நாங்குநேரி வாசஸ்ரீ

வாசகர்களுக்கு வணக்கம்,

இதை நான் எழுதுவதற்கு, எங்கள் ஊரில் (நாங்குநேரி) கத்தரிக்காய் விற்று வந்த இசக்கித்தாய் என்ற பாம்பட ஆச்சி தான் காரணம்.  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக நாங்கள் பயிலும்போது, ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரைக் காண்பித்து, இந்தச் சாமி யாரு? இவுங்க சொன்னத தமிழ்ல சொல்லு தாயி. நானும் கேட்டுக்கிடுவேன் இல்ல என்பாள்.  அவளைப் பொறுத்தவரை அவள் பேசுவதுதான் தமிழ்.  இறை எய்திவிட்ட அவள் எங்கிருந்தோ இருந்து கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் உரை இது. தனைச் சான்றோர்கள் வாசிக்க வேண்டும் என்ற  சிறிய அவாவுடன் வல்லமை இதழுக்கு அனுப்புகிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். – நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எல்லா எழுத்தும் ‘அ’ ல தான் தொடங்குது. (அது போல) நாம நிக்க, திங்குத, தூங்குத இந்த ஒலகத்தோட தொடக்கம் கடவுள்.

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

எல்லாத்தையும் அறிஞ்ச கடவுள கும்பிடலேன்னா நீ படிச்ச படிப்பால என்ன பிரயோசனம்..

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

பூ போல உள்ள மனசுக்குள்ள குடியிருக்க கடவுள நெனக்கவன் சந்தோசமா இந்த உலகத்துல நெறைய நாள் வாழுவான்.

குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

வேணும் வேண்டாம் னு நெனப்பே இல்லாத கடவுளோட திருவடிய கும்பிடுதவனுக்கு ஒருநாளும் தொயரம் அண்டாது.

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளோட உண்மையான புகழ விரும்பி அறிஞ்சவனோட புத்திக்கு நல்லதும் கெட்டதும் ஒண்ணு போலத் தோணும்.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு ங்கற அஞ்சு பொறி லேந்தும் பிறக்குத கெட்ட ஆசைய அவிச்சு ஒழிச்சு இருக்க கடவுளோட பொய்யில்லாத ஒழுக்கத்த கடைபிடிச்சாம்னா அவன் நெறைய நாள் வாழுவான்.

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்கு ஒப்பும சொல்ல ஏலாத கடவுளோட காலப் புடிச்சவன தவிர மத்தவனோட மனத் தொயரத்த மாத்துதது சுளுவான காரியம் இல்ல.

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அறக்கடலா இருக்க கடவுள நெனயாதவன் மாறி மாறி பொறந்தும் செத்தும் பல சென்மம் எடுத்து பெறவி கடல்ல நீந்த முடியாம கெடந்து சீரளியுவான்.

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

சோலி பாக்காத கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பால எவ்ளோ செரையோ அது போல தான் கடவுள வணங்காதவனோட தலயும்.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

கடவுள கும்பிடுதவனால மட்டுந்தான் பிறப்புங்குத கடலுக்குள்ள நீந்தி கரைய கடக்க முடியும். மத்தவனுக்கு சிரமந்தான்.

******************************

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 1

  1. நன்று..
    நல்ல முயற்சி .. வாழ்த்துகள்…!

  2. நெல்லைத் தமிழில் விளக்கம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

  3. அட நம்மூரு தமிழ்ல திருக்குறள எழுதிருக்கியளா….படிக்க சவுரியமா இருக்குமே….. எந்த ஊர்ல கடந்தாலும் எனக்கு மனசு திருநவேலி திருநவேலி ன்னுல்லா அடிச்சுட்டு கெடக்கு…. ரொம்ப நல்ல முயற்சி…. வாழ்த்துக்கள்

  4. நம்ம ஊரு தமிழ் ல திருக்குறள் வெளக்கமா…. ரொம்ப சவுரியமால்லா இருக்கும் படிக்க…. சூப்பர்…. கலக்குங்க.. பாராட்டுக்கள்… நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *