-திருச்சி புலவர் இராமமூர்த்தி

திருக்கைலாயத்தில்  அருளிய வாக்கின் வண்ணம் , சுந்தரமூர்த்தி  ஸ்வாமிகளை  உரிய காலத்தில் தடுத்தாட் கொள்ளவே , அவர் திருமணநாளில்  சிவபிரான்  முதிய  அந்தணராக எழுந்தருளினார்! அங்கே சுந்தரர்  தம் வழிவழி  அடிமை  என்ற பழைய மூல ஓலை ஒன்றைக் காட்டி  அவையோரிடம்  வாதிட்டு வென்றார்! அவர்,  ‘’சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆரூர்ப்பித்தனாகிய தமக்கு வழிவழிஅடிமை!’’ என்று  எழுதப்பெற்ற மூலஓலையைக்   காட்டி வழக்கில்  வென்றார். அவ்வாறு தம்  அகடிதகடனா சாமர்த்தியத்தால்    காட்டிய  மூலஓலை,

முன்னோர்  எழுத்துடன்  ஒப்பிட்டுப்பார்க்கப்    பெற்றது. எதையும்  சாதித்  தருளும் இறைவன்  செயலை  மீண்டும்   சோதிக்க  எண்ணிய  அவையினர், ‘’அப்படியானால் இங்கே  நெடுங்காலம்  வாழ்ந்திருந்த உங்கள்  பழமையான இல்லத்தைக் காட்டுங்கள்’’ என்றனர். அப்போதும்  தம்  இறைமைத்  தன்மையை உணராத சுந்தரரையும் அந்தணர்களையும் நோக்கி, ‘’இன்னும் என்னை அறிந்துகொள்ளவில்லை   என்றால்,  என்னுடன்   வாருங்கள்!’’ என்று  கூறி,. அவர்களை அவ்வூரின்    திருக்கோயிலாகிய  ‘’ திருவருட்டுறை’’ யினுள்சென்றார்!

அவரைப்பின் தொடர்ந்து வந்த சுந்தரரும் அந்தணர்களும் அங்கேயே  அந்தமுதிய அந்தணர்  மறைந்து  விட்டதை அறிந்து  திகைத்தனர்.

அப்போதும் பிறப்புவாசனையால்  பீடிக்கப் பெற்றிருந்த சுந்தரர் நல்லறிவை இழந்து, ‘’ அந்தணரே!  நீங்கள் எங்கள்சிவன்   கோயிலுக்குள்  ஏன்    நுழைந்து  மறைந்தீர்கள்?’’  என்று கேட்டார். மலமாயையின் பிணிப்பு எளிதில் விலகாது என்பதை இங்கேநாம் உணர்ந்து  கொள்கிறோம். உடனேஅனைவர்  முன்னும் இறைவன் இடப வாகனத்தில் பார்வதியுடன் காட்சி யளித்தார்! அப்போதுதான் வந்த அந்தணர் இறைவனே என்பதை  அனைவரும்  உணர்ந்து  கொண்டனர். இவ்வாறு தம்மை மறைத்துக் கொள்ளுதல் இறைவனின் ஐந்தொழில்களுள் ஒன்றாகும்!  அனைவரின் அறிவையும்  உணர்வையும் நினைவையும் மறைத்துத் தம்மையும் மறைத்துக் கொண்ட நிலையை இங்கே  நமக்குச் சேக்கிழார் உணர்த்துகிறார்!

அப்போதுதான்  சுந்தரர் மையல் மானுடமாகி  மயங்கியதை ஆண்டவன் உணர்த்தினார். ‘’சுந்தரா, நீ முன்பு கைலையில் எமக்கு அணுக்கத் தொண்டனாகி, அடிமைத் தொண்டு செய்தாய்! உன்னுடைய வேட்கை உன்னை இங்கே மானிடனாய்ப்   பிறக்கச்    செய்தது!  என் ஏவலால் இங்கே பிறந்தாய். இந்த நிலவுகில் உன்னைத் தொடர்ந்து வந்த  துன்ப வாழ்க்கையின்   தொடர்ச்சி விலகி,  நீ உய்தி பெறும்  பொருட்டு , உன்னைத்  தொடர்ந்து இங்கு   வந்தேன்!   நீ அன்று அங்கே  என்னை வேண்டிக் கொண்டமையால்,  நல்லறிவு  மிக்க,  நான்மறை  உணர்ந்த , அந்தணர் முன்னே  நாமே உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! ‘’  என்று அருளிச் செய்தார்!

இதனையே,

‘’முன்பு நீ நமக்குத் தொண்டன்!  முன்னிய வேட்கை கூரப்
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை,  மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம்” என்றார்’’

என்ற   பாடல்  குறிக்கிறது!  இந்தப் பாடல் குறிக்கும் உள்ளுறைப் பொருளை    இங்கே

நாம் உணர்ந்து கொள்ள  வேண்டும்!  சுந்தரர்  அந்தணர் இல்லத்தில்  பிறந்தது, அவர் வேதம் பயின்றது,  அரசரின்  செல்வத்  திருமகனாய்  வளர்ந்தது, திருமணம்  செய்து கொள்ளவிருந்தது    ஆகிய அனைத்தும்  அவர்  இப்பிறவியில்  தொகுத்துக்  கொண்ட  பெருஞ்செல்வமாகும்! அவர்  அறம், பொருள், இன்பம்  ஆகிய மூவகை உறுதிப்  பொருள்களையும் பெற்றார்! ஆனாலும்,  இப் பெரும்பொருட்  செல்வங்களை  அனுபவித்து மகிழ்வதை விட, இறைவன் அருட்செல்வத்தை  அடைவதே  சிறப்பு. இதனைத்  திருக்குறள்,

‘’வகுத்தான்  வகுத்த   வகையல்லால்   கோடி
 தொகுத்தார்க்கும்   துய்த்தல்  அரிது!’’   

‘’ அருட்செல்வம்   செல்வத்துட்   செல்வம்   பொருட்செல்வம்
 பூரியார்   கண்ணும்   உள!’’

என்று   கூறுகின்றது! ஆதலால்  இந்த நல்லறிவை  நமக்கும் வழங்கி  மகிழ்கிறார்  இறைவன்! இறைவன்  எங்கும்  என்றும்  எப்போதும் நம்மைத் தொடர்ந்து வருவான்  என்பதையும்  நாம் உணர்கிறோம்! இப்படியே  நம் சிந்தனையைத்  தூண்டி  நல்லறிவை  ஊட்டும் நயத்தை  சேக்கிழார்  பெருமானின் பாடலில் நாமும்  உணர்ந்து  கொள்கிறோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *