-மேகலா இராமமூர்த்தி

பரத்தைமை எனும் கூடாவொழுக்கத்தின் பரவலுக்கு நாகரிக மையங்களாக விளங்கிய நகரங்களும் அவற்றை உள்ளடக்கிய மருத நிலமுமே காரணம் என்பதாலேயே நம் தமிழ்ப் புலவர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனும் ஐந்திணையில் மருதத்துக்கு பரத்தைமை ஒழுக்கத்தால் தலைவன் தலைவியரிடையே நிகழும் ஊடலை உரிப்பொருளாக்கினர்.

பரத்தையரில் தலைவனுக்கே துணையாகி வாழ்ந்த காமக் கிழத்தியரும் உண்டு. ’கிழத்தி’ என்ற சொல்லே அவள் இல்லக்கிழத்திக்கு நிகரான உரிமையைத் தலைவனிடம் பெற்றிருந்தாள் என்பதை உணர்த்துகின்றது. எனினும் காமக் கிழத்தி மனையோள் ஆகாள் என்பது தெளிவு.

எப்படியாயினும் ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்து இல்வாழ்வில் ஈடுபட்டுவிட்ட ஓர் ஆடவனை இன்னொரு பெண் நயப்பதும் அவனோடு உடனுறைவதும் தமிழ்ச் சமூகத்துக்கும், இல்வாழ்வானாகிய தலைவனுக்கும் பீடும் பெருமையும்தரா இழிசெயல்களே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தமிழ் மரபுக்கு இழுக்குத் தேடித் தரும் பரத்தைமையைச் சங்கப் புலவர்கள் எவரும் கடியாது விட்டுவிட, இதற்கு எதிரான கண்டனக் குரலை, கலகக் குரலை முதன்முதலில் எழுப்பியவர் வள்ளுவப் பெருந்தகையே ஆவார்.

தனிமனித ஒழுக்கமும், நிறையுமின்றிப் பொருளுக்காக உடலை விற்கும் பெண்ணையும் அவளைத் துய்க்க விழையும் ஒழுக்கமற்ற ஆணையும் சேர்த்தே சாடுகின்றார் அவர்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
(வரைவின் மகளிர் – 913)

பொருளுக்காக அன்பு பாராட்டும் பொருட்பெண்டிரை முயங்குவது இருட்டறையில் பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பாகும் என்று கடியும் பேராசான், பொருளைப் பெறுவதன்பொருட்டு அனைத்து ஆடவருக்கும் பொதுவான துய்ப்புப்பொருளாக இருக்கும் இப்பெண்டிரை மாட்சிமைப்பட்ட அறிவுடையவர் எவரும் விரும்பமாட்டார் எனவும் தெளிவுறுத்துகின்றார்.

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
(வரைவின் மகளிர் – 915)

வரைவின் மகளிரையும் அவர்களை நாடும் ஆடவரையும் சாடுவதுபோலவே பிறனில் (பிறன் மனையாள்) விழையும் காமுகரையும் வள்ளுவர் கடுமையாய்ச் சாடுகின்றார்.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல்”
(பிறனில் விழையாமை – 142) என்பது பொய்யில் புலவரின் வாய்மொழியாகும்.

இவ்வாறு வரைவிலாப் பொருட்பெண்டிரை நயவாதீர் என்றும், பிறனில் விழையாதீர் என்றும் தமிழ் ஆடவருக்குத் தெளிவுறுத்திய ஐயன் இன்னும் ஒருபடி மேலேபோய், ”ஒருதார மணத்தை ஓம்புமின்! இல்லற இன்பத்துக்குச் சேதாரம் விளை(வி)க்கும் பலதார மணத்தைக் கடிமின்!!” என்றும் கூறியிருப்பரேல் அவருக்கு நிகர் அவரே! ஏனோ அதை அவர் செய்யவில்லை.

சங்க காலத்தை அடுத்துவந்தது களப்பிரர்கள் காலம். கி.பி. 250 முதல் 575க்கு இடைப்பட்ட காலத்தைப் பொதுவாக இவர்கள் காலமாகக் குறிப்பது வழக்கம். இவர்கள் யார் என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

அவற்றில் ஒருசில…

தமிழகத்தின் வட எல்லையான வேங்கடத்தையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்த கள்வர் அல்லது களவர் இனத்தவரே களப்பிரர் என்பர் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765 – 790இல்) வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.

”அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்”

 பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழனல்லன் என்பதாலும் அவன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனைக் கலி அரசன் (கொடிய அரசன்) என வேள்விக்குடிச் செப்பேடு விளம்புகிறது போலும்.

’அச்சுதக் களப்பாளன்’ எனும் களப்பிர அரசன் ஒருவனைப் பற்றித் ’தமிழ் நாவலர் சரிதை’ எனும் நூல் பேசுகின்றது. முடியுடை மூவேந்தரையும் சிறைப்படுத்திய இவனைப் பற்றிய குறிப்புகள் யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தி முதலிய இலக்கண நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவ்விரு நூல்களும் சமணத் துறவியரால் இயற்றப்பட்டவை.

களப்பிரர் குறித்த மற்றொரு கருத்தை கர்நாடக மாநிலத்தின் பேலுர்க் கல்வெட்டு பின்வருமாறு தெரிவிக்கின்றது.

”களபோரா எனும் பெயருள்ள குலமொன்று சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுச்சியுற்றது. அக்குலத்தினரால் தெற்கே தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களை வெற்றிகொள்ள இயலவில்லை. ஆகவே அவர்கள் அக்காலத்தில் வலிமை குன்றியிருந்த சோழர்களையும், பாண்டியர்களையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இந்தக் களபோரா இனத்தவரே களப்பிரர் என்கிறது.

களப்பிரர் குறித்த ஆய்வாளர்களின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது களப்பிரர் தமிழர் அல்லர்; தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்கள். சமண மதத்துக்குப் பேராதரவு தந்தவர்கள் என்பது புலப்படுகின்றது. அச்சுதக் களப்பாளன் என்ற களப்பிர அரசன் பௌத்தத்தையும் ஆதரித்திருக்கின்றான் என்று அறிகின்றோம்.

களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி யாது; அதில் பெண்களின் பங்களிப்பு என்னவென்று ஆராய்வோம்.

சமணப் பற்றாளர்களான களப்பிரர் காலத்தில் சமண நெறிக்குப் புறம்பான தமிழரின் அகத்திணை பேசும் நூல்கள் அரிதாகவே கிட்டுகின்றன. இக்காலகட்டத்தில் எழுந்தவையாகச் சுட்டப்படுபவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவக சிந்தாமணி,பெருங்கதை எனுமிரு சமணக் காப்பியங்கள் (சிந்தாமணியைப் பத்தாம் நூற்றாண்டுக் காப்பியம் என்பார் அறிஞர் அ.ச.ஞா. அவர்கள்) மற்றும் சில இலக்கண நூல்கள்.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை நோக்கினால் அவற்றில் பதினொரு நூல்கள் அறநூல்கள்; ஆறு நூல்கள் அகம் சார்ந்தவை. ஒன்று போர் பற்றியது. இவற்றில் சில, களப்பிரர் காலத்துக்கு முன்பு வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அகநூல்கள் சில களப்பிரர் ஆட்சிக்கு உட்படாத பகுதிகளைச் சார்ந்த புலவர்களால் எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

தமிழென்றாலே அஃது அகத்திணையைக் குறிக்கும் என்றெண்ணிச் செம்மாந்திருந்த தமிழ்க்குடியினருக்கு, களப்பிரர் காலம் கருத்துச் செழுமையிலும், சொல் மிடுக்கிலும், கற்பனை நயத்திலும் சங்க நூல்களுக்கு நிகராகா நீதிநூல்களால் நிறைக்கப்பட்டதும், உலகியல் வாழ்வுக்கு ஆதாரமான காதலின்பம் வெறுக்கப்பட்டுத் துறவுநெறி வலியுறுத்தப்பட்டதும் ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். ஆதலால் அவர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் (Dark Age) என்றழைத்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதனினும் பெரிய ஏமாற்றத்தை நமக்களிப்பது இக்காலத்தில் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஒன்றுமே இல்லாமற் போனது.  சங்க காலப் பெண்பாற் புலவர்களாக ஏறக்குறைய 40 பேரைச் சுட்டமுடிந்த நம்மால் அதற்கடுத்துவந்த காலங்களில் அவ்வாறு பெருமையாகச் சொல்லமுடியாமற் போய்விட்டது!

நல்லவேளையாக பெண்புலவர் ஒருவருமே இல்லை எனும் பழிச்சொல் பெண்குலத்துக்கு நேராமல் காத்தவராக, கி.பி. 5/6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோணாட்டுக் காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் புனிதவதி எனும் இயற்பெயர் கொண்டவருமான காரைக்காலம்மையார் திகழ்கின்றார்.

[தொடரும்]

*****

துணைநின்றவை:

1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
2. தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணம்
3. http://www.tamilvu.org/ta/courses-degree-a031-a0312-html-a0312110-7048

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *