-மேகலா இராமமூர்த்தி

பார்கவ் கேசவனின் நிழற்படத்தில் ஆரஞ்சுப் பழமாய் மிளிரும் ஆதவனைக் காண்கின்றோம். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 209க்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணர், திறமையான தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

அகலவா வேண்டாமா என்று யோசனை செய்துகொண்டிருக்கும் பகலவன்; அவன் மறைவதற்குள் நாம் கூட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று சிறகு விரிக்கும் சிறிய பறவைகள்; சுடரொளியோனே! எமைவிட்டுச் செல்லாதே  என்று கிளைக் கரங்களை விரித்துத் தடுக்கும் மரக்கூட்டங்கள் இப்படி இயற்கை நிகழ்த்தும் மாயாசாலம் காணத் தெவிட்டா இனிய கோலம்!

இவ் இயற்கைக் காட்சிக்கேற்ற எழிற்கவிதைகளைப் படைத்துத் தரக் கவிஞர்களை அழைக்கிறேன் கனிவோடு!

*****

”இரவியே! இரவில் அழிவுப்பணியைத் தொடங்கிவிடும் மானிடனின் இருள் மனத்துக்கு உன் ஒளிக்கிரணங்களால் அறிவுகொளுத்து!” என்று ஆதவனை வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

இருளை விரட்டு…

அந்தியில் அழகுகாட்டும்
கதிரவனே,
ஓய்வெடுக்கச் செல்கிறாய் நீ
இன்றும்
ஒழுங்காய்ப் பணிமுடித்த நிறைவில்..

ஓய்வெடுக்கச் செல்கின்றன
வழக்கம்போல் பறவைகளும்,
பணிமுடித்து
இரைதேடிய நிறைவில்..

இந்த மனிதன் மட்டும்
ஏன் இப்படி,
நீ பணிமுடித்தபின்
இரவின் இருள்வரவில்
இவன் பணியைத்
தொடங்கிவிடுகிறானே,
ஆக்கப் பணியாய் அல்ல-
அழிவுப் பணியாய்..

இரவின் இருளை
இரவியே நீ
இவன்மனதில் புகுத்திவிட்டாயா..

இதை விரட்ட
நீட்டு
உடனே உன் ஒளிக்கிரணங்களை…!

*****

”அந்தியில் ஓய்வெடுக்க ஆழியில் மூழ்கும் ஆதவ அன்பனே! மாலையில் உனை இரசிக்கும் எனக்குக் காலையில் நீ பகையாவதேன்?” என்று ஆதவனிடம் ஆதங்கப்படுகின்றார் திருமிகு. கி. அனிதா. 

அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழியில் மூழ்குகிறாய்…
உன்னுடன் சேர்ந்து இயற்கை அன்னையும் ஓய்வெடுக்கச் சென்றுவிடுகிறாள்!!!
மாலையிலே உன்னை ரசிக்கும் நண்பனாய் நான் இருக்க…
காலையிலே ஏன் எனக்கு பகைவனாக மாறுகிறாய்! !!

*****

நீலவானம் சிவப்பாய் மாறிய கோலம் அதன் கோபத்தின் வெளிப்பாடோ? இரவில் வரும் ஆடவருக்கு நட்சத்திரப் பூக்களாய் ஒளிரும் அபலைப் பெண்களின் வாழ்க்கை உண்மையான விடியல் காண்பதெப்போது? என்ற தன் வருத்தத்தைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

இரவு பூக்கள்

கிழக்கும் மேற்கும் பகலெல்லாம்
ஓடி திரிந்து குறும்புகள் என்ன செய்தாயோ
நீல வானம்கூட நிறம் மாறியதே
கோவத்தில் அது நன்கு சிவந்ததே

இரைதேடி திசை எங்கு பறந்தாலும்
இருள் வந்து சேரும் முன்னே
இல்லம் வந்து சேரும்
இரவில் கூட்டாய் கூட்டில் வாழ்ந்திடவே

விடியலாய் விடிவெள்ளி நீ வந்து
விடைபெற்று சென்றதும்
வெண்ணிலவு வந்து
விடிகின்றதே இங்கே பலரது வாழ்வு

ஆசை அடக்கிட
மோகத்தில் திளைத்திட
அள்ளி அணைத்திட
ஆள் தேடும் ஆண்களுக்கு
ஆனந்தத்தை வெளிச்சமாய் காட்டிடுவாள்
மெழுகாய் இவள் தினம் உருகி

இன்றேனும் விடியாதா என்று
இரவெல்லாம் எதிர்பார்த்து
நாட்கள் நகர்ந்திட
அழகாய் பூத்து நின்று
ஆண்களை கவர்ந்திடவே
நாள்தோறும் இரவில் மட்டும்
பூத்து நிற்கும்
நட்சத்திர பூக்கள் இவர்கள் …….
விடியலை எதிர்பார்த்து……..

*****

சூரியனின் சுடரொளியைச் சுற்றித் தம் கற்பனைகளை அழகாய்ப் பின்னியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

நேற்று நீ மறைந்ததால் தான்
எங்களுக்கு இன்று கிடைத்தது!
இன்று நீ மறைந்தால் தான்
எங்களுக்கு நாளை கிடைக்கும்!
என்ன மாயம் உன்னிடத்தில்..?
ஒன்பது கோள்களும் உன்னைச் சுற்ற…
தங்கமுலாம் பூசப்பட்டதா உனக்கு..?
பூசி என்ன பயன்?
பார்ப்பதற்குள் கண்கள் கூசுகிறதே
மாலைப் பொழுதில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பின்னால் மறைவதென்ன..?
நீ மறைந்த கர்வத்தில்
சந்திரன் ஒளிர்கிறது
கொண்ட கர்வத்தில் தேய்ந்தும் போகிறது!
நீ உதித்தால்தான் எங்களுக்கு விடியல்
என்றும் உதித்திடு!
உன்னை போல் நாங்கள் ஒளிர வாழ்த்திடு!

”காய்கதிர்ச் செல்வனே! நீ மறைவதும் உதிப்பதும்தானே புதிய நாட்களைக் கொண்டுவருகின்றது இப்புவிக்கு! எங்கள் கண்களைக் கூசவைக்கும் தங்கமுலாம் பூசியவனே! உன்னைப்போல் எம்மையும் ஒளிரவிடு!” என்று சூரியனுக்குக் கோரிக்கை வைக்கும் இக்கவிதையைப் படைத்திருக்கும் திருமிகு. காந்திமதி கண்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *