(Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்

4

முனைவர் ஆ.ராஜா
அருங்காட்சியகத் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-10

கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்
(தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச் சான்றுகளின் அடிப்படையில்)

கொடுமணல் என்ற ஊர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் காவிரியாற்றின் கிளை ஆறான நொய்யல் ஆற்றின் வடகரையில் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, இவ்வூரைக் ‘‘கொடுமணம்’’ என்று குறிப்பிடுகிறது. இத்தகைய சங்க கால இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் கொடுமணலில் 1985-1986ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய அகழாய்வில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த  தடயங்கள் பற்றியும், குறிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள கொடுமணல் அகழாய்வுத் தடயங்கள் குறித்தும்  இக்கட்டுரை விளக்குகிறது.

சங்க காலத்தில் அரிய கற்களைக் கொண்டு அணிகலன்களை உருவாக்கக்கூடிய தொழிற்கூடமாகக் கொடுமணல் விளங்கியிருந்தமையைக் ‘‘கொடுமணம் பட்ட வினை மான் அருங்கலம்’’ என (பதிற்றுப்பத்து 74) அரிசில்கிழாரும், ‘கொடுமணம் பட்ட நன்கலம்’ (பதிற்றுப்பத்து 64) எனச் சங்கப் புலவர் கபிலரும் குறிப்பிடுவதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வூர், சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூவூரையும், கேரளத்திலுள்ள துறைமுகப் பட்டினமான முசிறிப்பட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது.

தொல்பொருட்கள்

கொடுமணலிலுள்ள வாழ்விடப் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது, அகழாய்வுக் குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப் பகுதிகள், வீட்டுத் தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப் பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் (இரும்பு உருக்கு உலைகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் பல உலைகள், வட்ட வடிவில் அமைந்திருந்ததோடு, உலைகளின் கழிவு அல்லது கசடு அதிகளவில் காணப்பட்டன. இவ்வுலைகளில் சில, செம்பு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும், கொடுமணல், ரோமானிய நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கான பல சான்றுகள் இங்கே கிடைத்துள்ளன. குறிப்பாக, மேற்பரப்பில் கிடைத்த ரோமானியக் காசும், அகழாய்வுக் குழிகளில் கிடைத்த ரோமன் வகை ‘ரூலெடட் மண்கல’ச் (Rouletted Pottery) சில்லுகளைக் குறிப்பிடலாம்.

படம் : 1 & படம் : 2
கொடுமணல்: குறியீடுகள் பொறித்த கறுப்பு-சிவப்பு கிண்ணம் மற்றும் சிவப்பு பானை ஓடு
(நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

மேலும், இரும்பாலான கூர்முனைகள், கத்திகள், அரிவாள்1, செம்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், பச்சைக்கல் (Beryl), நீலம் (sapphire), வைடூரியம் (lapis lazuli), ஜாஸ்பர் (Jasper), அகேட் (agate), கார்னட் (carnet) ஆகிய அரிய கல்மணிகளும் கிடைத்துள்ளன. சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றதற்கான தடயங்களான சங்கு வளையல் துண்டுகளும் (படம்:5) கிடைத்துள்ளன. இவ்வகழாய்வில் ஏராளமான சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. அம்மணிகளில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரிய வகை சூதுபவள மணிகளைப் பெருங்கற்கால மக்கள் உருவாக்கியதற்கான தொழிற்கூடம் கொடுமணலில் இருந்துள்ளது என்பதை இங்கே கிடைக்கக்கூடிய மிகுதியான மணிகளின் வாயிலாக அறிய முடிகிறது. இத்தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்ட மணிகள், முசிறிப் பட்டினத்தின் வழியாக மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாகப் பண்டைய மக்கள் கடல்கடந்த வணிகத்தை அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

படம் : 5
சங்கு வளையல் துண்டுகள்
(நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தொழிற்கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் நின்று நிலைத்துள்ளன எனக் கா.ராஜன் கருதுகிறார். கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை வாங்குவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து வணிகர்களும் கைவினைஞர்களும் இங்கு வந்துள்ளதைத் தமிழ் மயமாக்கப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட்பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கங்கைச் சமவெளிப் பகுதியின் பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள், கங்கைச் சமவெளிப் பகுதியில் கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம்மட்பாண்டம், கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்2. மேலும், புலிப்பொம்மை சிவப்பு, ஊதாக்கல் பதிக்கப்பட்டு அழகாகச் செய்யப்பட்டுள்ளது. சில விலங்குகளின் எலும்புகளும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்துள்ளமையால் இம்மக்கள் புலால் உணவை அருந்தியமை தெரிகிறது.3

மேலும், ஈமக் காட்டில் உள்ள பெருங்கற்படைச் சின்னங்கள், நீத்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட கல்லறைகளாகும். இவற்றில் ஒரு சிலவே மண்ணால் செய்யப்பட்ட தாழிகளாகும். இப்பெருங்கற்படைச் சின்னங்கள் பெரிய கற்பலகைகளைக் கொண்டு, நீள்சதுரம் அல்லது சதுர வடிவில் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டன. இக்கற்பலகைகள் ஒரு டன் முதல் ஆறு டன் வரை எடையுள்ளவையாகக் காணப்பட்டன. தென்னிந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் குறிப்பாகக் கல்லறைகளில் மிகப் பெரியவை கொடுமணலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கல்லறைகளில் இடுதுளைகள் (Porthole) இருந்தன. கல்லறைக்குள்ளும் வெளியிலும் நீத்தோர் நினைவாகப் படைக்கப்பட்ட மட்பாண்டங்கள், இரும்பு, செம்புப் பொருள்கள், மணிகள் (Beads) ஆகியவற்றையும், வெண்மை நிறப் படிகக் கற்கள் (Quartz pieces) ஆகியவை கொண்டும் நிரப்பப்பட்டன. மேலும், கறுப்புநிறத் தாங்கிகள் (Ring stand), மூடிகள் (Lids),  கறுப்பு சிவப்பு நிறக் கிண்ணங்கள் (Bowls), குறியீடுகள் மற்றும் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கறுப்புசிவப்பு, சிவப்பு வகை மண்கலங்கள், நான்கு கால்களுடன்கூடிய சிவப்பு நிறச் சாடிகள் (Jars:படம்.4), தட்டுகள், சிறிய பெரிய இரும்பு வாள்கள் (Small and big swards), கத்திகள், அம்பு நுனிகள், ஈட்டி நுனிகள், கடப்பாரை, உளி, கம்பி, ஆணி, அரிவாள், புலிப் பொம்மை, வாணலி போன்ற வடிகட்டி, கரண்டி, ஊசி, ஊதுகுழாய், கம்பி, மோதிரம், ஒலிமணி, செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் ஆகியவை, அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

படம் : 4
நான்கு கால்களுடன் கூடிய சாடிகள்
(நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

இங்கு கண்டறியப்பட்ட பொருட்களில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது சிறப்புக்குரியதாகும். இவ்வூரில் மிகப் பரந்த அளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள், உலக அளவில் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும்

குறியீடுகள் என்பவை, பானையின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ காணப்படும். இந்தியாவில் பானைகளில் கீறப்பட்டுள்ள குறியீடுகள் பற்றிய ஆய்வினை, 1881இல் பிரான்பில் என்ற அறிஞர் தொடங்கினார். அதன் விளைவாக இ.எச்.ஹண்ட், ஜி.யஜ்தானி, பி.கே.தாபர், பி.பி.லால் போன்ற ஆய்வாளர்கள் தோற்றம், வளர்ச்சி மற்றும் குறியீடுகளுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றை அகழாய்வுகளில் கிடைத்த பானைப் பொறிப்புகள், காசுப் பொறிப்புகள், முத்திரைகள் முதலியவற்றிலிருந்து ஆராய்ந்துள்ளனர்.4

கொடுமணலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம், மத்திய தொல்பொருள் அளவீட்டுத் துறை ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பலவற்றில் கீறல் குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கரூர், திருக்காம்புலியூர், உறையூர், அழகன் குளம், வல்லம் போன்ற ஊர்களிலும் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதே போன்று தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமான குறியீடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகள், பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் கொடுமணலில் கிடைத்த குறியீடுகள் 1456இல் 58 குறியீடுகள் தனிக் குறியீடுகளாவும், 24 அடிப்படைக் குறியீடுகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன5.

இக்குறியீடுகள் ஏதோ ஒருவகையான தகவல்களை வெளிப்படுத்தக் கூடியவையாக இருந்திருக்க வேண்டும். எழுத்துகள் உருவாவதற்கு முன், மக்கள் தங்களின் எண்ணங்களையும் செயல்களையும், அவர்களைப் பற்றிய பதிவுகளையும் குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

தமிழ் – பிராமி எழுத்துகள்

ஆரம்ப காலத்தில், குறியீடுகள் மற்றும் ஓவியங்கள் வாயிலாக மனிதர்கள், தங்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி வந்தனர். அதன் பின் சிந்திக்கத் தொடங்கிய மனிதர்கள் குறியீடுகளிலிருந்து வளர்ச்சி பெற்று எழுத்துகளைக் கண்டறிந்து உருவாக்க முற்பட்டனர். பண்டைத் தமிழர்கள், கி.மு.500 வாக்கில் எழுத்துகளின் பயனை அறிந்தவர்களாக இருந்துள்ளனர். பொதுவாக இக்காலக்கட்டத்திலுள்ள எழுத்துகளைத் தமிழி அல்லது தமிழ்பிராமி என்பர். இவ்வகையான எழுத்துகள், கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக 500க்கும் மிகுதியாகக் கிடைத்துள்ளன6. சங்க இலக்கியங்களில் வருகின்ற பெயர்கள் இங்கு கிடைத்த பானை ஓடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாகச் சாம்பன் ஸீமநன்(படம்.3), கூல அந்தைய் சாம்பன் அகல், கண்ணன் ஆதன், பண்ணன், குவிரன் அதன், அந்தவன் அதன், விஸாகீ, விஸகன், அதன்7,  போன்ற எழுத்துப் பொறிப்பு பெற்ற பானை ஓடுகளைக் குறிப்பிடலாம்.

படம் :3, கொடுமணல்: ‘சாம்பன் ஸீமநன்’ எழுத்துப் பொறித்த பானை
(நன்றி: பேரா.கா.இராஜன்)

இலங்கையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அணைக்கோட்டை என்ற இடத்தில் பெருங்கற்படைச் சின்னம் அகழ்ந்தபோது கிடைத்த முத்திரை ஒன்றில் ‘கோவேதா’ என்ற பிராமி எழுத்து உள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்களால் கேரளாவிலுள்ள எடக்கல் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டின் இறுதியில் ‘கடும்மி புத சேர’ என்ற சொல், தமிழ்-பிராமியில் உள்ளது நோக்கத்தக்கது.8

இதே போன்று இலங்கையின் மிகத் தொன்மை வாய்ந்த ஊர்களுள் ஒன்றாகக் கருதப்படும் அநுராதபுரம் என்ற இடத்தில் தெரிணியகலா மற்றும் ராபின் கோனிங்காம் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில்  பிராகிருதம் தாங்கிய பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் குறிப்பிட்ட மண்ணடுக்குகளில் கிடைத்தன. இம்மண்ணடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் காலக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அம்மண்ணடுக்குகளில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களின் காலமும் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டன.

ஆயினும், பெளத்த மதம் அசோகரால் இலங்கையில் புகுத்தப்பட்ட போதுதான் பிராமி வடிவமும் அங்குப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்காலத்தை ஏற்றுக்கொள்வதில் அறிஞர்கள் தயக்கம் கொண்டனர். இருப்பினும், இக்கால வரையறை இதுவரை பிராமி எழுத்துகளின் காலம் தொடர்பாகக் கொண்டிருந்த கருத்தை உரசிப் பார்த்தது.

இந்நிலையில், பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களும் தமிழ்-பிராமி எழுத்துகளின் காலம் குறித்து முக்கியச் செய்திகளை நமக்கு வழங்கின. அதன் விளைவாக அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு முறையில் பொருந்தல், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காலக் கணிப்பு செய்யப்பட்டன. இதன் வாயிலாக தமிழ்-பிராமியின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் நோக்கித் தள்ளப்பட்டது என்கிறார் கா.இராசன்.9

காலக் கணிப்பு

தொடக்க காலத்தில், எழுத்துகளின் வரிவடிவத்தின் அடிப்படையிலும், மண்ணடுக்கில் கிடைக்கின்ற பானை ஓடுகளின் அடிப்படையிலும், குகைத் தலங்களில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையிலும் காலக் கணக்கீடு செய்யப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தால் கரிமக் காலக் கணிப்பு முறையின் வாயிலாகக் காலம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கா.இராசன் அவர்கள் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் காலக் கணிப்புக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வுக் கூடத்திற்கும், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்திற்கும் அனுப்பப்பட்டன. அவை கி.மு 408 என்ற காலக் கணிப்பை வழங்கின.

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலத்திற்கு ஏற்பக் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலமும் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இக்காலக் கணிப்பு இங்குக் கிடைத்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்டன. அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தைக் கி.மு. 5 ம் நூற்றாண்டு என கா.இராசன் குறிப்பிடுகிறார்.10

கொடுமணலில் முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட  அகழாய்வுகளில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளின் காலத்தை, புதுச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் 2012 மற்றும் 2013களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் அகழப்பட்ட குழிகளின் மண்ணடுக்கில் கிடைத்த தழிழ்-பிராமி எழுத்துகளின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட கரிமக் கணிப்பின்படியும் கி.மு.500 எனக் கருதலாம். இவ்வகையான அறிவியல் முறைப்படியான ஆய்வுக்கு முன், கொடுமணலின் காலம் எழுத்துகளின் வடிவத்தின் அடிப்படையில் கி.மு.300 எனக் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

எனவே, கொடுமணல் பெருங்கற்காலத்தில் பெரும் நகரமாகவும், உள்நாடு மற்றும் மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த செழித்த ஊராகவும் திகழ்ந்திருக்கிறது என்பதை அகழாய்வுகளில் கிடைத்த பல்வேறு வகையான சான்றுகளின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கொடுமணலில் கண்டறியப்பட்ட எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளை அறிவியல் முறைப்படி காலக் கணிப்பு செய்ததில் இதன் காலம் கி.மு.500க்கு பின்நோக்கி எடுத்துச் சென்றுள்ளது சிறப்புக்குரியது. இதன் வாயிலாகத் தமிழகத்தில் குறிப்பாகக் கொடுமணலில் பெருங்கற்கால மக்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே செழிப்புற்றிருந்தார்கள் என்பதனை அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கம்

  1. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, ManooPathippakam, Thanjavur, 1997, P.89.
  2. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
  3. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி எட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988, பக்.72-74.
  4. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
  5. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
  6. மேலது.
  7. எ.சுப்பராயலு, மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம் இதழ்-19, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2008, பக்.189-221.
  8. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
  9. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
  10. மேலது.

துணை நின்ற நூல்கள் மற்றும் இதழ்கள்

  • சு.இராசவேலு மற்றும் கோ.திருமூர்த்தி, தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
  • Subbarayalu, “Vallam Excavations”, Tamiḻ Civilization, vol.2, no.4, 1985, pp.30-42.
  • Rajan, “Kodumanal Excavations – A Report”, K.V.Ramesh (ed.), Gauravam B.K.Gururajarao Felicitation Volume, Harman Publishing Company, New Delhi, 1996, pp.72-86.
  • Rajan and Osmund Bopearachchi, “Graffiti Marks of Kodumanal (India and Ridiyagama (Sri Lanka)”, Man and Environment, vol. 27, no.2, 2002, pp.97-106

=====================================================

ஆய்வறிஞர் கருத்துரை:

தமிழகத் தொல்லிடங்கள், பொதுவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டு அளவே கால மூதெல்லையாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பிராமி எழுத்தின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்பட்டதே முதன்மைக் காரணம். கரிம ஆய்வின்படி கொடுமணல் பிராமி எழுந்துள்ள பானை ஓடுகள், எழுந்துள்ள பானையில் இருந்த பொருள்கள் கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை நீளுவதால் பிராமி எழுத்தின் காலம் மட்டுமல்ல, கொடுமணல் நாகரிகக் காலமும் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது என நிறுவப்பட்டுள்ளதைக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. வைடூரியம் < lapis lazuli என்பது தவறு. அது ஒரு நீல நிறப் பாறைக்கல். மற்றபடி, கட்டுரை நன்று.

=====================================================

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “(Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்

  1. தமிழர் தொன்மையை இரண்டாயிரங்களில் அடக்கியது போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *