அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 197

  1. ஈரம் கொண்ட பிஞ்சு மனம்
    __________________________

    மாதம் மும்மாரி பொழிந்த
    காலம் போய்
    வானம் பார்த்து வாழும் ஒரு கூட்டம்
    கால் கடுக்க வெகு தூரம் நடந்து சென்று
    கால்வாய்களில் கொண்டு வந்த தண்ணீர்
    கால் வயிறு கஞ்சி காய்ச்சிட
    காலியாகி போனதே
    நீரை தேடி மீண்டும் கால்கள் நடந்ததே
    மீளாத துயரம் இன்றும் தொடர்ந்ததே
    நிலத்தடி நீரை உறுஞ்சி குளித்து
    குடிக்கும் நீரை காசு கொடுத்து வாங்கி
    வாழும் ஒரு மக்கள் கூட்டம்
    அன்போடு தேவை அறிந்து பரிமாற்ற நேரமின்றி
    ஆடம்பரத்திற்கு அடிமையாகி
    அடைத்து வைத்த தண்ணீரை
    கட்டாயமாய் வழங்கிடும் ஒரு கூட்டம்
    அதிகம் உண்டு நீர் குடிக்க இடம் இன்றி
    தாகம் தீர்க்கும் தண்ணீரை
    செய்வது அறியாது வீணாகிடும் ஒரு கூட்டம்
    முழுதும் முடியாத கட்டிடத்தில்
    அதிகம் வளராத பிள்ளைகள்
    வியக்க வைக்கும் சிந்தனையுடன்
    வீணாகும் நீரை சேமித்து
    சிலரது தீராத தாகத்தை தனித்திட
    புன்னகையோடு வழி காட்டி நின்றனரே

  2. நீர் வளம் பெருகிடவே
    நிறைந்த மனதாய்
    நெகிழி குடுவையே!
    போய் வருவாயோ!

  3. உணவுப் பந்தியில் உதித்த சிறுமியரின் தொடர்வண்டி…
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    -ஆ. செந்தில் குமார்.

    தொடர்வண்டி செய்திடுவோம்.. தோழி..
    தொடர்வண்டி செய்திடுவோம்..
    அழகழகு குப்பிகளை.. தோழி..
    அருகருகே நிற்கவைத்து.. (தொடர்வண்டி…)

    பந்தி முடிந்த பின்னாலே.. தோழி..
    பல குப்பிகளை சேகரித்து..
    பந்திமேசை அதன்மீது.. தோழி..
    பாங்குடனே அடுக்கிவைத்து.. (தொடர்வண்டி…)

    இழுவையொன்று செய்திடவே.. தோழி..
    இயன்றவழியைச் சொல்வாயா..?
    இங்கிருக்கும் பொருளொன்றை.. தோழி..
    இழுவையாக நாம்மாற்றி.. (தொடர்வண்டி…)

    தொடர்வண்டி செய்தாச்சு.. தோழி..
    தண்டவாளம் என்னாச்சு..?
    தாங்கிநிற்கும் மேசையிதையே.. தோழி..
    தண்டவாளமாய்க் கொள்வோமே.. (தொடர்வண்டி…)

    நாம் செய்த தொடர்வண்டி.. தோழி
    நீண்டதொலைவு சென்றிடுமே..
    நாமிருவரும் அதிலேறி.. தோழி
    நினைத்தபடியே செல்வோமே.. (தொடர்வண்டி…)

  4. நெகிழிப் பொருட்களைத் தவிர்த்திடுவோம்.. மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    -ஆ. செந்தில் குமார்.

    நெகிழிக் குப்பிகள் ஒவ்வொன்றாய்.. நெருக்கமாய் அடுக்கி வரிசையாக்கி..
    நெஞ்சம் மகிழ விளையாடும்.. நெருங்கியத் தோழிகள் இருவருக்கும்..
    நெருக்கடி சூழலை உணர்த்துகிறேன்.. சிரத்தையாய் அதற்கு செவிமடுப்பீர்..!!

    நெருங்கழுத்து உள்ள நாரைகளும்.. நெடுந்தூரம் செல்லும் பறவைகளும்..
    நெடுங்கடல் வாழும் உயிரினமும்.. நெகிழிப் பொருட்களை விழுங்குவதால்..
    நெடிதுயில் கொள்வதை உணர்வீரா.. இவற்றின் துன்பம்போக்க முனைவீரா..!!

    நெடுஞ்சாலை நீர்நிலை எங்கெங்கும்.. நெகிழிக் குப்பைகள் நிறைந்திருக்கு..
    நெடுகிலும் குவியும் குப்பைகளால்.. நெருப்பாய்த் தகிக்குது நம்பூமி..
    நெஞ்சம் பதறுது அதையெண்ணி.. உணர்வீர் செல்லக் குழந்தைகளே..!!

    நெல்லைத் தந்திடும் பூமியெங்கும்.. நெருஞ்சில் தைத்த வலியாக..
    நெகிழிக் குப்பைகள் படிவதனால்.. நெடிதுய்க்கும் மண் வளங்கள்..
    நெஞ்சம் பதறிட குன்றிடுதே.. நெடுங்கதையாய் இது தொடர்கிறதே..!!

    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நிலத்தடி நீரின் குறைபாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நாட்டின் தூய்மைக்கு இடர்பாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நம் சுற்றுச்சூழலின் சீர்கேடு..!!

    மனதில் இவற்றை இருத்திடுவோம்.. மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!
    மட்க்கா நெகிழிக் குப்பைகளை.. மண்ணில் எறிவதைத் தவிர்த்திடுவோம்..!!
    நெகிழிப் பைகளைத் தவிர்ப்போமே.. நெய்த துணிப்பைகளைக் கொள்வோமே..!!

  5. மாற்றம்…

    ஆறு குளமும் கேணியென
    அத்தனை வகையாய் நீர்நிலைகள்,
    ஊறும் நீரின் வளத்தாலே
    உலகம் வாழ்ந்ததே யந்நாளில்,
    கூறு போடும் மனிதராலே
    குன்றிப் போனது நீர்வளமும்,
    ஆறாய்ப் போன நீர்மறந்தே
    அடைத்ததைக் குப்பியில் காண்கிறோமே…!

    செண்பக ஜெகதீசன்…

  6. நெடுங்கழுத்து உள்ள நாரைகளும் என்று மாற்றிப் படிக்கவும். நன்றி.

  7. நினைவு தினம்
    ________________

    வாரீர் எம் தமிழர்களே
    வழியனுப்பு விழாவிற்கு
    நெகிழிப்பை பயன்படுத்த
    நாளை முதல் தடையாம்
    பிறந்தது முதல் தொட்டிலாய்
    பாலுண்ணும் குமிழியாய்
    பகிர்ந்து உண்ணும் தட்டாய்
    பருக உதவிய குவளயாய்
    விளையாட்டுப் பொம்மையாய்
    விரும்பி ஆடும் ஊஞ்சலாய்
    குளிக்கும் வாளியாய்
    பல வருடம் வித விதமாய்
    பவனி வந்த நெகிழி பற்றி
    புரிந்து கொண்டோம்
    நாளை முதல் ஒவ்வொன்றாக
    நன்மை கருதி புறந்தள்ளுவோம்
    உருக்கி வடிவுமாற்றி மீண்டும்
    உபயோகிக்க முடிந்தவை தவிர
    மக்கிப் போகாது இப்புவிவாழ்
    மக்களையும் மாக்களையும்
    வாட்டி வதைக்கும் நெகிழிகளுக்கு
    வழியனுப்பு விழா இன்று
    புவிவளம் காக்க அவைகளை
    புறம் ஒதுக்க விழைந்தாலும்
    கெட்டவரையும் புண்படுத்தாத
    குணம் கொண்ட தமிழர் யாம்
    நிறைவு பெறாக் கட்டிடத்தில்
    நிறை மனதோடு கொண்டாடுவோம்
    நெகிழிப் பைக்கொரு நினைவுதினம்.

  8. மாறுவோமே மாற்றுவோமே
    ———————————————
    பச்சை தலைப்பாகட்டி பளபளக்க வரிசையிலே
    பச்சை தண்ணீர் நெகிழி போத்தல்கள் -நாம்
    எச்சிலாக்கி எறிந்த பின் மக்கி நெகிழாமல்
    பசுமை தாய்நிலத்தின் நலம் சாய்க்கும் பகைவர்கள்

    வழக்கம் மாறினால் வானமே எல்லை நெகுநெகு நெகிழிகளை
    வழியனுப்பி வைப்போம் பிள்ளைகள் நாங்கள்
    வாழும் பூமிக்கோளம் மாசின்றி மலர்ச்சியுற
    வையகம் வாழ வழிமுறை காண்போம்

    மடமடவென மண்பானை தண்ணீரை குடித்துவிட்டு
    மளமளவென மண்வெட்டியால் நிலம் கொத்திய
    முப்பாட்டன் காலத்தின் சூழல் நோக்கி முழுமனதுடன்
    முதல் அடியை எடுத்து வைப்போம்

    மண்பாண்ட குவளைகள் எல்லாம்
    மரியாதை பெற்றே மனையேறட்டும்
    மக்காத மாசான நச்சு குப்பைகள் எல்லாம்
    மனம் மாறி மலையேறி வெளியேறட்டும்

    மாசில்லா உலகே மகிழ்வான சுவர்னம்
    மக்காத பெருளாலே நிகழ்மே உயிர்களின் மரணம்
    மனம் நெகிழ்ந்தே நெகிழிகளை ஒழிப்போம்
    மண்ணுயிக்கு வாழ்வளித்து மகிழ்வோம்

    மானிதனின் தேவைக்கு தாயாகும் இயற்கை
    மாறாத அவன் பேராசைக்கு பாலியாகிது இது செயற்கை
    மாறுவோமே மாற்றுவோமே இனி மண் சிரித்து பொன்னாகும்
    மரம் வளர்ப்போம் உலகு அழகாகும்
    யாழ். பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    http://noyyal.blogspot.in

Leave a Reply to நாங்குநேரி வாசஸ்ரீ

Your email address will not be published. Required fields are marked *