-மேகலா இராமமூர்த்தி

இராமலக்ஷ்மி எடுத்திருக்கும் இப்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 202க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்கள் இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

திருநீற்றுப் பூச்சுடன் பக்திப்பழமாய் அமர்ந்தபடி, பொத்தகத்தில் சித்தத்தைச் செலுத்தியிருக்கும் இப்பெரியவரின் முகத்தில் தெரிவது கைப்பான அனுபவங்கள் தந்த வருத்தமா? வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை விளங்கிக்கொண்டதால் வந்த விரக்தியா? புரியவில்லை!

நம் ஐயத்தைத் தம் தீர்க்கமான கருத்துக்களால் தெளிவிக்கக் காத்திருக்கின்றனர் கவிஞர்கள் இருவர்; அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

”கடவுள் இல்லையென்று மறுத்த கல்லா இளமை கழிந்து, முதுமை உடலில் புகுந்து, பிள்ளைகளும்  விட்டகன்றே பின்னே,  தனித்த முதுமை தெய்வத்தின் துணையை நாடுகின்றது” என்று வாழ்வியல் உண்மையை எளிமையாய் விளம்பியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வளர்ச்சி…

இளமையின் வேகம் கடவுள்களே
இல்லை யென்று சொல்லவைத்தது,
வளர்ந்து பிள்ளைகள் வேலைக்கென
வேறிடம் பார்த்துச் சென்றபின்னே
தளர்வுடன் உடல்வலு குறைந்தபோது
தனிமை முதுமையில் வந்ததுவே,
வளர்ந்தது பற்று தெய்வத்திடம்
வந்து விட்டார் கோவிலுக்கே…!

*****

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

நெறியில் பழுத்த பழம்
நெற்றியில் இழுத்த திருநீற்றுச் சிவம்
நேற்றைய பட்டறிவின் முதிர் நரை
நேரற்ற சுருக்கங்கள் முதுமையின் முக்தி நிலை

அச்சிட்ட தாளில் அப்படி என்ன தெரிகிறது?
அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? இல்லை
அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா?
அழகானதோ அழுக்கானதோ அதுவும் ஒரு சுகம் தானே?

எத்தனை சாதனைகள் எத்தனை சோதனைகள்
எண்ணிக்கையில்லாத வாழ்க்கையின் பின்னல் முடிச்சுகள்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய்
எல்லாமும் எப்படியோ அவிழ்க்கப்பட்டு விட்டது!

சிரிப்பாகத்தான் இருக்கிறது நுனி மரத்துச்
சிறு குருத்து மட்டைகளுக்கு
சிவந்து பழுத்த அடி மட்டைகளைப் பார்க்கும்போது
சீக்கிரமே தாங்களும் பழுத்துவிடுவோம் என அறியாமல்!

கடமைகள் முடித்தாகிவிட்டது
கடன்களும் அடைத்தாகிவிட்டது
கடந்த காலத்தில் தேட மறந்த
கடவுள் மட்டுமே துணை கடைசிக் காலத்தில்

இனி எல்லாம் அவன்தான் அவனே அன்பின் கூடு
இயன்றதைச் செய்தே இன்புற்று வாழ,
இனியவை தேடி இறைவனை நாடு
இனி இல்லை என்றும் ஒரு கேடு!

பட்டறிவின் முதிர்நரையோடு வீற்றிருக்கும் இந்த முதியவருக்கு அச்சிட்ட காகிதத்தில் தெரிவது என்ன? அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா? எதுவாக இருந்தால் என்ன? வாழ்வின் இறுதிக்கட்டத்துக்கு வந்தாகிவிட்டது! ஆதலால் கேடுநீங்க இறையை நாடி வந்துவிட்டது முதுமை!” என்று இம்முதியவரின் வாழ்க்கையை ஒரு சிறுகதையாய்த் தன் கவிதையில் தீட்டியிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *