அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும்  காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை,  வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 210

  1. இச்சருகின் தோற்றம்…,

    ஓசோன் வழி ஊடுருவும் கதிர்களால்
    உருகுலையும் உலகை உவமித்தாலும்

    மூளையின் ஏதோ ஒரு மூலையில்

    அப்பா அணிந்தே நைந்த முண்டா பனியனும்
    அலைந்தே தேய்ந்த வெள்ளை நீல காலணிகளுமே

    மின்னி மறைகிறது…

    -காந்திமதி கண்ணன்

  2. இலைச் சருகு…
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    இலைகள் காய்ந்தால் சருகாகும்.. இவை
    மண்ணில் புதைந்தால் எருவாகும்..
    கலைக்கண் கொண்டு பார்த்தாலே..
    அதுவும் தனிவித அழகாகும்..!!

    செல்வச் செழிப்பே உயர்வென்று.. எண்ணும்
    மனிதா சருகைப் பார்.. தன்
    நிலையில் தாழ்ந்து வீழ்ந்திடினும்.. இத்
    தரணி செழித்திட உரமாகும்..!!

    காற்றில் சருகுகள் பறந்ததெல்லாம்.. இன்று
    பகற் கனவாக ஆயிற்று..
    வேற்று கிரகமோ இதுவென்று.. தோன்றும்
    நிலைக்கு பூமி மாறிற்று..!!

    வாழும் உயிர்கள் அனைத்திற்கும்.. தீங்கின்றி
    நம் வாழ்வைக் கடப்பதுதான்..
    தரணிக்கு நாம்செயும் தொண்டென்று..
    உணர்ந்தால் வாழ்வு வளமாகும்..!!

  3. வாழ்வு முடிந்தால்…

    ஆயிரத்தில் ஒன்றாக இருந்தால் கூட
    அழகேதான் மரத்திலுள்ள பச்சை இலைகள்,
    ஆயுளது முடிந்தவைதான் பழுத்து வீழ்ந்தே
    அனல்வெயிலில் காய்ந்தேதான் சருகாய் மாறும்,
    ஓயுதலிலாக் காற்றடித்து மண்ணை விட்டு
    ஒன்றதிலே பறந்துசென்று கோபுர மடையினும்
    மாயமதாய் மதிப்பேதும் வருவ தில்லை
    மாண்டுவிட்ட சருகேதான் வாழ்க்கை இதுவே…!

    செண்பக ஜெகதீசன்…

  4. நினைவு சின்னம்

    பாவை உன்னை கண்டு
    நெஞ்சில் காதல் முளைத்ததே
    நினைவாய் நீ அணு தினம்
    நெஞ்சில் நீர்வார்க காதல் வளர்ந்ததே

    இல்லை என சொல்லி எனை ஏற்க மறுக்க
    இலையுதிர் காலம்தனில் உதிரும்
    இலை போல் என் இதயம் இடறியதே

    அணு அணுவாய் உருகி தினம்
    காதல் நோய் வந்து சேர்ந்ததே
    உதிரம் உறைந்து அணுக்கள் அழிந்ததே
    உள்ளம் உடைந்து சல்லடையாய் மாறியதே

    உதறிந்த இலையும் சருகாய் மாறி
    உறங்கும் இடம் தேடி வந்து விழுந்ததே
    இடி விழுந்த இதயம் உடைந்து நான் உறங்கும்
    கல்லறையில் வந்து விழுந்ததே
    நினைவு சின்னமாய்

Leave a Reply to காந்திமதி கண்ணன்

Your email address will not be published. Required fields are marked *