இலக்கியம்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி – 213

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (7)

 1. Avatar

  நிறைவின் அறியாமொழிகள்

  வாழ்தலின் அர்த்தத்தில்
  உழைப்பின் அதிசுகத்தில்
  மனதின் அடியாழ விழைவின்
  இயற்கை நுகர்ந்து கலை தெளிந்து
  நீண்ட வாழ்க்கையில்
  பயிற்றுவிக்கப்படும் வறுமையும்
  வறுமையில் பணமும்!

 2. Avatar

  ஏழ்மை

  ஏக்கமதைச் சுமந்த
  விழிகள் மட்டும்
  ஏழைக்கு மாறவில்லை
  இற்றை மட்டும் – என
  எடுத்துக்காட்டாய் வீற்றிருக்கும்
  ஏழ்மை அணி பூண்டமர்ந்த
  ஏந்திழை நீ……….

 3. Avatar

  குறையுமா…

  பருந்தை எதிர்க்கப்
  பறந்து காக்கும் தாய்க்கோழிபோல்
  பிள்ளைகளைப்
  பாதுகாத்து ஆளாக்கிய தாய்,
  வருந்திக் காத்திருக்கிறாள்
  எமனின்
  வரவுக்காக..

  படித்த பிள்ளைகளைப் பெற்ற
  பல தாய்களின்
  நிலை இதுதான்..

  அறிவுக் கண்கள் திறக்க
  அவர்கள் கற்ற கல்வியால்
  இன்று அதிகமாய்த் திறக்கின்றன
  முதியோர் இல்லங்கள்..

  மாறுமா இந்த அவல நிலை,
  ஏங்கிக் காத்திருக்கும்
  இத்தகு அன்னையரின்
  எண்ணிக்கை குறையுமா-
  காத்திருப்போம்…!

  செண்பக ஜெகதீசன்…

 4. Avatar

  நேற்று வீசிய ஏச்சாலே
  சொல்பட்டு சிதறிய மனம்
  புண்பட்டு இற்றி விடுமென
  நூத்துப் போன சேலையுடன்
  வாசற்படியில் வாசமற்று
  காத்துக் கிடக்கும் கணங்களில்
  எஞ்சிய கணநேர நிம்மதியும்
  கண்பட்டு கழியாதிருக்க
  அயராது காவலிருக்கும்
  கண்திருஷ்டி கண்பதி

  -சக்திப்ரபா

 5. Avatar

  அன்னையின் எழிலை காக்க
  கண் திருஷ்டி விநாயகர்
  எண்ணத்தின் செல்வத்தை காக்க
  காக்கும் விநாயகர்
  பிரசவித்தும்
  ஏனோ அவள்
  வறுமையின் தாயாகவே
  காட்சியளிக்கிறாள்…?

 6. Avatar

  தன் எழிலை போற்றும்
  மாந்தர்தம் பரவிகிடக்கும்
  இப்பூவுலகில்
  உன் சிந்தையை விட்டு அகலாத
  காதல் நாயகனின்
  வரா வருகையை
  நித்தமும் எதிர்நோக்கி
  வீற்றிருக்கும் அன்னையே
  நீ பூண்ட இக்கோலம் ஊரறியும்
  உன் நினைவுகளின் ஏக்கங்களை
  முதற்கடவுள் அறியாத போதும்
  உன் வழிபாட்டில் சிறிதும்
  குறைவில்லை
  உன் நெற்றி இறக்கிய திலகம்
  பரிகார மோட்சமாக
  அருகால்படியை அலங்கரிக்கின்றது.
  வறுமையின் வாசம் வீட்டை நிறைத்தாலும்
  அன்பானவனினன் நினைவுகளை சுவாசித்து
  வாழும் தாயே நீ என்றுமே இல்லறத்தின்
              மகாலெட்சுமியே…….

 7. Avatar

  சிறகு முளைத்து நகரம் பறந்த செல்லப்பறவைகள்
  இவ்வருடப் பண்டிகைக்கேனும்
  கூடு திரும்புமென்னும் நம்பிக்கையோடு
  குந்திக் கிடக்கிறது தாய்ப்பறவை.

  உள்ளும் புறமும் நடையாய் நடந்து
  நோகும் கால்கள் நீவி,
  வரவெதிர்பார்த்துப் பார்த்துப்
  புரையோடிய கண்கள் பூத்து,
  புன்னகை மறந்த உதட்டில் துடிக்கும்
  சிறுவிம்மல் மறைத்து
  பஞ்சப்பராரியெனக் காத்திருக்கும்
  நெஞ்சத்தின் தவிப்பு யாருக்குத் தெரியும்?
  உடையின் கிழிசல் பார்வைக்குத் தெரியும்
  இந்த உள்ளத்தின் கிழிசல் யாருக்குப் புரியும்?

  துணையிலா முதுமை துயரம்.
  உறவிலா தனிமை பெருந்துயரம்.
  அடக்கிவைக்கும் கேவல் வெடிக்குமுன்னே
  அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ…
  முடக்கிவைக்கும் ஆவி விடுபடுமுன்னே
  முன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ…

Leave a Reply to Shenbaga Jagatheesan Cancel reply