இந்த வார வல்லமையாளர் என கணிஞர் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. இயற்பியல் ஆய்வரான டிம் வையவிரிவலை (World Wide Web) உருவாக்கி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைத் தொடர்பு கொள்ள சாதனை புரிய கால்கோள் இட்டவர்.  இணையம் அமைப்பது பற்றிய ஆவணங்களை எழுதி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. வையவிரிவலையின் 30-ம் பிறந்த நாளில், உலகை இணைக்கும் அற்புத சாதனத்தை வடிவமைக்க அடிக்கல் நாட்டிய விஞ்ஞானி ஸர் திம் பெர்னர்ஸ்-லீயை வாழ்த்துவோம். எல்லாக் கணினிகளிலும் இயங்கும் யூனிகோட் எழுதுருக்கள், எந்தத் தகவலையும் தேட உதவும் துழாவி எந்திரம், இதன் பெரிய கம்பெனி ஆக கூகுள், … இவை எல்லாம் ‘வெப்’ என்னும் வையவிரிவலையின் பங்களிப்பு தானே! ஆவணம் ஒன்றுடன் வேறொன்றை இணைக்கும் ஹைப்பர் -லிங்க் எனப்படும் அமைப்பை உருவாக்கி, அதனை ஒரு உலாவி (browser) வழியாகக் காணும் வழிமுறையை இவர் படைத்துத் தந்தார். ஏற்கனவே வேறு வழிமுறைகளில் இயங்கிக் கொண்டிருந்த இணையத்தினை அதனுடன் வெற்றிகரமாக இணைத்து செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் எளிதாகவும், வெற்றிகரமாகவும் ஒலி, ஒளி, எழுத்து ஆவணங்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது பெரும் வழக்கில் பயன்படுத்தப்படும் எச்.டி.டி.பி. மற்றும் எச்.டி.எம்.எல். (HTTP Hypertext Transfer Protocol, HTML Hypertext Markup Language) வழங்குமுறை தொழில் நுட்பங்கள் இதில் உருவானவையே. இப்பொழுது சோசியல் மீடியா என்று ட்விட்டர், பேஸ்புக் அதிக அளவில் இந்திய மொழிகளில் பயன்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக வலைத்தளங்கள் போலிச்செய்திகளை வெளியிடுவதிலும், பாலியல் வன்முறைக்கு கருவி ஆகவும் ஆகிவருகிறது. இதனை முளையிலேயே தடுக்காவிட்டால் பெரிய பிரச்சினை தான்.

ஓர் இலக்கியக் குறிப்பு: இணையம் பற்றிப் பேசுகிறோம். நீர்ப் பகுதிகளில் வாழும் பறவைகள் நீந்த வசதியாக அதன் விரல்களுக்கு இடையே இணைந்த ஒரு சவ்வுத் தோல் இருக்கும். இதனைக் கொய்யடி என்பது பழைய தமிழ் வழக்கு. ஆங்கிலத்தில் webbed feet. திவாகரம், பிங்கலந்தை போன்ற நிகண்டுகளில் “குருகு வண்டானம் கொய்யடி நாரை” என்ற சூத்திரம் உள்ளது. இந்த நூற்பாவின் பொருள்: வண்டானமும் (Pelican), கொய்யடிநாரையும் (Flamingo) குருகுப் பறவை வகுப்புகள் ஆகும். குருகு = Water birds. ஃப்லெமிங்கோ எனப்படும் பூநாரைகளின் பாதம் கொய்யடி கொண்டவை. எனவே, பழைய தமிழில் கொய்யடி நாரை என்பது இந்த ஃப்லெமிங்கோ பறவைகளைத் தான். இஃதறியாமல், சென்னைப் பேரகராதி வண்டானம் என்பது கொய்யடி நாரை என்று குறிப்பிட்டுள்ளது. அது பிழை. வண்டானம் என்னும் பெலிக்கன் பறவைகள் நாரை இனம் அல்லவே. டிம் தந்த இணையத்தில் கொய்யடி நாரை என்னும் Flamingo பறவையின் துதிக்காலை பார்க்கலாமே. 

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *