திரையிசைக் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ்

0

க.பாலமுருகன்,
உதவிப் பேராசிரியர்,
அ. வ. அ. கல்லூரி(தன்.),
மன்னன்பந்தல், மயிலாடுதுறை.
மின்: elygsb@gmail.com

******************************************

முன்னுரை

       மனித இனம் தோன்றி வளர்ந்தபோது பாடல்கள் தோன்றின எனலாம். தொடக்க காலத்தில் மனிதன் தன் இன்ப துன்ப உணர்வுகளை ஒலிமூலம் வெளிப்படுத்தினான். ஒலி மொழியாக வளர்ந்தது. மொழியின் வளர்ச்சி பாடலாக அரும்பியது. முதலில் வாய்மொழிப் பாடலாகத் தொடங்கி இன்று திரையிசைப்பாடல்களாக பல்வேறு நிலைகளில் வளர்ந்துள்ளது.

      திரைப்படத்துறையில் பல கலைஞர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் எளிதில் மக்களுக்குத் தெரிபவர்கள் நடிகர்களும், பாடலாசிரியர்களும்தாம். ஒரு திரைப்படம் வெற்றிபெறத் திரைப்படப் பாடல்களின் பங்கு முக்கியமானது. திரைப்படப் பாடலாசிரியர் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தஞ்சை ராமையாதாஸ் ஆவார். இத்தகைய சிறப்புமிக்கவரின் பிறப்பு, தொழில், கவித்திறன், பெற்ற விருதுகள், தனித்தன்மை இவை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

பிறப்பும் படிப்பும்

       காவிரியன்னை சோறூட்டி, சோழமன்னர்கள் சீராட்டி, பாவலர்கள் பாராட்டிய மகத்துவம் கொண்ட தஞ்சாவூர் அங்காடிப் பகுதியைச் சேர்ந்த மகர் நோன்புச் சாவடி என்ற மானாம்புச் சாவடியில், இல்லற ஞானி கோ. நாராயணசாமி நாயனாருக்கும், பாப்பம்மாளுக்கும் 05.06.14 அன்று தலைமகனாகப் பிறந்தார். ஓர் இளைய சகோதரரும் இரு இளைய சகோதரிகளும் அவருக்குண்டு.1

கல்வி

      தஞ்சாவூர் செயின்ட் பீட்டர் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். தஞ்சை கரந்தைக் கல்லூரியில் வித்துவான் பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றார். சரபோஜி மன்னர் கல்லூரியில் நடைபெற்ற நிலா நானூறு தொகுப்புப் போட்டியில் கலந்து பாடல்கள் புனைந்து வெற்றிபெற்றார்.2 தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள சுப்பையா நாயுடு நடுநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.3 

தேசப்பற்று

      இளம்பருவத்திலே ஆங்கில ஆட்சிக்கு எதிராகத் தேசப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். தூய கதராடையை அணிந்து தமது நாட்டுப்பற்றை நிலைநாட்டினார். பல்வேறு மேடைகளில் பேசும்போது இவருடைய தேசப்பற்றுக் கொண்ட பேச்சுத்திறனால் அதிகாரியின் கண்டனத்துக்கும் உள்ளானார். தமது பணியைவிட, இவர் கொண்ட தேசப்பற்று மிகுதி என்பதால், தம்முடைய ஆசிரியர் பணியை விட்டுவிலகினார்.

எழுத்துத் திறமை

      இவரின் எழுத்துத் திறமையை அறிந்த ஜெகந்நாத நாயுடு என்பவர் நடத்தி வந்த சுதர்ஸன கானசபாவில் வாத்தியாராக சேர்த்துக் கொண்டார். இக்குழுவில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு ஜெயலெட்சுமி நாடகசபா என்ற ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். மச்சரேகை, விதியின் வெற்றி, கம்பர், துருவன், பகடை பன்னிரெண்டு, அல்லி அர்ஜுனா, டம்பாச்சாரி, வள்ளித்திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்களை நடத்தி வந்தார். அது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றது.  பல ஊர்களிலும் நாடகங்களை நடத்தி வந்தார். சேலத்தில் அண்ணாவின் நாடகம் முடிந்தவுடன் இரவு முழுவதும் இராமையாதாஸின் புராண இதிகாச நாடகங்களைக் காண்பதற்கு அறிஞர் அண்ணாவும் நடிப்பிசைப்புலவர் ராமசாமியும் காத்திருந்தார்கள்.

முதல் பாடல் வாய்ப்பு

       சேலம் மாநகரில் மச்சரேகை நாடகத்தை நடத்தியபொழுது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் டி.ஆர். மகாலிங்கம் நடித்துக்கொண்டிருந்தார். நாடகத்தைப் பார்த்த டி.ஆர். மகாலிங்கம் மாடர்ன் தியேட்டர் அதிபர் சுந்தரத்திடம் அறிமுகம் செய்து இவருடைய எழுத்து வன்மையையும் திறனையும் எடுத்துரைத்துத் திரைப்படப்பாடல் எழுதுவதற்கு அடிகோலினார். அந்த வகையில் 1947ஆம் ஆண்டில் 33ஆம் வயதில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற பட்டத்திற்கு ராமனாதய்யர் இசையில் முதல் பாடலை எழுதினார்.4

      ”வச்சேன்னா வச்சதுதான் புள்ளி வச்சேன்னா வச்சது தான்!” என்ற பாடலை மாடர்ன் தியேட்டர்ஸில் வைத்த புள்ளியைக் கொண்டு திரையுலகில் கோலம் போடத்தொடங்கினார்.

திரைப்படங்களுக்கு வசனம்

      இவர் எழுத்தின் மேன்மையைக் கண்ட விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த பல படங்களுக்கு வசனம் படல்கள் எழுதும் வாய்ப்பளித்து, தங்கள் நிறுவனத்தின் நிலையான கவியாக ஏற்றுக்கொண்டனர். இந்நிறுவனம் தயாரித்த பைரவி, கல்யாணம் பண்ணிப்பார், சந்திரஹாரம், குணசுந்தரி, மாயாபஜார், கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய எட்டுப் படங்களில்  எழுத்தாக்கப் பங்களிப்பை அளித்துள்ளார். சர்வதேச பிலிம் விழாவிற்கு பாதாள பைரவி படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

      இவரின் தேசப்பற்றால் பெருந்தலைவர் காமராஜர், மனிதரில் புனிதர் கக்கன் போன்ற தலைவர்களின் நட்பையும் பாராட்டையும் பெற்றார். அரசியலில் இவருக்கு விருப்பம் இல்லை. கவிஞருக்குக் கிடைத்த சுதந்தரப் போராட்டத் தியாகி பட்டத்தையும் பெற மறுத்துவிட்டார். நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர் திரு. சங்கரய்யரை ஆதரித்து வந்தார். இவரின் புதுமனை புகுவிழாவில் தியாகராஜ பாகவதரின் கச்சேரி நடைபெற்றது. நாடகத் தந்தையின் புகழ்பரப்பினார்.  மணிமண்டபம் அமைத்துக் குருபூஜையும் செய்து வழிபாடு செய்தார்.

      ஸ்ரீதர் 1956ஆம் ஆண்டு திரையிட்ட அமரதீபம் படத்திற்காகப் பாடல் ஒன்றை எழுதினார். “நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க” என்று தொடங்கினார். படம் வாங்குபவர்களிடையே எதிர்மறையான எண்ணத்தை உண்டு பண்ணும் என்றவுடன் “ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா”5 என்று பல்லவியைத் தொடங்கினார். பொருள் புரியாமல் ஸ்ரீதர் கேட்டார்; கதையின் காட்சிப்படி இது குறவன் குறத்தி பாடும் பாடல். மொழி உனக்கும் புரியாது எனக்கும் தெரியாது என்றார். இப்பாடல் பெரும் புகழைத் தேடித்தந்தது. தயாரிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பாமர மக்களை மகிழ்விக்க

1950ஆம் ஆண்டில் சென்னைக்குக் குடிபெயர்ந்து பல படங்களுக்குப் பாடல் எழுதி வந்தார். படித்தவர்களை விடுத்துப் பாமர மக்களை அதிகம் எழுதியதால் இலக்கிய இலக்கணப்பாடல்களை எழுதமுடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இவர் உடுமலை நாராயண கவியிடம், “நான் பாட்டு எழுதினேன் என்பதைவிட , நான் பாட்டுக்கு எழுதினேன்  என்பதுதான் உண்மை. நீங்களாவது தமிழுக்காக எழுதுங்கள்” என்றாராம். கவிஞரை தரமுள்ள பாடல்களைத் தவிர்த்து ஜாலியான பாடல்களை எழுதும்படி தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கேட்டதற்கு இணங்க எழுதினார்.

பரிசும் பாராட்டும்

       சிங்காரி படத்தின் ”ஒரு சாண் வயிறே இல்லாட்டா” பாடலும் தூக்குத்தூக்கி படப்பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தவை. டி.ஆர். மகாலிங்கம் இவரின் மச்சரேகை நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரித்தார். 1960ஆம் ஆண்டு நோயின் காரணமாகப் படுக்கையிலிருந்தபடியே எழுதினாராம். கண்ணதாசன், “என் பிள்ளைகள் என் பாட்டைப்பாடாமல் ராமையாதாஸின் பாட்டைப் பாடுதுங்க” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அவை வெற்றியடைந்தன. 1955இல் வெளியிடப்பட்ட குலேபகாவலி படத்திற்கான வசனம், பாடல்களை உருவாக்கித் தந்தார்.  இவை எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்தன. இதனால் தஞ்சை ராமையாதாஸ் ஒரு எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று புகழாரம் சூட்டினார். மலைக்கள்ளன் படத்தில், ”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”, ”ஏச்சுப்பிழைக்கும் தொழிலே சரிதானா, ஆனந்தக்கோனே அநியாயம் இந்த ஆட்சியிலே” பாடல்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பாடல்களாகும். சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எம்.ஜி.ஆர். போன்றோரைக் கதாநாயகர்களாக வைத்துத் திரைப்படம் தயாரித்து வெளியிட்டார். லலிதாங்கி, மிஸ்ஸியம்மா, உத்தமபுத்திரன் போன்ற படங்கள்தாம் அவை. முத்துமொழிகள் 3000 என்ற தலைப்பில் மூன்று தொகுதியாக இவரைப் பற்றிய வாழ்க்கைப் பதிவுகள் வெளிவந்துள்ளன. தஞ்சை ராமையாதாஸின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. 16.07.2010 அன்று இதற்கான பரிசுத்தொகையும்,  காசோலையும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கவிஞரின் வாரிசுகளிடம் வழங்கினார்.

இறப்பு

     ராமையாதாஸிற்குத் தாயாரம்மாள், ரங்கநாயகி என இரு துணைவியர் இருந்தனர். திரைத்துறையில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிவரும் திரு. இரவீந்திரனும் இவரது இளைய சகோதரி திருமதி. விஜயராணி நடராஜனும் கவிஞரின் வாரிசுகள் ஆவர். தமது முதுமையில் சர்க்கரை, எலும்புருக்கி நோய்களால் பாதிக்கப்பட்டார். வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உடல்நலம் குன்றி 15.01.1965ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தில் இறைவனடி சேர்ந்தார். இறுதி ஊர்வலத்தில் பெருந்தலைவர் காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார், உவமைக்கவிஞர் சுரதா, ஜெமினிகணேசன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உட்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முடிவுரை

       கவிஞர் தஞ்சை ராமையாதாஸின்  திரைப்பாடல்கள் தனித்தன்மை உடையவை. சிறந்த கருத்துகளும் எதார்த்த நிகழ்வுகளும் எளிய வடிவமும் கொண்டு படைக்கப்பட்டவை. சமுதாய நோக்கினை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் எழுதி எல்லா மக்களுக்கும் பொதுவானவராக அவர் திகழ்ந்தார் என்பது புலனாகின்றது.

சான்றெண் விளக்கம்:

  1. கவிஞர் பொன்.செல்லமுத்து, தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப்பாடல்கள் (தொகுப்பு),ப.320.
  2. மேலது,
  3. மேலது, ப.321
  4. மேலது, ப.324
  5. மேலது, ப.327
  6. வே. நல்லதம்பி, தொலைக்காட்சியும் பிற தகவல்துறைகளும்.
  7. அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *