நாங்குநேரி வாசஶ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 27 – தவம் 

குறள் 261:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

மத்தவங்க தனக்கு செய்யுத துன்பத்த பொறுத்துக்கிடுததும் அவங்களுக்கு பதிலுக்கு துன்பம் செய்யாம இருக்குததும் தான் தவம்.

குறள் 262:

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது

தவ ஒழுக்கம் ஒடயவங்களால தான் தவம் செய்ய முடியும். அது இல்லாதவங்களால முடியாது.

குறள் 263:

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்

துறவிங்களுக்கு சாப்பாடும் மத்ததும் குடுத்து ஒதவணும் னு நெனச்சி குடும்ப வாழ்க்கைல இருக்கவங்க தவம் செய்யுதத மறந்து இருக்காங்களோ?

குறள் 264:

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

நெஞ்சுறுதியும் கட்டுப்பாடும் உள்ள தவம் ங்குத நோம்பு வலிமையா உள்ளவனால நெனைச்ச நேரம் எதிரிங்கதோக்கடிக்கவும் சேக்காளிங்கள ஒசத்தவும் முடியும்.

குறள் 265:

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

உறுதியான நோம்பால நெனைச்சத நெனச்ச மாதிரி அடஞ்சுக்கிட முடியும்ங்கதால குடும்ப வாழ்க்கைலயும் அது  முனஞ்சி செய்யப்படுது.  

குறள் 266:

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தவம் செய்யுதவங்க மட்டுந்தான் தனக்குரிய கடமைய செய்யுதவங்க மத்தவங்க ஆச அலைகழிக்கதால வீணாப்போன காரியத்த தான் செய்வாங்க.  

குறள் 267:

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

புடம்போட்ட தங்கம் மினுங்குததுபோல தன்னய நோவடிச்சுக்கிட்டு ஒரு குறிக்கோள நினைச்சி நோம்பு இருக்குதவங்க எந்த துன்பம் வந்தாலும் ஒசந்து நிப்பாங்க.

குறள் 268:

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

தன்னோட உசிருங்குத பற்றுதலும், தான் ங்குத அகம்பாவமும்இல்லாதவங்களோட பெருமய புரிஞ்சிக்கிட்டு  ஒலகத்து மத்த உசிருங்கல்லாம் கும்பிடும்.

குறள் 269:

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

தவத்தால வலிமையடஞ்ச ஒருத்தனால எமனயும் செயிக்க முடியும்.

குறள் 270:

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ஏதுமில்லாத ஏழங்க அதிகமா இருக்குததுக்கு காரணம் தவம் செய்யுதவங்க கொறைவாவும், செய்யாதவங்க நெறய பேரும் இருக்துதான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *