையாசிரியர்களின் சமகால அரசியல், சமய – சமூகப் பின்னணி போன்றவற்றின் அடிப்படையிலேயே தொல்காப்பிய உரையாசிரியர்கள் உணவு வகைகளில்  புலால்  உணவுப்  பொருட்களைச்  சுட்டாமல்  விடுத்தமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

துணைநூற்பட்டியல்

  1. கோவிந்தராஜ முதலியார்  கா.ர.  (பதிப்பு),  களவியல்  என்னும்  இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரனார் உரையும், பவானந்தர் கழகம், சென்னை, 1939
  2. தட்சிணாமூர்த்தி அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2011
  3. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் உரைவளம், அகத்திணையியல், ஆ.சிவலிங்கனார் பதிப்பு,உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம், சென்னை, 1991
  4. நமசிவாயம் சே., தமிழர்உணவு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  சென்னை, 1981
  5. நாற்கவிராச நம்பி,  அகப்பொருள்  விளக்கம்  மூலமும்  உரையும்,  வித்துவான் சிவாநந்தையர் பதிப்பு, சோதிட பிரகாச யந்திரசாலை, 1097
  6. பக்தவச்சலபாரதி,பண்பாட்டுமானிடவியல், மணிவாசகர்  பதிப்பகம், கோவை, 1990
  7. வையாபுரிப்பிள்ளை ச. (பதிப்பு), சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பாரி நிலையம், சென்னை, 1940.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *