– திருச்சி புலவர் இராமமூர்த்தி

சுந்தரரைத்  திருமணத்தின் போது  தடுத்தாட்கொண்ட  முதிய அந்தணர்  வேடத்தில்   வந்த   இறைவன் தம்  வழக்கில்  வென்றார்! அவர் சுந்தரரின் தந்தைக்குத்  தந்தையின் அடிமை  என்றும் , தம் திருப்பெயர்  ஆரூரன்  என்றும் கூறி, அதற்குரிய  ஆவணங்களை  வழங்கினார். அவரை அறியாத சபையினர் அவர் வாழுமிடத்தைக் காட்டுமாறு வேண்டினர்! அவரோ நேராக அவ்வூர்க்  கோயிலாகிய  திருவருட்டுறையுள்  அந்தணர்களை சுந்தரரையும் அழைத்துச் சென்று  மறைந்தார்.

  திருவருட்டுறை – திருவெண்ணெய்நல்லூர்க்கோயிலின் பெயர். திருப்பெண்ணா கடத்திலே திருத்தூங்கானைமாடம் என்பதும், திருச்சாத்த மங்கையிலே அயவந்தி என்பதும் அவ்வத் திருக்கோயில்களுக்குப் பெயராதல் போலக் காண்க. துறையே புக்கார் – அருளாகிய துறையிலே ஒளிப்பவர் இறைவனாதல் குறிப்பு. பவக்கடலிலே வீழ்ந்தாரைத் துறையிலே ஏற்றும் தோணியாக இறைவனைக் கூறுவர் பெரியோர். ‘இடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்கும் தோணியை……“ (திருவாவடுதுறை – தாண்டகம் – 4). தோணிக்காரர் இருப்பதும், தொழில் செய்வதும் துறையிலேதான். தோணி தான் துறையிலே நின்று தன்னை அடைந்தோரைத் துறைச்சேர்த்திக் கரையேற்றுவதுபோல இறைவனும் இவ்வருட்டுறையிலே உலகத்தாரைக் கரை ஏற்றும் பொருட்டுச்  சமயாசாரியராகிய ஆரூர நம்பிகளையும், சந்தான ஆசாரியரான

மெய்கண்டாரையும் கரை ஏற்றினார். திருத்துறையூரிலே அருணந்திசிவாசாரியாரை ஏற்றினார். இத்துறைகளிற் பெரியதாகிய திருப்பெருந்துறையிலே மாணிக்கவாசகரை ஏற்றினார். ‘பெருந்து றைப்பெருந் தோணி பற்றி யுகைத்தலும்’ என்ற திருவாசகமும் காண்க. அப்பர் சுவாமிகளைத் திருவையாற்றிலே ‘நெடுநீரினின்றேற நினைந்தருளிய’ (திருவிருத்தம் – 3 – 4.) அவரே, பிரமபுரத்திலே பிள்ளையாரைப் பொய்கைக் கரையிலே ‘அறியாப் பருவத்தே எடுத்த’ தோணியப்பராம் என்பதும் இங்கு  வைத்துக் காண்க

முன்நிலையிலே கயிலையிலே நீ நமக்குத் தொண்டு செய்தவன்; மாதர்மேல் மனம் வைத்ததனாலே நமது கட்டளையின்படி இப்பிறவியை அடைந்தாய்; துன்பந் தரும் இவ்வுலக  வாழ்க்கை உன்னைத் தொடராதபடி அங்கே அருளிய சாலுமொழியினாலே உன்னைத் தொடர்ந்துவந்து அந்தணர்கள் முன்னிலையில் நாமே தடுத்தாட்கொண்டோம்’ என்று உண்மை உணர்த்தி யருளினார்.

தென்புவி, மீதுதோன்றி அம்மெல்லியலாருடன் காதலின்பம் கலந்து பின் அணைவாய்’ (வரிசை – 37) என்று நாம் ஏவிய வாழ்க்கை உன்னைத் துன்பத்தினின்று விடுவிப்பது; ஆனால் இப்போது தடுத்த மணவாழ்க்கை அதற்கு வேறாய்த் துன்பத்தில் மேன்மேலும் இருத்தும்  வாழ்க்கை. இன்பம் போலக் காட்டி உண்மையிலே துன்பமாயிருக்கிற வாழ்க்கை என்றபடி. எனவே மக்கள் உலக வாழ்வின் துறைகளிலே ஈடுபடும்போது இது துன்பறு வாழ்வா? அன்றித் துன்புறு வாழ்வா? என்று உணர இறைவனை வேண்டக் கடவர்.- இவை சிவக்கவிமணியாரின்  தெளிவுரை!  ஆதலால் ,

அவரே தம் இறைவன் என்பதை  உணர்ந்து கொண்ட சுந்தரர், இறைவனின் பெருங்கருணைத் திறத்தைப்  போற்றி வணங்கினார்! முன்பு   கைலைமலையில்

வாக்குறுதி  அளித்தவாறே , சுந்தரர் தென்னாட்டில் பிறந்தபின்னும் அவரைத் தொடர்ந்து வந்து தடுத்தாட்கொண்டார்! இதனைக் கூறும் பெருமானின்  குரலைக்  கேட்ட சுந்தரர், தன்னை விட்டுப் பிரிந்த தாய்ப்பசுவின்  குரலைக் கேட்ட  பசுங்கன்று போல பதறிக் கலங்கிக்  கதறினார் சுந்தரர். அவர்தம் கரங்களும் கால்களும் மேலுமுள்ள அங்கங்களும் மயிர்க்கூச்செறிந்து, தலைமேல் குவிந்த  கரங்களுடன் இறைவனை நோக்கி, ‘’ என்னை எங்கும் தொடர்ந்து வந்து, இழுத்து ஆட்கொண்ட மன்றத்து வழக்காடியின் செயலோ இது!’’ என்று கூறினார்.  இதனைச் சேக்கிழார் ,

‘’என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
 கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்
 துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக
 “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது” என்றார்.

என்று  பாடுகிறார்! இப்பாடலில் ‘’மன்றுளீர்’’ என்று, தில்லைப்பொன்னம்பலத்தில் உள்ளஇறைவனைக் கூறிப்போற்றுகிறார்! இப்பாடலில் இறைவனைத் தாய்ப்பசு வாகவும், சுந்தரரைக் கன்றாகவும் கூறிய நயம் எண்ணி மகிழத்  தக்கது!   புராணத்  தொடக்கத்தில்   ‘’திருவாரூர்த் திருநகரச்சிறப்பு’’ பகுதியில் ஈசனே  பசுவாக வந்து, தன்  கன்றுக்காக ஆராய்ச்சி  மணியை அசைத்து ,  அரசனை  வீதிக்கு   இழுத்து, வழக்காடி வென்றதைக்   கண்டோம். அந்த  இளங்கன்று ,  தெருவில்    செல்லும்  தேர்ச்சக்கரத்தின்   இடையே  புகுந்து இறந்தபோது  தாய்ப்பசு  அரசன்முன்   சென்று  நீதிகேட்டு  நாடகமாடியது போல , இங்கும்  மற்றவர்கள் சூழ்ந்து அழைத்துவர, மண  மன்றத்தில்  ஏறிய சுந்தரரைத்  தடுத்து ஆட்கொள்ள   ஓலைகாட்டி ஒரு நாடகம் ஆடினார்!  இக்காப்பியத்தின்    பாவிகமாக  முன்னர் நிகழ்ந்த  நிகழ்ச்சியைக் கூறலாம்!

கம்பராமாயணத்தில்  சேற்றில் இறங்கிய எருமையின் பாலை  அதற்குரிய கன்று  உண்ணாத  போது ,  தாமரையில்  உறங்கிய  அன்னத்தின் குஞ்சு பருகிய காட்சி மூலம்,  இராமனுக்கு உரிய  அரசாட்சியை  கைகேயி  சூழ்ச்சியால் பரதனுக்கு  வழங்கிய   நிகழ்ச்சியை,

‘’சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம்
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த
பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை!’’

என்றபாட்டில் காட்டுவார்! இதனைப் பாவிகம்   என்று  நூலிலக்கணம்  கூறும்! அதைப் போலவே , இக்காப்பியத்தின்  திருவாரூர்க் காட்சியில்  தாய்ப்பசு நீதி கேட்டு வென்றது . இதன்  நுட்பத்தை ,

‘’என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
 கன்று போல் ‘’ 

என்ற  உவமை மூலம்  சேக்கிழார் நமக்குப்  ,புலப்படுத்துகிறார்!  ஈசனைப் பசுவாகவும், சுந்தரரைக்  கன்றாகவும் காட்டியமையால், கூட்டத்தினர்  காட்டிய வழியில்  இழுக்கப்பட்டுச் சென்ற   கன்று போன்றவர் சுந்தரர் என்பதும், உறவும் அரசும் காட்டிய பாதையில்  இழுக்கப்பெற்று  மையல் மானிடமாய்ச்  சுந்தரர்   மயங்கினார் என்பதும்,   சேக்கிழாரின் பேரறிவுத் திறனால்  விளங்குகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *