கடமையால் உயர்ந்த காவற் கோபுரம்

0

ஔவை நடராசன்

கல்வியாளரும், அறிவிற்சிறந்த மரபின் கிளையாகவும் திகழ்ந்த காவல்துறைத் தலைவர் வி.ஆர்.இலட்சுமி நாராயணன் அவர்கள், இந்திய நாடு முழுவதும் நன்கறிந்த காவல்துறையின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார்.

சிறந்த ஆங்கிலப் புலமையும் சிந்தனை வளமும் செயல் நேர்மையும் அவர் புகழுக்கு அணி சேர்த்தன.

பல முறைகள் அண்ணா நகரில் நான் அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். மறைந்த வழக்கறிஞர் நண்பர் தெய்வசிகாமணி தான், அவர் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்.

எண்ணிப் பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர் ஆங்கில இந்து நாளிதழில் எழுதிய கடிதங்கள், அவரின் சிந்தனைப் பெருமிதத்தைக் காட்டின. நானும் அவரும் பல இலக்கிய மேடைகளிலும், இசை அரங்குகளிலும் பங்குகொண்டு பேசியிருக்கிறோம்.

ஒரு முறை நீதியரசர் மேதை வி.ஆர்.கே. இல்லத்தில் விருந்துண்டதாக நினைவு .

முதுமை என்பது, காலம் செல்லச் செல்லக் கனிந்து பழுத்ததும் காம்பிலிருந்து உதிரச் செய்து விடுகிறது. அந்த வகையில்தான், அறிஞர் இலட்சுமி நாராயணன் மறைந்தார்.

எ.எஸ்.பி. ஐயர் தலைமுறையின் ஒரு மாமணியை இழந்துவிட்டோம். காவல்துறையில் பணியாற்றியபோதும் கனிவு ததும்பும் கடமை உணர்ச்சிக்கு அவர் உயரிய எடுத்துக்காட்டாக ஒளிர்ந்தார்.

நான் அவரிடத்தில் பேசிய போதெல்லாம் அவரின் அண்ணன் நீதியரசர் விஆர்.கிருஷ்ணய்யரைப் பற்றித்தான் பேசினார் .

தனக்குப் புகழ் வேண்டாத தலைவராக வாழ்ந்தார் .  ஒரு முறை அருளைக் கண்டு ஆரத் தழுவி, அப்பாவை நீ மிஞ்சுகிறாய் அதற்கு அடையாளம் தெரிகிறது என்று பாராட்டி என்னிடத்தில் புகழ்ந்தார்.

அண்ணா நகர் சிகரப் பூங்காவில் அமைதியாக நடந்து வந்த நடையாளரை இழந்த துயரத்தை எண்ணி இரங்குகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *