வல்லமையின் ஆய்வு அறங்கள் (Ethics Policy)

0

முனைவர் அண்ணாகண்ணன்

வல்லமை பின்பற்றும் ஆய்வு அறங்களை இங்கு வகுத்தளித்துள்ளோம். ஆய்வாளர்கள் இவற்றை மனத்தில் இருத்தித் தம் கட்டுரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்த ஆக்கம்

ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வாளர்களின் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும்.

பிறருடைய கருத்தினைத் தன் கருத்தாக எடுத்தாளும் போக்கினை ஆய்வாளா்கள்
முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிறருடைய கருத்துகளையும் ஆய்வு முடிவுகளையும்
மேற்கோளாக எடுத்தாள மட்டுமே ஆய்வாளருக்கு உரிமை உண்டு.

இதர தளங்களிலிருந்து, ஏடுகளிலிருந்து, நூல்களிலிருந்து முழுப் படைப்பையோ அல்லது ஒரு பகுதியையோ எடுத்துத் தம் கட்டுரையை உருவாக்குவது தவறு. ஒரே கட்டுரையிலிருந்து எடுக்காமல், பல்வேறு கட்டுரைகளிலிருந்து இங்கொன்று அங்கொன்றாக எடுத்துத் திரட்டிக் கட்டுரையாக்குவதும் கூடாது. ஆய்வுக் கட்டுரையும் அதில் இடம்பெறும் அனைத்து வளங்களும் ஆய்வாளரின் சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.

புதிய கட்டுரையா?

வேறு எங்கும் பதிப்பிக்கப்படாத கட்டுரையாக இருத்தல் வேண்டும். வேறு தளங்களில், இதழ்களில், நூல்களில் வெளிவந்திருந்தாலோ, கருத்தரங்கு, மாநாடு, பயிலரங்கு போன்றவற்றில் படைக்கப்பட்டிருந்தாலோ அவசியம் குறிப்பிட வேண்டும். வல்லமைக்கு அனுப்பிய பிறகு வேறு இதழ்களுக்கு அனுப்பியிருந்தால், அதை உடனே வல்லமைக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேற்கோள்கள்

இதர கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டுகையில், மேற்கோள் எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். மேலும், அது தொடர்பான அடிக்குறிப்புகள், துணைநூல் பட்டியல் ஆகியவற்றை அவசியம் தர வேண்டும்.

நம்பகத்தன்மை வாய்ந்த சான்றுகள்

ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக் காட்டும் சான்றுகள், மிகுந்த நம்பகத்தன்மையுடன் இருத்தல் வேண்டும். அச்சில் வந்ததாலோ, இணையத்தில் இடம் பெற்றதாலோ மட்டுமே ஒரு தரவு, சான்று ஆகிவிடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதன் பிறகே ஆய்வாளர் அதை ஒரு சான்றாக ஏற்கலாம். இவ்வாறு ஆராய வேண்டியது, ஆய்வாளரின் கடமையாகும்.

அவசரம் கூடாது

தலைப்பினைத் தேர்ந்தெடுப்பதிலோ, கட்டுரையை எழுதுவதிலோ, அல்லது ஆய்வு முடிவுகளை இறுதி செய்வதிலோ அவசரம் கூடாது.

ஆய்வில் நடுநிலை பேணல்

காய்தல், உவத்தல் இல்லாத நடுநிலையான ஆய்வே வரலாற்றில் நின்று நிலைக்கும்.
மிகைப்படுத்துதல், தற்சார்புத்தன்மை, இட்டுக்கட்டி இழிவுகூறல் போன்ற பண்புகள்
ஆய்வாளா்களுக்குச் சற்றும் பொருந்தாதவை. சாதி, இனம், மொழி, சமயம், தேசியம், சா்வதேசியம் ஆகிய எல்லைகளைக் கடந்த பரந்துபட்ட பார்வை ஆய்வாளருக்குத் தேவை. இவ்வாறான எல்லைகளுக்குள் அடைபட்டுக்கொண்டு ஆய்வு முடிவுகளைத் திரித்தும் வருவித்தும் நிறுவும் போக்கு சரியானதில்லை. எனவே, நடுநிலையைப் பேணுவது இன்றியமையாதது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *