(Peer Reviewed) பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்

0
முனைவர் த. கவிதா,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம்,
அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு,
கேரளா – 678104.
மின்னஞ்சல்: kavithavictoria@gmail.com
பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்

உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது,  தமிழ் நாகரிகம். அந்த நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக் குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிட மொழிக் குடும்பத்தில், தலைமை சான்ற மொழியாகத் திகழ்வது, தமிழ் மொழியே. அத்தமிழ் மொழியிலிருந்து பல கிளை மொழிகளும் தனி மொழிகளும் உருவாகியிருக்கின்றன. தமிழின் கிளை மொழிகளில் பழங்குடியினரின் மொழிகள் பலவும் அடக்கம். பழங்குடியினரின் மொழிகள் சில, தனித் தகுதி பெறும் அளவுக்கு மாறியிருக்கின்றன. எனினும் அவற்றில் சில பழந்தமிழ்ச் சொற்கள் அவ்வாறே வழங்கப்படல் உண்டு. பல சொற்களோ சிற்சில நிலைகளில் மருவி வழங்கும் நிலையில் வழக்கிலுள்ளன.

பழந்தமிழரின் பண்பட்ட வாழ்வினை எடுத்துரைக்கும் உரைகல்லாக விளங்குவன, செவ்விலக்கியங்களாகிய பழந்தமிழ் இலக்கியங்களே. அவ்விலக்கியங்களின் வழி அறியலாகும் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் பலவற்றைப் பழங்குடியினரின் வாழ்வியலில் இன்றைக்கும் கண்டு மகிழ முடிகின்றது. அவ்வகையில் கேரள மாநிலத்தின்  பாலக்காடு மாவட்டத்திலுள்ள  அட்டப்பாடி மலைப் பகுதிகளில்  வாழ்ந்து கொண்டிருக்கும் முடுகர் இன மக்களின்  வாழ்வியலிலும் பல பழந்தமிழ் மரபுகள் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருவதைப் பார்க்கின்றோம்.

பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய கேரளத்தில் உள்ள மலைப் பகுதிகளில்  முடுகர் இன மக்கள் வாழ்ந்து வந்தாலும் பிற மொழித் தாக்குதலுக்கும்  பிற நாகரிகத் தாக்குதலுக்கும் அவ்வளவாக ஆட்படாமல்  தங்களுக்கான தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இனமாக அவர்களை அடையாளம் காண முடிகின்றது. பழந்தமிழின் வட்டார வழக்கு மொழி என்ற தகுதிப்பாட்டிற்குரிய  முடுகா மொழியினைப் பேசி வரும் அம்மக்களின் வாழ்வியலிலும் பழந்தமிழ்ப்  பண்பாட்டின் பல கூறுகளைக்  கண்டுணர முடிவது சிறப்பு.

முடுகர் இன மக்கள் பேசும் மொழியானது பழந்தமிழோடு மிக நெருங்கிய தொடர்புள்ள மொழியாக விளங்குவதை அறிய முடிகின்றது.  சான்றுக்குச் சில சொற்கள் கீழே தரப்படுகின்றன.

      தமிழ் மொழி                                                   முடுகா மொழி

உயர்திணைப் பெயர்கள்

   தாய்                                                                            அவ்வ, அவ்வெ, அப்ப (abba)

   தந்தை                                                                       அம்ம, அம்மெ

  என் தந்தை                                                              தந்தெ

  குழந்தை                                                                   பிள்ளெ

  கணவன்                                                                   ஆளெ(ன்)

  மனைவி                                                                    பெண்டு

  தாத்தா                                                                       அச்சா

 பாட்டி                                                                           அச்சி

ஆண்குழந்தைகள்                                             ஆம்பிள மக்கா

பெண்குழந்தைகள்                                            பொம்பிள மக்கா

அஃறிணைப் பெயர்கள்

யானை                                                                        ஆனெ

பூனை                                                                           பூனெ

மான்                                                                              மா

அணில்                                                                        அணாலு

மலையணில்                                                          பெளிலு (beLilu)

குரங்கு                                                                          குராங்கு

வெள்ளைக் குரங்கு                                             பிசினிக் குராங்கு (bisini)

காட்டெருமை                                                          காட்டி

உடும்பு                                                                          பிருகா (biruga)

கோழி                                                                             கோயி

கரையான்                                                                   சிதாலு

முயல்                                                                              முசாலு

காற்று                                                                             காத்து, காலு

மழை                                                                                மகெ

மேகம்                                                                              மஞ்சு

வீடு                                                                                    கூரெ

ஊர்                                                                                    ஊரு

மலை                                                                               மலெ, வரெ

ஆறு                                                                                  கரெ

குகை                                                                               அளெ

பழம்                                                                                 பகெ

கிழங்கு                                                                          கிகாங்கு

நூரைக் கிழங்கு                                                      நூரேக் கிகாங்கு

கீரை                                                                                அடா

உரல்                                                                                உராலு

உலக்கை                                                                     உலாக்கெ

மூங்கில்                                                                        மூங்கா

முறம்                                                                              முறா, மொறா

சோறு                                                                             சோறு, அன்னம்

காளான்                                                                        குமினு

கேழ்வரகுக் களி                                                     புட்டு

தினை                                                                            பாண்டி

தேன்                                                                                தேனு

கொம்புத்தேன்                                                        கோலன்

மலைத்தேன்                                                             பெருந்தேன்

வழி                                                                                  வெயி, பயி(bayi)

குழி                                                                                 குயி

குழல்                                                                             குவாலு

பறை                                                                             பறெ

வளையல்                                                                  வளெ

வினைச்சொற்கள்

உறங்கு                                                                       உறாங்கு

இறங்கி                                                                      இறாங்கி

காய வைத்து                                                         உணக்கி

சமைக்க வேண்டும்                                         அடோணு(ம்)

தின்கின்றோம்                                                     திங்கடோ(ம்)

மூவிடப் பெயர்கள்

நான்                                                                            நானு

நீ                                                                                     நீ

நீங்கள்                                                                      நிம்ம

நாங்கள்                                                                   நம்ம

உனக்கு                                                                     நினக்கு

உங்களுக்கு                                                           நிமக்கு

இவ்வாறான முடுகா மொழிச் சொற்களை நாம் கண்ணுறும்போது  அவை பழந்தமிழின்  பல சொற்களையும் சில வடிவ மாற்றத்தோடு வழங்கி வருவனவாகக் காணப்படுகின்றன. அதனால் பழந்தமிழின் ஒரு வட்டார வழக்கு மொழியாக இம்மொழியினை இனங்காண வழியுண்டு.

முடுகா மொழியில் “தாய்” என்ற உறவு முறைச் சொல், “அவ்வ”  அல்லது “ அப்ப” (abba)  என்று இடம் பெறுகின்றது. இச்சொல் செவ்விலக்கியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் பதிவாகியுள்ளது.

      “அவ்வையர் ஆயினீர்: நும் அடி தொழுதேன். (மணி –பாத்திரம் பெற்ற காதை – 137)

என்று மணிமேகலை கூறுகின்ற கூற்றில் “அவ்வை” என்ற சொல் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம்.  இச்சொல் முடுகர் நாவில் ஒலிக்கப்படும்  பொழுது  சிற்சில சமயங்களில் “அப்பா” (abba) என்றும் மாறுகின்றது. இங்கு வகரம் ஒலிப்பு ஒலியாகிய பகரமாக (ba) மாறியொலிக்கின்றது. உச்சரிப்பு எளிமை கருதி இத்தகைய மாற்றத்தினைப் பெறுகின்றது.

முடுகர் இன மக்கள், தந்தையை விளிக்கும் போது”அம்ம” என்கின்றனர். ஆனால் பிறரிடம் தந்தையைப் பற்றிப் பேசும் போது “என்னு தந்தெ” என்று கூறுவதுண்டு. இச்சொல் வழக்காறும்  சங்ககாலத்திற்குரியதே.

   “குறுக வாரல் தந்தை” (அகநா – 195)

என்ற அகநானூற்று  அடியினில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

பறவைகளின்  குஞ்சுகளைத் தொல்காப்பியம்  “பிள்ளை” என்று குறிப்பதுண்டு.

     “அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும்  பறப்பவற் றிளமை”(தொல் 1503)

என்பது நூற்பா. ஆனால் முடுகர் மொழியில் அச்சொல் உயர்திணையில் குழந்தையினைச் சுட்ட வரும்  சொல்லாக அமைகின்றது. குழந்தையை அம்மக்கள் “பிள்ளெ” என்பார்கள். மட்டுமின்றி பன்மை நிலையில் குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது “மக்கள்”  , “மக்களு”  என்ற சொல், முடுகரிடையே புழக்கத்திலுள்ளது.

   ”…………..வடமொழிப் பெயர் பெற்ற

    முகத்தவன் மக்களுள்  முதியவன் புணர்ப்பினால்” (கலித் – 25 – 2)

என்னும் கலித்தொடரில்  பன்மையில் குழந்தைகளைச் சுட்டுவதற்கு  ”மக்கள்” என்ற சொல் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம்.

முடுகர்கள் கணவனை “ஆளெ(ன்) என்றும் மனைவியை “பெண்டு” என்றும் கூறுவர். இச்சொற்கள்  சங்க இலக்கியங்களில்  காணப்படுவது கண்கூடு. திருமுருகாற்றுப் படையில்  முருகனைச் சிறப்பித்துப் பேசும் நக்கீரர்,  “இசைபேர் ஆள”(திருமுரு – 270) என்று விளிப்பதுண்டு. இங்கு ”உரியவன்”, ”ஆள்பவன் ” என்ற பொருள்களில்  “ஆளன்” என்ற சொல் இடம் பெறுகின்றது. ஆகவே ‘இல்லத்தை ஆள்பவன்’, ’மனைவிக்கு உரியவன்’ என்ற பொருள்களில் முடுகர்கள் கணவனை  ‘ஆளெ(ன்)’ என்ற சொல்லால் புலப்படுத்துகின்றார்கள் என்று  கருதலாம்.  சங்கத் தமிழர், அரசனின் மனைவியைக் குறிப்பதற்கு “பெருங்கோப்பெண்டு” என்று மொழிந்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே முடுகர்களும் மனைவியை பெண்டு என்ற சொல்லால்  வழங்குவதில் தவறில்லை .

மான் என்னும் உயிரினம் சங்ககாலத்தில்  “மா” என்றழைக்கப்பட்டதுண்டு. முடுகர்கள்  இன்றளவும்  மானைச் சுட்டுவதற்கு “மா” என்பதனையே  வழக்கத்தில் வைத்திருக்கின்றார்கள். “மாப்பிணை” (புறநா – 2) என்றவாறு அமையும் புறநானூற்றுச் சொல், மான்பிணையைச் சுட்டுவதற்கு வந்ததாக அமைகின்றது. ”அணில்” என்னும் சிறுபிராணி, முடுகர்களால் “அணாலு” என்று கூறப்படுகின்றது. மலையணிலைக் குறிக்கும் போது “பெளிலு” (beLilu) என்பர்.

  “அணிலாடு முன்றில்” (குறுந் – 41)

  ”கிளி விளி  பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை” (அகநா – 12)

என்ற  பழந்தமிழிலக்கியத்  தொடர்களில்  அணில், வெளில் என்ற சொற்கள் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம். இச்சொற்கள்

அணில் – அணல் – அணலு –  அணாலு என்றும்

வெளில் – வெளிலு – பெளிலு (beLilu) என்றும் மருவி, முடுகர்களால் வழங்கப்படுகின்றன.

“கறையான்”  எனும் சிறு உயிரினத்தை முடுகர் இன மக்கள் “சிதாலு” என்பர். இச்சொல் வழக்காற்றினை  “முது  சுவர்க் கணச்சிதல் அரித்த” (சிறுபாண் – 133) என்றவாறு சிறுபாணாற்றுப்படையில் காணலாம்.

“முயல் சுட்ட வாயினும் தருகுவோம்” (புறநா – 319) என்னும் தொடரில் இடம் பெறும்  ”முயல்”  என்ற சொல், முடுகா மொழியில் “முசாலு” என்று மாற்றமடைகின்றது. இங்கு   முயல் – முசல் – முசால் – முசாலு என்று மாற்றமடைவதைப் பார்க்கின்றோம். முடுகர்கள் வீட்டினை “கூரெ” என்று சுட்டுவர். இச்சொல் பழந்தமிழிலக்கியங்களில் இடம் பெறுவதுண்டு. ”குறுங் கூரைக் குடிநாப்பண்” (பட்டினப் – 81)  என்பார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். மலையினைச் சங்க கால மக்கள் “வரை” என்றும் வழங்குவர்.  “பனிபடு நெடு வரை” (புறநா – 6) என்னும்  தொடரே அதற்குச் சான்று. அச்சொல்லினை முடுகர் இன மக்கள் “வரெ” என்று கூறுவர்.

காற்றினை “காத்து”, “காலு” என்ற இரு நிலைகளில் கூறுவது முடுகர் இன மக்களின் வழக்கமாகும். அவ்வாறே “மேகம்” என்பதனை “மஞ்சு” என்ற  சொல்லால் அம்மக்கள் கூறியமைவதுண்டு. “குகை” என்பதோ “அளெ” என்ற சொல்லால்  குறிக்கப்படும்.

        “காற்று என்னக் கடிது” (மதுரைக் 52)

         “கால் உணவாக” (புறநா – 43)

        “அகல் இரு வானம்  அம் மஞ்சு ஈன” (அகநா – 71)

       “அளைச் செறி  உழுவை” (புறநா – 78)

போன்ற சங்கத் தொடர்களில் காற்று, கால், மஞ்சு, அளை முதலான சொற்கள் இடம் பெறுகின்றன. அச்சொற்களே சிறு அளவிலான மாற்றங்களுடன் முடுகா மொழியில்  வழங்கப்படுகின்றன. அங்ஙனமே

            “உரற்கால் யானை” (குறுந் – 232)

            “பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை” (குறுந் – 238)

என்ற சங்கத் தொடர்களில் காணலாகும்  “உரல்”, ”உலக்கை”  என்பன முறையே “உராலு”, ”உலாக்கெ” என்ற நிலையில் முடுகர் மொழியில்  சற்று நீண்டு ஒலிக்கப் படும் சொற்களாக மாற்றமடைகின்றன.

குறுந்தொகைத் தலைவி, மலைத் தேனைப் பற்றிக் கூறும் போது “பெருந்தேன்” என்று சிறப்பித்துக் கூறுவாள்.  “பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந் – 3) என்பது  குறுந்தொகைத் தலைவியின் கூற்று. முடுகர் மொழியிலும் மலைத்தேனைக் குறிப்பதற்கு “பெருந்தேனு” என்ற சொல்லே  பயன்பாட்டில் உள்ளது.

“நகம்” என்னும் சொல் முடுகர் மொழியில் “ஒயிரு”, நகா” என்ற சொற்களால் வழங்கப்படுகின்றது.  ”உகிர்” என்ற சொல் உகிர் – ஒகிர் – ஒகிரு – ஒயிரு என்று முடுகர் மொழியில் மருவியிருக்க வேண்டும். ”வள் உகிர்க் குறைத்த” (சிறுபாண் – 136) என்ற பத்துப்பாட்டுத் தொடரில்  ”உகிர்”  என்ற சொல்  நகத்தைக்  குறிப்பதாக  அமைகின்றது. அவ்வாறே “கீரை”  என்ற சொல்லின் வேறு வடிவமான “அடகு” என்னும் சங்கச் சொல், முடுகர் மொழியில் “அடா”  என்ற நிலையில் காணப்படுகின்றது.  இங்கு ஈறு மறைந்து  ஈற்றயல்  நீண்டு அமைந்த சொல்லாக மாறி விடுவதை உணரலாம். ”படப்பை கொய்த அடகு” (புறநா – 140)  என்று புறநானூற்றில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

“உறங்கு” எனும் வினைச்சொல் “உறாங்கு” என்றும் “இறங்கி” என்பது “இறாங்கி” என்றும் ”காயவைத்து” என்பது “உணக்கி” என்றும் முடுகர் மொழியில்  மொழியப்படுகின்றன.

“தீஞ்சோற்று க் கூவியர் தூங்குவனர் உறங்க”(மதுரைக் – 627)

“ஞாழல் இறங்குஇணர்ப் படுசினை” (ஐங்குறு – 142)

“வெள்ளெள் சுளகிடை உணங்கல்”(புறநா – 321) ஆகிய பழந்தமிழ்த் தொடர்களில் முறையே உறங்கு, இறங்கு, உணங்கல் சொற்கள் இடம்பெறுவதுண்டு. இப்பழந்தமிழ்ச் சொற்களே சற்று மாறுதல்களோடு முடுகர்களிடையே  காணப்படுகின்றன. ”சோறு” என்ற சொல் சங்க காலத்தில் உணவைக் குறித்த சொல்லாக  வழங்கப்பட்டது. முடுகர்களும்  உணவினைக் குறிப்பதற்கு  “சோறு” என்ற வழக்காற்றினையே பயன்படுத்துகின்றனர். ”சோறு வாக்கிய கொழுங்கஞ்சி” (பட்டினப் – 44) என்பது பட்டினப்பாலைத் தொடராகும்.

உணவு சமைத்தலைக் குறிப்பிடுவதற்கு முடுகர்கள் “சோறு அடோணு(ம்)” என்பர். ”அடுதல்” என்பது ”சமைத்தல் ” என்ற பொருளைத் தரும் சங்கச் சொல்லாகும். ”புளிப் பெய்தட்ட” (புறநா – 248) என்னும் புறநானூற்றுத் தொடரே அதற்குச் சான்றாகும். மேலும் சங்க காலத்திலிருந்து  இன்று வரை மாறாமல் தமிழில் வழங்கி வருகின்ற  ழகரச் சொற்கள் அனைத்தும் முடுகர் மொழியில்  ககரம் அல்லது யகரம் பெற்ற நிலையில் மாறியமைவதைப் பார்க்க முடிகின்றது. சில சொற்களில் வகரமும்  இடம் பெறுதலுண்டு. அவை பின்வருமாறு

தமிழ்                                                   முடுகர் மொழி

மழை                                                   மகெ

வழி                                                       வெயி, பயி (bayi)

பழம்                                                     பகெ

குழல்                                                    குவாலு

 குழி                                                       குயி

வாழை                                                 பாகெ (baage)

கோழி                                                   கோயி

பழநி                                                       பணலி

என்பனவாக மாறியமைவதைப் பார்க்கும் போது முடுகர் மொழியில் ழகர ஒலி இல்லை என்ற முடிவிற்கு வர முடிகின்றது. அத்துடன்  “பழநி” என்பது  முடுகர் மொழியில்  ஒலியிடம்பெயர்தல் முறையில்  ”பணலி” என்று மாறிப் போவதை அறிய முடிகின்றது. இங்கு ழகரம், லகரமாக  மாறிவிடுகின்றது; நகரம் ணகரமாகி ஒலிக்கின்றது.

தொடர்கள்

         தமிழ்                                                                 முடுகா மொழி

எனது தந்தை                                                            என்னு தந்தெ , என்னுது அம்மெ

உன்னுடைய தாய்                                                நின்னுது அவ்வெ

அவனுடைய தந்தை                                           அவானுது தந்தெ

கீரை கடைந்திருக்கின்றேன்                       அடா கடாந்திருக்கேரு

கேழ்வரகுக்களி சமைக்க வேண்டும்     புட்டு அடோணு(ம்)

அமைதியாக உறங்கு                                         சப்பெந்து உறாங்கு

வயதுக்கு வந்து விட்டாள்                                 நிறேந்திருக்கா

காற்று இறங்கி மழை பெய்கின்றது       காலு றாங்கி மகெ பெய்யிடு

என்றவாறு முடுகா மொழித் தொடர்கள் அமைகின்றன.

வாழ்வியல் முறை

இன்றைய பல பழங்குடியினரின் வாழ்வியல் முறையானது பழந்தமிழ்ப் பண்பாட்டினை தற்காலத்தில் நேரில் கண்டுணரும் வகையில் அமைந்துள்ளது  வியப்பிற்குரியதே. அவ்வகையில் முடுகர் இன மக்களின் மொழி மட்டுமல்லாது   வாழ்வியல் முறைகளும் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்து காணப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டிய களவு மண வாழ்வு, ஆண் பெண்ணுக்குப் பொருள் கொடுத்து மணம் செய்துகொள்ளுதல், வடவர்  தொடர்பற்ற மணச் சடங்குகள் , காட்டெரிப்பு வேளாண் முறை, வேட்டைச் சமூகமாக இருந்த நிலை, கிடைத்தவற்றைப் பாதீடு  செய்யும் வழக்கம், இறந்தோரைப் புதைக்கும் வழக்கம், தாய்த்  தெய்வ வழிபாட்டு மரபு, ஒரு தலைவனின் கீழ் இயங்கும் சமூகமாகத் திகழ்தல் என்று பல நிலைகளிலும் சங்க கால வாழ்வின் தொடர்ச்சியை  இன்றைக்கு வரைக்கும் முடுகர் வாழ்வில் கண்டுணர முடிகின்றது.

ஆய்வின் தேவை

திராவிட  மொழியாராய்ச்சியில்  பழந்தமிழோடு  நெருங்கிய உறவுடைய மொழிகள்  எவையெவை என்பதை அறிந்து வெளிக்கொணர வேண்டியதன் தேவை கருதி  இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டுமன்றி, பழந்தமிழர்களின் மறைந்து போகாத பண்பாட்டு மரபுகளையும்  வெளிக்கொணர்வதற்கும்  இவ்வாய்வு உதவுகின்றது.

ஆய்வு நோக்கம்

கேரள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பலரும் பண்டைய தமிழ்க் குடிகளேயாவர். எனவே அவர்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள் மிகுதியாகப் படிந்திருக்கின்றன. அவ்வகையில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மலைப் பகுதிகளில் வாழும் முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்  படிந்திருப்பதை  ஆய்ந்து காணும் நோக்கத்துடன்  இவ்வாய்வு அமைய உள்ளது.

 ஆய்வு நெறிமுறைகள்

பழந்தமிழ்ச் சொற்களோடு  முடுகா மொழிச் சொற்களை ஒப்பீட்டு நோக்கில் காணுதல், பழந்தமிழ்ச் சொற்களிலிருந்து முடுகா மொழிச் சொற்கள் எவ்வாறு மாற்றங்களை அடைந்திருக்கும்  என்பதை  மொழியியல் நோக்கில் காணுதல், செவ்விலக்கிய காலப் பண்பாட்டுச் சுவடுகள்  முடுகர்களின் வாழ்வியலில் எவ்வாறு படிந்திருக்கின்றது என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுதல் முதலான நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

முன்னோடி ஆய்வுகள்

முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலைப் பற்றிய விரிவான ஆய்வுகள்  இதுவரை நிகழவில்லை. குமாரன் வயலேரியினுடைய ”ஆதிவாசி புராவிர்த்தம்”, சங்கரன் குட்டி எழுதிய ”கேரளம் நூற்றாண்டுகளுக்கு முன்பு”, வேலப்பன்.கெ எழுதிய ”ஆதிவாசிகளும் ஆதிவாசி பாஷகளும்”, பக்தவத்சல பாரதியினுடைய ”தமிழர் மானிடவியல்” ஜி, ஜான். சாமுவேல் எழுதிய ”திராவிட மொழிகளின் ஒப்பாய்வு – ஓர் அறிமுகம்” முதலிய நூற்களையும் எட்கர் தர்ஸ்டன் போன்றோரின் ஆய்வுகளையும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ஆய்வின் முக்கியத்துவம்

பழந்தமிழின் பேச்சு வழக்குகளை உணர்ந்துகொள்ள வேண்டுமானால்  இன்றைய பழங்குடியினரின் மொழிகளை ஆய்ந்தறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வகையில்  இவ்வாய்வு இன்றியமையாததாகின்றது. மட்டுமன்றி பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாகும் பழந்தமிழர்களின் வாழ்வியல் நெறிகள் பலவற்றை இன்றைய பழங்குடியினர் வாழ்வில் கண்டுணரும்போது  உள்ளதை உள்ளவாறு கூற விழைந்த இலக்கியங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் என்பது உறுதியாகின்றது.

ஆய்வேட்டின் அமைப்பு

            முன்னுரை

  1. முடுகர் இன மக்கள் – ஓர் அறிமுகம்.
  2. முடுகாமொழிப் பெயர்ச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்.
  3. முடுகாமொழி வினைச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்.
  4. முடுகாமொழித் தொடர்களும் பழந்தமிழும் .
  5. முடுகர் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்.

               முடிவுரை

             துணைநூற்பட்டியல்

             பின்னிணைப்புகள்

என்ற நிலையில்  ஆய்வேட்டின் அமைப்பு அமைய உள்ளது.

  ஆய்வின் பங்களிப்பு

பழந்தமிழின்  சொல்வழக்காறுகள் பலவும் தற்காலத் தமிழில்  வழக்கற்றுப் போய்விட்டன. ஆனால் கேரள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினரிடம்  இன்றும் புழக்கத்திலுள்ளன. அதனால் பழந்தமிழின் வட்டார வழக்கு  மொழிகள்  மறைந்து விடவில்லை என்பதை எடுத்துரைக்கும்  வண்ணம் இவ்வாய்வு அமையவுள்ளது. அதைப் போன்றே பழந்தமிழர்களின்  வாழ்வியல் கூறுகளை  பழந்தமிழிலக்கியங்கள் வாயிலாக உணர்ந்தறிந்ததுடன்  தற்காலக் கேரளப் பழங்குடிகளிடமும் கண்டுணர்வதன் மூலமாகப்  பண்டைத் தமிழகம்  மற்றும் பண்டைத் தமிழர்  வரலாற்றினைத் தேடுவதற்கான ஆய்வுப் பரப்பு விரிவடைகின்றது.

ஆய்விற்குத் துணை நிற்கும் நூற்களாவன:                  

     1.அகத்தியலிங்கம். ச ,  திராவிட மொழிகள் , மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -08.

     2.இராசமாணிக்கனார் . மா, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னை பல்கலைக்கழகம்.

  1. இராமநாதன் செட்டியார், சங்க காலத் தமிழர் வாழ்வு, முத்தையா நிலையம், – சென்னை – 84.

      4.கதிர்முருகு(உ.ஆ), முத்தொள்ளாயிரம் , சாரதா பதிப்பகம், சென்னை -14.

  1. கருணாகரன் . கி , சமுதாய மொழியியல் , மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு , சிதம்பரம் – 1.
  1. குலசேகரன். எஸ், பழந்தமிழின் புதிய பரிமாணங்கள் , திருமகள் வெளியீடு, சென்னை – 90.
  1. கோவிந்தன் கா. (மொ.பெ.ஆ) , திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், முல்லை நிலையம், தி. நகர், சென்னை.
  1. கவுமாரீஸ்வரி .எஸ். (தொ.ஆ) ,பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை – 14.
  1. சக்திவேல் . சு, தமிழ்மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், லிங்கித்தெரு, சென்னை – 108.
  1. சக்திவேல் . பே, தமிழர் தொன்மம், மெய்யப்பன் பதிப்பகம், புதுத் தெரு, சிதம்பரம் -1.
  2. சண்முகம் பிள்ளை.மு. (ப. ஆ), தொல்காப்பியம் –பொருள்- இளம்பூரணம் , முல்லை நிலையம், மண்ணடி, சென்னை – 1.
  1. சற்குணவதி. மு. மண்ணில் வாழும் மலைமக்கள், தமிழ்க் கடல் பதிப்பகம், அரக்கோணம், வட ஆர்க்காடு, அம்பேத்கார் மாவட்டம் -3.
  1. சிதம்பரனார். சாமி, எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும், அறிவு பதிப்பகம்,

     சென்னை -14.

  1. சிதம்பரனார். சாமி, பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், அறிவு பதிப்பகம், சென்னை- 14.
  1. சிதம்பரனார். சாமி, பதினெண்கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும், அறிவு பதிப்பகம்,

       சென்னை 14.

  1. சுப்பிரமணியன். கா, சங்ககாலச் சமுதாயம், என். சி.பி. எச், சென்னை – 98.
  2. சோமசுந்தரனார்.பொ.வே (உ.ஆ), சிலப்பதிகாரம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 1.
  1. பாரதி. பக்தவத்சல, தமிழர் மானிடவியல், அடையாளம், திருச்சி – 10.
  2. மாதையன்.பெ, சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். சென்னை-98.
  3. மாதையன்.பெ, சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், என்.சி.பி.எச்,சென்னை-98.

மலையாள நூற்கள்

1.குமாரன் வயலேரி, ஆதிவாசி புராவிர்த்தம், டி.சி.புக்ஸ், கோட்டயம் – 1

2.சங்கரன் குட்டி,கேரளம் நூற்றாண்டுகளுக்கு முன்பு,கரண்ட் பிரிண்டர்ஸ், திருச்சூர்.

3.விஷ்ணு நம்பூதிரி.எம்.வி,நாடோடி விக்ஞானியம்,டி.சி.புக்ஸ், கோட்டயம் – 1.

4.வேலப்பன்.கே, ஆதிவாசிகளும் ஆதிவாசி பாஷகளும், கேரளா மொழி நிறுவனம்

   நலந்தா, திருவனந்தபுரம் – 3.

அகராதிகள்

 1.இராசா. கி, புறநானூறு அகராதி, பாவை பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை- 14.

  2.கதிரைவேற்பிள்ளை.நா, தமிழ்மொழி அகராதி, ஏசியன் எடுகேஷனல் சர்வீஸ், புதுதில்லி -16

   3.கழகப் புலவர் குழுவினர், கழகத் தமிழ் அகராதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி – 6.

 4.சக்திவேல்.சு, மானிடவியல் கலைச் சொல்லகராதி, மணிவாசகர் நூலகம், சென்னை – 1.

  1. சண்முகம் பிள்ளை.மு, தமிழ் – தமிழ் அகர முதலி,தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
  2. மாதையன்.பெ,சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் -10.                              

 

ஆய்வாளர் பற்றிய குறிப்பு

பெயர் :    முனைவர் த. கவிதா

பணி அனுபவம்:  உயர்கல்வித் துறையில் 12 ஆண்டுகளாகப்   பணியாற்றுகிறார்.

முனைவர் பட்டத் தலைப்பு: ” பாலக்காடு மற்றும் கோவை மாவட்ட மலசர் பழங்குடிகளின் வாழ்வியல் –ஓர் ஆய்வு.

ஆய்வுக் கட்டுரைகள்:       இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுக் கோவைகளில்  வெளிவந்துள்ளன. பத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்,  கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டுள்ளன.

ஆய்வுத் திட்டப் பணிகள்:   சென்னை, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதி உதவியுடன் “பாலக்காடு வட்டாரப் பழங்குடியினர் மொழிகளில்  பழந்தமிழ் வழக்காறுகள்” என்னும் பொருண்மையில்  மேற்கொண்ட ஆய்வுப் பணி (2013 – 2014.) நிறைவடைந்துள்ளது. இப்பொருண்மையின் கீழ்  இரவாளர், இருளர், காடர், மலசர் ஆகிய பழங்குடியினரின் மொழிகளுக்கும் பழந்தமிழுக்கும் உள்ள உறவு நிலை ஆய்ந்தறியப் பெற்றுள்ளது.

நூல் வெளியீடு:  மலசர் பழங்குடிகள், 2011, அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை – 78.

=============================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

1.மரபுகள் என்று தலைப்பிற்கு பதிலாக முடுகர் இன மக்களின் வாழ்வியலில் புழக்கத்தில் உள்ள பழந்தமிழ் சொற்கள் என்ற தலைப்பு பொருத்தமானதாக இருக்கும்.

2.ஆய்வு நோக்கம் என்ற தலைப்பு வரையிலான விவரங்கள் தலைப்பை ஒட்டியனவாக அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. அதற்கு மேல் வருகின்ற தலைப்புகளும் விளக்கங்களும் ஆய்வேட்டை அடிப்படையாகக் கொண்ட
துணைத்தலைப்புகளுடனும், துணைநூற்பட்டியலுடனும் விளங்குகிறது.
ஆய்வின் நோக்கம் முன்னமேயே கூறியிருப்பின், பொருந்துவதாகும். பிற்பகுதி ஆய்வேட்டின் அறிமுகவுரையாகத் தோன்றுகிறது. இதற்கான காரணத்தை ஆய்வாளர் தெளிவுபடுத்தியிருக்கலாம்.

=============================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *