(Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்

4

மு. இராமகிருஷ்ணன்
உதவிப் பேராசிரியர்
பழங்குடியினர் வழக்காற்றியல் துறை
ஜார்க்கண்ட் நடுவண் பல்கலைக்கழகம்
பிராம்பே, இராஞ்சி – 835205.

இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்

முன்னுரை

தொல்தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்வில் ஈகை என்னும் கருத்தாக்கம் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றிருந்ததை இலக்கியச் சான்றுகள்வழி அறிய முடிகின்றது. தொல்காப்பியம் முதல் ஔவையாரின் தனித் திரட்டுவரை ஈகை குறித்த வரையறைகளை முன்வைப்பதில் தொல் தமிழ்ச்சமூகம் முற்போக்குடன் விளங்கியுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஈகை தொடர்பான கருத்தாக்கத்தை வரையறை செய்வதிலும் அதற்கான சான்றுகளைக் கட்டமைப்பதிலும் தொல் தமிழர்களுக்குப் பெரும் பங்காற்றியவை அன்று நிலவிவந்த சமூகப் பொருளாதாரக் காரணிகளே என்ற போதிலும் அன்றே வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்திருந்த தமிழ் மொழியின் பங்களிப்பை மறுக்க முடியாது.

ஈகை தொடர்பான இலக்கியச் சான்றுகளை நோக்கும் பொழுது தமிழ் மொழியின் அன்றைய நிலையை அறிய முடிகிறது. மனித இனத்தின் இருத்தலுக்கே ஆணிவேராக விளங்கும் இக்கருத்தாக்கம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒன்றாக இன்று விளங்கி வருகின்ற போதிலும் இக்கருத்தாக்கம் குறித்த தெளிவான பார்வையும் புரிதலும் தொல்தமிழர்களிடையே இருந்துள்ளதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனிதர்களின் சமூக வாழ்விற்கு அடித்தளமாக விளங்கி வரும் ‘மனிதம்’ என்னும் உணர்விற்கு அவர்களின் பிறர் நலம் பேணும் போக்கு மட்டுமே காரணம் என்றால் அது ஈகை என்னும் பண்பினால் மட்டுமே சாத்தியமாகிறது என்பதைத் தொல்தமிழர்கள் உலகிற்குக் காட்டியுள்ளனர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

தொல்காப்பியத்தில் ஈகை

‘ஈ,’ ’தா,’ ’கொடு’ ஆகிய சொற்களின் பயன்படுத்தப்படும் முறை குறித்த வரையறையைத் தொல்காப்பியம் பின்வருமாறு வழங்குகிறது. ‘ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்/ இரவின் கிளவி ஆகு இடன் உடைய/ அவற்றுள்/ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே/ தா என் கிளவி ஒப்போன் கூற்றே/ கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே/ கொடு என் கிளவி படர்க்கை ஆயினும்/ தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின்/ தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்’ (தொல்.எச்சவியல் 9:48-56). இம்மூன்று சொற்களிடையான வேறுபாடு சமூகப் பொருளாதாரப் படிநிலையைக் காட்டுவதாக இருப்பது போன்றே, ‘என்மனார் புலவர்’ என்பது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இது மரபாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. அதாவது, ’ஈ’ என்பதைத் தன் நிலையிலிருந்து திரிந்து இழிநிலை அடைந்தபின் ஒருவன் தனக்குத் தேவையானதைக் கேட்கும் தகுதியை இழந்த நிலையிலிருப்பதை உணர்ந்தும் உணர்த்தியும் கேட்டுப் பெறுவது என்று புரிந்துகொள்ள முடியும். மாறாக, ‘தா’ என்று கேட்டுப்பெறும் ஒப்புநிலையைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. சமூகத்தில் சமநிலையுடையவர்கள் பயன்படுத்தும் சொல்லாகத் ‘தா’ விளங்கியுள்ளது. இவ்வாறே, ‘கொடு’ என்று அதிகாரத்தோடு கேட்கும் நிலையைச் சமூக நிலையில் ‘உயர்ந்தோர்’ பயன்படுத்தும் சொல்லாக விளங்கியிருப்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

திருக்குறள் முன்வைக்கும் ஈகை

உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் அறத்துப்பால் பிரிவின் கீழ் ஈகை என்னும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரையறையின் பண்புகள் பின்வருமாறு:

1.வறியவர்களுக்குக் கொடுப்பது மட்டுமே ஈகை; பிறருக்குக் கொடுப்பெதெல்லாம் பயன் எதிர்நோக்கிக் கொடுப்பதாகும் (குறள். 221);

2. பிறருக்குப் பொருள் கொடுத்தல் நல்ல நெறியாகும்; பெறுவது தீமையாகும். அதாவது மேலுலகமே கிடைக்காவிடினும் இரந்துவரும் பிறருக்கு ஈதலே நன்று ஆகும் (குறள்.222);

3.‘தான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் (குறள்.223);

4.பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தை காணும்வரை இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது (குறள்.224);

5.வலிமை உடைய ஒருவன் தன்னுடைய பசியைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம்; பிறர் பசியை உணவு கொடுத்து மாற்றுகிறவர்களின் தன்மைக்குப் பிற்பட்டதாகவே அவ்வலிமை கருதப்படுகிறது (குறள்.225);

6.  பொருள் பெற்ற ஒருவன் தான் சேர்த்த பொருளைப் பாதுகாக்க வேண்டினால், வறியவரின் கடும் பசியைத் தீர்க்க வேண்டும், அதுவே சேர்த்த பொருளைப் பாதுகாக்கும் இடமாகும் (குறள்.226);

7. தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவரைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை (குறள்.227);

8. பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது (குறள்.228);

9.ஒருவன் தான் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் கல்நெஞ்சம் (வன்கண்மை) உடையவர், பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாதவரே ஆவார் (குறள். 229);

10. வறியவர்க்கு ஒருபொருள் கொடுக்க முடியாத நிலை வரும்போது இறந்து போதலே இனியது (குறள்.230).

அறத்துப்பாலில் புகழ் என்னும் அதிகாரத்தின்கீழ் வரும் இரண்டு குறள்களும் ஈகையின் சிறப்புபைக் காட்டுகின்றன:

  1. வறியவர்க்குக் கொடுப்பதால் கிடைக்கும் புகழே பிறந்ததன் ஊதியமான புகழ் ஆகும் அதாவது வறியவர்க்கு ஈதலால் உண்டாகும் புகழன்றி உயிர்க்கு ஊதியமான புகழ் வேறொன்றும் இல்லை (குறள். 231).
  2. புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும் (குறள். 232).

இரவு (106) அதிகாரத்தில் இரத்தலின் தன்மை குறித்துத் திருக்குறள் முன்வைக்கும் வரையறையின் பண்புகள் பின்வருமாறு:

  1. இரந்துகேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும். அவர் இல்லையென்று ஒளிப்பாரானாலும் அது அவர்க்குப் பழியாகும் கேட்பவருக்குப் பழியன்று (குறள். 1051).
  2. இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத்தக்கதாகும் (குறள்.1052).
  3. ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும் (குறள்.1053).
  4. உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பது போன்ற சிறப்புடையதாகும் (குறள்.1054).
  5. ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்’. (குறள்.1055).
  6. உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவர்கள் கொடுக்கவேண்டியதில்லை அவர்களைச் சென்று இரப்பவர்கள் கேட்கவேண்டியதில்லை. மாறாக அவர்களைக் கண்டால் போதும், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும் (குறள்.1056).
  7. இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள் உவகை அடையும். வறியவர்கள் இல்லையானால் கொடைவள்ளல்களுக்கு வேலையேது? (குறள்.1057).
  8. இரப்பவர் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும் (குறள்.1058).
  9. பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்? கொடுப்பவரின் புகழ் என்று கேட்பதன்மூலம் இரப்பவர் மூலமாகத்தான் கொடுப்பவரின் புகழ் ஓங்குகிறது (குறள்.1059).
  10. இரப்பவனின் தன்மைகளுள் முதன்மையானது சினங்கொள்ளமை ஆகும். எனும் குறள் தெளிவுப்படுத்துகிறது. இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்கவேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும் (குறள்.1060).

திருக்குறள் வரும் இரவச்சம் (107) அதிகாரத்தில் இடம்பெறும் குறள்கள், இரத்தலின் கடுமையைப் பற்றியும் இரப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் வரும் வரையறையின் பண்புகளைப் பின்வருமாறு முன்வைக்கின்றன:

  1. உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்தில் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது ஆகும் (குறள்.1061).
  2. இரந்துண்டு வாழுமாறு வறியவர்கள் படைக்கப்பட்டிருந்தால் அவர்களின் கொடுமையை அந்தப் படைத்தவன் அனுபவித்துக் கெடுவானாக (குறள்.1062).
  3. வறுமைத் துன்பத்தை இரப்பதன் மூலமாகத் தீர்ப்போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை (குறள்.1063).
  4. வாழ வழி இல்லாதபோதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும் (குறள்.1064).
  5. தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை (குறள்.1065).
  6. பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை (குறள்.1066).
  7. இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன் (குறள்.1067).
  8. இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒருத்து வைக்கும் (ஒளித்துவைக்கும்) தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்துவிடும் (குறள்.1068).
  9. இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும் (குறள்.1069).
  10. இரப்பவர் ‘இல்லை’ என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ? (குறள்.1070).

நாலடியார் முன்வைக்கும் ஈகை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் ஈகை குறித்த தெளிவான வரையறையை முன்வைத்துள்ளது. அவ்வரையறையின் பண்புகளாக வைக்கப்படும் கருத்துகள் பின்வருமாறு:

  1. ஒருவரிடம் கொடுப்பதற்கென்று போதுமான அளவு பொருள் இல்லாதபோதும் தேவையான அளவு இருப்பதுபோல் உள்ளம் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணம் உள்ளவர்களுக்கு மறுமை உலகின் கதவுகள் திறந்தே இருக்கும் (நாலடி.91).
  2. இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் எதிரிலேயே உள்ளன; வலிமையை அழிக்கும் நோய்களும் உள்ளன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாமலும் இருக்கும் பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிருக்காமலும் சிறிதும் ஒளிக்காமலும் பகுத்து உண்ணுங்கள் (நாலடி. 92).
  3. பிறருக்குக் கொடுப்பதாலும் தான் அனுபவிப்பதாலும் பொருள் சேரும் காலத்தில் சேர்ந்தே ஆகும். ஆனால், நல்வினை இல்லாதபோது எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அப்பொருள் நில்லாது போய்விடும். இதை அறியாத மக்கள் வறுமையால் வாடி வருந்தி, உதவி நாடி வந்தவரின் துயரைப் போக்க மாட்டார்கள் (நாலடி.93).
  4. ஒரு சிறிய அரிசியின் அளவாவது – நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர் (நாலடி. 94).
  5. மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறரிடம் சென்று இரவாமை நன்று; இது கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது (நாலடி. 95).
  6. பலரும் தன்னை விரும்புமாறு வள்ளன்மையுடன் வாழ்பவர்களை ஊரின் நடுவினிலே இருக்கும் பெண் பனை மரத்திற்கு ஒப்பாவார்கள். ஆனால், தன்னிடம் செல்வம் பெருகியிருந்தும் பிறருக்குக் கொடாதவரை சுடுகாட்டில் வளர்ந்துள்ள ஆண் பனைமரத்திற்கு ஒப்பாவார்கள் (நாலடி.96).
  7. பருவ மழை தவறியபோதும், உலகில் உள்ள உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைப் பிறருக்குச் செய்யாவிட்டால் உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்? இருப்பவர்கள் இல்லாத காலத்தில் வறியவர்களுக்குக் கொடுப்பதால் சமூக வாழ்வு சீர்படும் (நாலடி.97).
  8. திருப்பித் தர இயலாத வறியவருக்கு ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். திருப்பிக் கொடுக்கும் தகுதியுடையோருக்கு ஒன்றை ஈதல் என்பது கடன் கொடுப்பதே ஆகும் (நாலடி.98).
  9. தருவது மிகச் சிறியது என்று கருதாது, இல்லை என்றும் கூறாது, எப்போதும் பயனுடைய அறத்தையே அனைவரிடத்தும் செய்யவேண்டும்; வாழ்நாள் முழுவதும் ஈதலில் ஈடுபட வேண்டும் (நாலடி.99).
  10. இவர் தகுதியுடையவருக்குக் கொடுத்தார் என்னும் சான்றோரின் புகழ்ச் சொல்லை மூவுலகங்களிலும் உள்ளவர்களால் கேட்க முடியும் (நாலடி.100).

மேற்கூறிய கருத்துகளை வரையறையாகக் கொடுத்தல்: இல்லாதபோதும் இருப்பதாக எண்ணி உள்ளம் மகிழ்வோடு கொடுத்தல், இறப்பு, நோய் போன்ற துன்பங்கள் நிறைந்த உலகில் பொருள் சேர்ப்பதில் வாழ்கையை வீணடிக்காமல் பகுத்துண்ணுதல், கொடுத்தாலும் பொருள் சேரும் காலத்தே சேர்ந்தே ஆகும், நாள்தோறும் ஓர் அரிசி அளவாவது உதவுங்கள், வறுமையினால் கொடுக்க முடியாது போனால் இரவாமல் இருங்கள், ஊரின் நடுவில் வளரும் பெண்பனைமரம் போன்று பயனுடையவராய் இருத்தல், வறட்சிக் காலங்களில் வறியவர்களுக்கு உதவுதல், திருப்பித் தர இயலாதவருக்கு உதவுதல் என்பதாகும்.

பழமொழி நானூறு முன்வைக்கும் ஈகை

ஈகையினை வரையறுக்கும் நோக்கில் அதன் பண்புகளாகப் பின்வரும் கருத்துகளைப் பழமொழி நானூறு முன்வைக்கிறது:

  1. சிறிய மீனை விட்டுப் பெரிய மீனை இழுத்தல் போல, இம்மையில் சிறிதுதவி மறுமையிற் பெரும்பேறடைதல் அறிவுடையோர் செயலாம் (அவ்வாறேனும் வறியோர்க்கு உதவுங்கள்.) (பழமொழி. 372).
  2. வறியோர்க்கீயாது மறைத்து வைப்பவர்கள் அரிதின் முயன்று தேடிப் புதைத்து வைத்த பொருள், பகைவரைக் கடிதலுடைய மன்னர்க்கே பயன்படுவதல்லாமல் அவன் வழிவந்தவர்க்கும் உதவுவதில்லை. வறுமையால் துன்பம் மிகுந்தவர்களுக்குப் பயன்படுமாறு ஒரு பொருளை ஈதல், சுரத்திடைப் பெய்த பெயல் அதாவது பாலை நிலத்தின்கண் சொரியப்பட்ட மழைநீரை ஒக்கும் (பழமொழி.373).
  3. மிகுந்த நீரைக் கொண்டதாகிய குளம், இறைத்தால் நீர் வற்றுதல் இல்லை. அவ்வாறே, பல ஆண்டுகளாக ஒன்றுசேர்த்துக் குற்றமுடையதாய்க் கிடந்த பொருளை, கொடை வல்லானொருவன் செய்யும் நெறியறிந்து அதனை வறியோர்க்கு விரைந்து வழங்குமிடத்துச் செல்வத்தை மிகுதியாகக் கொண்ட அது கெடுதலில்லை (பழமொழி.374).
  4. இரக்கும் பாத்திரத்தில் அன்னமிடுவதன்றிக் கற்களை இடுவார் இல்லையாதலால், வருகின்ற தன்மையைப் பார்த்து இவன் கருதி வந்த பொருள் இதுவென்று அறிந்து ஈவார் மாட்சிமை உடையவராவர் (பழமொழி.375).
  5. சிறந்த குதிரை பொருந்த, தான் வாடிய காலத்தும், போருக்குரியவற்றை வைத்துக் கட்டவே, வேறு குதிரை போன்று ஆண்மை கொண்டு நிற்கும். அவ்வாறே, வறியோரை அழைத்துக் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லையாயினும் தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து அச்செயலில் அடிபட்டு வந்தவர்களே பிறருடைய துன்பத்தை நீக்க வல்லார் (பழமொழி.374).
  6. தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்தவர்களை இரவலர் தாழ்வுபடுத்தி, ஏழையென்று சொல்லப் போகினும் எத்தகுதியை உடையவரேயாகினும் பிறர்க்குக் கொடுத்து வறுமையுற்றார் ஒருவருமிலர் (பழமொழி.377).
  7. தன்னையடைந்து ஒரு பொருளை வேண்டுவார்க்குக் கொடுப்பதால் தமது செல்வம் குறையும் என்று நினைத்துத் தமது பொருளை மறைப்பவர்கள், இறைக்குந்தோறும் நீர் ஊறுங்கிணற்றைக் கண்டு அறியார் (பழமொழி.378).
  8. இரப்போர் நிலைக்குத் தக்க அளவினதாகக் கொடுப்பதே கொடை என்று சொல்லுகின்றவர்கள் மூடர்களே ஆவார்கள். நீர்ப்பூ நீரின் அளவினதாயிருக்கும். கையிலுள்ளதை மறையாதவர்களாகிக் கைவண்மையுடைய அரசர்கள் செய்யும் கொடைச் செயலும் மற்றும் சிறந்த எல்லாச் சிறப்புகளும் அவருடைய கொடை முதலியன அவர் நிலைமையை நோக்கியதாய் இருக்கின்றன. (பழமொழி.379) (திருக்குறளின் 223வது குறள் இங்கு நினைவுகூரத்தக்கது).
  9. ஒரு பொருளை வேண்டுவார் முறையாக இத்தன்மையை உடையார் என்று புகழ்ந்து கூறுதல் வேண்டாவாம். கொடுக்கின்றவர்கள் தம் நிலையின் அளவையறிந்து செய்வார்கள் (பழமொழி. 380).
  10. மழையென்பதே ஒன்று இல்லாமல் வற்றியிருந்த காலத்திலும் பாரியினுடைய இளமை பொருந்திய மகள் வந்து இரந்த பாணனுக்கு நீரையுடைய உலையுள் பொன்னைப் பெய்து அதனைக் கொண்டுவந்து உணவாகக் கொடுத்தாள். ஆதலால் ஒரு பொருளும் இல்லாத வீடோ இல்லை. ஒவ்வொருவரும் தம்மாலியன்றதொரு பொருளைக் கொடுக்க வேண்டும் (பழமொழி. 381).

ஔவையார் முன்வைக்கும் ஈகை

ஒளவையாரின் தனிப் பாடல், மனிதர்களுக்குத் தேவையான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கின் தத்துவப் பொருளை விளக்குகின்றது. அறன் என்பதே ஈதல் ஆகும். தீவினைகளை நீக்கிவிட்டுத் தன் முயற்சிகளால் தேடிக்கொள்ளுதலே பொருள் ஆகும். இன்பம் என்பது அன்புடைய இருவர் தம் கருத்துகளிலே இணைந்தவராக இருத்தலே ஆகும். இதுவே இல்லற இன்பம் என்பதாகும். இம்மூன்றையும் கைவிட்டபின் அடையக்கூடியதே வீடுபேறடைதல் ஆகும்.

ஈகை என்னும் கருத்தாக்கத்தைத் தொல்தமிழர்கள் எவ்வாறு உள்வாங்கிக்கொண்டுள்ளனர் என்பது இவ்விலக்கிய வரையறைகள் மூலம் அறிய முடிகின்றது.  இவ்வரையறைகள் எவ்வாறு இலக்கியச் சான்றுகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் அன்றாடச் சொல்லாடல்களில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று பின்வரும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மூவேந்தர்கள் முதல் கடையேழு வள்ளல்கள் வரை பழந்தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பற்றிய குறிப்புகள் இலக்கியக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. அவ்வேந்தர்களின் வெற்றிகள், தோல்விகள், ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த புலவர்கள் தங்களின் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இச்சான்றுகளை நோக்கும்பொழுது வியப்பு ஏற்படுவதுபோன்றே ஐயமும் ஏற்படாமலில்லை. சில பாடல்கள் முன்வைக்கும் நிகழ்வுகள், பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டு இருப்பதை உணர முடிகிறது. மேலும் சில பாடல்களின் நிகழ்வுகள் வெறும் இலக்கியக் கட்டமைப்பிற்காகவே புனையப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் முன்வைப்பது வெறும் கற்பனைத் திறத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டக் காட்சிகளா அல்லது உண்மை நிகழ்வுகளின் பதிவுகளா என்ற கேள்வி எழுவதும் உண்மை.

ஒரு கருத்தாக்கத்தின் தோற்றத்திற்கு அச்சமூகத்தில் நிலவும் பல்வேறு காரணிகளே காரணம். ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய உறுப்பினர்களின் நடத்தைகள் மீதான கட்டுப்பாட்டை வரையறுப்பதன் மூலம் அச்சமூகத்தின் இருத்தலை உறுதிப்படுத்திக்கொள்கின்றது. அதாவது, அச்சமூகத்தின் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்டு அக்குழுவினரோடு சாதகமான ஊடாட்டத்தை உறுதிப்படுத்தாவிடில் சமூகத்திலிருந்து (குழுவிலிருந்து) தனி நபர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது அதற்கான தண்டனையைப் பெறுகிறார்கள். ஆக, ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய நடத்தை விதிகளையும் அறநெறிக் கருத்துகளையும் எதிர்வரும் தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டிய கடமை, அச்சமூகத்தின் உறுப்பினர்களுக்கு உண்டு. இங்கு ஆய்வு மையப் பொருளாக இருக்கும் ஈகை என்னும் கருத்தாக்கம், குழு உறுப்பினர்களின் மீது தாக்கம் ஏற்படுத்தும் ஒன்றாக இருப்பதால் இக்கட்டுரையின் மையப்பொருளாக அமைந்துள்ளது.

தொல்தமிழர்கள் முன்வைத்த ஈகை தொடர்பான வரையறை (கள்), பல இலக்கியச் சான்றுகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கருத்தாக்கம் ஒன்றினைக் கற்றலிலும் கற்பித்தலிலும் மனப்படத்தின் பங்கு மிக முக்கியமானது. திறமையான கற்பித்தல் என்பது கற்றலில் ஈடுபடுபவரின் மனத்தில் கற்பிக்கப்படும் கருத்துகளின் மனப்படத்தை மிகத் தெளிவாகக் கட்டமைப்பதே ஆகும். ஒரு கருத்தின் மனப்படம் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருப்பின் அவற்றை உள்ளவாறே (அல்லது மெருகூட்டி) கற்பவரின் மனத்தில் தோற்றுவிக்க வேண்டும். புதிய கருத்து (அல்லது கருத்தாக்கம்) எனில் அதைக் கற்பிக்கும் பணி சற்றுக் கடினமானதாகக் கற்போருக்கும் கற்றுக் கொடுப்பவருக்கும் இருப்பதற்கு இதுவே காரணமாகக் கருதப்படுகிறது.

ஒரு கருத்து (idea), அல்லது பொருள் (object) அல்லது நிகழ்வு (event) தொடர்பான கட்டமைத்தல் (construction), மீட்டெடுத்தல் (retrieval), கையாளுதல் (manipulation) ஆகிய அறிதல்சார் செயலாக்க முறைகளின் வெளிப்பாடாக மனப்படம் விளங்குகிறது. மேலும், அக்கருத்து, பொருள், நிகழ்வு ஆகியவற்றோடு தொடர்புடைய புலனுணர்வு எண்ணத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட தூண்டுதல்களும் இங்குப் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்தாக்கம் தொடர்பான உணர்வும் அதன் அறிவும் சேர்ந்தே அதன் மனப்படத்தைக் கட்டமைக்கிறது என்று கருதலாம். ஈகை குறித்த மனப்படத்தை ஏற்படுத்துவதில் இலக்கியச் சான்றுகள் பயன்படுகின்றன.

தொல்தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்ட போதிலும் குறுநில மன்னர்கள் பலர்மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து காலத்தால் நீங்காப் பெரும் புகழை அடைந்துள்ளனர். இவர்களின் சமூக வாழ்வு வாரி வழங்கும் கொடைத்தன்மை என்னும் பண்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளதைச் சங்கப் பாடல்கள் பல குறிப்பிடுகின்றன.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாரி வழங்கி வள்ளல்களாக (இரவலர் வரையா வள்ளியோர் – புறம். 376; ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே – மலைபடு. 400); இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ –சிறுபாண். 38; வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்திம் – புறம். 206) வலம் வந்திருக்கின்றனர். தொல்தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் கொடைச் சிறப்புடன் விளங்கியவர்களை மூன்று காலக்கட்டங்களில் வகைப்படுத்துவர்.

முதலேழு வள்ளல்கள் (சகரன், காரி, துந்துமாரி, நிருதி, எம்பியன், விராடன்) மற்றும் இடையேழு வள்ளல்கள் (அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்ரன்) கடையேழு வள்ளல்கள் (அதியமான் நெடுமானஞ்சி – அஞ்சி, ஆய் அண்டிரன் – ஆய், வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி – காரி, கண்டீரக் கோப்பெருநள்ளி – நள்ளி, பறம்பிற் கோமான் பாரி – பாரி, வையாவிக் கோப் பெரும் பேகன் – பேகன்).

இவர்களின் ஈகை என்று வரும்பொழுது கடையேழு வள்ளல்களின் பெயர்களே அன்றாட வாழ்வில் உச்சரிக்கப்படுகின்றன. இக்கடையேழு வள்ளல்களின் வாழ்க்கையே ஈகையின் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இவர்களின் கொடைத்தன்மையும் சமூக வாழ்வும் தற்காலத் தமிழ்ச் சமூகத்தின் அன்றாடச் சமூகப் பண்பாட்டு அரசியல் சொல்லாடல்களில் நீக்கமற இடம் பெற்றுள்ளதன் காரணமும் நோக்கமும் இங்கு விளக்கப்படுகின்றது.

ஈகையின் தோற்றம்

உளவியலைப் பொறுத்தவரை ஒரு பொருளின் அல்லது நிகழ்வின் அல்லது தன்மையின் பொதுவான பண்புகளிலிருந்து வருவிக்கப்பட்டுப் பொதுமைப்படுத்தப்பட்ட தொகுதியே கருத்தாக்கம் ஆகும்.

ஒரு குழுவின் உறுப்பினர்களின் பொதுவான அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட அல்லது வருவிக்கப்பட்ட சாராம்சமே கருத்தாகவோ, கருத்தாக்கமாகவோ மாறுகிறது. புதிதாக ஒரு பொருளை எதிர்கொள்ளும் உறுப்பினர்கள் அப்பொருளின் தன்மையை அதன் பண்புகளை உள்வாங்கிக் கொள்வதற்கான முயற்சி அவர்களின் அறிதல்சார் திறனைப் பொறுத்தே அமைகிறது.

மக்களின் உடல்ரீதியான அனுபவங்களின் அடிப்படையில்தான் கருத்தாக்கங்கள் உருவாகின்றன. அரூபமான கருத்தாக்கத்திற்கும் (abstract concept) உற்றுநோக்கவல்ல (observable) அனுபவத்திற்கும் இதுதான் அடிப்படையாகும். மேலும், அரூபமான கருத்தாக்கங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மொழியின் குறைபாடுகளின் தீர்வாக உருவகம், உவமை, ஆகுபெயர் போன்றவை இருப்பது போலவே கருத்தாக்கங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் அவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் சான்றுகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, ஒரு கருத்தாக்கத்தின் இன்றியமையாமையைப் பொறுத்து அதன்மீதான இலக்கியக் கட்டமைப்புகள் அவசியப்படுகின்றன. இவ்விலக்கியக் கட்டமைப்புகளே இலக்கியச் சான்றுகளாகச் செயல்பட்டு அக்கருத்தாக்கங்களை முன்னெடுத்துச் செல்லுகின்றன.

இவ்வாறு சமூகப் பங்காற்றி வரும் இவ்விலக்கியச் சான்றுகள் கால ஓட்டத்தில் அக்கருத்தாக்கங்களுக்கான உருவகங்களாகவும் மாறிவிடுவதோடு அச்சமூகத்தின் அடையாளமாகவும் செயல்படுகின்றன. இறுதியாக, இக்கருத்தாக்கங்கள் மக்களின் அன்றாடச் சொல்லாடல்களில் பங்கெடுக்கின்றன.

தமிழ் போன்ற வளர்ச்சியடைந்த மொழிகளில் கருத்தாக்கங்கள் மிகச் செறிவானவையாகவும் செழுமையானவையாகவும் இருப்பது போன்றே, அவை நீண்ட வரலாற்றையும் கொண்டிருக்கின்றன. இதனால் இக்கருத்தாக்கத்தின் தோற்றம் பற்றித் தெளிவான கருத்தை முன்வைக்க இயலாத போதிலும் அச்சமூகத்திற்கு ஏற்பட்ட தேவையைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு இனக்குழுச் சமூகமும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைச் சந்தித்திருக்கக் கூடும்; மேலும் அச்சிக்கலிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஏற்பட்ட முயற்சியின் பயனாகத் தோற்றுவிக்கப்பட்டதே இக்கருத்தாக்கங்கள். பின்னர்த் தேவையைக் கருத்தில் கொண்டு இக்கருத்தாக்கத்தின் பண்பாட்டு மாதிரிகளாக உருமாற்றமடைந்து அச்சமூகத்தை வழிநடத்தும் அறிதல்சார் விசையாக மாறுகின்றன.

இவ்வாறு பண்பாட்டு மாதிரிகளாக (cultural models) அல்லது பண்பாட்டுச் சட்டங்களாக (cultural schemata) மாற்றம் பெற்றபின் அவை எதிர் வரும் தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படவேண்டிய வழிமுறைகளை அச்சமூகம் ஆராய்கின்றது. அத்தகைய தேடலின் பயனாகக் கிடைத்ததுதான் வழக்காறுகளும் (வாய்மொழி இலக்கியங்கள், சமூக நம்பிக்கைகள், சடங்குகள், நிகழ்த்துக் கலைகள்) இலக்கியப் படைப்புகளும் ஆகும்.

ஒரு கருத்தாக்கத்தை விளக்குவதற்குத் திறமையான காட்சிப்படுத்துதல் அவசியமாகிறது. காட்சிப்படுத்துதல் மூலமாக அக்கருத்தாக்கத்தின் ஆழமான பொருளைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் முன்வைக்க முடிகிறது. திறமையான கட்டமைப்பிற்கு மொழியின் வளர்ச்சியடைந்த நிலையும் ஒரு காரணமாகும்.

மொழியின் சிறப்புக் கூறுகளாகிய உருவகம், உவமை, ஆகுபெயர் போன்றவற்றைப் பயன்படுத்திய பாங்கை நோக்கும்பொழுது தொல் தமிழர்களின் கற்பனை வளமும் சமூக அக்கறையும் ஈடு இணையற்றவையாக விளங்குகின்றன. மொழியின் சிறப்புப் பண்புகளை உற்று நோக்கும் பொழுது இப்படைப்புகள் உண்மை நிகழ்வுகளின் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது புனைவுகளாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். இருப்பினும் ஒன்றை யதார்த்தமாகக் கட்டமைக்க வேண்டுமெனில் வளர்ச்சியடைந்த மொழியில் மட்டுமே அது சாத்தியமாகிறது.

அவ்வாறே, ஈகை குறித்த இலக்கியச் சான்றுகளும் யதார்த்த நிலையில் விவரிக்கப் பட்டுள்ளதற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சியடைந்த நிலையே காரணம் என்றும் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

காட்சிப்படுத்துதல் என்றால் என்ன? நேரம், காலம், பண்புகள், உணர்வுகள், வாழ்க்கை போன்றவை அரூபமான கருத்தியல் அமைப்புகளாக இருக்கின்றன. கருத்து நிலையிலும் அவற்றிற்கான மனப்படம் (மனப்பிம்பம்) கிடையாது; அவை குறியீட்டு வெளிப்பாடாக உள்ளன. மாறாக மரம், விலங்குகள் போன்று பிற பொருட்களுக்கு மனப்படம் உள்ளது.

கருத்து நிலையில் இருக்கும் ஒன்றிற்கு வடிவம் கொடுப்பதன் மூலம் அதனை முழுமையடையச் செய்ய முடியும். கருத்துகள் மனப்படத்தைப் (mental image) பெற்றே மக்களின் மனத்தில் நிலை கொள்கின்றன. இவ்வாறு மனப்படமாக நிறுத்தப்பட்ட கருத்துகள் தகவல் பரிமாற்றத்தில் பங்கேற்கின்றன. தகவல் பரிமாற்றம் என்பது எளிமையாகத் தோன்றினாலும் அது ஒரு சிக்கலான செயல்பாடாகும். பேசுபவரின் மொழிக் கட்டமைப்பு கேட்பவரிடமும் இருக்க வேண்டிய கட்டாயத்தைத் தகவல் தொடர்பு உறுதிப்படுத்துகிறது. அவ்வாறே பேசுபவரிடம் இருக்கும் கருத்துகளின் மனப்படங்களும் கேட்பவரிடம் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ‘மலர் மலர் பறித்தாள்’ என்று கூறும்பொழுது கேட்பருக்கு அவ்வாக்கியம் பொருள் கொடுக்க வேண்டும்;

குறிப்பாக, கூறுபவரின் நோக்கப் பொருளை உணர்ந்து கேட்பவர் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறல்லாமல் கேட்பவருக்கு வெவ்வேறாகப் பொருள் கொடுத்தால் அத்தகவல் பரிமாற்றத்தினால் பயனேதும் இருப்பதில்லை. அப்படியெனில், பேசுபவரும் கேட்பவரும் ஒரே விதமான மொழியியல் கூறுகளை ஒருங்கே கொண்டிருக்க வேண்டும்.  ‘முதல்’ மலரை ‘இரண்டாவது’ மலரிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க அறிந்திருக்க வேண்டும், அதோடு ’பறித்தல்’ என்பது குறித்தும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

கற்றலிலும் கற்பித்தலிலும் மனப்படத்தின் பங்கு மிக முக்கியமானது. திறமையான கற்பித்தல் என்பது கற்றலில் ஈடுபடுபவரின் மனத்தில் கற்பிக்கப்படும் கருத்துகளின் மனப்படத்தை மிகத் தெளிவாகக் கட்டமைப்பதே ஆகும். ஒரு கருத்தின் மனப்படம் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருப்பின் அவற்றை உள்ளவாறே (அல்லது மெருகூட்டி) கற்பவரின் மனத்தில் தோற்றுவிக்க வேண்டும். கருத்து புதிது எனில் அதைக் கற்பிக்கும் பணி சற்றுக் கடினமானதாகக் கற்போருக்கும் கற்றுக் கொடுப்பவருக்கும் இருப்பதற்கு இதுவே காரணமாகக் கருதப்பட வேண்டும்.

ஒரு கருத்து, அல்லது பொருள் அல்லது நிகழ்வு (event) தொடர்பான கட்டமைத்தல் (construction), மீட்டெடுத்தல் (retrieval), கையாளுதல் (manipulation) ஆகிய அறிதல்சார் செயலாக்க முறையின் வெளிப்பாடாக மனப்படம் விளங்குகிறது. மேலும், அக்கருத்து அல்லது பொருள் அல்லது நிகழ்வு ஆகியவற்றோடு தொடர்புடைய புலனுணர்வு எண்ணத்தையும் கொண்டிருத்தல் ஆகும். உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட தூண்டுதல்களும் இங்குப் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கருத்தாக்கம் தொடர்பான உணர்வும் அதன் அறிவும் சேர்ந்தே அதன் மனப்படத்தைக் கட்டமைக்கிறது என்றும் கருதலாம்.

மனப்படம் என்பதைக் காட்சிப்படுத்துதல் அல்லது மனக்கண்ணால் காண்பது அல்லது காதினால் கேட்பது அல்லது உள்ளுக்குள் உணர்வது (உள்ளுணர்வது) அல்லது அரை-புலனுணர்வு (quasi-perceptual) என்று புரிந்துகொள்ள முடியும்.

புலனுணர்வு போன்ற அனுபவத்தைக் கொடுத்த போதிலும் பொருத்தமான வெளித்தூண்டுதல்கள் இன்றி ஏற்படுகிறது. உள்ளுணர்வைக் கொண்டிருப்பதால் நம்மிடம் இருக்கும் ஒன்றின் மனப்பிரதியின் உண்மை வடிவமாகச் செயல்படுகின்றது. இது நிழற்படம் போன்று இருப்பதாகப் பலர் கருதிய போதிலும் இக்கருத்தைப் பொதுவாக ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஒன்றைப் புரிந்து கொள்வதற்கும் மனத்தில் வைத்திருப்பதற்கும் உந்துதலுக்கும் மனப்படம் பயன்படுகின்றது. புதியனவற்றைச் (கருத்துகள், பொருட்கள், நிகழ்வுகள்) சந்திக்க நேரிடும் பொழுது அவை குறித்த புரிதலுக்கும் அவை போன்றே தோற்றமளிக்கும்/செயல்படும் பண்புகளைக் கொண்டவற்றின் (கருத்துகள், பொருட்கள், நிகழ்வுகள்) மனப்படமே அவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் அவை தொடர்பான மனப்படத்தைத் தோற்றுவிக்கவும் உதவுகின்றது. அத்தோடு, சிந்திக்கும் செயல்பாட்டிற்கு இன்றியமையாத பங்காற்றுகிறது.

ஒரு மொழிக்கான பொருளியல் அடிப்படையைத் தருவதும் இந்த மனப்படமேயாகும். அனுபவம் குறித்த கேள்விகள் மனப்படத்தோடு தொடர்புடையவை. மனப்படம் இல்லாத ஒரு பொருள் குறித்து நாம் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? மொழியின் சொற்களும் வாக்கியங்களும் பிரதியும் சொல்லாடல்களும் மனத்தில் இருக்கும் (மனப்படத்தின் அடிப்படையில் இருக்கும்) கருத்தின் குறியீட்டு வெளிப்பாடு என்று புரிந்துகொள்கிறோம்.

மனத்தில் ஒரு கருத்தாகவோ, மனப்படமாகவோ இல்லாத ஒரு பொருளினுடனான முதல் சந்திப்பு எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது? ஒரு பொருளைக் குறித்துக் கட்டமைக்கப்படும் மனப்படம் எவ்வகையான அனுபவத்தைக் கொடுக்கும்? அரூபமான ஒன்றும் யதார்த்தத்தில் இல்லாத ஒன்றும் சமமாகுமா? மனத்தில் இருக்கும் மனப்படம் வெளியுலகின் பொருளைக் குறிக்கவில்லை. இருப்பினும், மனப்படம் குறிப்பிடும் பண்புகள் வெளியில் இருக்கும் பொருளின் பொதுப்பண்பைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘மரம்’ என்ற சொல் ‘மரம்’ என்ற மனப்படத்தைக் குறிக்கும்பொழுது அது வெளியுலகில் இருக்கும் மரம் ஒன்றையும் குறிப்பதில்லை. ஆனால், ‘மரம்’ குறிப்பிடும் பண்புகள் வெளியில் இருக்கும் மரத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

மனத்தில் இருக்கும் ‘மரம்’ ஒரு முன்மாதிரி (prototype) ஆகும். ஒரு முன்மாதிரி முன்வைக்கும் பண்புகள் மரம் என்ற பொதுத் தொகுதிக்குப் பொருந்துகிறது, ஆனால் வெளியில் இருக்கும் ஒரு மரத்தின் பண்புகள் முன்மாதிரியோடு விலகிச் செல்லவும் வாய்ப்புள்ளது.

மனப்படம் என்பது அனுபவமல்ல என்று கொண்டால், அது இல்லாமல் அனுபவம் ஏற்படுவதில்லை என்பது புலப்படும். அனுபவம் என்பது ஒருவரின் அகநிலை சார்ந்தது; அது அவரின் உள்ளார்ந்த புரிதல். அறிதல்சார் அறிவியல் தோற்றத்தினால் விளைந்த மாற்றங்களில் ஒன்று மனப்படம் குறித்த சிந்தனையின் மீட்டெடுப்பு. மனிதர்களின் மூளை ஒரே விதமாகக் கட்டமைத்திருந்த போதிலும் அதன் செயல்படும் தன்மை வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, நினைவிற்குக் கொண்டு வருதல் என்ற நிகழ்வு அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. ஒருவருக்குப் பிடித்த நிறம், மற்றவருக்குப் பிடிப்பதில்லை. ஒருவருக்குப் பிடித்த பாடல் மற்றொருவருக்குப் பிடிக்காமல் போகிறது. ஒருவர் நினைவுகூர்வதைப் போன்று மற்றவர் நினைவுகூர்வதில்லை. ஒருவர் நல்ல கதைச்சொல்லியாக அடையாளம் காணப்படுகிறார். சிலர் எண்களை நினைவு வைத்திருக்கின்றனர். சிலர் நிகழ்ந்த ஆண்டுகளை நினைவில் வைத்திருப்பதுண்டு. சிலரின் கற்பனைத் திறன் வியப்பளிப்பதாக இருக்கின்றது. இருப்பினும் கருத்தாக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கு மக்களுக்குச் சான்றுகளும் பண்புக் கூறுகளும் தேவைப்படுகின்றன. சில வேளைகளில் மாதிரியாக (model) / சட்டமாக (framework) இச்சான்றுகள் விளங்குகின்றன.

ஒரு கருத்தாக்கம் மனப்படமாக இருந்து மாதிரியாகச் செயல்படும் பொழுது அச்சமூக மக்களின் அறிதல்சார் செயல்பாடுகளை அது கட்டமைக்கிறது. இதுபோன்ற கருத்தாக்கங்களைச் சமூகத்தின் எதிர்வரும் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கத் தேவைப்படும் கருவியாக/ ஊடகமாக இலக்கியச் சான்றுகள் விளங்குகின்றன என்பதே இங்கு முன்வைக்கப்படும் கருத்து ஆகும்.

ஈகை என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு இளம் தலைமுறையினருக்கும் பண்பாட்டிற்கு அந்நிய மானவர்களுக்கும் கற்றுத் தருவது? இக்கருத்தாக்கத்தின் நடைமுறைச் சாத்தியம் குறித்து எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் கூறுவது? இக்கருத்தாக்கத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை எவ்வாறு எடுத்துக் கூறுவது? இக்கருத்தாக்கங்கள் ஏன் சமூக உறுப்பினர்களுக்குக் கற்றுத் தரப்படவேண்டும்? அவ்வாறு கற்றுத் தரப்படும்பொழுது அதன் பொருள் மாறுபடாமல் அவ்வாறே கற்றுத் தரப்பட வேண்டியதன் அவசியம் என்ன? அக்கருத்தாக்கங்கள் உள்ளவாறே சென்றடையவில்லை எனில் கருத்தாக்கங்களுக்கு ஏற்படும் மாற்றங்களும் சமூகத்திற்கு ஏற்படும் இழப்புகளும் உள்ளனவா? இங்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் ஒன்றுதான். ஒரு சமூகத்தின் தொடர்ச்சி என்பது அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியிலும் மரபுத் தொடர்ச்சியிலும் கருத்தாக்கங்களின் தொடர்ச்சியிலும் இருக்கிறது.

மொழியைப் போன்று சமூக மரபுகளும் தொடர்ந்து வருவதால் மட்டுமே அச்சமூகம் கால ஓட்டத்தில் வெற்றி பெறும். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மொழியையும் மரபையும் கொண்டுள்ளது. பல கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் உலகத்தின் பல நாகரிகங்களின் அறிவு மரபையும் சிந்தனை மரபையும் விட உயர்ந்ததாகக் காணப்படுகின்றன.

தொல்தமிழர்களின் அனுபவத்தின் பயனாகக் கட்டமைக்கப்பட்ட இக்கருத்தாக்கங்களும் கருத்துகளும் இன்றைய சமூகத்திற்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் எடுத்துரைப்பதால் சமூகத்தின் அறிவுத் தொடர்ச்சிக்கு வழிவகை செய்யும். இக்கருத்தாக்கங்களைக் கற்றுத் தருவதில் இருக்கும் சிக்கல்கள் சமூக மாற்றத்தை வெளிப்படுத்திய போதிலும் அவற்றிற்கான தீர்வும் தரப்பட்டுள்ளது. தொல்தமிழர் விட்டுச் சென்ற இலக்கிய வளத்தின் மூலம் இக்குறைபாடுகள் அனைத்தையும் களைய முடியும் என்கின்ற நம்பிக்கை, தமிழ்ச் சமூகத்திற்கு என்றும் உண்டு.

1. பேகன்

பொதினி மலையிலிருந்த வையாவி என்னும் ஊரில் குறுநில மன்னனாக இருந்தவன் பேகன். வளமிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் ஏராளம். மழைக்காலத்தில் ஒருநாள் குளிரில் நடுங்கிய மயிலிற்குத் தனது போர்வையைப் போர்த்தினான் பேகன். இந்நிகழ்ச்சியைச் சிறுபாணாற்றுப்படை பாடல் அடிகள் (84-87) மூலம் அறிய முடியும். இரு நிகழ்வுகள்: மழையின் குளிரில் வாடி நிற்கும் மயில், வாரி வழங்கும் இயல்புடைய பேகன் அம்மயிலுக்குத் தன்போர்வையைக் கொடுத்தல். இவற்றில் எதையும் கேட்க முடியாத நிலையிலிருக்கும் மயிலும், எதையும் கொடுக்கும் உள்ளம் கொண்ட பேகனும் இங்கு இரப்பாருக்கும் கொடையாளிக்குமான குறியீடாகக் காட்சியளிக்கின்றனர்.

பேகன் கொடுத்த போர்வையை மயிலினால் திருப்பித் தர இயலாத பொருளாக இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித மொழியற்ற பறவையின் துயர்துடைத்த பேகனின் செயல் யதார்த்தத்தில் நகைப்புக்குரியதாகத் தோன்றினாலும், ஆழமான பொருளுடையது. அப்பறவையின் அகவல் பேகனுக்கு அழுகுரலாகத் தோன்றியது.

பார்த்தும் கேட்டும் பிறரின் துன்பத்தைப் போக்கும் தன்மையின் குறியீடாகவே பேகன் காட்சியளிக்கின்றான். பேகனுக்கும் மயிலுக்குமான இந்த ஊடாட்டம் தவறான புரிதலின் வெளிப்பாடல்ல. போர்வை என்பது விலை மதிப்புமிக்க சிறிய பொருள். அதே வேளையில் மயில் என்பதும் காட்டுப் பறவை. காலமும் இடமும்தான் இங்குப் பேகனின் செயலுக்குப் பெரிய அங்கீகாரம் கொடுக்கிறது.

ஊர் / காடு, மனிதன் / பறவை என்கின்ற முரண் வெளிகளுக்கிடையான ஊடாட்டம், ஈகை என்னும் பண்பினால் பொருள் தருவதாகிறது. வறியோருக்குக் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் செயலே ஈகை என்றால் மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனின் கொடை, இங்கு ஈகையின் குறியீடாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ’அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்’ என்ற புறநானூற்றுப் பாடல் (142) பேகனின் கொடைத் தன்மை இது தேவையான இடம், இது தேவையற்ற இடம் என்று பாகுபாடு பாராமல் பெய்யும் மழையினது இயல்பைக் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது ஆராயாமல் கொடுப்பதால் கொடைமடம் கொண்டவன் என்றும் ஆனால் போர்க்களத்தில் (படைமடம் இன்றி) அற நெறியினின்று விலகாமல் நிற்கக்கூடியவன் என்றும் இப்பாடல் புகழாரம் சூட்டுகின்றது.] கொடைமடம் என்பது யார் எவர் என்று ஆராயாமல் கொடைத்தன்மை கொண்டிருத்தல் பேகனின் சிறப்பு ஆகும் அதனால்தான் ஈகை என்னும் கருத்தாக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.

பழமொழி நானூற்றில் (சான்றோர் இயல்பு 74) அறிமடம் எவ்வாறு சான்றோர்களுக்குச் சிறந்ததோ (“அறிமடமும் சான்றோர்க் கணி”) அவ்வாறே கொடை மடமும் வள்ளல்களுக்குப் [பாரியும் பேகனும்] புகழ் தருவதாகிறது என்கிறார் முன்றுறை அரையனார்.

2. பாரி

பறம்பு மலையையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் ஆண்டவன் பாரி. இரப்பாருக்கு இல்லை என்று கூறாது வாரி வழங்கி மூவேந்தர்களை விடத் தனிப் புகழுடன் விளங்கியவன். மழையைப் போலக் கைம்மாறு கருதாது கொடை வழங்குபவன் என்று வேள்பாரியின் புகழைக் கபிலர் (சிறுபாண். 87 – 91) கூறுகிறார்.

சுரும்புகள் (வண்டுகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பு உடைய சுரபுன்னைகள் நிறைந்த வழிப்பாதையில் சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பிற்காகத் தான் ஏறி வந்த தேரைக் கொடுத்து அதில் முல்லைக் கொடியைப் படரவிட்ட பாரியின் செயல் கொடைமடத்திற்கு மற்றுமொரு எடுத்துகாட்டாகப் பார்க்கப்பட்டுள்ளது. மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனுக்குக் கூறிய அதே குறியீட்டுப் பண்பைக் கொண்டிருப்பதால் முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியின் செயலைக் கொடையாகக் கொள்ளவேண்டும்.

செந்நாப்புலவர் எல்லோரும், ‘பாரி பாரி’ என்று அவனையே புகழ்கின்றார்களே? வழங்குவது பாரி ஒருவன் அல்லனே? உலகம் காப்பதற்கு இங்கு மாரியும் உள்ளதன்றோ? கைம்மாறு கருதாமல் பெய்யும் மழைக்கு ஒப்பானவன் பாரி என்று கூறுவதைப் புறநானூற்றுப் பாடல் எண் 107 மூலம் அறியலாம்.

குறத்தி அடுப்பில் மாட்டி எரித்த கடைக்கொள்ளி சந்தன மரமாதலின், அதனின்று கமழும் நறும்புகை வேங்கைப் பூங்கொம்பினூடும் சென்று பரவி நிற்கும். அத்தகைய மலைச்சாரலினை உடைய பறம்பினைப் பாடுவார்க்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்த பேரருளாளன் பாரி. பரிசிலர் இரந்தால், ‘வாரேன்’ என்றுகூடச் சொல்லாது, அப்போதே அவர் உடைமையாகி விடுபவன் அவன். காலம் தாழ்த்தாமல் வழங்கும் கொடையே சிறந்த கொடை என்பது இங்கு விளங்கும்.

பாரியின் கொடைக்கு எடுத்துக்காட்டு கொடுப்பதோடு அவனின் கொடைத்தன்மையும் வரையறுக்கின்றது புறநானூற்றின் 108ஆம் பாடல். காலம் தாழ்த்தாமல் வழங்கும் சிறப்பும் இங்கு முன்வைக்கப்படுகிறது.

3. காரி

கடையேழு வள்ளல்களில் ஒருவனாகச் சிறந்து விளங்கி மலையமான் நாட்டை ஆட்சி செய்து வந்தவன் காரி; வீரத்தில் சிறந்தும் ஈகையிலும் புகழ்பெற்றும் இருந்தான். மூவேந்தர்களிடையேயான போர்களின் போது காரியின் துணையைத் தேடி வரும் மூவேந்தர்களுக்கு உதவி புரிந்ததனால் வெற்றிக்குக் காணிக்கையாகக் கிடைக்கும் பரிசுப் பொருட்களைப் (மணி, ஊர், நாடு, பண்டங்கள், யானைகள், குதிரைகள்) புலவர்களுக்கு வாரி வழங்கி வந்துள்ளான்.

தமிழ்ப் புலவர்களைக் கண்டால் அவன் பேரன்பு கொள்வான். அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெருவள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘‘தேர்வண் மலையன்” என்று புலவர்கள் பாடிப் புகழ்ந்தனர்.

மணியையும் தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்துப் பிறர் அஞ்சும்படியான நீண்ட வேலையும், சுழலும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளல் என்று சிறுபாணாற்றுப்படை (91-95) குறிப்பிடுகின்றது.

செறிந்த கொம்புகளில் நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னையும், குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த, காரி என்னும் பெயர் பெற்ற குதிரையை உடைய காரி. ஆடல் பாடல்களில் திறம்பெற்ற கலைஞர்களுக்கும் நாடுகளைக் கொடையாக வழங்கிய பெருமைக்குரியவன். புலவர்கள், வறியவர்கள் என்று பாராமல் கலைஞர்களுக்கும் வாரி வழங்கியுள்ளதைச் சிறுபாணாற்றுப்படை (107-110) பதிவு செய்துள்ளது.

வள்ளன்மையிற் சிறந்த எம் தலைவனே! நின் ஒருவனையே நினைத்து நாற்புறமும் இருந்து பரிசிலர் பலரும் வருவர். அவர் தகுதியை அளவிட்டு அறிதல் இயலாது. வழங்குவதோ நினக்கு எளிது. அவர் தகுதியை நன்கு அறிந்தாயானால், இனியேனும் புலவரிடத்துப் பொதுநோக்கம் கொள்வதைக் கைவிட்டு விடுவாயாக. அவரவர் தகுதிக்குத் தக்கவாறு அதனை அறிந்து அதற்கேற்பவே வழங்குவாயாக! இப்பாடலில் காரியின் ஈகைப் பண்பைத் தகுதி நோக்காது பெய்யக்கூடிய மழையோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது. தகுதி அறிந்து கொடையளித்தால் அது கொடைமடம் ஆகாது என்று புறநானூறு (121) குறிப்பிடுகின்றது.

மதுவுண்டு மயங்கினோர் நாளோலக்கத்திலே மகிழ்வுடன் இருக்கும்போது, தேரையும் அறியாதே வழங்கிவிடுவர். அது நிகழ்வது மிகவும் எளிது. காரியோ, அவ்வாறு மதுமயக்கம் ஏதும் இன்றியே, உள்ளத்தில் விருப்பமுடன், வரும் இரவலர்களுக்குத் தேர்களாகவே வழங்குகின்றனனே! ஒன்றிரண்டல்ல அவையும்! முள்ளூர் மலையில் வீழும் மழைத்துளிகளினும் அவன் வழங்கிய தேர்கள் பலவாகுமே! என்று காரியின் கொடைத்தன்மையைப் புறநானூறு (123) புகழ்கிறது.

நாளும் நல்ல நாளன்று. புள் நிமித்தமும் தீதாகத் தோன்றும். அது மன்னனைச் சந்திக்கும் சமயமும் அன்று. இவ்வாறு சென்றும், தம் திறனற்ற சொற்களால் முள்ளூர் மலைக்குரிய காரியைக் கண்டு பாடியவருங்கூட வெறுங்கையோடு திரும்பார். அவன் வள்ளன்மையின் சிறப்பு அத்துணைப் பெரிதாகும். நாள், புள் நிமித்தம் பாராமல் திறனற்ற புலவர்களுக்கும் வாரி வழங்கியவன் என்று காரியின் கொடைச் சிறப்பை இங்குப் புறநானூறு (124) விவரிக்கிறது.

4. ஆய் அண்டிரன்

பொதிகை மலை அருகிலுள்ள ஊர்களை ஆட்சி செய்தவன் ஆய் என்னும் வள்ளல். பொதிகை மலையில் யானைகள் மிகுதியாக இருந்ததால் அவற்றைப் பிடித்துவந்து பழக்கச் செய்தான். ஆய் அண்டிரனின் யானைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைந்து காணப்பட்டதில்லை. தன்னை நாடிவரும் புலவர்களுக்குப் பொன்னும் மணியும் கொடுப்பதோடு யானையையும் பரிசாகக் கொடுத்துள்ளான். உருவத்தாலும் வலிமையாலும் மதிப்பிலும் பெரிய பரிசுகளைத் தருபவன் என்று பெயரெடுத்துள்ளான்.

முனிவர் தனக்குக் கிடைத்த மிகப் புனிதமான நீல ஆடையை ஆயிடம் கொடுத்து “இதை வைத்திருப்பவர்களுக்கு எல்லா வளங்களும் நிறைய உண்டாகும். பலருக்கு நலம் செய்யும் உன்னிடம் இருந்தால் சிறந்த பயனை நீ அடைவாய். உன்னால் பிறரும் அடைவார்கள் என்று எண்ணி உனக்கு வழங்குகிறேன்” என்று கூறினார். பணிவுடன் வாங்கிக்கொண்ட போதிலும் அவன் உள்ளம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தப் புனித ஆடையை அவனிடத்தில் வைத்துக் கொள்ளாமல் அவனுடைய குலதெய்வத்திற்கே காணிக்கையாக அளித்துக் கொடை வள்ளலாகிவிட்டான் என்று சிறுபாணாற்றுப் படை (95-99) குறிப்பிடுகிறது.

ஆய் வேளே! இனிய அடிசிலைப் பிறர்க்கு உதவாதார் சிலர்; தாமே உண்டு வயிற்றை நிறைப்பவர் அவர். புகழற்ற முரசு விளங்கும் அருளற்ற அரசர்கள் அவர்கள். ஆயின் நீயோ, நின் யானைகள் அனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய். கொடுக்கவியலா மங்கல அணிமட்டுமே நின் மனைவி அணிந்துள்ளாள். பிறவெல்லாம் பரிசிலர் பெற்றுச் சென்றுவிட்டனர். வள்ளன்மை சிறந்த ஆயே! நின்கோயில் மற்றையோர் நகரினும் மேம்படுவதாக! என்று புறநானூற்றுப் பாடல் (127) புகழ் பாடுகின்றது.

இரப்போர்க்கு வழங்கிய யானைகளோ மிகவும் பலவாகும். வானம் முழுவதும் மீனால் நிறையினும், அதனினும் எண்ணால் மிக்கனவாகும் அவை. அத்தகையோனின் புகழ் ஓங்குக! (புறம்.129:6-9).

நீ இரவலர்க்குக் கொடுத்த யானைத் தொகையை எண்ணினால், கொங்கரை மேற்கடற்கண்ணே நீ போரிட்டுத் துரத்திய காலத்து, நினக்குத் தோற்றோடிய கொங்கர் படையினர், தம் கையினின்றும் எறிந்து சென்ற வேலினும் அவை பலவாகுமே! (புறம். 130: 4-7).

‘இன்றைக்குச் செய்த ஒரு நற்செயல் பின்னொரு காலத்தே நமக்கு உதவியாக அமையும் என்று, பின் வருகின்ற ஊதியங்கருதி அறம் செய்பவன் ஆய் அல்லன். அவன் கைவண்மை, சான்றோர் சென்ற அறவழியிலே தானும் செல்லுதல் வேண்டும்’ என்ற நற்செய்கைக் கடமைப்பாடு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டதாகும். (புறம். 134)

செவ்விய நாவையுடைய புலவர்களே! பலாமிகுந்த இந்நாஞ்சில் மலைவேந்தன் அறியாமையே உடையான் போலும்! விறலியர் பறித்த இலை உணவின்மேல் தூவுவதற்குச் சில அரிசியே வேண்டினோம். அவனோ, எம் வறுமையை எண்ணாது, தன் மேம்பாட்டையே எண்ணியவனாக, மலைபோன்ற பெரிய யானையை எமக்கு அளித்துள்ளான். இவ்வாறு, தெளியாது கொடுக்கும் கொடையும் உலகில் உளதோ? பெரியோனான அவன் முறையறிந்து ஈதலைச் செய்யானோ! (புறம். 140)

5. அதியமான்

அதியமான் நெடுமான் அஞ்சி, தகடூரை ஆண்ட குறுநில மன்னன். மூவேந்தர்களை எதிர்த்து நின்ற இவனது வீரமும் வறியோர்களுக்கு வாரிக் கொடுத்த கொடையும் ஔவையார் முதலிய புலவர்கள் பாடியுள்ளனர். மழையைப் போன்று கொடைச் சிறப்புமிக்க கைகளைக் கொண்ட அதியமானின் அரண்மனை, இல்லையென்று வரும் வறியோர்க்கு அடையாத வாயிலை உடையது. தனக்குக் காட்டில் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்துத் தன் கொடையின் சிறப்பை வெளிக்காட்டினான். சேர மன்னன் நெடுமான் அஞ்சி மீது போர் தொடுத்தான். சோழனும் பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாகப் போரிட்டபோதும் இப்போரில் அதியமான் தோற்று இறந்தான் என்பதாக அறிய முடிகிறது.

வேட்டையாடச் சென்ற காட்டிலிருந்த மலைச்சாரலில் மருத்துவத் தன்மையுடைய நெல்லி மரத்திலிருந்த ஒரே ஒரு பழத்தைப் பறித்துத் தான் உண்ணாமல், உண்போர் நீண்ட நாள் உயிர் வாழ்வர் என்பதையும் அறிந்து, ஔவையாரிடமே கொடுத்துவிட்டான் (சிறுபாண். 101-103)

ஒருநாள் இருநாள் அல்ல; பல நாட்கள் மீள மீளச் சென்றாலும், பலரோடு செல்லினும் முதல் நாளினைப் போலவே விருப்பமுடன் உதவும் பண்பினன்; யானையும் தேரும் உடையவன்! யானைக் கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம், அதனை விட்டு ஒரு நாளும் தவறாததுபோல, அவன் தரும் பரிசில் நம் கையிலேயே உள்ளது; அது தப்பாதது நெஞ்சே! நீ வருந்தாதே வாழ்க, அவன் தாள்கள்! (புறம். 101)

6. வள்ளல் நள்ளி

வளம் செறிந்த கண்டீர நாட்டை ஆண்ட நள்ளி ‘உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும், உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் பயன் தராது’ என்ற கொள்கை உடையவன். தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி (சிறுபாண். 101-107).

நள்ளியினது கொடைச் சிறப்பிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, புறநானூற்றில் வரும் வன்பரணர் இயற்றிய பாடல் இயன்மொழித் துறையைக் கொண்டுள்ளது.

நள்ளியே, ‘வாழ்வாயாக, நள்’ எனும்மாலை வேளையிலே மருதப்பண் வாசித்தலும், காலையிலே செவ்வழிப்பண் இசைத்தலும், எம் பாணரும் மறந்தனர். அவரை மறக்கச் செய்தவன் நீயே! கொடுத்துக் காத்தலைக் கடனாகக் கொண்டு அவர்க்குப் பெருநிதி வழங்கிய நின் வண்மையாலேதான், அவர் பரிசிலுக்கு வேண்டிப் பாடும் தம் வழக்கத்தை அறவே மறந்து, இவ்வாறாயினர்! (புறம். 149).

7. வல்வில் ஓரி

ஓரி என்னும் புகழ்மிக்க குதிரை கொண்ட ஓரி, கொல்லி மலையை ஆட்சி செய்து வள்ளல் எனப் பெயரெடுத்த குறுநில மன்னன் ஆவான். காரியுடன் போரிட்டுப் பல முறை வென்றபோதிலும் இறுதியில் சேரனின் துணையோடு வந்த காரியினால் கொல்லப்பட்டான்.

புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி என்று ஓரியைச் சிறுபாணாற்றுப்படை (107-109) புகழ்கிறது.

விறலியே! அருவிகள் வழியும் சந்தனச் சாரலுக்கு உரியவனான வல்வில் ஓரிதான் இவன். அம்பு ஏவுந்தொழிலிலே மிக வல்லவன். எனினும், விலைப்பொருட்டாகக் கொல்லும் எளியனும் அல்லன், மிக்க செல்வன். சந்தனம் பூசிப் புலர்ந்த பரந்த மார்பினன். பல இசைக்கருவிகளையும் இசைத்து இருபத்தொரு பாடல் துறையையும் பாடி வாழ்த்தும்போது வேந்தே எனத் தொடங்கவும், தன்புகழ் தன்னெதிரே கேட்க நாணித், தொடர்ந்து “நின் போன்றார் ஒருவரும் இலரே என வாழ்த்து முன்னர், மான் தசையும் ஆநெய் போன்ற மணமுள்ள மதுவும் கலந்து ஊட்டிப், பொன்னும் மணித்திரளும் இடைவழியிலேயே எமக்கு வழங்கினான். உயர்ந்த மலைக்குத் தலைவன்; வரையாத ஈகையினை உடையவன்; வெற்றி வீரன்; அந்த ஒரி. அவன் வாழ்வானாக! (புறம். 152: 21-30)

மழையணி குன்றத்திற்குத் தலைவன், இரப்போர்க்கு யானைகளாகவே வழங்கி மகிழ்பவன்; பொற்பூணும் கடகமும் அணிந்த கொல்போர் மறவன்; அத்தகைய ஆதன் ஒரியின் மழைபோலும் வள்ளிய கொடையைக் காணச் சென்றது எம் கூத்தச் சுற்றம். அவர்க்குப் பொன்னரி மாலைகளும் பிற நல்லணிகளும் யானைகளும் அவன் வழங்கினான். பசி தீர்ந்து பேரூண் உண்டு களித்தனர் அவர்கள். அதனால், இயங்களை ஒலித்து இசைக்கவும், ஆடவும் பாடவும் மறந்தவராக, அவர் பெரிதும் மாறிவிட்டனர்! (புறம். 153: 1-10)

‘ஈயேன் என்னும் இழிபினும், கொள் எனக் கொடுக்கும் உயர்பினும், நினக்குத் தக்கது அறிந்து செய்க என்று கூறியதாகக் கொள்க என்பது இதன் பொருள் ஆகும். ஒன்றைத் தா என இரத்தல், இழிந்தது; அவ்வாறு இரந்தோர்க்கு “ஈயேன்” என்று மறுத்தலோ அதனினும் இழிவு உடையதாகும்.  ‘கொள்வாயாக’ என ஒன்றைத் தானே விரும்பிக் கொடுத்தல் உயர்ந்தது; அவ்வாறு கொடுப்பினும் கொள்ளேம்’ என்பது அதனினும் மிக உயர்ந்தது. தண்ணீர் வேட்கையினர் கடல் நீரை உண்ணார், ஆவும் மாவும் கலக்கிய சேற்றுநீர் எனினும், அத் தாழ்ந்த இடத்திற்குச் செல்லும் வழிகள் பலவாகும். இரவலர் பரிசில் பெறாதபோது, தாம் நாடி வந்தவரைப் பழித்துப் பேசாது, தாம் புறப்பட்ட நேரத்தையும் புள் நிமித்தத்தையுமே பழிப்பர். அதனால், நீ எனக்கு இல்லை என்றனையேனும், நின்னை யான் வெறுப்பவன் அல்லேன். மழைபோல வழங்கும் ஓரியே, நீ நீடு வாழ்வாயாக! – வல்வில் ஓரியின் கொடைத்தன்மைக்குச் சான்றாக இப்புறநானூற்றுப் பாடல் (புறம். 204) விவரிக்கிறது.

 முடிவுரை

கருத்துருவின் பண்பை/ தன்மையை உள்வாங்கிக் கொண்டு மனப்படம் கட்டமைக்கப்பட்ட போதிலும், அன்றாடச் சமூக ஊடாட்டங்களில் இக்கருத்தாக்கங்கள் வெறும் மனப்படங்களின் அடிப்படையில் கட்டமைக்க முடியாது. எனவே, இக்கருத்தாக்கங்களை விளக்குவதற்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எடுத்துக்காட்டுகள் அவசியமாகின்றன. இவ்வாறு கருத்தாக்கங்களுக்கு மாதிரியாக முன்வைக்கப்படும் எடுத்துக்காட்டுகள் பொதுமைத் தன்மை வாய்ந்தவையாகவும் முரண்பாடு அற்றவையாகவும் இருக்க வேண்டும் அல்லது கட்டமைக்கப்பட வேண்டும். மேலும், அவற்றின் பொருள் தரும் நிலை குறியீட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அக்கருத்தாக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை உள்கொண்டதாகவும் இருக்க வேண்டும். இங்குக் காட்சிப்படுத்துதல் என்பதைத் தரவுகளின் அடிப்படையில் பிரதிபலிக்கக்கூடிய பிம்பங்களை உருவாக்குவது என்பதாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஒரு கருத்தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் போது அக்கருத்தாக்கத்தின் அனைத்துக் கூறுகளையும் பிரதிபலிக்க வேண்டும். அக்கருத்தாக்கத்தின் முன்மாதிரி வடிவமாக (prototype model) அக்காட்சிப்படுத்துதல் இருத்தல் வேண்டும். பல இடங்களின் இதுபோன்ற காட்சிப்படுத்துதலுக்குக் கதை அல்லது கதையமைப்பு (narrative or narrative-structure) கை கொடுக்கின்றன. காட்சிப்படுத்துதல் என்பது கதைசொல்லல் போன்ற பல கூறுகளை ஒன்றிணைத்துச் செல்வதாகும்.

கருத்துகளுக்கும் கருத்தாக்கங்களுக்கும் அன்றாடம் நடக்கும் சமூக நிகழ்வுகளிலிருந்தோ வரலாற்றுச் சான்றுகளிலிருந்தோ புனைவுகளிலிருந்தோ எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டு அவற்றுக்குச் சமூக அங்கீகாரம் கொடுக்கும் போக்கைக் காட்சிப்படுத்துதலின் பயன் என்றும் கருதலாம். ஒரு குழுவின் இருத்தலுக்கு ஈகை என்னும் கருத்தாக்கம் மிக அவசியம் என்பதால் இக்கருத்தாக்கம் குறித்த கட்டமைப்புக்குத் தமிழ்ச் சமூகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்பும் காதலும் வீரமும் போரும் நிறைந்த தொல்தமிழர்களின் சமூக வாழ்வில் ஈகையின் இன்றியமையாமை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் முன்வைக்கின்றன.

ஈகை என்கிற கருத்தாக்கத்தின் தோற்றமும் அதன் தேவையும் குறித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச் சமூகம் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இந்த அரூபமான கருத்தாக்கத்தின் மனப்படத்தின் பிரதிபலிப்பாக நம்மிடையே இலக்கியக் கட்டமைப்புகள் இருக்கின்றன. இலக்கியத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தாக்க வரையறையும் இலக்கியப் படைப்புகள் மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு விளக்கங்களும் தமிழ்ச் சமூகம் எவ்வாறு ஈகை என்ற கருத்தாக்கத்தைக் கையாண்டுள்ளது என்பதற்குச் சான்றுகளாகும் (மணிமேகலையில் வரும் அட்சயப் பாத்திரம் இக்கருத்தாக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாக உள்ளது).

தொல்தமிழர்கள் விட்டுச் சென்றிருக்கின்ற சான்றுகள் ஏராளம் என்ற போதிலும், இக்கட்டுரையில் கடையேழு வள்ளல்களின் வாழ்க்கை அவர்களின் வாரி வழங்கும் கொடைத்தன்மை மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு அச்சான்றுகள் எவ்வாறு ஈகை என்னும் கருத்தாக்கத்தின் காட்சிப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றின் சமூகப் பங்களிப்புக் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

மூல நூல்கள்

  1. தனிப்பாடற்றிரட்டு (மூலம்) (சென்னை: பி.நா.சிதம்பர முதலியார் & பிரதர்ஸ், 1940.  – https://ta.wikisource.org/wiki/ஔவையார்_தனிப்பாடல்கள்)
  2. திருக்குறள் (பரிமேலழகர் உரை. சென்னை: பழனியப்பா பிரதர்ஸ், 2007)
  3. தொல்காப்பியம் (இளம்பூரணர் – மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம், சென்னை, 2010)
  4. தொல்காப்பியம் (ச.வே.சுப்பிரமணியம் தொல்காப்பியம் தெளிவுரை, 2000.)
  5. பத்துப்பாட்டு – சிறுபாணாற்றுப்படை (சா.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம் 2009)
  6. பத்துப்பாட்டு – சிறுபாணாற்றுப்படை (பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழகம் வெளியீடு 2009)
  7. பதினெண்கீழ்க்கணக்கு – நாலடியார் (மூலம் சைன முனிவர் –இளவழகனார் உரை. கழகம் வெளியீடு 2007)
  8. பழமொழி நானூறு (ம. இராசமாணிக்கம் பிள்ளை உரை. கழகம் வெளியீடு 2007)
  9. பழமொழி நானூறு (புலியூர்க்கேசிகன் உரை, சென்னை: சாரதா வெளியீடு, 2010)
  10. புறநானூறு (புலியூர்க்கேசிகன் உரை, ஸ்ரீசெண்பகம் பதிப்பகம், 2010)

இரண்டாம் தரவுகள்: (தமிழ்)

  1. தமிழ்வாணன், ம. 2018. “தொல்தமிழர் கொடையும் மடமும்.” வல்லமை. அக்டோபர் 3. (ISSN: 2348 – 5531. https://www.vallamai.com/?p=88133.)
  2. இராமகிருஷ்ணன், மு. 2016. “ஈகையினால் நிலைத்திருக்கும் இவ்வுலகம்: திருக்குறள் வழி அறியப்படும் ஈகை”, திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கோவை 2016. காரைக்குடி: அழகப்பா பல்கலைக் கழகம். 143-148.

இரண்டாம் தரவுகள்: (ஆங்கிலம்)

  1. Kendler, Tracy S. 1961. “Concept Formation” Annual Review of Psychology, 447-472.
  2. Mauss, Marcel, 2002 (1954). The Gift: The Form and Reason for Exchange in Archaic Societies. London and New York: Routledge.

================================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

தொல்தமிழர்களின் ‘ஈகை’: கருத்தாக்கமும் இலக்கியச் சான்றுகளின் பங்களிப்பும் என்னும் இக்கட்டுரை பண்டைத் தமிழரின் ஈகைச் சிறப்பினை விரிவாகப் பதிவு செய்கின்றது. எடுத்துக்கொண்ட பொருண்மையினை நுட்பமாக விளக்கிச் செல்கின்றார் கட்டுரையாளர். இக்கட்டுரை இரண்டு நிலையில் ஈகை குறித்த கருத்துகளை முன்வைக்கின்றது.

  1. ஈகை பற்றிய கட்டமைப்பு, தொல் தமிழர்களிடையே எவ்வாறு தொழிற்பட்டுள்ளது.
  2. பண்டைய இலக்கியங்கள் முன்னிறுத்தும் கடையேழு வள்ளல்களின் கொடைச் சிறப்புகள்வழி அறியப்படும் ஈகை பற்றிய வரையறைகள்.

இவ்விரு கருத்தாக்கங்களை இலக்கண, இலக்கியத் தரவுகளைக் கொண்டு கட்டுரையாளர் கட்டமைக்கின்றார். முதல் நிலையில் தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள், பழமொழி நானூறு, நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, ஔவையாரின் தனிப்பாடல் ஆகியவற்றில் இருந்து ஈகை குறித்த பதிவுகள் திரட்டப்பட்டுள்ளன.

அடுத்த நிலையில் தமிழ் இலக்கிய மரபில் சுட்டப்படும் முதல், இடை, கடையேழு வள்ளல்களின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று நிலைகளில் வள்ளல்கள் சுட்டப்படினும் கடையேழு வள்ளல்களே நிலைத்த புகழினைப் பெற்றுள்ளனர். இதனை அடையாளப்படுத்தும் வகையில் கிடைக்கும் இலக்கியச் சான்றுகள் கடையேழு வள்ளல்களின் ஈகைக் குணத்தை விரிவாகப் பதிவு செய்கின்றன. புறநானூறு, மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட இலக்கியங்களில் காணப்படும் பேகன், பாரி, காரி, ஆய் அண்டிரன், அதியமான், நள்ளி, ஓரி ஆகியோரைக் குறித்த நுட்பமான பதிவுகளைத் தொகுத்து ஆய்வு கண்ணோட்டத்தோடு கட்டுரையாளர் விளக்கியுள்ள திறன்கள், நெஞ்சாரப் பாராட்டத்தக்கன.

கடையேழு வள்ளல்கள் குறித்துத் தொல்இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சான்றுகள் அனைத்தையும் கட்டுரையாளர் முறையாகத் தொகுத்து, வகை தொகை செய்து விளக்கியிருப்பது ஓர் ஆய்வுக் கட்டுரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலை நாட்டாரின் கருத்துகள், பின்னமைப்பியல், உளவியல் கோட்பாடுகள் ஆகியவற்றை உரிய வகையில் கட்டுரையில் கையாண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

================================================================

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “(Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்

  1. மிக நுட்பமான பார்வை.மொழியறிவும் விளக்கமுறையும் அருமை.பாராட்டுகள்.

  2. வணக்கம்! ‘தொல்தமிழர்களின் ‘ஈகை’: கருத்தாக்கமும் இலக்கியச் சான்றுகளின் பங்களிப்பும்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரை பற்றிய பின்னூட்டங்கள் பற்றிக் கருத்துச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ஆய்வறிஞர் கருத்துரை (PEER REVIEW) 90 விழுக்காடு மீள்பார்வைக்கும் திருத்தத்திற்கும் உரியது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல்முடியும். “கடையேழு வள்ளல்கள் குறித்துத் தொல்இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சான்றுகள் அனைத்தையும் கட்டுரையாளர் முறையாகத் தொகுத்து, வகை தொகை செய்து விளக்கியிருப்பது ஓர் ஆய்வுக் கட்டுரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலை நாட்டாரின் கருத்துகள், பின்னமைப்பியல், உளவியல் கோட்பாடுகள் ஆகியவற்றை உரிய வகையில் கட்டுரையில் கையாண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.” என்பது மிகையான பொருத்தமற்ற பாராட்டுரை என்பது என் பணிவான கருத்து. தரவுகளே ஆய்வாகாது. இந்த என் பார்வையைச் சான்றுகளுடன் உறுதிசெய்ய வல்லமை அனுமதித்தால் அதனைச் செய்யவும் அணியமாய் உள்ளேன் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

  3. என் பின்னூட்டததையும் ஒரு பொருட்டாக மதித்து மாற்றுக் கருத்தினைப் பதிவு செய்ய எனக்கு அனுமதியளித்த தங்களின் பேருள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றி!. எனக்கு வயது 75 உடல் தளர்ச்சியோடு தற்போதைய உலகச் சூழலால் உண்டான மனத்தளர்ச்சி.. விரைவில் அனுப்பி வைப்பேன். ‘வல்லமை’ ‘பெயல்’ முதலிய மின்னிதழ்கள் போலி ஆய்வுகளுக்கு எதிராகத் தொடுததிருக்கும் இந்தப் புனிதப் போரில் என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான். நெஞ்சார்ந்த நன்றி!

Leave a Reply to Arangamallika

Your email address will not be published. Required fields are marked *