-மேகலா இராமமூர்த்தி

நித்தி ஆனந்தின் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 205க்கு வழங்கியிருக்கிறார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!

”பாலைப் பொழிந்துதரும் பாப்பா – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா”
என்று பசுவின் பரந்த மனத்தை, உதார குணத்தை உலகுக்கு உணர்த்தினார் மகாகவி பாரதி.

பசுவின் பால் மட்டுமல்லாது, அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் மற்றும் நெய்யுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்து `பஞ்சகவ்யம்’ தயாரிக்கப்படுகின்றது. இது கோயில்களில் அபிடேகப் பொருளாகவும், ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும், இயற்கை வேளாண்மையில் நிலத்துக்கு ஊட்டமளிக்கும் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது.

அந்தக் காலத்தில் நாட்டு மாடுகளே பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்பட்டன. அவை வைக்கோலையும் புல்லையுமே உணவாகத் தின்று வந்தமையால் அவற்றின் உடலில் நோய்த்தொற்று இல்லாதிருந்தது. இன்றோ செயற்கையான முறையில் தயாராகும் தீவனங்களையே மாடுகள் அதிகம் உண்கின்றன. எனவே மருந்துப்பொருள்கள் தயாரிப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் மாட்டின் சிறுநீர், சாணம் முதலியவற்றைப் பயன்படுத்துவதற்குமுன், அவற்றில் கிருமித்தொற்று, நச்சுத்தன்மை போன்றவை இல்லாதிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின் பயன்படுத்துதலே சிறந்தது.

இனி, பசுவின் சிறப்பைத் தீஞ்சுவைப் பாடலாய்ப் பொழியக் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

******

”ஊரார் பிள்ளைக்குப் பாலூட்டி வளர்க்கும் இரண்டாம் தாய் நீ! மடி நிறையப் பாலும், மனம் நிறைய அன்பும் கொண்ட உன்னைப்போல் மன்னுயிர்கள் இருந்தால் மாநிலம் பயனுறும்” என்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

இரண்டாம் தாய்

தாயில்லாப் பிள்ளைக்கு எல்லாம்
தாயாகிப் பாலூட்டும் இரண்டாம் தாய் நீ
தன் பிள்ளை தானே வளரும் என்று
தன் பாலை ஊரார் பயனுறத் தரும் அன்னை நீ

வாயில்லா ஜீவன் தான் நீ, ஆயினும்
வாரித் தருவதில் வள்ளல்!
வறுமையுற்ற ஏழைக்கெல்லாம்
வாழ்வளிக்கும் நீயே வாழும் குலசாமி
உணவளிக்கும் உழவருக்கு
உயிர் கொடுக்கும் தெய்வம்
உன்னை வளர்ப்பவர் வாழ்வை
உயர்விக்கும் உன்னத நண்பன் நீ!

உழவனைத் தொழுகின்றதாகக் கூறும் உலகம் அவன்
உழைப்பை உறிஞ்சிக் களித்திருக்கும்
உடல் பொருள் ஆவி அனைத்தும் தரும்
உன் உழைப்பால் வானுயரும் அவன் மதிப்பு!

ஈன்ற கன்றுக்கு அன்புடன் பால் சுரந்து
ஈத்துவக்கும் இன்பம் உடைய பசுவே
ஈரமுள்ள நெஞ்சு கொண்ட உனை
ஈகைக் குணத்தில் மிஞ்ச யார் உளார்?

மடிநிறையப் பால் இருக்கு
மனம் நிறைய அன்பு இருக்கு
மன்னுயிர்கள் எல்லாம் உன்னைப் போலானால்
மாநிலத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும்!

*****

பால் விற்போரே! வாலை ஆட்டிவரும் கன்றுக்கும் கொஞ்சம் பால் இருப்பது நன்று! ஆவின் பாலனைத்தையும் நீரே முற்றாய்க் கறந்துவிடவேண்டாம்!” என்று அன்போடு கண்டிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

கன்றுக்கும் விட்டுவை

பாலது கறந்து விற்பவரே
பாலை முற்றிலும் கறக்கவேண்டாம்,
வாலதை யாட்டி வரும்கன்று
வயிறு நிறையக் குடிப்பதற்கே
பாலது வேண்டும் வைத்திருங்கள்
பசியில் துடிக்க விடவேண்டாம்,
போலியாய்ச் செய்த கன்றன்று
பிழைக்க வைப்பீர் உயிரதையே…!

*****

”பாரில் உள்ள பாதிப் பிள்ளைகளுக்குப் பருகிடத் தாய்ப்பாலாய் இருப்பது உன் பாலே! இருக்கும்வரை பால்தந்து இறந்தபின்னும் தோல்தந்து நிற்கும் நீ எம் குலம் தழைக்கவந்த குலதெய்வம் அன்றோ!” என்று நெகிழ்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

குலதெய்வம்

அழுகின்ற பிள்ளைக்கு
அள்ளி அணைத்து
அன்போடு பால் கொடுக்கும்
அன்னையைப் பார்த்ததுண்டு

அடுத்தவர் பிள்ளையாயினும்
பசி அதனைப் போக்கிட
பரிவோடு பால் கொடுத்த
அன்னை பற்றிக் கேட்டதுண்டு

உன் இளங்கன்றை ஏங்கவைத்து
ஊருக்கே தினந்தோறும்
ஊற்றெடுக்கும் பால் அனைத்தும்
தந்து நிற்கும் உன் உருவில்
தியாகம் செய்யும் அன்னை மனதைக்
கண்டு மகிழ்ந்தோம்!

பாசம் அது பெருகிடவே
பருகிடும் தாய்ப் பால் அது உதவிடுமே
பாரில் உள்ள பாதி பிள்ளைகளுக்கு
பருகிடத் தாய்ப் பாலாய் இருப்பது உன் பாலே!

கலப்படம் இன்றி நீ கொடுக்கும் பாலில்
மனதில் ஓடும் ஆசையைப் போல்
கலந்து வைத்துத் தண்ணீரை
மதிகெட்டு விற்கும் மாந்தர் கூட்டம் இங்கே!

கட்டிய வீட்டில் காசு சேர்ந்திடக்
கட்டி உன்னை அழைத்து வந்து
பூஜை செய்து போற்றி நிற்கும் மனமது
உன் பிள்ளை அருந்திட உருவான பால்தனை
ஊருக்கு அளித்து மகிழ்ந்து இருக்கும்
உன் தியாகம் தனை என்று உணர்ந்திடும்?

கல்லையும் புனிதமாக
மாற்றத்தக்க பாலைத் தந்து
தரணியில் இருக்கும் அனைவருக்கும்
பசி தீர்க்கும் பானமாய்
இருக்கும்வரை பால் தந்து
இறந்த பின்னும் தோல் தந்து
எம் குலம் தழைத்திடவே
கால் நடையாய் வந்த
குலதெய்வம் நீ!

*****

பசுவின் இனிய இயல்பை, கன்று உண்ணாத போதினும் கலம் நிறையப் பால்கொடுத்து மற்றவருக்கு உதவும் அதன் தயாள குணத்தைச் சிறப்பாய்த் தம் பாடல்களில் பதிவுசெய்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

அன்பைப் பெருக்கி அமுதைச் சுரப்பதற்காய்
தன் கன்றை முத்தமிடும் தாயின் தயவின்றேல்
உலகினிலே மாந்தருக்கு உணவேது? உயிரேது?

தாய்ப்பாலிலாது தவிக்கும் குழந்தைகட்கு
ஆவினங்களன்றோ அனாத ரட்சகர்கள்.

அஃதை உணர்ந்தேதான் அன்றே எம்முன்னோர்கள்
பதியின் அடுத்த பசுவென்று ஆன்மாவைத்
தூய நிலையில் துதிசெய்யச் சொன்னார்கள்

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டுகிற அன்னைக்குப்
பதிலீடாய் என்றும் பசுக்கூட்டம் உள்ளதனால்
அன்பைப் பொழிகின்ற ஆவினத்தை எப்போதும்
துன்பமறக்காத்துத் தொழுதிடுதல் எம் கடமை

தெய்வத் திருமுறையில் திரு மூலர் சொன்னபடி
பதிக்கொரு பச்சிலையும் பசுவுக்கோர் வாயுறையும்
என்றுங் கொடுத்து எமைக்காக்கும் ஆவினத்தை
நன்று பராமரிப்போம் நாளும்!

”உதிரத்தைப் பாலாக்கி ஊட்டுகின்ற அன்னைக்கோர் பதிலீடாய்த் திகழும் ஆவினத்தைத் தொழுவோம். ”யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை” என்று உரைத்துச்சென்ற சித்தர் திருமூலரின் வாக்குக்கிணங்க, பார் புரக்கப் பால் சுரக்கும் பசுவினத்தைப் பாங்காய்ப் பராமரிப்போம் நாளும்!” என்று நற்சொல் நவின்றிருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 205-இன் முடிவுகள்

  1. என்னை வாரத்தின் சிறந்த கவிஞரெனப் பாராட்டிய சகோதரி மேகலா இராமமூர்த்திக்கும், வல்லமை குழுமத்திற்கும் அன்பு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இனிய கவிதைகளை என்னோடு சேர்ந்து வழங்கிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *