அன்பிற்கினிய நண்பர்களே!

கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சந்தோஷ்குமார் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 207

  1. உலகமே.. உதயம் எதனில்…?
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    மனிதனை மனிதன் தாக்கி அழிக்கும் கொடுஞ்செயல் அழிவதிலா..?
    மனிதர்தம் மனதில் மாறாது நிலைத்த வன்மம் தொலைவதிலா..?
    தன்னலம் ஒன்றே பெரிதெனக் கருதும் மனநிலை மடிவதிலா..?
    கண்களைப் போன்று பணத்தினைப் போற்றும் பண்பு ஒழிவதிலா..?

    ஆயுதப் போட்டிகள் அடங்கி உலகு அமைதியை அடைவதிலா..?
    இயற்கையைச் சிதைத்து இன்பம் நுகரும் போக்கு மறைவதிலா..?
    கயவரை யொத்த அரசியல் செய்வோர் அரியணை இழப்பதிலா..?
    இயலாதவர்க்கு இயன்றதைச் செய்து இன்பம் துய்ப்பதிலா..?

    அமைதியை இழந்துத் தவிக்கும் மக்கள் நிம்மதி பெறுவதிலா..?
    சுமைகள் நிறைந்த கல்வியைத் தவிர்த்து பண்பை வளர்ப்பதிலா..?
    இமைய மலையின் அளவினைப் போன்று ஆசை கொள்வதிலா..?
    இமைப் பொழுதேனும் மறைபொருளே உன்னை நினைப்பதிலா..?

    உலகமே உணர்த்திடு உதயம் என்பது ஆதவன் உதிப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது அன்பை விதைப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது அகிம்சை நிலைப்பதிலா..?
    உலகமே உணர்த்திடு உதயம் என்பது சத்தியம் தழைப்பதிலா..?

  2. விடியும் வேளை…

    விடியும்வரை
    வியாபித்திருந்தது
    பனிநீரின் அரசாங்கம்..

    பச்சைப் புல்நுனிமுதல்
    பரந்துயர்ந்த மரங்கள்
    பட்ட மரங்கள்,
    விட்டுவிடவில்லை எதையும்
    எட்டும் தூரம்வரை..

    ஆட்சி மாறுகிறது
    அதிகாலையில்,
    பகலவன் வருகிறான்
    பதவி ஏற்க..

    பதறி ஓடும்
    பழைய ஆட்சியாளர்கள்-
    பனித்துளிகள்…!

    செண்பக ஜெகதீசன்…

  3. அன்னையின் மடியில்  

    பகலவன் மேற்கில் 
    பதுங்கியதும்  
    இரவெனும் போர்வை
    இருளாய் 
    இப்புவியை போர்த்தியதோ

    நடுங்கும் குளிர்தனில்
    இதமாய் குளிர்காய 
    அன்னை மடி தேடி 
    வெண்பனியாய் 
    பூமி தாய் அவள் மடி மீது 
    படர்ந்தாயோ

    அதிகாலை கதிரவனாய் 
    மூத்தவன் முதலில் 
    விழித்துக்கொள்ள 
    அன்னை மடி மீது 
    இளம்பனியாய் இளையவன் 
    உறங்க கண்டு 
    நெருப்பாய் கொதித்திட 
    விலக மனம் இன்றி 
    உறுகியதோ பனித்துளி 

    கதிர் மீது உருகும் பனி
    அழுகின்ற முகமாய் தோன்ற 
    கண்டு கதிரவன் தடுமாற 
    அன்னையின் அரவணைப்பு
    இன்னும் சற்று அதிகம் 
    இளம்பனிக்கு கிடைத்திட 
    மேகத்திற்குள் ஒளிந்ததோ சூரியன் 

    பூத்து குலுங்கும் பூமி தாய் அவள்
    புன்னகைக்கு துணையாய் கதிரவன் இருக்க 
    முத்தாய் முகத்தில் பூத்து
    முத்தங்கள் பதித்து சென்றதோ பனித்துளி 

Leave a Reply to Shenbaga Jagatheesan

Your email address will not be published. Required fields are marked *