நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 19 –புறங்கூறாமை

 குறள் 181:

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது

ஒருத்தன் நல்லது செய்யலேன்னாலும் அடுத்தாளப் பத்தி பொறளி பேசமாட்டாம் னா அதுதான் அவனுக்கு நல்லது.

குறள் 182:

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

ஒருத்தன நேர்ல பாக்கும்போது பொய்சிரிப்பு சிரிச்சி பேசிபோட்டு, அவன் போன பின்னால பொறளி பேசுதது அறமில்லாத கெட்ட காரியத்த செய்தத விட கொடும.

குறள் 183:

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்

ஒருத்தன காணும்போது பொய்யா நடிச்சு பொறத்தே பொறளி பேசி வாழுதத காட்டிலும் சாவுததே மேல்.

குறள் 184:

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

ஒருத்தன் நேரா நிக்குதப்போ தயவுதாட்சண்யம் பாரம கடுமையா பேசிக்கிடலாம். அவன் இல்லாத சமயம் பின் விளைவ யோசிக்காம அவனப் பத்தி பேச வேண்டாம்.  

குறள் 185:

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

ஒருத்தன் மத்தவங்களப் பத்தி பொறளி பேசுதத வச்சே அவன் அற வழில நிக்காதவன் னு தெரிஞ்சுக்கிடலாம்.

குறள் 186:

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

அடுத்தவனப் பத்தி பொறளி பேசுதவனோட கொடுமையான குத்தங் குறைகள கண்டுபிடிச்சு மத்தவங்க அவனப் பத்தி பொறளி பேசுவாங்க.

குறள் 187:

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

சந்தோசமா கூடிப் பழகி நட்ப வளக்கத்தெரியாதவங்க பொறளி பேசி  நல்ல சேக்காளியையும் பிரிஞ்சி போக உட்ருவாங்க.

குறள் 188:

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கி பழகினவங்களோட தப்ப அவங்க இல்லாத நேரம் பேசுதவங்க முன்ன பின்ன தெரியாதவங்கள பத்தி என்னதான் பேச மாட்டாங்க.

குறள் 189:

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

நேர்ல இல்லாத ஒருத்தனப்பத்தி பொறளி பேசுதவனோட  ஒடம்ப, இவனயும் சுமக்குதது என்னோட தருமம் னு நெனைச்சி பூமி  சுமக்குதோ.

குறள் 190:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு

பொறத்தியாரோட தப்ப பாக்குதது போலவே தன்னோட தப்பையும் பாத்தோம்னா நிலச்சு நிக்குத இந்த ஒலக வாழ்க்கைல துன்பம் வருமா.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *