திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி

சுந்தரமூர்த்தியாரை, இறைவன்  திருவருட்டுறையமைந்த  திருவெண்ணை நல்லூரில் ஓர் அந்தணராக வந்து  ஆட்கொண்டருளியபின்    இறைவன் மேல்  அருச்சனை யாகிய சொற்றமிழ்ப் பதிகம்  பாடினார்!  பின்னர் அங்கிருந்து  புறப்பட்டுத் திருநாவலூர் கடந்து  திருத்துறையூரில்  தவநெறி தந்தருள வேண்டிப்   பாடினார். பின்னர் பெண்ணை  யாற்றைக்   கடந்து திருத்தில்லையில்  நடமாடும் கூத்தப் பிரானின்   திருப்பாதம்  பணிய   எண்ணினார்.  தில்லை  செல்லும்   வழியிலே திருமாணி குழியைக்  கடந்து  திருவதிகை என்ற  தலத்தை அடைந்தார்.

அங்கேதான்  திருநாவுக்கரசரைச்  சிவநெறியில்   செலுத்த  வேண்டித்  திலகவதியார் வழிபட்டார்;  பின்னர்   அப்பருக்குத்  திருநீறளித்தார்!  அந்தத்  திருத்தலத்தில் உறைந்த இறைவனைக்  ‘’கூற்றாயினவாறு’’  என்ற  பதிகத்தால்   திருநாவுக் கரசர்   வழிபட்டார், அந்த அருள்  வரலாற்றை எண்ணிய  சுந்தரர், திருநாவுக்கரசர் நடமாடிய திருத்தலத்துள் கால்வைக்க மாட்டேன் என்று ஊருக்குப்  புறம்பேயுள்ள ‘’சித்தவட மடம்’’ என்ற   வழிப்போக்கர் தங்கும் இடத்தில்  சற்றே சாய்ந்து   படுத்தார்.          

சுந்தரர் செல்லுமிடந்தோறும்  எழுந்தருளும்  சிவபிரான், அந்தச்   சித்தவட மடத்தில் சுந்தரர்  படுத்திருந்த  இடத்திற்கு ஓர்  அந்தணர்  உருவுடன் வந்தருளி,  அவர் தலைமேல்  தம் பாதத்தை  வைத்தபடிப்  படுத்தார்! தம் தலைமேல்  கால் படும்படி, அவர் படுத்திருப்பதைக்  கண்ட சுந்தரர், ‘’அருமறை உணர்ந்த அந்தணரே, இவ்வாறு  என் தலைமேல்  கால் படும்படிப்  படுக்கலாமா?’’ என்று  கேட்டார். சுந்தரருக்குத்  தாமும் உயர்ந்த  அந்தணர் குலத்தில் பிறந்தோம்  என்ற செருக்கு! அதனால்  ஓர் அந்தணர்  தம் தலைமேல்  பாதம் படப்  படுக்கலாமா?  என்ற  சினத்துடன், ‘’அரிய  வேதங்களைக்  கற்ற  அந்தணரே! இவ்வாறு  அடுத்தவர் தலைமேல் கால் வைத்துப் படுக்கலாமா?’’ என்று கேட்டார்.

வந்தவர் வேதம் பயின்ற  அந்தணர் என்பதைத்  தம் வாக்கால் வெளிப்படுத்திய  சுந்தரர், தம்மைத்  திருவெண்ணெய் நல்லூரில்  தடுத்தாட்கொள்ள  வந்த சிவபெருமான்  வேதம் பயின்ற அந்தணர்  கோலத்தில்தானே வந்தார், என்பதை மறந்து விட்டார்! வந்த அந்தணர்  சிவபெருமானே  என்பதையும் உணர வில்லை.  அதனால்  அந்தணரிடம்  சினங் கொண்டார்! இன்னும் அவர் மையல் மானுடமாய்  மயங்கினார்! ஆனால் அவரைத்  தொடர்ந்து வந்த சிவபெருமான் , தம் அடையாளத்தை  நுட்பமாக  உணர்த்தினார்! ‘’ எனக்கு  அகவை  மிகவும் அதிகம். ‘’யான்  என்று பிறந்தவன்  என்று  உணராத  இயல்பினன்!’’என்றார்! அவரைப்‘’பிறவாயாக்கைப்பெரியோன், முதுமுதல்வன்’’என்று  சங்கப்பாடல்கள் கூறும். காலப்  பெருவெளியில் என்றும்   நடனமாடுபவர் அவர்! அவர்  ஆடும்  பரவெளிக்குத் திசைகள்  இல்லை !  ஆதலால், ‘’என் மூப்பு என்னைத்   திசை அறியா  வகையில் இவ்வாறு உன்னை மிதிக்கச்செய்துவிட்டது!’’ என்று   அவரே  கூறியருளினார்!  இதனைக்   கேட்ட  பின்னரும் சுந்தரர் பெருமானை உணரவில்லை. ஆதலால் முதியவரை  விட்டு  விலகி சற்றுத்   தள்ளிப்   படுத்தார்! இதனைச்  சேக்கிழார்,  

‘’அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்

 சென்னியில் வைத்தனை ‘’

என்று பாடினார்!  உடனே சிவபிரான் ,

‘’திசை அறியா   வகை செய்தது  என்னுடைய   மூப்புக்  காண் ! ‘’    என்றார். அப்படியும்  உணராத சுந்தரர் ,

‘’அதற்கு இசைந்து

 தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.’’

என்று  பாடினார் . அங்கும்  அவர் தலைமேல்  தம் காலை நீட்டினார்   இறைவன்! ‘’இங்கே மீண்டும் மீண்டும்  என்னைத் தொடர்ந்து வந்து  பலமுறை மிதித்தது  ஏன்?’’ என்று  சுந்தரர் கேட்டார்! கங்கையைச்  சடையில் மறைத்துக் கொண்ட சிவபிரான் , ‘’என்னை அறிந்து கொள்ள வில்லையோ?’’ என்று கேட்டு , அங்கேயே  மறைந்தார்! அதன் பிறகே  சுந்தரருக்கு  உணர்வு  வந்தது. எந்தக்  கூத்தன் திருவடியில்  வணங்கிப்  பணிய வேண்டும் என்று ஆசைப்பட்டுத்  தில்லை நோக்கி நடந்தேனோ, அந்தப் பெருமானே  எளியேன் தலை  மேல்  திருவடி பதித்தானே !’’ என்று புலம்பினார்! எண்ணங்களின் அலைபாய்ந்த  அவர் உள்ளம்,   செங்கயல் மீன்கள் பாயும் குளம்  போல  அலைபாய்ந்தது  என்பதைச் சேக்கிழார் ,  

‘’அங்குமவன்   திருமுடிமேல்  மீட்டும் அவர்   கால் நீட்ட

செங்கயல் பாய்   தடம்புடைசூழ்  திருநாவ    லூராளி

‘’இங்கென்னைப்   பலகாலும்  மிதித்தனைநீ   யார்?’’ என்ன

கங்கைசடைக்  கரந்தபிரான்   ‘’அறிந்திலையோ?’’ எனக்கரந்தான் ‘’

எனப் பாடினார்! இப்பாடலில்  சுந்தரர் மனக்கலக்கமும், இறைவன்  அருளிய மொழியும், அடியார்  ஒழுக்கமும், ஆண்டவன்  விளையாடலும் எனப் பல்வகைச்  சொல்லாட்சித்  திறத்துடன்  விளங்குவதைக்  காணலாம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *