முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2

(அம்மானைப் பருவம்)

உலகவியல் தத்துவக் கருத்து ஒன்றை மீனாட்சியம்மை, அம்மானையாடும் போது உண்டாகும்  அதிசயமான குறிப்புகளுக்கு ஏற்றிக் காட்டுவதும் புலவனாரின் கவிதைச் சிறப்பின் உயர்வைப் புலப்படுத்துகின்றது.

அம்மானையாடும்போது மீனாட்சியம்மை கையில் பிடித்திருப்பது முத்துக்கள் பதித்த அல்லது பெருமுத்துக்களால் ஆன அம்மானைக் காய்களாகும். அவளுடைய தாமரை மலர் போன்ற சிவந்த கையில் பொருந்தும் போது அவை தாமும் சிவந்த நிறத்தைப் பெறுகின்றன. அன்னையின்  கருணை வெள்ளம் பெருகும் கடைக்கண் பார்வையால் கறுப்பு நிறம் பெற்றும் அவை விளங்குகின்றன. அவளுடைய நிலவு முகத்தில் தோன்றும் வெண்மையான பற்களின் நகைப்பினால் வெண்ணிறத்தையும் அடைகின்றன.

சாத்வீகம் எனும் சத்துவம் வெண்மை நிறத்தினையும், இராட்சதம் என்னும் இராசதம் சிவப்பு நிறத்தினையும் தாமஸம் எனும் தாமதம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும். சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய குணநலன்கள் ஒவ்வோர் உயிரின் அறிவிலும் வெவ்வேறு விகிதங்களில் கலந்திருக்கும். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. முக்குணங்களின் சேர்க்கையினால் உலகம் உருவானது என ஒரு கருத்தும் நிலவுகின்றது.

சத்துவ குணமானது, அறத்தோடு பொருந்திய சிந்தனை, தன் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது, எளிமையாக இருத்தல் முதலியனவாம்;

இராசத குணமாவது, ஊக்கம், வீரம், தான தருமம், கல்வி, ஆசை, வேட்கை, தற்பெருமை, இறுமாப்பு இவற்றுடன் மற்றவர்களை இகழ்வது, பராக்கிரமம், இன்பப் பற்று  ஆகிய செயல்களைச் செய்ய வைக்கும்.

தாமத குணமென்பது காமம், வெகுளி, மயக்கம், பேராசை, வரித்தம், மோகம், கவலை, அச்சம், சோம்பல் ஆகியவை பொருந்தி, பகட்டுக்காகச் செயல்கள் செய்தலையும், தாழ்வான எண்ணங்களையும் அதிகப்படுத்துகின்றது.

                                      ‘நல் தரள அம்மனையொர் சிற்குணத்தினை மூன்று

                                     நற்குணம் கதுவல் காட்ட…

என்பன பாடல் அடிகள். இவை அம்மானையாடுதலுடன் எவ்வாறு பொருந்தும்?

உயிர்களின் ஒப்பற்றதோர் அறிவினை மூன்று வகையாகிய இக்குணங்கள் பற்றியுள்ளன என்பதனையே ஒரே விதமான முத்து அம்மானைக் காய்கள் பல நிறங்களை அடைவது என்பது உணர்த்துகிறது எனக் குறிப்பிடுகிறார் புலவர்!  பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் மேலும் பலரும் இக்கருத்தினை நயம்பட எடுத்தாண்டுள்ளனர்.

அம்மை மீனாட்சியும் ஐயன் சிவபெருமானும் அடியார்க்கு எளியர் என்கிறார் குமரகுருபரர். அம்மை அப்பர் (உமையும் சிவனும்) ஆகிய இருவரும் ‘துவாதசாந்தம்’ என்னும் ஒப்பற்ற உயர்ந்த பெருவெளியில் பொருந்தி இருக்கின்றனர். உறங்காமல் உறங்கும் நிலையிலுள்ள உயர்ந்த தவஞானியர் ஆகிய மெய்யடியார்களே இதை உணர்ந்தவர்கள்; அவர்கள் இறைவன்-இறைவியிடம் தாம் கொண்ட பேரன்பினால் ஊன் மட்டுமின்றி எலும்பும் உருகுமாறு நெகிழ்ச்சி அடைகின்றனர்; நமக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை நினைத்த மாத்திரத்தில் வாயில் நீர் ஊறும் அல்லவா? அது போல, அவர்களுடைய எண்ணத்தில் உறைவதனால், உள்ளத்தில் கசிந்து பெருகுகின்ற தேன் மீனாட்சி அன்னை! அவளை,

                                                ‘ஒருபெரு வெளிக்கே விழித்துறங் கும்தொண்டர்

                                                உழுவலன்பு என்புருகநெக்கு

                                      அள்ளூற உள்ளே கசிந்தூறு பைந்தேறல்

                                                அம்மானை ஆடியருளே,’

எனப் பெருமிதம் பொங்கப் பாடுகிறார் புலவர் பெருமான். இத்தகைய பல வேதாந்த, சித்தாந்தத் தத்துவங்களை ஆங்காங்கே பாடல்களில் பதித்து வைத்துள்ளார்.

                                                ஆகம் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்

                                                அம்மானை ஆடியருளே!’

என்ற சொற்களால் உமையொரு பாகனின் அர்த்தநாரீசுவர வடிவத்தையும் அழகுறப் போற்றுகிறார்.

பராசக்தி எனும் அன்னை மூன்றுவித ஆன்மாக்களை இவ்வுலகபந்தம் நீங்குமாறு எடுத்தெடுத்து மேலே விடுவிக்கிறாள்; ஆயினும் அவை தத்தம் உலகப் பாசக் கட்டினால் திரும்பத் திரும்பக் கீழே உலகிற்கே வருகின்றன. அவளும் சளைக்காமல் அவற்றைப் பின்னும் எடுத்து மேலே விடுக்கிறாள். அன்னை அம்மானை ஆடுவதும் இது போன்றே உள்ளதாம். அவள் அவற்றை மேலே விடுவிக்க, அவை உலகத்தின் புவியீர்ப்பு விசையால் இழுபட்டுக் கீழே வருகின்றன. அவளும் சலியாது அவற்றைத் திரும்ப மேலே விடுப்பது மூவகை ஆன்மாக்களுக்கு அருள்வது போன்றதே என்கிறார் திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர்.

                                      ‘புவனமெங்குந் தங்கி நிலவுமூ வுயிர்களைப்

                                      போந்தபந் தத்தினின்றுன்

                               பொற்கமல நற்கரத் தான்மீ துயர்த்திடும்

                                      போதுமவை புக்கவுலகின்

                               கவனவெம் மாயையிற் கட்டுண்டு வீழ்ந்திடும்

                                      காலமெல் லாமவற்றைக்

                               கையினாற் றாங்கிநீ மீளவும் உயர்த்தும்

                                                கருணையின் செய்கைபோலாம்

                               நவமணி குயிற்றியொளிர் அம்மனை எடுத்துநீ

                                      நன்குபெற மேல்விடுதலும்,’

என்பன பாடல் அடிகளாம்.

(மூவகை ஆன்மாக்கள்:

பிரளயாகலர்- இவர்கள் மாயயை நீத்தவர்கள்; பிரளய காலத்தில் வீடுபேற்றையடைவார்கள்.

விஞ்ஞானகலர்- இவர்கள் ஆணவ மலம் மட்டுமே உள்ள ஆன்மாக்கள்.

சகலர்- மற்ற அனைவரும் இதில் அடங்குவர்; மும்மலமும் உடைய உயிர்கள் இவை.)

சோணாசல பாரதியார் இயற்றியுள்ள திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ், நயம் வாய்ந்ததும் அணியழகு ததும்புவதுமான பாடல்கள் பலவற்றைக் கொண்டிலங்குவது. காணப் போகும் பாடலில், மான் எனும் சொல், பின்வரு நிலையணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிள்ளைத்தமிழ் நூல் முழுவதும் இத்தகைய அருமையான பாடல்களைக் கண்டு களிக்கலாம்.

‘பிட்சாடனராக வந்து நமது மனைவியரைத் தம்மீது ஆசைகொண்டு அலையச் செய்தும், திருமாலை அழகான மோகினியாக்கி நம்முன் அனுப்பி நம்மையும் காமத்தில் ஆழ்த்திவைத்த இவனை (இச்சிவபெருமானை) நாம் அழித்திட வேண்டும்’ எனத் தாருகாவனத்து முனிவர்கள் சினம்கொண்டு அபிசார வேள்வி செய்து புலி முதலியவற்றை வரவழைத்துப் பெருமான் மீது ஏவினர் என்பது வரலாறு. அந்தப் பெருமானை- அவன் எப்படிப்பட்டவன்?- கொடிய மானை, யானையை உரித்துக் கையில் பிடித்துக் கொண்டவன்- அவனுடைய பிறையும் கொன்றையும் சூடிய சடையில் நீர்வடிவாகிய பெண் (கங்கை) அமர்ந்துள்ளாள்; அவள், “உங்கள் கண்மானை (மனையாளான உமையை) நீங்கள் மகிழச் செய்யுங்கள்; என்னை ஒருவராலும் அசைக்க இயலாது,” என்று செருக்குடன் இருக்கிறாள். இதனை அந்த உண்ணாமுலையம்மையாகிய பார்வதி தன் தோழியரிடம் கூறி, “அந்த கங்கையின் செருக்கை நீக்கி அவளைத் தானே அசைந்து ஒழுகும்படிச் செய்கிறேன் பாருங்கள்,” என்று மலர்மான் (மலர்மகள்), கலைமான் (மகள்) ஆகிய தோழிகளிடம் கண்சாடையாகக் கூறுகிறாளாம். அதாவது உமையான இவள் பொற்காய்களை வீசி அம்மானையாடினால் சிவபிரான் உவந்து தலையசைப்பாராம். அப்போது அவர் சடையிலுள்ள கங்கை தானே அசைந்து ஒழுகுவாளல்லவா?

                                      நம்மானை அனையாரை ஆசைநீ ரோடையில்

                                      நலித்துமான் மானைஏவி

                               நம்மையும் அழித்தவனை நாம்அழித் திடுதும்என

                                      நல்தரு வனத்தர்ஓட்டும்

                               …………………………………………………………

                               கலைமானை மலர்மானை விழிமானி னால்சொல்லிக்

                                      கனகஅம் மனைவீசிஅவ்

                               அம்மானை முடிஅசைப் பிக்கும் வித மெனஎம்அன்னை

                                      அம்மானை ஆடியருளே

                               ………………………………………

இசையுடன் பாடினால் இன்னுமே இனிக்கும் சந்தநயம் மிகுந்த பாடலிதுவாகும்.

பிள்ளைத்தமிழின் அம்மானைப் பாடல்களின்படி பெண்மகவு விளையாடும் அம்மானைக் காய்கள் ஏதேனும் ஒரு சமயக் கருத்தினையோ, தத்துவத்தையோ, தொன்மத்தையோ, புலவரின் கற்பனையையோ தமிழின் அழகும் சேர விளக்கும் நயத்தைக் கண்டோம். அன்னை தெய்வம் அடியாருக்கு அருள்செய்த திறத்தையும் சில அம்மானைப் பாடல்கள் விளக்குகின்றன.

அன்னையின் திருவுருவின் அழகிலாழ்ந்து, நாள்பொழுது அனைத்தையும் மறந்துவிட்ட அடியாராகிய அபிராமி பட்டர் அரசனிடம், “நாளை பௌர்ணமி” என்று கூறிவிடுகிறார். ஆனால் அதுவோ அமாவாசை தினம். தன் அடியாரின் சொல்லைக் காப்பாற்றித்தர வேண்டி அபிராமியம்மை தனது காதணிகளில் ஒன்றினை எடுத்து ஆகாயத்தில் வீசி அதனை நிலவுபோல் ஒளிரச் செய்கிறாள். இந்த அதியற்புதச் செயலை அம்மை அம்மானை ஆடியதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் நடேச கவுண்டர். ‘அபிராமிபட்டருக்கு அருளியது போன்று எம்மடியார் அனைவருக்கும் என்றும் எப்போதும் அருளுவோம்’ எனவும் அன்னை கூறுவதாகப் பாடியுள்ளமை உள்ளத்தை உருக்குவது.

                                ‘விண்டதண் டாமரையின் மதுவுண்ட வண்டென

                                      விளங்குநின் பாத மலரின்

                                   விம்முபர மானந்த மதுநுகர்ந் தமுதகவி

                                      விள்ளுமபி ராமபட்டன்

                               தண்டலை உறாமலம் மாசைநாள் விண்மீது

                                      தண்மதி உதிக்கு மாறு

                                   தழைசெவிக் குழைவீசு கருணைநாயகிநுன்

                                      சரணமடை புலவருய்யக்

                               கொண்டுமதி வீசுவேம் எம்மிட மதிக்கென்ன

                                      குறைவென்று தேற்றல்போல….’

                                      (சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- அம்மானைப் பருவம்)

திரு உத்தரகோச மங்கை பிள்ளைத் தமிழின் அம்மானைப் பாடலொன்று இன்னும் சில அரிய கருத்துகளை நயம்பட உரைக்கின்றது. நயமான கருத்துகள் சிந்தனைக்கு விருந்தாகின்றன.

‘அன்னையே! மும்மாரியாய்ப் பொழியும் மழைபோன்று தேவர் மலர்மாரி, பொன்மாரி, சவ்வாது புழுகு இவற்றாலான நன்மாரி மூன்றனையும் சொரிய, புலவர் பெருமக்கள் சொல்மாரியான (சல்லாபம்) பாடல்களைச் சொரிந்து உன்னை வணங்குகின்றனர். நீ அணிந்துள்ள சிவந்த மலர்மாலைகளும் பொன்மாலைகளும்  உடுத்தியுள்ள சரிகைப்பட்டும் புரண்டாடுகின்றது அம்மையே! செவ்வானும் சிவந்த பவளமும் இணையாகாது எனும்படி உன் திருச்செவ்வாய் மலர்ந்து பாடல் பிறக்கின்றது. அனைத்து மாதரும் துதிசெய்து வணங்கும் பொன்மான் எனும் திருமகளும், கலைகளை எடுத்தியம்பும் மானாகிய சரசுவதியும் வந்து உன்னுடன் அம்மானை ஆடுகின்றனர். எம்மானாகிய சிவபிரானும், அவன் கையிலேந்திய அந்தவொரு மானும் உடன் நின்றாடுகின்றனர். இந்த மாநிலம் போற்றும் குகவேளாகிய முருகன் ‘அம்மா’ என அழைக்கும் நீ உனது இருகையாலும் எடுத்து அம்மானையாடுக,’ என வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்.

                                  தம்மாலி யன்றபடி மும்மாரி யென்றுமலர்

                                      தன்மாரி பொன்மாரியும்

                                   சவ்வா துடன்புழுகு நன்மாரி யும்புலவர்

                                      சல்லாப மென்றுசொரிய

                               ………………………………………………..

                               எம்மாத ரும்துதிசெய் பொன்மானு டன்கலைசொல்

                                      இம்மானும் வந்தாடவே

                                   எம்மானும் நின்றொருகை அம்மானும் நின்றாட

                                      இம்மாநி லம்சொல்குகவேள்

                               அம்மாஎன அம்மாநீ சும்மா எடுத்திருகை

                                      அம்மானை ஆடியருளே

                                   ……………………………………………

இதில் மாரி, மான், அம்மா ஆகிய சொற்களைப் பலமுறை வெவ்வேறு பொருட்களில் சிறப்புறக் கையாண்டு பாடலை நயமுற அமைத்துள்ளார் புலவர். சிறந்த இலக்கிய விருந்து படைக்கும் பாடல்.

திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல் ஒன்றும் அன்னை தெய்வத்தின் எங்கும் நிறைந்த இயல்பை அழகுற விளக்குகிறது.

‘அன்னை பராசக்தியாகிய சிவயோக நாயகியே, ஆயிரம் ஊர், நாமம், வடிவுகள், ஆயிர விதமான ஆடல் புரிபவர், ஆயிரம் தோள்கள், ஈராயிரம் காதுகள், ஓராயிர முகங்களும் நாவுகளும் கொண்டவர், ஆயிரம் நீள்முடி, ஆயிரம் தாள், மாலயன் ஆயிர நாட்களாகத் தேடியும் அறியவொண்ணாதவர் ஆகிய விடையேறும் பெருமானாகிய சிவனாரின் இரு கண்களும் குளிர நீ அம்மானை ஆடுக! அவன் வடிவாகிய சிவசத்தியே! ஆளுடைய நாயகியே, அம்மானையாடுக!’ என வேண்டுகிறார்.

                              ஆயிரமூ ருடையார் ஆயிர நாமமுள்ளார் ஆயிர மேனியனார்

                                          ஆயிர மாடலினார்

                            ஆயிர மாகியதோள் ஆயிர மாயிருகா தாயிர மானனமோ(டு)

                                                                                                                                             (ஆனனம் – முகம்).

                                         ஆயிர நாவுடையார்

                           ஆயிர நீள்முடிதாள் ஆயிர மாலயனார் ஆயிர நாளளியர்

                                       ஆவிடையா ரிருகண்

                          ஆயிர முங்குளிர் ஆடுக வம்மானை

                                      ஆளுடைய நாயகியே ஆடுக வம்மானை.

இப்பாடலுக்குப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:

இப்பாடலில் ஆயிரம் என்ற எண்ணுப் பெயர் வருமிடங்களில் ‘எண்ணற்ற’ என்று பொருள் கொண்டு நோக்கினால் பொருள் எளிதாகும். புருஷ சூக்தத்தின் தொடக்கமாகிய “ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்” எனும் வேத மந்திரத்தில் உள்ள ஆயிரத்தை அம்மைக்கு ஏற்றி ஆயிரம் ஊருடையார், பேருடையார், மேனியுடையார் என்று பாடியுள்ளார்.  இறைவனுக்கு இருவகைச் சத்தி கூறப்படும். ஒன்று சிவசத்தி. இது சிவனை விட்டுப் பிரியாத சத்தி. தாதான்மிய சத்தி எனப்படுமிது சித்து, சைதன்யம் என அறியப்படும். மற்றொன்று வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளும் சத்தி. இது பரிக்கிரக சத்தி எனப்படும். இதுவே மாயை. பானைக்கு முதற்காரணம் அதன் அடிப்படை (material cause) மண். அதுபோல பிரபஞ்சத்துக்கு முதற்காரணம் மாயை. இறைவன் தன் சிவசத்தியினால் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் சிவசத்தியினால் கலந்து நின்று சித்துப் பொருள்களுக்கு அறிவையும் சடப் பொருள்களுக்கு இயக்கத்தையும் தருகிறான். இவையனைத்தும் அம்மையின் செயல்களே. அதனால் அவளுக்கு மேனி ஆயிரம் என்றார். உருவுடைப் பொருள்களெல்லாம் சத்தியே; அம்மையே.   கூத்தன் பராசத்தியிடமாக  சுத்த மாயையாகிய ஞானாகாசத்தில் ஆடுகிறான். அம்மை வடிவாக அவன் செய்யும் ஐந்தொழில்  கூத்து, அவளுடைய கூத்தாகவே கூறப்படும். அன்னை ஆட்டத்திற்கு இந்தப் பிரபஞ்சக் கூத்து, உயிர்க்கூத்து மிகப் பொருத்தமாக உள்ளது.

அனைத்துமே அழகான பாடல்கள். அன்னை தெய்வம் மயக்குறு மழலையாக இருப்பினும், அவளுடைய தெய்வத் தன்மையைப் பெருமையுற விளக்கும் இலக்கியச் சித்திரங்கள் இவை எனலாம்.

                                                _______________________

பார்வை நூல்கள்: 

  1. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  2. திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்- சி. சுப்பிரமணிய முதலியார்.
  3. திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்
  4. சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- கவியரசு கு. நடேச கவுண்டர்
  5. திரு உத்தரகோச மங்கை பிள்ளைத்தமிழ்
  6. சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ்- தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *