தி.இரா.மீனா

வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து  கிடையாது. மாளவிகாகினி மித்திரத்தில்“ பாசா, கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா” என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு, இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஓவியங்களையும், சிற்பங்களையும்  பார்க்கும் போது படைத்த கலைஞனை விட அவன் படைப்புகளே  சாஸ்வதமாகி  நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை  படைப்பாளியின்  சுயவரலாறு முக்கிய இடம் பெறாததால் கடந்த கால மனிதர்களின் வரலாறு எவ்விதத் தேடல்களுக்கும்  சிக்காமல் போய் விடுகிறது. பாசாவும் இதற்கு விதி விலக்கல்ல. மகாபாரத, இராமாயணக் கதைகளே இவருடைய படைப்புகளின் கரு. இதில் 6 நாடகங்கள், மகாபாரதப் பின்புலம் கொண்டவை. நாட்டிய சாஸ்திரம் என்ற இலக்கண நூலின் விதிகளுக்குப்  புறம்பான  வகையில் முதலில் அவல முடிவுகளை படைப்புகளில்  வெளிப்படுத்தியவர். அவ்வகையில் உறுபங்கம், கர்ணபாரம்  என்ற இரண்டு நாடகங்களும் அளவில் சிறியவையாக அமைந்து, அவலச் சுவை முடிவு  கொண்டவை. நவீன நாடக   உலகினராலும் பேசப்பட்டும், இயக்கப்பட்டும் வருபவை.

இராமாயணத்தின் அயோத்தியா, ஆரண்யா காண்டங்களைப் பின்னணியாகக் கொண்டு சமஸ்கிருத நாடக ஆசிரியரான பாஸனின் ’பிரதிமா’ நாடகக் களன் அமைகிறது. இந்நாடகத்தின் மூன்றாவது அங்கத்தில் இடம் பெறும் சிலையை நாடகத்திற்கு மூலமாக பாஸன்    கருதியதால் ’பிரதிமா’[ பிரதிமம்–உருவம்] என்பது நாடகப் பெயராகிறது. சிலை பற்றிய சிந்தனை, ஆசிரியனின் முழுக் கற்பனையாக அமைந்து நாடகத்தின் பெயருக்கும் கருவுக்கும் வலுவூட்டுகிறது.

இராமனின் முடிசூட்டு விழாவை தசரதன் அறிவிப்பதான நிலையில் இந்நாடகத்தின் முதல் அங்கம்  தொடங்குகிறது.  இந்த அறிவிப்பு எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, தொடர்ந்து மங்கல முழக்கங்கள் கேட்கின்றன. தன் தோழியர் கூட்டத்தோடு மிக இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் சீதைக்கு இச்செய்தி ஆச்சர்யமாக உள்ளது. சீதையின் பல நல்லியல்புகளை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அவத்திகா என்னும் பணிப்பெண் கையில் மரவுரி ஒன்றை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த சீதை தான் அணிந்தால் அது தனக்கு  அழகாக இருக்குமா எனக் கேட்கிறாள். ஆசையில் உடனடியாக அதை  அணிந்தும் பார்க்கிறாள். அவள் அணிந்த பிறகு மரவுரி  பொன்போல மாறி விட்டதென பெண்கள் சொல்லிச் சிரிக்கின்றனர். முடிசூட்டு விழா நின்றுவிட்டதாக திடீரெனப் பேச்சு எழுகிறது. அது தடைப்பட்டதற்கான காரணத்தை அறியாமல் இராமன், சீதை இருக்குமிடம் வருகிறான். கைகேயி தன் தந்தைக்குத் தசரதன் தந்த வரத்தை நினைவூட்ட, பரதனுக்கு நாடாளும் உரிமை கிடைத்ததாக, கூடியுள்ள அனைவரும் அப்போது பேசுவதைக் கேட்கிறான். இது இராமன், சீதை இருவருக்குமே வருத்தம் தரவில்லை. தசரதன், கைகேயி  இருவரும் வனவாசம் போகும்படி தன்னிடம் சொல்லாதபோதும் இராமன் புறப்படுகிறான். மங்கல ஒலியும் அடங்குகிறது. வனவாசத்திற்குப் புறப்படும் இராம இலக்குவரோடு சீதையும் புறப்படுகிறாள். கைகேயின் இரண்டு வரங்களையும் பாஸன் குறிப்பாகக் கூட இந்த இடத்தில் சுட்டிக் காட்டவில்லை. இந்தக் காட்சி தசரதனையும், கைகேயியையும் பழியிலிருந்து காக்க, ஆசிரியர் செய்யும் முயற்சிதான். கைகேயியை அயோத்தி பழிக்கக் கூடாது என்ற முறையிலேயே இராமனின் வனவாசச் செயல்பாடு அமைகிறது. இராமன் அரண்மனைக்கு வந்தபோது  சீதை மரவுரியை அணிந்து பார்த்ததும் இதே மாதியான மற்றொரு நயமான பாஸனின் சிந்தனை அடையாளம். சீதை விளையாட்டாக அணிந்த தவ ஆடை, கைகேயி வரம் நடைமுறையாவதற்கு முன்பே இயல்பாக அமைந்தது என்ற சிந்தனை வெளிப்பாடு குறிப்பிடத்தக்கது. இந்த அங்கத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக அமையும் தசரதன், கைகேயி, மந்தரை ஆகிய மூவரும் மேடையில் பங்கு பெறாததும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது அங்கத்தில் இராமன் தம்பியோடும், சீதையோடும் வனவாசம் சென்றது தந்தைக்கு அளவில்லாத துயரம் தருகிறது. புலம்பியும் வருந்தியும் தவித்தும், இறந்து போகிறான். இப்பகுதியில் மூலக் கதையிலிருந்து எவ்வித பெரிய மாற்றத்தையும் பாஸன் செய்யவில்லை. நீண்ட காலமாகவே பாட்டன் குடும்பத்தோடிருந்த பரதனுக்கு தந்தையின் மரணச் செய்தி அறிவிக்கப்படவில்லை. அயோத்தி திரும்ப ஆணை மட்டுமே பிறப்பிக்கப்படுகிறது.

மூன்றாவது அங்கத்தில் ஆசிரியரின் அணுகுமுறை மிகப் பெரிய அளவில் மாறுகிறது. ’பிரதிமா நாடகம்’ என நாடகத்திற்குப் பெயர் தரும் பெருமை இந்த அங்கத்திற்கு உரியதாகும். பாட்டன் வீட்டில் இருக்கும் பரதனுக்குத் தந்தையின் இறப்பு தெரிவிக்கப்படவில்லை. தசரதனுக்கு உடல் நலமில்லையாதலால் பரதன் உடனடியாக வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு தேரோட்டி பரதனை அழைத்து வருகிறான். வரும் வழியில் தந்தையின் உடல் நலம் குறித்துப் பரதன் விசாரிக்கிறான்.

பரதன்                  :    இப்பொழுது தந்தை எப்படி இருக்கிறார்?

தேரோட்டி           :    சித்திரவதைப்பட்டுத்தான்.

பரதன்                  :    மருத்துவர் என்ன சொல்கிறார்?

தேரோட்டி            :   அவர்களால் இப்போது எதுவும் செய்ய முடியாது.

பரதன்                  :   சாப்பிடுவது, தூங்குவது எல்லாம்…?

தேரோட்டி            :  எதுவும் சாப்பிடாமல் தரையில்தான் படுத்திருக்கிறார்.

பரதன்                   : என்ன செய்வது?

தேரோட்டி            :  கடவுள்தான்..

என்ற உரையாடலில் மறைமுகமாக தசரதனின் நிலையைத்  தேரோட்டி  சொல்வது போலக் காட்சி அமைகிறது. ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் அமைந்த உரையாடலை உற்று ஆராய்ந்தால் உள்ளமைப்பு புரியும் என்பதான  நாடக ஆசிரியன் பார்வை இங்கு வெளியாகிறது. பேசியபடியே அயோத்தியை நெருங்குகின்றனர். நல்ல நேரம் பார்த்துத் தான் அரண்மனைக்குள் வர வேண்டும் என அப்போது  ஊர்ப்பெரியவர்கள் சொல்கின்றனர். பரதன் அதைக் கேட்டு ஊருக்கு வெளியே இருக்கிறான். மிக அழகான கோயில் போன்ற அமைப்பில் அங்கிருந்த ஓரிடத்தின் அமைதி, சூழல், மணம் ஆகியவை  அவனைக் கவர்கின்றன. உள்ளே சென்று பார்த்து வரப் போகிறான். வரிசையாகச் சிலைகள் உள்ளன. இறந்து போன அரசர்களின் சிலைகள் அவை. அங்குள்ள பாதுகாப்பாளர் அந்தச் சிலைகளின் பெயர்களைச் சொல்கிறார். இறந்தவர்களுக்கு மட்டுமே அங்கு சிலைகள் இருக்கும் என அவர் விளக்கமும் தருகிறார். சிலைகளாக உள்ளவர்கள் தன் தந்தையின் வம்சம் என்று அறிந்து கொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறான். அப்போது அவர் அவன் பரதன் என்பதை அறிந்துகொண்டு ‘கைகேயின் மகன்’ எனச்சொல்லி  அவன் தாய், கேட்ட வரத்தால் தான் இராமன் காட்டுக்குப் போனான் என்கிறார். அதே நேரத்தில் வரிசையில் உள்ள  கடைசிச் சிலையைப் பார்த்த பரதன், அதிர்ச்சி அடைகிறான். அது தசரதனின் சிலை. வார்தைகளின்றி மயங்கி விழுகிறான். தெளிந்த போது கோசலை, கைகேயி, சுமித்திரை என்று தாயர் மூவரும் நிற்கின்றனர். சிலைகள் உள்ள இடம் என்பதால் பிரதிமாகிருகம்’ என்ற இடம் [ பிரதிமா-சிலை. கிருகம்-இடம்] நாடகத் தலைப்பாவது இங்கு குறிப்பிடத் தக்கது.  விவரமறிந்து கைகேயியைப் பலவாறு இகழ்ந்து பேசுகிறான். அவள் தன் தாயாக முடியாது என்கிறான். தான் பட்டத்துக்கு வர எந்த நாளிலும் தயாராக இல்லை எனவும் காட்டிற்குச் சென்று இராமனை அழைத்து வரப் போவதாகவும் சொல்கிறான். பரதன் தன் தாயைவிட இராமனிடம் அதிக அன்பு வைத்திருந்தாகக் காட்சியின் போக்கு அமைகிறது. தவிர இந்த பிரதிமா கிருகம் என்ற இட அறிமுகமும், காட்சி நிலையும் இயல்பான சூழலாக ஒருங்கிணைந்து அமைந்துள்ளது. பார்வையாளனாலும் எந்தத் தயக்கமும் இன்றி இதை மிக இயல்பாக உணர முடிவதும் நாடக ஆசிரியனின் கலை வெளிப்பாட்டுத் திறமையாகிறது. இந்த அங்கத்தில் தந்தை சிலையைப் பார்த்ததன் மூலமாக இறப்புச் செய்தியை பரதன் அறிகிறான் என்பதும், தாய் கைகேயியின் மூலம் அது சொல்லப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பிரதிமாகிருகக் காட்சி, நாடக அமைப்பிலும் மேடைச் சூழலிலும் தனித்துவம் பெற்றதொரு காட்சியாகிறது, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நான்காம் அங்கம் இராமனும் பரதனும் சந்தித்துப் பேசுவதான சூழலாகும். இருவரும் பெற்றோரிடம் கொண்டிருந்த அன்பையும், சகோதரர்கள் தமக்குள் கொண்டிருந்த நெருக்கத்தையும் இக்காட்சி வெளிப்படுத்துகிறது. காட்டு வாழ்க்கையை விட்டுவிட்டுத் தன்னோடு அயோத்தி திரும்ப வேண்டும் என இராமனை அன்பாகவும் பணிவாகவும் பரதன் வேண்டுகிறான். ஆனால் இதை மறுக்கும் இராமன் தாய் கைகேயியின் விருப்பப்படி 14 ஆண்டுகள் கழித்து அயோத்தி வருவதாக உறுதியளிக்கிறான். இராமனின் பிரதிநிதியாகவே தான் நாட்டை ஆள்வதாக பரதன் சொல்கிறான். பரதனைக் குற்றமற்றவனாகக் காட்டும் வகையில் இராமனின் காலணிகளை அரச பொறுப்பில் பரதன் போற்றுவதான உறுதி மொழியும் நாடகத்தில் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகிறது.

இராமனும் இராவணனும்  போருக்கு முன்னர்ச் சந்திப்பதான நிலையில் ஐந்தாம் அங்கத்தை அமைத்திருப்பது பாஸனின் காட்சி அமைப்பிற்கும், படைப்புத் திறத்திற்கும் சான்றாகும். இராவணன் ஒரு சந்நியாசியைப் போல  இராமன் குடிலுக்கு வருகிறான். தன் குடில் வரும் இராவணனை இராமன் வணங்குவது போலக் காட்சி அமைகிறது. அது இராமன் வனவாசத்தின் இறுதி ஆண்டான 14ஆம் ஆண்டாகும். அடுத்த நாளில்தான் செய்ய வேண்டிய தந்தையின்  திதி குறித்து அப்போது சீதையோடு இராமன் பேசிக்கொண்டிருக்கிறான். திதி சாத்திரங்களில் சிறந்தவனான இராவணன் பேச்சால் இராமனை தன் வயப்படுத்துகிறான். இமய மலையில் மிக அபூர்வமாகக் காணப்படும் பொன்நிறம் கொண்ட உடலுடைய மானின் தோலில் தர்ப்பணம் செய்வது மிகப் புண்ணியமானது என்கிறான். ஆனால் அவ்வகையான பொன்மான் கிடைப்பது அபூர்வம் எனவும் இராவணன் சொல்கிறான். தந்தைக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இராமனுக்கு எப்படியாவது அந்தச் செயலைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எழுகிறது.  அந்த நேரத்தில் சந்நியாசி சொன்ன அடையாளத்தோடான ஒரு பொன்மான் வருகிறது.  அதைப் பிடித்து விட வேண்டும் என்ற ஒரு சிந்தனை மட்டுமே அப்போது இராமன் நெஞ்சில் நிற்கிறது. மானைப் பின் தொடர்ந்து புறப்படும் அவன் சீதையிடம் விடை பெறுகிறான். செல்லுமுன், எப்போதும் உடன் இருக்கும் இலக்குவனை அழைக்கிறான். திதி தொடர்பான குருவை அழைத்து வரப் போயிருக்கிறான் எனச் சீதை இராமனுக்கு தம்பி இல்லாததை நினைவூட்டுகிறாள். இலக்குவனைத் தான் அனுப்பி வைத்ததை மறக்கும் அளவுக்கு அவன் மனத்தில் தந்தையின் திதிச் செயல் பதிந்திருக்கிறது.  சந்நியாசிக்கு வேண்டியதைச் செய்து அவரை அனுப்பி  வைக்கும்படி சீதையிடம் சொல்லி  விட்டு  மானைப் பிடிக்கப் போகிறான். இங்கு எவ்விதச் சந்தேகங்களுக்கும் இடம் தராத வகையில் தன் உரையாடலை திதியோடு தொடர்புபடுத்தி இராவணன் பேசுவதால் அவர்கள் இடையே நடக்கும் உரையாடல்  மிக இயல்பாக இருக்கிறது. இலக்குவனும் வேறு பணி காரணமாகச் சென்றிருக்கிறான் என்ற செய்தி சீதையை இராவணன் கவர சிறந்த  சந்தர்ப்பமாகிவிடுகிறது. வில்லோடு இராமன் சென்று விட்டதைப் பார்த்து மகிழும் இராவணன் தான் யார் என்பதைச் சீதைக்கு அறிவித்து விட்டு அவளைக் கவர்ந்து போகிறான். மான் வேண்டும் என மனைவி கேட்க அவள் விருப்பத்தை  நிறைவேற்ற இராமன் சென்றதாக மூல கதை அமைகிறது. ஆனால் இங்கு தந்தையின் ஆத்ம சாந்திக்கும் திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன  செய்திதான், அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின்  அணுகுமுறை அமைகிறது. இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட  அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற  செயல்கள் இங்கில்லை இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.

ஆறாம் அங்கத்தில் இராமன் காட்டிற்குச் சென்ற பழிக்கு தானே காரணம் என்று கைகேயி  ஒப்புக் கொள்வதான சூழலை பாஸன் காட்டுகிறான். வேட்டைக்குச் சென்ற தசரதன், குளத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற ஒலியைக் கேட்கிறான். யானை என்று நினைத்து அவன் விட்ட அம்பு  பார்வையற்ற தந்தைக்காக  தண்ணீர் எடுக்க வந்த மகனைக் கொன்று விடுகிறது. தன்னைப் போலவே தசரதனும் புத்திர சோகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற  சாபம், முதிய தந்தையால் தரப் படுகிறது. இது அறியாமல் செய்த பிழையேயாயினும் விதிவலிமை காட்டுவதாகிறது. இதிலிருந்து தசரத னும் இராமனும் விடுபட வேண்டுமென்றால் இராமன் உயிருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது எனக் கைகேயி நினைக்கிறாள். அதன் எதிரொலிதான்  இராமனைத் தசரதனிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பும் செயலாகிறது. இதை,

கைகேயி  :    அரச பதவி மீது வெறி கொண்டு இராமனைக் காட்டுக்கு   அனுப்பவில்லை. இராமன் வனவாசம் சென்றால் ஒழிய இந்தத்  தவிர்க்க முடியாத சாபத்திலிருந்து மீள  முடியாது.  இதனால்   தான் என் மீது பழி விழுந்தது.

பரதன்   : மகனின் வனவாசம் அப்படி அவசியமானது என்றால் என்னை  அனுப்பி இருக்கலாமே..?

கைகேயி  : முதலில் இருந்தே நீ தாய்மாமனோடு  இருந்ததால் அந்த  வாழ்க்கை வனவாசம்  போலப்  பிரிந்து இருப்பதுதான்.

பரதன்      :    பின்பு ஏன்  14 ஆண்டுகள் என்று நிர்ணயித்தீர்கள்  ?

கைகேயி   : 14  நாட்கள் என்று சொல்ல வந்தது மனக்குழப்பத்தில் 14    ஆண்டுகள் என்று  மாறிவிட்டது.

பரதன் :    ‘விவேகம்’ என்பது நிதானமாக இருப்பது என்பது. இது  பெரியவர்களுக்குத் தெரியாதா?

என்ற தாய்-மகன் இடையேயான உரையாடல் பொருள் செறிவும் பாத்திர உயர்வும்  உடையதாகிறது. மகனின் பிரிவு தாங்காமல் தசரதன் இறந்து போகிறான். இந்த உண்மை வசிட்டர், வாமதேவன், சுமந்திரன் ஆகியோருக்குத் தெரியும் என்று கைகேயி பரதனுக்கு விளக்குகிறாள். இராமனிடம் பேரன்பு கொண்டவளாக கைகேயி இருப்பதால்தான் அவனுக்குரிய சாவைத் தவிர்த்து தந்தையிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பினாள் என்பது பாஸனின் அணுகுமுறையாகும். மகன் பரதனுக்கு ஆட்சியைக் கொடுப்பது அவள் எண்ணமல்ல என்பது அவர் வெளிப்படையாகச் சொல்ல வரும் செய்தியாகும். பரதன் உண்மையை உணர்ந்து தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். இராமனுக்குப் போர் உதவி செய்யப் போகிறான்.

ஏழாவது அங்கம், இராமன் போரில் இராவணனை அழித்துவிட்டு வீடணனுக்குப் பட்டம் சூட்டுவதான நிலையில் தொடங்குகிறது. சீதையுடன் இராமன்  மகிழ்ச்சியாக பரத்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு வருகிறான். கரடி, குரங்குகள், ஆகியவையும் அவனோடு ஆசிரமம் வருவதாக நாடகம் மகிழ்ச்சிப் பின்னணியில் முடிகிறது.

இராவணன்-இராமன் போர் விரிவாக பாஸனால் காட்டப்படவில்லை. இராவணன் அழிவு பொதுவாகச் சொல்லப்படுகிறதே தவிர தனிக் காட்சிகளாக அவை இடம் பெறவில்லை. மூல கதையில் இடம் பெறும் முக்கிய பாத்திரங்களான அனுமன்,  இந்திரஜித் போன்ற பாத்திரங்கள் இங்கு இடம் பெறவில்லை. வீடணன் பாத்திரம் முடிசூட்டுதல்  என்ற நிலையில் குறிப்பிடப்படுகிறதே தவிர தனியான பாத்திர முக்கியத்துவம் இல்லை. நாடகக் கதை முடிந்ததென்றாலும் பார்வையாளனுக்கு  இராமனைப் பற்றிய முழுக் கதை தெரிந்ததான திருப்தி  இல்லை என்பதைப் பாஸன் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் இக்கதையின் தொடர்ச்சியாக ’அபிஷேக நாடகம்’ என்ற அடுத்த நாடகம் உருவாகியிருக்கிறது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் இல்லை.

———————–

படத்துக்கு நன்றி: https://www.exoticindiaart.com/book/details/pratimanataka-of-mahakavi-bhasa-NZB287/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *