[Peer Reviewed] முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்

2

முனைவர் த. கவிதா,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம்,
அரசுக் கல்லூரி,  சித்தூர், பாலக்காடு,
கேரளம், 678104.

                               முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்                               

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளைக் கண்டறிவதற்கு அம்மொழியின் வட்டார வழக்குகளை ஆய்ந்தறிந்து ஆவணப்படுத்த வேண்டியதன் தேவை அதிகரித்துள்ளது. அவ்வகையில் பழந்தமிழின் வட்டார வழக்கு என்ற நிலையில் இன்றுவரை நிலைபெற்றிருக்கும் மொழியாகிய முடுகா மொழிச் சொற்களை ஆய்ந்து உணருவோமானால் பழந்தமிழின் வட்டார வழக்கு மொழிகளை எளிதில் இனங்காண்பதற்கு வழிவகை அமையும்.

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி மலைப் பகுதிகளில் காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடிகளாகிய முடுகர் இனத்தினர் பேசிவரும் முடுகா மொழியின் சொற்களில் பழந்தமிழின் தாக்கங்களை அதிகளவில் காண முடிகின்றது. அவ்வகையில் அம்மொழியின் வினைச்சொற்களை ஆய்ந்து காணும் விதமாக இக்கட்டுரை அமைய உள்ளது.

வினைச்சொற்கள்

தமிழ்                                                                                      முடுகா மொழி

உறங்கு                                                                                     உறாங்கு
இறங்கி                                                                                     இறாங்கி, றாங்கி
காய வைத்து                                                                        உணக்கி
சமைக்க வேண்டும்.                                                       அடோணு(ம்).
விரட்டியவாறு சென்றான்                                         துரத்தீட்டுப் போனா
விளையாடுகின்றார்கள்                                            விளாடுறாரு
தொங்கிய நிலையில் இறந்தான்                        தூங்கிச் செத்தா(ன்)
அண்டையைக் கவிழ்த்து வை                              அண்டெனெ கவிசி வெயி, கம்த்தி வெயி
சினம் வரும்                                                                           வெறி வரும்
தின்கின்றோம் .                                                                  திங்கடோ(ம்).
அழைத்து வா.                                                                      உலேத்து வா.
அழைக்கிறார் .                                                                   உலேக்காரு, உளேக்கா, உளேக்கிறா
அமைதியாக இரு .                                                           சப்பெந்திரி.
தொங்குகின்றார்.                                                            தொங்குறாரு.
பூப்படைந்து விட்டாள் .                                                நிறேந்திருக்கா.
தின்கின்றோம்.                                                                  தீனி திங்கடோ(ம்).
நீ சாப்பிட்டாயா?                                                              நீ திந்தேகா?
கீரை கடைந்திருக்கின்றேன்.                                அடா கடாந்திருக்கேரு.
இடி இடிக்கின்றது ;                                                         இடி முடுங்குகிது.
தூண்டில் இடலாமா?                                                     தூண்டா விடுகாமா?
நான் அமர்ந்திருக்கின்றேன்.                                 நக் குக்காந்திருக்கே(ன்).
கருவுற்றிருக்கின்றாள்.                                              வேராயிருக்கா(ள்)
குளிக்கப் போகின்றேன்.                                           தண்ணியாடிய போறெ(ன்).
திருமணம் செய்து கொண்டான்.                        பெண்ணு சேந்தா(ன்).
குரங்கு மரத்தின் மேல் செல்கின்றது.             குராங்கு மர மேல போது.
கிழிந்து விட்டது .                                                              கீறித்து.
விழுந்து விட்டோம் .                                                       விந்தாமு.
சண்டையிடுகின்றார்.                                                மல்லு பிடிக்காரு.
பசு கன்றினை ஈன்றுகொண்டிருக்கின்றது. மாடு கன்னு ஈனுது.
விதைத்தார்கள்.                                                               விதெத்தேரு.
மழை பெய்கின்றது.                                                      மகெ அடிக்கிது.
என் இடத்திற்கு வா.                                                        எம்முதுக்கெ வா.
பனி விழுகின்றது.                                                           பனி வீது.
யானை பிளிறுகின்றது.                                             ஆனெ அகாருது.
காற்று நின்று மழை வருகின்றது.                     காத்து நிந்துது; மகெ வருது.

“உறங்கு” எனும் வினைச்சொல் “உறாங்கு” என்றும் “இறங்கி” என்பது “இறாங்கி”, “றாங்கி” என்றும் “காயவைத்து” என்பது “உணக்கி” என்றும் முடுகர் மொழியில் மொழியப்படுகின்றன. இச்சொற்கள் சங்க காலத்திற்கு உரியவை என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.

“தீஞ்சோற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க” (மதுரைக் – 627)

“ஞாழல் இறங்குஇணர்ப் படுசினை” (ஐங்குறு – 142)

“வெள்ளெள் சுளகிடை உணங்கல்” (புறநா – 321)

ஆகிய சங்க இலக்கியத் தொடர்களில் முறையே உறங்கு, இறங்கு, உணங்கல் என்ற சொற்கள் இடம் பெறுகின்றன. இப்பழந்தமிழ்ச் சொற்களே சற்று மாறுதல்களோடு முடுகர்களிடையே காணப்படுகின்றன. இங்கு உறங்கு, இறங்கு முதலான சொற்களில் இடம்பெறும் றகரங்கள் நீண்டொலிக்கின்றன. உணவு சமைத்தலாகிய தொழிலைக் குறிப்பதற்கு முடுகர்கள் “அடோணு(ம்)” என்பார்கள். இச்சொல் வழக்காற்றினை இரவாளர், மலசர், இருளர், மன்னான் போன்ற பிற பழங்குடியின மக்களிடையேயும் காணலாம். “கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ்” (புறநா – 399) என்ற புறநானூற்றுத் தொடரில் காணப்படும் “அட்ட” என்னும் சொல் “சமைத்த” என்ற பொருளைத் தருவதை உணரலாம்.

முடுகர் மொழியிலுள்ள “விளாடுறாரு” (விளையாடுகின்றார்கள்), “தூங்கிச் செத்தா(ன்)” (தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்) ஆகிய பேச்சு வழக்குகளும் பழந்தமிழில் இருந்தனவே என ஊகிக்கலாம். “பைய விளையாடுவாரும்” (பரிபா – 10) என்ற தொடரில் மெதுவாக விளையாடுகின்ற நிலை கூறப்படுகின்றது. “தூங்கு கையான்” (புறநா – 22), “செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை” (புறநா – 240) ஆகிய புறநானூற்றுத் தொடர்கள் யானையின் தொங்கிய நிலையிலுள்ள தும்பிக்கையினையும், இறந்தவர்களைச் சேர்க்கும் கள்ளிச் செடிகள் நிறைந்த இடுகாட்டினையும் குறிக்கின்றன. ஆதலால் முடுகர் மொழியில் காணலாகும் தூங்கி, செத்தான் போன்ற பேச்சு வழக்குகளும் சங்கத் தமிழைச் சார்ந்தனவே என்பது உறுதியாகின்றது.

விரைவாகச் செலுத்துதலை முடுகர்கள் “துரத்தீட்டு” என்று சுட்டுவதுண்டு. இச்சொல் வழக்காற்றினை “செம்மல் உள்ளம் துரத்தலின்” (அகநா – 81) என்ற அகநானூற்றுத் தொடரில் காண முடிகின்றது. கூடை, மூங்கிலண்டை போன்றவற்றை கவிழ்த்து வைக்குமாறு கூறும்பொழுது “கவுசி வெயி”, “கம்த்தி வையி” என்று கூறுவர். முடுகாமொழியில் ழகரம் தவிர்க்கப்படுவதால் “கவிழ்த்து” என்ற சொல்லானது மேற்சுட்டிய நிலைகளில் வழங்கப்படுகின்றது என்றறியலாம். “கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி” (நற் – 30) என்ற சங்கத் தொடரில் அச்சொல் இடம் பெறுவதுண்டு. கவிழ்த்து – கவித்து – கவுத்து – கம்த்து – கம்த்தி என்று மாற்றமடைந்திருக்கக் கூடும். அதுவே பிறகு கம்த்தி – கம்சி – கவுசி என்ற நிலைகளில் மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.

“அழைத்து வா” என்பதற்கு முடுகாமொழியில் “உலேத்து வா”, “உளேத்து வா” என்று கூறுவது வழக்கம். இங்கு ழகரத்திற்கு மாற்றாக ல, ள ஆகிய ஒலிகள் இடம்பெறுகின்றன. அத்துடன் மொழி முதல் அகரம், உகரச் சாயலை அடைந்து விட்டது. “அழைத்து” என்ற வழக்காறு சங்க காலச் சூழலிலேயே வழக்கில் இருந்திருக்கின்றது. “கூகை அழைப்ப” (புறநா – 261) என்று புறநானூற்றில் அச்சொல் இடம்பெறுவதுண்டு. அழைத்து – அளைத்து – அலைத்து – உலைத்து – உலெத்து – உலேத்து – உளேத்து என்ற நிலைகளில் அச்சொல் திரிந்திருக்க வாய்ப்புண்டு.

பெண் குழந்தைகள் பூப்படைந்த நிலையினைச் சுட்டுவதற்கு முடுகா மொழியில் “நிறேந்திருக்கா” என்று கூறுவது வழக்கம். இல்வாழ்க்கைக்கு ஒரு பெண் தயாராகி விட்டாள் என்று உணர்த்துவதற்குப் பயன்படும் சொல்லாக அச்சொல்லைக் கருதுவதற்கு வழியுண்டு. நிறைவடைந்துவிட்டாள், முழுமையடைந்துவிட்டாள், வளர்ச்சியடைந்துவிட்டாள் போன்ற பொருட்புலப்பாடுகளைத் தரும் தமிழ்ச்சொல்லாக அச்சொல்லைக் கருதலாம். ஒரு பெண் கருவுற்றிருத்தலைச் சுட்டுவதற்கு “வேராயிருக்கா(ள்)” என்று அம்மக்கள் கூறுவர்.

“இடி முழங்குகின்றது” என்பதை முடுகர்கள் “இடி முடுங்குகிது” என்பர். “முழங்குகின்றது” என்பதிலுள்ள ழகரம் டகரமாக மாற்றமடைந்த நிலையில் மொழிமுதலில் இடம்பெறும் உகரத்தின் தாக்கத்தினால் “ட” ஒலி “டு” ஒலியாகியிருக்கின்றது என்பது வெள்ளிடை மலை. முழங்குகின்றது – முளங்குகின்றது – முடங்குகின்றது – முடங்குகிது – முடுங்குகிது என்பதான மாற்றங்களாகக் அச்சொல்லைக் கருத வழியுண்டு.

“கீரை கடைந்திருக்கின்றேன்” என்பதை முடுகர் இனத்தினர் “அடா கடாந்திருக்கேரு” என்பர். “கடைந்து” என்ற சொல்லே “கடாந்து” என்று முடுகா மொழியில் மருவியிருக்கின்றது. “தீம் தயிர் கடைந்த” (அகநா – 87) என்ற சங்கத் தொடரில் அச்சொல் வருவதுண்டு. பெரும்பாலான தமிழர்களின் நாவில் “கடைந்து” என்ற சொல்லிலுள்ள முதலண்ண ஒலிகளாகிய ந், து என்பன ஞ்,சு என்ற இடையண்ண ஒலிகளாக மாற்றம் பெற்று “கடஞ்சு” என்றாகின்ற பொழுது முடுகர் நாவில் ந், து என்பன மாற்றமடையாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. மொழியிடை ஐகாரம் மட்டும் ஆகாரமாகி “கடாந்து” என்றாகியிருப்பது நோக்கற்பாலது.

“விழுந்துவிட்டோம்” என்று கூறும்போது முடுகர்கள் “விந்தாமு”, “வீந்தாமு” என்பர். இச்சொல் “வீழ்ந்து” “விழுந்து” என்று சங்க காலத்திலும் இரு நிலைகளில் காணப்பட்டது. “பெரும் பழம் விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு” (நற் – 116) என்ற நற்றிணைத் தொடரில் “வீழ்ந்து” இடம் பெறுவதுண்டு. “விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து” (மலைபடு – 220) என்ற பத்துப்பாட்டுத் தொடரில் “விழுந்து” என்ற சொல் காணப்படுகின்றது. “விழுந்து விட்டோம்” என்ற தொடர் மிகச் சுருங்கிய வடிவ மாற்றத்திற்கு உள்ளான நிலையில் “விந்தாமு” என்று மருவியிருப்பது கவனிக்கத் தக்கது. முடுகா மொழியில் ழகரம் தவிர்க்கப்படுதல் அல்லது வேறு ஒலியாகத் திரிபடைதல் என்ற தன்மையினைக் காண முடிகின்றது. இங்கு ழகரம் தவிர்க்கப்படுகின்றது.

“சண்டையிடுகின்றார்” என்பதற்கு முடுகர்கள் “மல்லு பிடிக்காரு” என்கின்றனர். “மல் ஆர் அகலம் வடு அஞ்சி”(பரிபா – 12) என்ற தொடரில் இடம்பெறும் “மல்” என்னும் சொல் மற்போரினைச் சுட்டுவதாக அமைகின்றது. ஆனால் முடுகா மொழியில் பொதுவாக சண்டையிடுவதனை “மல்லு” என்ற சொல்லால் குறிப்பது வழக்கமாக இருக்கின்றது. உச்சரிப்பு எளிமைக்காக மொழியிறுதியில் “லு” இடம்பெறுவது கண்கூடு.

பசு கன்று ஈன்றெடுப்பதைக் குறிப்பதற்கு “மாடு கன்னு ஈனுது” என்று முடுகர்கள் வழங்குவர். “ஈன்றேன் யானே” (நற் – 198) என்ற சங்கத் தொடரில் மகளைப் பெற்றெடுத்த ஒரு தாய் கூறியமையும் கூற்றினைப் பார்க்கின்றோம். ஒரு பெண் கருவுற்றிருப்பதைச் சுட்டுவதற்கு முடுகா மொழியில் “வேராயிருக்கா(ள்)” என்று மொழிவர். ஒரு குழந்தையின் வாழ்க்கை துவங்குவதற்கான வேர் அவள் வயிற்றில் உருவாகியிருக்கின்றது என்று சுட்டுவதற்கு அவ்வாறு மொழிகின்றனர் போலும்.

நீராடச் செல்வதனை முடுகர்கள் “தண்ணியாடிய போறே(ன்)” என்பார்கள். “தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே” (நற் – 124) என்ற சங்கத் தொடரிலேயே தண்ணீர் என்ற சொல் காணப்படுவதுண்டு. இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் தற்காலத்தில் நீராடுதலைச் சுட்டுவதற்கு “குளித்தல்’ என்ற சொல் பயன்பாட்டில் இருக்கின்ற நிலையில் முடுகர்கள் “தண்ணியாடுதல்” என்று குறிப்பிடுவது கவனத்திற்குரியது. அம்மக்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் குளிப்பதை வழக்கமாகக் கொள்வர். அந்நீர்நிலைகள் எப்பொழுதும் தண்ணென்று குளிர்ந்து காணப்படுவதனால் “தண்ணியாடுதல்’ என்று கூறுவது பொருத்தமாகத் தெரிகின்றது.

திருமணம் செய்து கொண்டான் என்று கூறுவதற்கு பதிலாக முடுகர்கள் “பெண்ணு சேந்திட்டா(ன்)” என்று சுட்டுவது வழக்கமாக இருக்கின்றது. பொதுவாக அட்டப்பாடி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினரிடையே களவுவழி வந்த திருமண முறை பெரியவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. அந்நிலையில் ஒத்த அன்பு கொண்ட ஆணும் பெண்ணும் பொருட் செலவு செய்து திருமணம் என்ற சடங்கினை நிகழ்த்திய பிறகுதான் இணைந்து வாழ வேண்டும் என்ற கட்டாயம், அவர்களிடையே இல்லை. பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற தயக்கம் இருந்தால் தோழர் மற்றும் தோழியர் உதவியுடன் உடன்போக்கு நிகழ்த்துவர். மூன்று நான்கு நாட்கள் கழிந்த நிலையில் பதிக்குத் திரும்பி வருவர். ஒரு தனிக் குடிசையிட்டுத் தனிக் குடித்தனம் துவங்க ஆரம்பித்துவிடுவர். பலத்த எதிர்ப்புகளொன்றும் தோன்றுவதில்லை. அவர்களுக்கென்று பொருளாதார வசதி எப்பொழுது ஏற்படுகின்றதோ ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழிந்த நிலையில் உறவுகளை அழைத்துத் திருமணச் சடங்கு நிகழ்த்துவதுண்டு.

மனமொத்த நிலையில் ஆண் பெண் இருவரும் சடங்குகளின்றி இணைந்து வாழ்தல் என்பது தொல்காப்பியத்திற்கு முந்தைய கற்புநெறி என்பது போதரும். சமுதாயத்தில் “பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல் –பொருளியல் – நூற்பா – 4) என்பார் தொல்காப்பியர். எனவே “பெண்ணு சேந்திட்டான்” என்று முடுகர்கள் கூறுவது பொருத்தமுடையதாகவே தோன்றுகின்றது. மட்டுமின்றி சங்க காலத்திற்கும் முற்பட்ட இத்தகைய சில நல்ல வாழ்வியல் ஒழுகலாறுகள், அம்மக்களிடையே இன்றும் நிலவியிருக்கின்றது என்பது எண்ணி மகிழ்தற்குரியது.

“கிழிந்துவிட்டது” என்பதற்கு முடுகர்கள் “கீறித்து” என்பார்கள். “ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்” (அகநா – 194) என்ற சங்கத் தொடரிலேயே “கிழித்து” என்ற சொல் இடம் பெற்றிருக்க அச்சொல் முடுகா மொழியில் முதலுயிர் நீளல் மற்றும் ழகரம் றகரமாதல் முதலான மாற்றங்களுக்கு உள்ளாகி “கீறித்து” என்றவாறு மாறியிருக்கின்றது என்று அறியலாம்.

முடுகா மொழியின் சொற்கள் மற்றும் தொடர்களை உற்று நோக்கும்போழுது அவை பழந்தமிழர்களின் பேச்சு வழக்குகளை உணர்ந்தறிய உதவி புரிவனவாக அமைகின்றன. முடுகா மொழியின் சில வினைச் சொற்கள் மட்டுமே இங்கு ஆய்வுக்குள்ளான நிலையில் அம்மொழியின் அனைத்துச் சொற்களையும் ஆய்ந்து காண்போமானால் பழந்தமிழின் வட்டார வழக்குகள் பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவடையும் என்பது உறுதி.

துணை நின்ற நூல்கள்

1. அகத்தியலிங்கம். ச , திராவிட மொழிகள் , மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -08.
2. கருணாகரன். கி , சமுதாய மொழியியல் , மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு , சிதம்பரம் – 1.
3. சண்முகம் பிள்ளை.மு. (ப. ஆ), தொல்காப்பியம் –பொருள்- இளம்பூரணம், முல்லை நிலையம், மண்ணடி, சென்னை – 1.
4. பாலசுப்பிரமணியன்.கு (த.ப.ஆ), எட்டுத்தொகை & பத்துப்பாட்டு நூல்கள், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , சென்னை.

படத்திற்கு நன்றி: https://www.ethnologue.com/18/map/IN_08/index.html

==============================================================

ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review] :
ஆய்வாளரின் தகவல் திரட்டும் முயற்சிக்கும் கட்டுரை அமைப்பிற்கும் பாராட்டுகள். முடுக மொழியில் வழங்கி வருகின்ற சொற்களை சங்க காலத்தில் வழங்கப்பட்ட சொற்களோடு ஒப்புமைப்படுத்தி தக்க சான்றுகளுடன் விளக்கியிருப்பது சிறப்பு. ‘பெண்ணு சேந்திட்டான்’ என்ற வார்த்தையை விளக்குமிடத்து இத்தகைய நல்ல வாழ்வியல் முடுகர்களிடையே இன்றும் நிலவுகிறது என்று கூறாமல் இருந்திருக்கலாம். திருமணச் சடங்கில்லாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது நல்ல முறை என்பது ஏற்புடையதாக இல்லை. முடுகா மொழி பேசுவோரின் எண்ணிக்கை? முடுகா எந்த மொழி எழுத்துகளில் எழுதப் பெறுகின்றது? இதைத் தமிழ் எழுத்துகளில் எழுதும் முயற்சி நடைபெற்றுள்ளதா? போன்ற பின்புல விவரங்களையும் ஆய்வாளர் வழங்கியிருக்கலாம்.
==============================================================

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “[Peer Reviewed] முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்

  1. தக்க வரைபடத்துடன் கட்டுரை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. முடுகா மொழிக்கென்று எழுத்து வடிவம் எதுவும் இதுவரை இல்லை.
    “யாரும் இல்லை தானே கள்வன்
    தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?” (குறுந் – 25)
    என்று சங்க காலத்தில் குறுந்தொகைத் தலைவி வருந்திய நிலையினைக் காண்கின்றோம். இன்றைய முடுகர் இனப் பெண்களுக்கு இத்தகைய நிலை நேரா வண்ணம் முடுகர் இன ஆண்கள் உண்மையானவர்களாக நடந்து கொள்கின்றனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை பழங்குடி மக்களாகிய அவர்களது திருமண வாழ்வில் ”தாலி” என்பது இடம்பெறவில்லை. அவ்வாறு இணைந்த அம்மக்களின் மண வாழ்வில் இதுநாள் வரை எவ்விதப் பிரச்சனைகளும் வந்ததில்லை. மிக எளிய மணச்சடங்குகளே அவர்தம் மண வாழ்வில் இடம்பெறுகின்றன. அதனால் பொருட் செலவு என்பது மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இத்தகு நிலைகளே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு காணப்பட்டிருக்க வேண்டும். இனக்குழுச் சமுதாயம் நிலவிய பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் எப்பொழுது தலைவன் தன்னை நம்பிய தலைவிக்கு துரோகம் இழைத்தானோ அப்பொழுதிருந்துதான் பெரியவர்கள் பலர் சாட்சியாக திருமணச் சடங்கினை நிகழ்த்தியிருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே ”பெண்ணு சேந்திட்டான்” ன்னும் என்னும் தொடருக்கான விளக்கம் கொடுக்கப் பட்டது. பொருள் மயக்கம் ஏற்பட்டிருப்பின் பொருத்தருள்க.
    இவண்
    த.கவிதா

Leave a Reply to த.கவிதா

Your email address will not be published. Required fields are marked *