முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1
(நீராடற்பருவம்)

பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம். நதியில் நீராடும் இனிய அனுபவத்தை, விளையாட்டை, வளர்ந்த சிறுமிகள் ஐந்து முதல் ஒன்பது வயதில் செய்வார்கள். ஆயினும் முதலில் சிறுபெண்களுக்கு வயதில் பெரிய பெண்களும் தாயும் செவிலியருமே நதியில் இறங்கி நீந்தவும், நீராடவும் கற்றுக் கொடுப்பார்கள். பிள்ளைத்தமிழ் இலக்கிய மரபு பெண் குழந்தையின் ஐந்து முதல் ஒன்பது வயதில் இது நிகழும் என்கிறது.

நதியில் நீராடுவதென்பது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் அக்காலத்தில் விளங்கியதைக் காணலாம். அது மட்டுமின்றி, நாட்டு நலனுக்காகவும், வீட்டு நலனுக்காகவும் செய்யும் வேண்டுதல்களுக்கும் இதுவொரு களமாக விளங்கியது எனவும் அறிகிறோம்.

ஆடிமாதம், புதுவெள்ளத்தில் நீராடுவதென்பது நதியைப் போற்றி வழிபட்டு விளையாடி மகிழ்வதற்காக ஏற்பட்டது! புலராத அதிகாலை நேரத்துக்குளிரில், மார்கழிமாதம் நீராடுவது நாட்டில் நல்லமழை பெய்வதற்காகவும் நல்ல கணவனைப் பெறுவதற்கு வேண்டி நோன்பிருக்கவும் ஏற்பட்டது. ஆண்டு முழுவதுமே ஆற்றங்கரையில் தினசரிக் கடன்களைச் செய்தும், துணிமணிகளைத் துவைத்தும், நீரில் துளைந்து விளையாடியும், வாழ்வினைப் பல பொழுதுபோக்குகள் நிறைந்ததொரு இனியபயணமாக அமைத்துக் கொள்வதற்கென்றே ஏற்பட்டது எனலாம்!

தம் நீர்ப்பெருக்கால் நமக்கெல்லாம், நாம் விதைக்கும் பயிர்களுக்கெல்லாம் உணவளித்து, உயிரூட்டி, அரவணைத்து வளர்த்துவரும் கங்கை, காவேரி, வைகை, இன்னும் பல நதிகளை நாம் தெய்வமெனக் கொண்டாடிப் பூசைகள்செய்து வழிபடுகிறோம். ‘நீரின்றி அமையாது உலகு,’ என்பது நாமறிந்த உண்மை! குழந்தைகள் தாயிடம் விளையாடுவதுபோல, ஆற்றுவெள்ளத்தில் ஆடிப்பாடி நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிக்கிறோம். நிலம், நீர் (ஆறு) முதலியன வாழ்வின் இன்றியமையாத தேவைகளாக இருப்பதனால், அவற்றை இயற்கை தெய்வங்களாகக் கொண்டு போற்றுகிறோம். இவை உயர்வான நமது நாகரிகத்தின் வெளிப்பாடுகளே!

‘காவேரியே! உன் கணவனுடைய சோழநாடே உன்குழந்தையாகும்; நீதான் அதனை வளர்க்கும் தாயானவள். எத்தனையோ ஊழிக்காலங்களாக இந்தச்செயலைச் செய்துவருகின்றாய். இதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாத்து, ஆணைச்சக்கரம் செலுத்துகின்ற சோழவேந்தனின் நடுவுநிலைமை தவறாத ஆட்சியே அல்லவா? நீடூழி வாழ்வாயாக காவேரியே!’ எனத் தலைவி வாழ்த்துவதாக சிலப்பதிகாரத்தில் கானல்வரிகளைக் காண்கிறோம்.
‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
……………..
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.1’
(சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடு காதை)

சிவபிரானுக்கு உகந்த திருவாதிரை நாளில் பௌர்ணமி தினமும் கூடியிருந்த முன்பனிக்காலம் எனப்படும் மார்கழிமாதத்து நாளன்று வைகறைப்பொழுதிற்கு முன்பே வைகைக்கரையில் சிறுமியரும் மகளிரும் அந்தணர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூடியுள்ளது; வைகையின் நீர்ப்பெருக்கிற்கு ஈடாக மக்கள்கூட்டம் கரைபுரண்டோடுகின்றது. வாணி(சரஸ்வதி), யமுனை, கங்கை ஆகிய மூன்று நதிகளின் கலவை எனப் புகழப்படும் வையை எனும் பாண்டியன் குலக்கொடி, மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகிப் புரண்டோடுகிறாள்.
அந்தணர்கள் நீராடி முடித்துப் பொற்கலங்களிில் வையையின் நீரை நிரப்பிக் கொண்டு மந்திரங்களை உச்சரித்தவாறு வேள்விக்காக அமைக்கப்பட்ட சாலைகளை நோக்கி விரைந்தனர். வேள்விச்சாலைகளில் தீ வளர்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்கத் துவங்கிவிட்டன. தாய்மார்கள் தங்கள் சிறு மகள்களின் கைகளைப் பற்றிக்கொண்டு நீரில் மெல்ல இறக்கி நீராடவைக்கின்றனர்.

சிவபிரானை வாழ்த்தி எழும்பும் அந்தணர்களின் மந்திர முழக்கம் வானைமுட்டுகிறது. இன்னும் பல தாய்மார்களும் சிறுமிகளும் இளம்கன்னியர்களும் அவர்களைப்போல் வேள்விக்குண்டங்களைச் சூழ்ந்து நிற்கிறார்கள். பற்களைக்கிட்டிக்கும் குளிரில், ஈர ஆடையில், சிறுமிகளின், ஏன் தாய்மார்களின் உடல்களும்கூட இலேசாக நடுங்குகிறன. ஓங்கியெழும் வேள்வித்தீயின் நாக்குகள் உமிழும் வெப்பத்தில் அப்பெண்களின் ஈர ஆடைகளிலிருந்து நீர் ஆவியாக வெளிப்படுகின்றது. பெண்களும் குளிரிலிருந்து சிறிது ஆசுவாசமடைகின்றனர்.

‘இவ்விளங்குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் கூடிநின்று வைகைக்கரையில் நீராடலாகிய இந்தத் தவத்தினைச் செய்வதற்கு, முன்பு என்ன தவம் செய்திருந்தனரோ,’ எனக் காண்போருக்கு எண்ணத்தோன்றுகிறது.*

அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்,
முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப்புலர்பு ஆடி, பருமணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறைசிறை வேதியர்
…………………………………………….
தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!2
(*பரிபாடல்-11- ஆசிரியர்: நல்லந்துவனார்)
*****

இனி குமரகுருபரர் காட்டும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைக் காணலாம்! பொய்யாக் குலக்கொடியான வையை என்னும் நதியின் கரையில் கும்மாளமிடும் இளம்பெண்களின் கூட்டம்! குதூகலம் கொப்பளிக்க பாண்டிய இளவரசி தடாதகை தன் தோழியருடன் நீராட வருகிறாள். பற்பல கதைகளையும் பேசிக் களித்து மகிழ்ந்த வண்ணம் தடாதகையும் தோழிகளாகிய திருமகளும் கலைமகளும் இன்னும் பல பெண்களுடன் வைகைத் துறையை அடைகின்றனர். “பொங்கி வரும் வைகைப் புது நீரில் நீராடுவாயாக அம்மையே,” என்று தடாதகையிடம் கூறுகின்றனர்.

வைகை நீர் பொங்கிப் புரண்டோடி வரும் அழகைக் கண்டு, மெய்ம்மறந்த பரவசத்தில் ஆழ்ந்து நிற்கிறாள் அங்கயற்கண்ணி. ‘இந்தப்படித்துறை பண்டு எம்பெருமான் பிட்டுக்கு மண்சுமந்த இடமாகும்,’ எனத் தோழியான வாணி சொல்கிறாள். அதனைக் கேட்டவுடன் தடாதகையின் உள்ளம் கசிந்துருகிக் காதலில் கண்களிலிருந்து ஆனந்த வெள்ளம் பொழிகின்றதாம்.

நீர் பெருகிக் கரையுடைத்துக் கொண்டோடிய வைகையும், பிட்டு விற்கும் வந்திக்கு உதவ வேண்டி, கூடையில் மண்ணை வாரித் தலைச்சுமை எடுத்துக் கரையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காதல் கொழுநனும், அவனைப் பிரம்பால் அடித்த பாண்டியனும் ஆகிய காட்சிகள் அம்மையின் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. கலைமகளும் தன் வாக்கு வன்மையினால் அந்தக் கதையை சுவைபட எல்லாருக்கும் விவரிக்கிறாள்.

‘என் உள்ளங்கவர் காதலர் மண் சுமந்த இடமல்லவா இது?’ என்ற பெருமிதத்தில் மீனாட்சியின் நெக்குருகி, நெஞ்சு விம்ம, கண்கள் சிவந்து ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது. அப்படியே சிலை போல நிற்கிறாள்.

‘இழியும் புனல் தண்துறை முன்றில் இதுஎம் பெருமான் மண்சுமந்த
இடமென்று அலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துள் உருகியிரு
விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால்3..’

“இப்படிக் கண்களிலிருந்து வெள்ளத்தைப் பெருகவிட்டுத் திரும்பவும் அப்பெருமானுக்கு வேலை வைப்பது பிழையல்லவா? விரைவில் நீராடுவாய்,” என அழைக்கின்றனர் தோழிகள்.

‘விழிநீரை மீண்டும் பெருக விடுத்து அவற்கோர்
வேலை இடுதல் மிகையன்றே!’ என்கின்றனர்.

ஆனால் எண்ணங்களில் ஆழ்ந்து அசையாமல் சிற்பமென நிற்கிறாள் இளவரசி தடாதகை. அவளை விரைந்து நீராடவைக்கத் தோழியர் இன்னொரு உபாயத்தைக் கையாளுகின்றனர்!

“மடங்கி வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய நீரையுமுடைய வைகை நதியில், வண்டல் இடுகின்ற மண்ணைக் கூடையில் அள்ளி வைத்து முன்பே சுமந்தவர் உன் காதலர்தானே? நீரிலிறங்கி ஆடினாயானால் உன் மார்பிலணிந்துள்ள சிவந்த குங்குமச்சேறு கரைந்து வண்டல்மண் போல நீரில் சேர்ந்துவிடும். அதைத் திரும்பக் கூடையில் அள்ள எம்பெருமான் ஆசையாக விரைந்தோடி வருவார் பார்!” எனக்கூறுமுன்பே, மற்றொரு தோழி குறும்பாக, “அவ்வமயம் வெள்ளைப்பிட்டை அள்ளியள்ளிக்கொடுக்க வந்திக்கிழவி வேண்டுமே! பிரம்பினால் அடித்து வேலைவாங்கப் பாண்டிய மன்னன் வேண்டுமே,” எனப் பொய்யாகக் கவலைப்படுகிறாள்.

‘………………………. ஒருத்தி
வெண்பிட் டிடவும் அடித்தொருவன் வேலைகொளவும் வேண்டுமெனக்
குறிக்கும் இடத்தில் தடந்தூநீர் குடையப் பெறின் 4….’

“சிவனாரை உன்னிடம் வரவழைக்க இது நல்ல உபாயமல்லவா? இமயமலையிலும் மீன்கொடி பறக்கவைத்த பெண்ணரசியே, நீராடி அருளுகவே, பொருநைத் துறைவன் பொற்பாவாய் புதுநீராடி அருளுகவே,” என்று வேண்டுகின்றனர். இவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் நீராடல் பருவத்தில் குமரகுருபரர் தீட்டும் அழகான சொற்சித்திரங்கள்! அசதியாடல் எனும் நயத்தை இழைத்து அமைத்த இனிய பாடல்கள்.

சொன்னயங்களும் கருத்து நயங்களும் பலவிதமாக வெளிப்படும் பாடல்களைக் கொண்டமைந்தது குமரகுருபரனார் இயற்றியருளியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூல்.
அங்கயற்கண்ணி அம்மை, வேகவதி எனப்படும் வைகையில் நீராடிய போது, அவள் கைகளில் அணிந்துள்ள வெண்மையான வளைகள் ஒலித்தன; பவளம் போன்ற சிவந்த உதடுகள் வெளுத்தன; கருங்குவளை மலர்க் கண்கள் சிவந்து செங்குவளை போன்று காணப்பட்டன; கரிய மணல் போன்று காணப்பட்ட கூந்தல் சரிந்து விழுந்தது. இது, பெருகிடும் கங்கையாறு, சிறு திவலையாகி, ஆனந்தப் பெருங்கடலாக விளங்கும் சிவபெருமானுடன் (மீனாட்சியம்மை) கூடிக்கலந்து விளையாடியதால் உண்டாகிய வேறுபாடுகளை ஒத்திருந்ததாம்.

‘செழுந்தரங்கக் கங்கை நுண்
சிறுதிவலையாப் பொங்கும் ஆனந்த மாக்கடல்
திளைத்தாடுகின்ற தேய்ப்ப5…’ என்கிறார்.

குழந்தை மீனாட்சி வளர்ந்து வரும் ஒவ்வொரு பருவத்தையும் சுவைமிகுந்த நிகழ்ச்சிகளால் பாடி வரும் குமர குருபரர் பின்வரும் பாடலில் உலகம் முழுவதுமே உமை அன்னையின் வடிவம் எனக் கண்டு பேரானந்தம் கொண்டு பாடிக் களிக்கிறார்.

“கிளி பேசுவது போன்ற பண் பொருந்திய சொற்களைப் பேசும் பாவையே! நீராடும் உனது திருமேனி அழகிய பச்சை மரகத நிறத்தைப் பரப்பி ஒளி வீசுகின்றது. இதனால் எல்லாப் பொருள்களும் அந்த நிறத்தைத் தாமும் பெற்று ஒளிர்கின்றன. நதி நீரில் மிதக்கும் குளிர்ந்த பவளக்கொடி, பச்சை நிறம் பெற்று, பேரழகுடன் பசிய இளங்கொடி போலக் காட்சியளிக்கின்றது; பருத்த வெண்மையான முத்துக்கள் மரகத மணிகளாக மாறி விட்டன! நதியின் குளிர்ச்சி மிகுந்த துறைகளில் தங்கி விளையாடும் அன்னப் பறவைகள் பச்சை நிறம் அடைந்து களிப்பு மிகுந்த தோகை மயில்களாக மாறி விட்டன! இது, ‘எல்லாப் பொருள்களும் உனது அழகிய திருவடிவம் தான்,’ என்று வேதங்கள் காலகாலங்களாக முழங்கி வரும் பொருள் முற்றிலும் உண்மையே என நிரூபிப்பது போல உள்ளதம்மா.

‘சகலமும் நின் திருச் சொரூபம் என்று ஓலிடும்
சதுர் மறைப் பொருள் வெளியிட…’ என வர்ணிக்கிறார்.

அத்தனை பெண்களும் குடைந்து குடைந்து நீராடுவதனால் அவர்கள் தம் மார்பில் அணிந்திருக்கும் சிவந்த சாந்து (செங்களபம்), கருமையான கஸ்தூரிக் குழம்பு, வெண்கற்பூரம் ஆகியவை கரைந்து வைகை நீரில் கலக்கின்றன. இது சரஸ்வதி (வாணி எனப்படும் சிவந்த நிறமுள்ள சோணை நதி), யமுனை (கரிய நிறம் கொண்ட காளிந்தி ஆறு), வெண்மை நிறம் கொண்ட கங்கை எனப்படும் வான் நதி மூன்றும் கலந்து வைகையாற்று நீரில் விளையாடுவது போல உள்ளதாம்.

‘……………………………………வாணியும்
காளிந்தியும் கங்கையாம்
விண் ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை
வெள்ள நீர் ஆடியருளே
விடைக் கொடியவர்க்கு ஒரு கயற்கொடி கொடுத்த கொடி
வெள்ள நீர் ஆடியருளே.6’ என்கிறார்.

அனைத்துப் பொருள்களும் அவளே! அவளிடம் இருந்தே உற்பத்தியாகி அவளிடமே அனைத்தும் தஞ்சம் அடைகின்றன. அவளை இடைவிடாது சிந்தையில் வைப்பவர்கள் அவளாகவே ஆகி விடுகின்றனர். ‘எங்கும் வியாபித்திருப்பவள், பலவகையான உருவம் கொண்டவள், ‘வ்யாபினீ, விவிதாகாரா7,’ என அம்பிகையை லலிதா சஹஸ்ர நாமம் போற்றுகிறது. (ஸ்லோகம் 87).

நதிகளைப் பெண்மைக் குணம் கொண்டவர்களாக பெரியோர்கள் வருணித்துள்ளனர். அவற்றின் ஆற்றலும், இயக்கமும், ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுமே இதற்குக் காரணங்கள். கமலைநதி திருவண்ணாமலையருகே ஓடுகின்றது. அந்த நதிப்பெண் உண்ணாமுலையம்மையை நோக்கிக் கூறுவதாக அமைந்தவொரு அழகான பாடல்:

“குறிஞ்சி நிலத்தில் வாழும் வெற்றி மிக்க வீரனான குமரனுக்கு சேவல்கொடியைக் காட்டிலிருந்து கொண்டு கொடுத்தவள் அன்னை நீதான்!

“பாலைக்குமரி எனப்படும் பாலைநிலத்து தெய்வமான கொற்றவைக்கு கொடிய சிங்கத்தையும் வாகனமாகக் கொடுத்தாய்!

“செழித்த முல்லைநிலத்துக் கடவுளான கோவிந்தனுக்கு அழகான மூங்கிலாலான புல்லாங்குழலை அளித்தாய்.

“மருதநிலத்து இறைவனான இந்திரனுக்கு அவன் மகிழும்வகையில் நீர்வளத்தைக் கொடுத்தாய்.

“நெய்தல் நிலக்கடவுளான வருணனுக்கு அந்நிலத்தின் புலால் வாசனை தீரும்விதத்தில் (தாழம்புதர்கள் முதலியவற்றிலிருந்து வரும்) நறுமணமும் கொடுத்த அன்னை நீதானே!

“உனக்கு என்னால் எதனை அளிக்க முடியும்? ஆகவே, அன்னையே, நீயே வந்து என்னில் ஆழ்ந்து நீராடித் திளைக்க வேண்டும்; நான் அதனால் உருகிப்பெருகிப் பேரின்பமான கடலில் சென்று சேர்வேன்,” எனக்கூறுகின்றாள் கமலை எனும் நதிப்பெண்ணாள்,’ என்கிறார் உண்ணாமுலைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான சோணாசல பாரதியார்.

மெய்சிலிர்க்க வைத்து, பக்தியில் திளைக்கும் மிக அருமையான கற்பனை இதுவன்றோ!

‘கொற்றக் குறிஞ்சிக் குமரனுக்குக்
கொடியும் பாலைக் குமரிக்குக்
கொடுங்கோ ளரியுஞ் செழுமுல்லைக்
கோவிந் தனுக்குக் குழல்வேயு
மற்ற மருதப் போகிக்கு
மகிழ்வு நெய்தல் வருணனுக்கு
மன்னும் புலவு தீர்மணமும்
வழங்கு வேனிற் கென்னளிப்பேன்8

பல தலைமுறைகளாக நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டும், நீரினைத் தெய்வமாகக் கொண்டு போற்றியும், நீர்நிலைகளில் தெய்வ வழிபாடுகளை முறையாக நடத்தியும் வாழும் பண்பாடு – நாகரிகம் நம்முடையது. நீரின், ஆறுகளின் பின்னணியில் புலவர் பெருமக்கள் இயற்றியளித்த இப்பாடல்கள் இனிமை நிரம்பித்ததும்பி நமது உள்ளங்களில் அழகுணர்ச்சியையும், ஆனந்தத்தையும் பக்திப் பெருக்கினையும் நிரப்பி மகிழ்விக்கின்றன அல்லவா?

_______________&________________

பார்வை நூல்கள்:

1. சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடுகாதை
2. பரிபாடல்- பாடல் 11- நல்லந்துவனார்.
3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
7. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
8. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *