-மேகலா இராமமூர்த்தி

கல்லில் துணியை அடித்துத் துவைக்கும் பாட்டாளியைப் படமெடுத்து வந்திருப்பவர் காயத்ரி அகல்யா. இதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 211க்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

இப்படத்தைப் பார்க்கையில்,

துணிவெளுக்க மண்ணுண்டு,
தோல்வெளுக்கச் சாம்பருண்டு
மணிவெளுக்கச் சாணையுண்டு
மனம்வெளுக்க வழியில்லையே
” என்று முத்துமாரியிடம் மாந்தர் நிலையை முறையிட்டு வருந்திய மகாகவியே என் நினைவுக்கு வருகிறார்.

இப்படத்தைக் கண்ணுறும் நம் கவிஞர்களின் எண்ணத்தில் ஊறுவது என்ன என்று அறிந்துவருவோம் வாருங்கள்!

*****

”தர்மகர்த்தா வீட்டுத் துணிகளைப் பொழுதோடு தோய்த்துக்கொடுக்கக் கருத்தாய் வேலைசெய்யும் சலவைத் தொழிலாளி இவர்!” என்கிறார் திருமிகு. காந்திமதி கண்ணன்.

நாளைக்கு ஊர்க் கோயில் குடமுழுக்குன்னு
தர்மகர்த்தா வீட்டுல எட்டுத் துணி குடுத்தாக…
பொழுது சாயுறதுக்குள்ள
கொண்டு சேக்கணும்..
அவுக கொல்லப் பக்கம் கொஞ்சம் இருட்டாதான் இருக்கும்…!

*****

”சூரியன் செய்த சலவையால் ஒளிர்ந்தது நீலவானம்! அதுபோல் சாதியென்றும் மதமென்றும் மாசுபடிந்து நேசம்வடிந்து நிற்கும் நம் மனத்தையும் சீர்திருத்தங்களால் சலவை செய்திட வேண்டும்” என்று நன்மொழி நவில்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

சலவை செய்திட வேண்டும் – மனதை
இருள் வந்து சூழ்ந்திட
சூரியன் நீ வந்து சலவை செய்திட
நீல வானம் ஒளிர்ந்ததே
எதைக் கொண்டு சலவை செய்தாயோ?
நுரைகளாய் வெண்பஞ்சு மேகங்கள்!

பனி வந்து படர்ந்திட
பூமி உடுத்திய பச்சைவண்ணச் சேலை நனைந்ததே!
சூரியன் நீ வந்து அடித்த வெயிலில் அது உலர்ந்ததே!
சலவைக்குச் சிக்கனமாய் நீரை நீ பயன்படுத்தினாயோ?
பெய்யும் மழைகளும் குறைந்து பூமி வறண்டு போனதே!

உடுத்தும் உடைகளின் அழுக்கை அகற்றிட
உழைக்கும் இவனுக்கு
உடுத்திக்கொள்ள நல்ல உடைகள் இல்லை!
செய்யும் தொழிலாலே பிரிக்கப்பட்டோம் அன்று!
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று
குரல் கொடுத்த பாரதியை மறந்து விட்டோம்!
இன்றோ ஜாதிகளாலும் கட்சிகளாலும்
எண்ணற்ற பிளவுகளால்
எண்ணிக்கையில் நிறைந்து நின்றோம்!

மாசு படிந்த மனதினைச் சலவை செய்து
நேசம் நிறைந்த நெஞ்சாய் மாற்றிட
சீர்திருத்தம் செய்ய வேண்டும்!
நம் சிந்தனையில்
சிறிய திருத்தம் செய்யவேண்டும்!
புதிய சிந்தனை உருவாகி
வரும் சந்ததியினர்
அதை வழிமொழிந்திட வேண்டும்
இருள் சூழ்ந்த இதயம் அன்று தெளிவு பெரும்
அதில் புதிய பாரதம் வந்து பிறந்திடும்!

கற்பனையும் கருத்தும் செறிந்த கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

படிப்பினை…

அழுக்காய்த் துணியைக் கொடுத்தாலும்
அடித்துத் துவைத்து வெளுத்திடுவார்,
பழுதாய்ப் பணியதை யெண்ணவேண்டாம்
படிப்பினை யதுவே தத்துவமாய்,
அழுக்கு மனமது தூய்மைபெற
அடிபல பெறுகிறோம் வாழ்வினிலே,
எழுந்திடு இன்னலில் துவண்டிடாதே
ஏற்றம் வாழ்வில் கண்டிடவே…!

துணியில் படித்திருக்கும் அழுக்குகளைத் துவைத்து வெளுக்கும் சலவைத் தொழிலாளிபோல் நம் மனத்திலே நிறைந்திருக்கும் இழுக்குகளாம் அழுக்குகளை இன்னல்கள் எனும் அடியால் வெளுக்கின்றது வாழ்க்கை. எனவே வாழ்வில் நாம் படும் பாடுகளைப் பாடமெனக் கொளல் வேண்டும் என்று பொருளுரை பகரும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *