நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

47. தெரிந்து செயல்வகை

குறள் 461:

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

ஒரு செயலச் செய்யுததுக்கு முந்தி நட்டத்தையும் , நொடிச்சுப் போனா என்ன ஆவும்ங்குத விளைவையும், அதுக்குப் பொறவு கெடைக்கப் போவுத லாபத்தையும் கணக்குப் போட்டுப் பாத்து செய்யணும்.

குறள் 462:

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்

தெளிவா, இனம் கண்டுகிட்ட சேக்காளிங்களோட சேந்து செய்ய வேண்டிய செயல யோசிச்சு ஒருத்தன் செய்தாம்னா அவனால செய்ய முடியாதது னு ஒண்ணும் கெடையாது.

குறள் 463:

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்

பொறவு வரப்போகுத லாபத்துக்காக கையில இருக்க முதல தொலைச்சுப்போடுத காரியத்த புத்தியுள்ளவங்க செய்ய மாட்டாக.

குறள் 464:

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்

தனக்கு அவமானம் வரும் னு பயப்படுதவங்க ஆக்கங்கெட்ட செயலச் செய்யத் தொடங்கமாட்டாக.

குறள் 465:

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

முன்னேற்பாடு இல்லாம பகையாளிய ஒடுக்க முனையுதது அந்த பகையாளியோட வலிமைய நெலச்சு வளக்குத வழியா மாறிக்கிடும்.

குறள் 466:

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

ஒருத்தன் செய்யக்கூடாதத செஞ்சாலும் கேடு வரும். செய்ய வேண்டியத செய்யாம விட்டாலும் கேடு வரும்.

குறள் 467:

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு

ஒரு செயல முடிக்குத வழிய அறிஞ்சிக்கிட்டு தொடங்கணும். தொடங்கின பொறவு ரோசனை பண்ணிக்கிடலாம் னு நெனக்கிதது தப்பு.

குறள் 468:

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

எத்தன பேர் தொணையா நின்னாலும் மொறையா முனஞ்சி எறங்கி செய்யலேனா கடைசில அந்த செயல் முடங்கி போவும்.

குறள் 469:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

அவுகவுக கொணத்துக்கு ஏத்தாப்போல தான் நன்ம செய்யணும். அப்டி செய்யலேன்னா நன்ம செய்யுததிலும் தப்பு உண்டாவும்.

குறள் 470:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு

தன்னோட நெலமைக்கு பொருத்தமில்லாத செயலச் செஞ்சா ஒலகம் எளக்காரமா பேசும். ஒலகம் எளக்காரமா பேசாதத தேடிப் பாத்து செய்யணும்.

(அடுத்தாப்லயும் வரும்..)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *