(Peer Reviewed) சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு

0

முனைவர் சு. சரவணன்
ஆய்வறிஞர்,
பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம், புதுச்சேரி.

சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு

எதிர்மறை என்பது உடன்பாடான கருத்திற்கு மறுதலையான கருத்தினை வெளிப்படுத்துவதாகும். இது வினைச்சொல்லமைப்பில் வெளிப்படுவதாகும். சங்கத் தமிழிலக்கியங்களில் அமைந்துள்ளதன்படி எதிர்மறையினை மொழியியல் அடிப்படையில் இருவகையில் ஆய்வு செய்யமுடியும். 1. உருபனியல் ஆய்வுமுறை, 2. தொடரியல் ஆய்வுமுறை. உருபனியல் ஆய்வில் எதிர்மறையானது ஒரு சொல்லுக்குள்ளேயே எதிர்மறை உருபால் உணர்த்தப்படுகின்றது (செய்யலன், சூழேன், செய்யான், செய்யாதான், வாரல் போன்றவை). தமிழ் மரபிலக்கணங்கள் சிலவும் அதற்கான எதிர்மறை உருபுகளைத் தந்துள்ளன.

தொடரியல் ஆய்விலும் எதிர்மறை ஒரு சொல்லுக்குள்ளேயே எதிர்மறை உருபினால் உணர்த்தப்பட்டாலும் அச்சொல் மட்டுமின்றி இன்னொரு சொல்லும் எதிர்மறையை உணர்த்துவதில் பங்குகொள்கிறது. இதனாலேயே இது உருபனியல் ஆய்விலிருந்து வேறுபட்டுத் தொடரியல் ஆய்வினை மேற்கொள்ள இடந்தருகின்றது. ஆயினும், பல்வேறு வகையில் தொடரியல் நிலையில் பெயர்ச்சொற்களைத் தொடர்ந்து எதிர்மறை, பழந்தமிழில் காணப்பட்டாலும் அவையெல்லாம் இங்கு எடுத்துக்கொள்ளப்படாமல் வினைச்சொற்களைத் தொடர்ந்து வருகின்ற ஒருசில தொடர்களே எடுக்கப்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப் போனால் எதிர்மறையை ஒருசொல்லால் பதிலீடு செய்யக்கூடிய இடங்களில் தொடர்நிலையில் எதிர்மறை வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களே பெரும்பான்மையாகக் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.

இக்கட்டுரையில் எடுத்தாளப்படும் எதிர்மறைத் தொடர்கள் சிறப்பாகச் செய்யுள் வழக்கிற்கு உரியவை என்றும் குறிப்பிடலாம். இவை தற்காலத்தில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படவில்லை. ஆனாலும் மாற்று இலக்கண வடிவங்களில் தொடர்நிலையில் இவைபோன்ற தொடரமைப்புகள் தற்காலத் தமிழில் பேசுபவரின் மனநிலைக்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன. அவை கீழே சுட்டப்படும். இக்கட்டுரையில் குறிப்பிடப்படாத ஏனைய எதிர்மறைத் தொடர்களும் பழஞ்செய்யுட்களில் பயின்றுவந்துள்ளன என்றாலும் அவை பெரும்பாலும் இன்று பேச்சுவழக்கிலும் அவ்வாறே காணப்படுகின்றன. அதனாலேயே அவை இங்கு எடுக்கப்படவில்லை.

இங்குச் சுட்டிக் காட்டப்படுபவை; இரண்டு சொற்களில் இரண்டும் எதிர்மறையினை உணர்த்தும் வகையில் அமைவது (உண்ணேன் அல்லேன் – இவ்வாறு இரண்டு எதிர்மறை வடிவங்கள் அமைந்து பொருளளவில் உடன்பாட்டுப் பொருளினைத் தருகின்றது). இரண்டு சொற்களில் முன்னது உடன்பாடாகவும் பின்னது எதிர்மறை வடிவத்திலும் அமைந்து எதிர்மறைப் பொருளைத் தருவது (உண்பேன் அல்லேன்). இவ்விருவகையில் வரும் சொற்களிலும் பாலியைந்து எதிர்மறையை உணர்த்துவதை அறியலாம். இவ்வாறன்றித் தொழிற்பெயரைத் தொடர்ந்து அதே சொற்பொருள் வடிவமுடைய சொல் எதிர்மறையில் வருவது (உண்ணலும் உண்ணேன்). தொழிற்பெயரை அடுத்து வேறு வடிவத்துடன் எதிர்மறைச்சொல் வருவது (எடுக்கல் செல்லாது) என்று நால்வகையில் அமைந்த எதிர்மறைகளைத் தொடரியல் அணுகுமுறையில் சங்கத் தமிழிலக்கியத்திலிருந்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இரண்டு சொற்களும் எதிர்மறை வடிவத்தில் வருவது

’அறியேம் அல்லேம்; அறிந்தனம் மாதோ! -ஐங். 240

’காணேம் அல்லேம், கண்டனம், கடத்திடை’-கலி. 9: 9

மேற்கண்ட தொடர்களில் இரண்டு சொற்களும் எதிர்மறையில் வந்துள்ளன. ஆயினும் இரண்டு சொற்களும் சேர்ந்து பொருளுணர்த்தும்போது அப்பொருள் உடன்பாட்டில் வருகின்றது. ’அறியேம் அல்லேம்’ என்னுஞ் சொற்கள் எதிர்மறை வடிவங்களில் அமைந்து ‘அறிந்தோம்’ என்னும் உடன்பாட்டுப் பொருளைத் தருகின்றன. மேலும் அத்தொடரில் ‘அறிந்தனம்’ என்ற உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறை வடிவங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. இச்சொல் இல்லாமலும் அவ்விரண்டு சொற்களும் உடன்பாட்டினை உணர்த்துவதை அறியலாம். ஆயினும் உரையாசிரியர்கள், தேற்றத்திற்காக ‘அறிந்தனம்’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று விளக்குகின்றனர். இதே நிலையினைத் தான் இரண்டாவதாக உள்ள ’காணேம் அல்லேம்’ என்ற எதிர்மறைச் சொற்கள் இடம்பெற்ற தொடரிலும் காணமுடிகின்றது. இதுபோன்ற இரட்டை எதிர்மறைச் சொற்கள் இடம்பெற்று உடன்பாட்டினை உணர்த்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பது உரையாசிரியர்கள் கூறியதுபோல் தேற்றம் என்னுங் காரணமுமாகலாம் என்று கொள்ள முடிகின்றது. இவற்றை இரட்டை எதிர்மறை என்றும் அவை இரண்டும் சேர்ந்து உடன்பாட்டை உணர்த்துகின்றன என்றும் சுசீலா (2001: 43) குறிப்பிடுகின்றார்.  இரட்டை எதிர்மறையால் உடன்பாட்டுத் தேற்றம் உணர்த்தப்படுகின்றது என்கிறார் ஏவா வில்டன் (2018: 153).

தற்காலத் தொடர்களுடன் இவற்றை ஒப்பிடும்போது பேசுபவரின் மனநிலையால் தேற்றப் பொருளை உணரமுடிகின்றது. பழந்தமிழ்த் தொடர்களில் முதற்சொல் வினைமுற்றமைப்பாக வும் இரண்டாவது சொல் குறிப்பு எதிர்மறை முற்றாகவும் அமைகின்றன. தற்காலத் தொடரமைப்புகளில் முதற்சொல் வினைமுற்றமைப்பில் வராமல் இலக்கண வடிவங்களில் வேறுபட்டு வருகின்றது.

நான் அவனிடம் பேசாதவன் இல்லை – பேசுகிறவன் (பேசுறவன்)

நான் அவனிடம் பேசாதவன் கிடையாது – பேசுகிறவன் (பேசுறவன்)

மேற்கண்டவற்றுள் வினையாலணையும் பெயரமைப்பில் ஒருசொல்லும் குறிப்பு வினை முற்றில் ஒருசொல்லும் எதிர்மறையில் வந்து பாலியைபிலும் வேறுபடுகின்றன. ஒற்றைச் சொல்லாக வருகின்ற உடன்பாட்டுச் சொல்லும் வினையாலணையும் பெயராகவே வருகின்றது. இங்குத் தேற்றப்பொருளே வெளிப்படுகின்றது. இப்பொருளையே பழந்தமிழ்த் தொடரமைப்புகள் வெளிப்படுத்தும் பொருளாகக் கருதலாம். மேலும்,

நான் அவனிடம் பேசாமல் இல்லை பேசுகிறேன்

எனத் தற்காலத் தமிழில் வினையெச்ச அமைப்புடன் சேர்ந்தும் இரட்டை எதிர்மறை வந்து உடன்பாட்டுப் பொருளைத் தருகின்றது.

மேலும், ராஜம் (1992: 763) தொடரமைப்பில் எதிர்மறைக்காக,

தோன்றாது இருக்கவும் வல்லன்’    -புறம். 315: 5

என்னும் புறநானூற்று வரிகளை எடுத்துக்காட்டி வினையெச்சத்தில் எதிர்மறை வந்துள்ளதைச் சுட்டுகின்றார் (எதிர்மறை வினையெச்சம் + செயவெனெச்சம்). ஆயினும் இத்தொடரை வினையமைப்பில் ஒற்றைச் சொல்லினால் பதிலீடு செய்யமுடியாது.

தற்காலத் தமிழிலும்,

வராமல் இருக்க வேண்டும்,

பேசாமல் இருக்க வேண்டும்

என்னுந் தொடர்களின் பயன்பாட்டைக் காணமுடியும்.

ஒருசொல் மட்டுமே எதிர்மறை வடிவத்தில் வருவது

இரண்டில் ஒருசொல் மட்டுமே எதிர்மறை வடிவத்தில் வர ஒருசொல் உடன்பாட்டில் வந்து இரண்டும் சேர்ந்து எதிர்மறையை உணர்த்துவதாகும்.

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே -குறும். 43:1

விலங்கிரு முந்நீர் காலிற் *செல்லார் -குறும். 130:2

ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன் –புறம். 209: 13

செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்    -புறம். 31:11

’செல்வார்’ என்னும் உடன்பாட்டுச்சொல் ’அல்லர்’ என்னும் எதிர்மறைச் சொல்லுடன் இணைந்து ’செல்லமாட்டார்’ என்னும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றது. ஆயினும் ’செல்வார் அல்லர்’ என்ற இரண்டு சொற்களுக்குப் பதிலாகச் ’செல்லார்’ என்ற ஒற்றைச் சொல்லாலும் எதிர்மறையை உணர்த்தும் வகையில் பதிலீடு செய்ய முடியும். மேலும் அந்த ஒற்றை எதிர்மறைச் சொல்லும் குறுந்தொகையில் இடம்பெற்றிருப்பது மேலே காட்டப் பட்டுள்ளது. இதுபோலவே ‘இரங்குவேன் அல்லேன்’, ’செல்வேம் அல்லேம்’ என்ற தொடர்களையும் கொள்ள வேண்டியுள்ளது. எதிர்மறையை உணர்த்தத் தொடர்ச்சொற் களுக்குப் பதிலாக ஒற்றைச் சொல்லால் எதிர்மறை சில இலக்கியங்களில் பதிலீடு செய்யப்பட்டிருப்பதைக் காணும்போது தொடர்ச்சொற்கள் யாப்பமைதிக்காகவேயன்றிப் பேசுவோரின் பல்வேறுபட்ட மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கிலுங்கூடச் சங்க இலக்கியத்தின் சிலவிடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிகின்றது. மேற்கண்ட இரண்டு வகைகளிலும் இரண்டு சொற்களும் பாலியைபு கொண்டனவாக அமைந்து எதிர்மறையை உணர்த்துவதைக் காணலாம். இவ்வகையில் வருகின்ற எதிர்மறைத் தொடர்களை ‘இறப்பல்லாக்கால உடன்பாட்டுத் தொடர்கள் + அல் எனப் பகுப்பாய்வு செய்கிறார் சுசீலா (2001: 31).

தற்காலத் தமிழிலும் இவைபோன்ற எதிர்மறைத் தொடர்களை வேறுபட்ட இலக்கணக் கூறுகளுடன் பாலியைபு இல்லாமல் காணமுடியும். வினையாலணையும் குறிப்புவினை முற்றுடன் முடியுமாற்றைக் காணமுடியும்.

அவன் படிப்பவன் இல்லை

அடித்தாலும் அவன் திருந்துபவன் இல்லை

பணம் கொடுத்தாலும் அவர் பொய்சொல்பவர் இல்லை.

போன்ற தொடர்கள் சூழலுக்கேற்பச் சொல்வோரின் பல்வேறு வகையான மனநிலையைக் காட்டுகின்றன. இந்த நோக்கில்கூட பழந்தமிழிலும் மனநிலைகளை வெளிப்படுத்தப் புலவர்கள் இவைபோன்ற சிலதொடர்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருத முடியும்.

மேலும், கோதண்டராமன் (2010: 275) ”இறப்பு அல்லது இறப்பல்லா உடன்பாட்டு வினைமுற்று அமைப்புடன் அல்லன், அல்லள், அல்லர் போன்றவை இணைந்து வரும். ஆனால் செய்யும் வாய்பாட்டுடன் வாராது” எனக் குறிப்பிடுகின்றார். ’செய்யும்’ என்னும் சொல்லுடன் ’அல்லது’ என்னுஞ் சொல் இணைந்து வரும்போது (செய்யுமல்லது) அந்த இணைவு பெற்ற வடிவம் எதிர்மறையை உணர்த்தாமல் செய்வதல்லது என்பது போல் ‘தவிர’ என்ற பொருளை உணர்த்துவதனால் அவர் செய்யும் வாய்பாட்டின் விடுபாட்டினைக் குறிப்பிட்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

இரண்டு சொற்களும் ஒரே சொற்பொருளில் வந்து இரண்டாவது சொல்லில் எதிர்மறை

இரண்டு சொற்களும் வடிவத்திலும் பொருளிலும் ஒற்றுமைப்பட்டு இரண்டாவது சொல் எதிர்மறையாக வந்து இரண்டும் சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தும் நிலையைச் சங்கத்தமிழில் காணமுடியும். இவற்றில் முதற்சொல் –’உம்’ சேர்ந்த தொழிற்பெயராகவும் இரண்டாவது சொல் திணை-பால் உணர்த்தும் எதிர்மறைச் சொல்லாகவும் அமைந்து வருகின்றன.

’இனியான்

                        உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்’ -கலி. 23: 6-7

’உண்ணலும்’ என்று உடன்பாட்டுத் தொழிற்பெயராகவும் ‘உண்ணேன்’ என்று எதிர்மறை முற்றாகவும் வந்து இரண்டும் இணைந்து எதிர்மறைப் பொருளான ‘உண்ணமாட்டேன்’ என்பதை உணர்த்துகின்றன. இதே முறையினைப் பின்னர் உள்ள ‘வாழலும் வாழேன்’ என்பதற்கும் பொருத்த வேண்டும். ஆயினும் ‘உண்ணேன், வாழேன்’ என்னும் வினை வடிவங்கள் ‘செய்’ என்னும் வாய்பாட்டு வடிவமாக வந்து ’உண்ணலைச் செய்யேன், வாழலைச் செய்யேன்’ என்று வரவேண்டும் அல்லது ’உண்ணல், வாழல்’ என்னும் வினைகளின் உண்மையான வினைவடிவ முற்றுகளான ’உண்ணேன், வாழேன்’ என்றும் வரலாம் என நச்சினார்க்கினியார் குறிப்பிடுகின்றார். ”வனைந்தான் என்பது ‘குடத்தை வனைதலைச் செய்தான்’, என்று பொருள் தந்துழிச் ’செய்தான்’ என்றதன் தகரங் காலங் காட்டித் தொழிலைத் தோற்றுவித்தவாறும், ‘வனை’ என்னும் வினை காலங் காட்டாமல் நின்றவாறும், ‘வனைதல்’ என விரிந்துழியும் புடைபெயர்ச்சி மாத்திரம் அன்றிக் காலங் காட்டாமல் நின்றவாறும் உணர்க. காரியத்திற்கு யாண்டுங் காலங் காட்டும் எழுத்துக்களோடு கூடிய ‘செய்’ என்பதே வாசகம் என்று உணர்க. இக்காரிய வாசகம், இவ்வாறன்றி ஒருசொல் முழுவதும் தானாய் நிற்பனவும் உள. அவை, ‘கறைமிட றணியலும் அணிந்தன்று’ (புறம். 1:5) என்புழிக் ‘கறை மிடற்றை அழகு பெறுதலையுஞ் செய்தது’, எனவும், ‘இனியான் உண்ணலும் உண்ணேன்’ (கலி. 23:7) என்புழி, ‘இனி யான் சோற்றை உண்ணுதலையுஞ் செய்யேன்’, எனவும், ‘வாழ்தலும் வாழேன்’ (கலி. 23:7) என்புழி, ‘இனியான் உயிரை வாழுதலையுஞ் செய்யேன்’, எனவும் வந்தவற்றுள் ‘அணிந்தன்று, உண்ணேன், வாழேன்’ என்பன முழுதும் காரிய வாசகமாயே நின்றவாறு காண்க” (நச். வே. மயங்கியல். 29).

அவர் கூற்றுப்படி இங்கே ’உண்ணல்’ என்பதும் ’வாழல்’ என்பதும் ’உண்ணுதல், வாழ்தல்’ என அகநிலைச் செயப்படுபொருளாக அமைந்து ’உண்ணுதலைச் செய்யேன்’ எனவும் ’வாழ்தலைச் செய்யேன்’ எனவும் வந்துள்ளன. மேற்கண்ட தொடரமைப்பை உருபனியல் அடிப்படையில் ‘வினையடி + சூனிய உருபு என்று சுசீலா (2001: 30) பகுக்கின்றார்.

இவ்வாறு இத்தொடரமைப்பு எதிர்மறையில் வருவது போலவே எவ்வித மாறுபாடுமின்றி உடன்பாட்டிலும் வருவதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகின்றது.

தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் -கலி. 55: 20

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்    –நற். 106:1

உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே           -ஐங். 36:3

மேற்கண்டவற்றுள் இரண்டாவதாக வருகின்ற தொழுதான், தொட்டான், அறிதி, அமைகுவம் என்பன ‘செய்’ என்னும் வாய்பாட்டில் அடங்குவனவாகும்.

மேற்கண்டவற்றினைப் போலவே’

’பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’            -புறம். 192: 12-3

என்னுந் தொடரினையும் அவற்றுடன் இணைக்க முடியும். ஆனால், முன்னர் குறிப்பிட்டவை ஒரே வகையான சொல்லமைப்பினை உடையவை. இத்தொடர்களில் அமையும் வடிவங்கள் வேறுபட்டவை. ஆயினும் இவற்றையும் ‘வியத்தலும் செய்யோம்’ ’இகழ்தலும் செய்யோம்’ என்று பதிலீடு செய்ய முடியும். மேலும் ஒற்றைச் சொற்களாக ‘வியந்திலம், இகழ்ந்திலம்’ எனவும் பதிலீடு செய்ய முடியும். இவைபோன்ற வடிவங்களும் இவற்றிற்கு இணையான வடிவங்களும் தற்காலத் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும்,

அனுப்பவும் செய்தான் (அனுப்பினான்)

அனுப்பவும் இல்லை (அனுப்பவில்லை)

அனுப்பவும் மாட்டான் (அனுப்பமாட்டான்)

என்று வினையெச்சத்தைத் தொடர்ந்து உடன்ப்பாட்டு எதிர்மறைத் தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றுள் அமையும் உடன்பாட்டுத் தொடர் வட்டாரவழக்கு மொழி யாகும். பொதுவாகப் பயன்படுத்துவதில்லை.

இரண்டு வேறுபட்ட வடிவங்கள் வந்து இரண்டாவது சொல்லில் எதிர்மறை

இரண்டு சொற்களில் முதற்சொல் தொழிற்பெயராகவும் இரண்டாவது சொல் ’செல்’ என்னும் வாய்பாட்டில் அமைந்த எதிர்மறைச் சொல்லாகவும் அமைந்து இரண்டும் இணைந்து எதிர்மறையினை உணர்த்துகின்றன.

இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் –புறம். 143: 13

(அப்பொழுது இன்னாதாகச் சொரியப்பட்ட கண்ணீரை; ஒழித்தல் மாட்டாளாய்)

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல        -கலி. 38: 5

(கைகளையும் எடுக்க முடியாமல் அலறியது போல)

பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்-நற்.308: 5

(தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை)

எதிர்மறையினை உணர்த்துஞ் சொல்லானது வினைமுற்றாகவும் வினையெச்சமாகவும் அமைந்து வந்துள்ளது. இங்கெல்லாம் ’செல்’ என்னும் வினை தன் இயல்பான பொருளை இழந்து ’முடிதல்’ அல்லது ’இயலுதல்’ என்னும் பொருளில் வந்து எதிர்மறையை உணர்த்துகின்றது. தற்காலத் தமிழில் இதன்பயன்பாடு வேறு இலக்கணக்கூறின் மூலம் நிகழ்கிறது.

எடுக்க முடியாது

பொறுக்க முடியாது

எனப் பழந்தமிழில் முதற்சொல்லாக அமையுந் தொழிற்பெயர் தற்காலத் தமிழில் வினை யெச்சமாக மாற்றமடைந்து ’முடியாது’ என்னும் எதிர்மறையைத் தழுவுகின்றது. தொழிற் பெயரின் தன்மை வினையெச்சத்திற்கும் உண்டு என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்தாகும். மீனாட்சிசுந்தரன் (1974: 127) ’செய வேண்டும் செயல் வேண்டும் என மாறாட வருவதால் செய என்பதும் தொழிற்பெயரே எனக் கொள்ள இடமுண்டு’ என்கிறார்.

 எதிர்மறைப்பெயரெச்ச அடுக்கு

பெயரெச்சமும் பெயரடையும் உடனே பெயர்ச்சொல்லினைத் தழுவி வருவதே பெரும்பான்மை யாகும். ஆனால் வினையெச்சமும் வினையடையும் இவ்வாறன்றிச் சிலசொற்களை இடையிட்டுப் பின்னர் வினைச்சொற்களைத் தழுவிவரும். அருகிய நிலையில் பெயரெச்சமானது இன்னொரு பெயரெச்சத்தினைத் தழுவி அதன்பின்னர் பெயரினைத் தழுவுவதைத் திருக்குறளில் காணமுடிகின்றது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்                -குறள். 448

இங்கு ’இல்லாத ஏமரா’ என்னும் இரண்டு எதிர்மறைப் பெயரெச்சங்கள் ’மன்னன்’ என்னும் பெயரைத் தழுவும் வகையில் அமைந்துள்ளன.

எதிர்மறை –பொருள் மாற்றம்

ஒரே தொடரில் சொல்லானது எதிர்மறை வடிவத்திலும் உடன்பாட்டு வடிவத்திலும் வந்து எதிர்மறையில் இருக்கின்ற வடிவம் எதிர்மறையை உணர்த்தாமல் வேறுபொருளை உணர்த்துவதைக் காண முடிகின்றது.

‘பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி’ -சிலம்பு. 26: 50

இங்குப் ’பூவா வஞ்சி’ என்பது ‘கருவூர்’ என்று அரும்பத உரையாசிரியரால் பொருளுரைக்கப்படுகின்றது. எனவே அது ‘பூவாத’ என்னும் எதிர்மறைப் பொருளைத் தரவில்லை. இவ்வகையிலமைந்த வடிவங்களை உரையாசிரியர்கள் குறிப்பு, வெளிப்படை என்று குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற வடிவங்கள் பழந்தமிழில் பரவலாகக் காணப்படுகின்றன.

முடிவாகச் சில

பல்வேறு வகையான எதிர்மறைத் தொடர்கள் சங்க இலக்கியத்தில் காணக் கிடப்பினும் சிறப்பாகச் செய்யுள் வழக்கிற்கே உரிய, தற்காலத் தமிழில் பயன்பாட்டில் இல்லாத அல்லது இலக்கண வடிவங்களில் மாற்றம்பெற்று வருகின்ற ஒருசில தொடர்களே இங்கு எடுத்துக் காட்டப்பெற்றன. மேலும், எதிர்மறையை உணர்த்த ஒரு சொல்லே போதும் என்ற நிலையிலும் தொடரமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தியிருப்பதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகின்றது. குறிப்பாக, மேற்கண்ட இடங்களில் எதிர்மறையை உணர்த்தத் தொடர்களைப் பயன்படுத்தியிருப்பது உயர்நிலைச் செய்யுள் வழக்கு என்று கொள்ள முடிகின்றது. மேலும் புலவர்களின் சிறந்த அறிவுத் திறத்தையும் காட்டுகின்றது. ஏனெனில் பொதுவான எதிர்மறைத் தொடர்களிலிருந்து இத்தொடர்கள் வேறுபட்டு அமைவது மேற்கண்ட அனுமானங்களுக்கு இடந்தருகின்றது. தற்காலத் தமிழ்த் தொடர்களுடன் இவற்றை ஒப்பிடும்போது மக்களின் பல்வேறு வகையான மனநிலைகளை வெளிப்படுத்துவதற்கு இத்தொடர்களின் பயன்பாடு அமைந்திருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. பெயர்ச்சொற்களையன்றி, வினையையும் தொழிற்பெயரையும் உள்ளடக்கி வருகின்ற எதிர்மறைத் தொடர்களை ஒரு சொல்லால் பெரும்பாலும் பதிலீடு செய்ய இயலும். அவ்வகையில் தொடருக்கு இணையான ஒற்றைப் பதிலீட்டுச் சொற்கள் சில, சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ள நிலையையும் மேலே கண்டோம்.

தொடரில் இரு சொற்களும் எதிர்மறை என்ற நிலையில் பயன்படுத்தியிருப்பது செய்யுள் நடைக்காக என்பதையும் உரையாசிரியர்களின் கருத்துப்படி தேற்றத்திற்காக என்பதையும் இவைபோன்ற தொடர்கள் பழங்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்திருக்கலாம் என்பதையும் உணர முடிகின்றது. இரண்டு சொற்களில் ஒன்று எதிர்மறை என்று இருக்கின்ற நிலையில் அதற்கு யாப்புச் சீர்மையும் ஒரு காரணமாக அமையலாம் என்பதையும் அறிய முடிகிறது. ஆயினும் ‘உண்ணலும் உண்ணேன்’ என்பதுபோல் ஒரே வாய்பாட்டில் உள்ள சொற்களைப் பயன்படுத்தியிருப்பது பிற செயல்களன்றி ஒரே செயலில் கவனத்தைச் செலுத்தும் வெளிப்பாட்டின் அழுத்தமுங் காரணமாக இருக்கலாம்.

இவ்வாறு சங்க இலக்கியத்தில் காணப்படும் பல்வேறு வகையான எதிர்மறைத் தொடரமைப்புகளன்றி மேற்கண்ட தொடரமைப்புகளின் வாயிலாகவும் எதிர்மறையை வெளிப்படுத்திருப்பது சங்க இலக்கியத்தில் புலவர்களின் மொழிப்பயன்பாட்டு, கட்டமைப்புச் சிறப்புகளுள் ஒன்றாகக் கருத முடியும்.

துணைநூல்கள்

  1. மீனாட்சிசுந்தரன், தெ.பொ. 1974, ‘உரிச்சொல்’ இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் (பதி. அ.அகத்தியலிங்கம், பாலசுப்ரமணியன்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
  2. Kothandaraman, R. 2010, Dynamics of Tamil Finite System, Central Institute of Classical Tamil, Chennai.
  3. Rajam, V.S. 1992, A Reference Grammar of Classical Tamil Poetry, American Philosophical Society, Philadelphia.
  4. Suseela, M. 2001, A Historical Study of Old Tamil Syntax, Tamil University, Thanjavur.
  5. Wilden Eva, 2018, Grammar of Old Tamil for Students, Ecole francaise d’Extreme-Orient.

=======================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

பழந்தமிழில் எதிர்மறை வினை வடிவங்களைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. இந்த வடிவங்களில் இரண்டு வகை உண்டு: உருபால் எதிர்மறைப் பொருளைக் குறிப்பது (synthetic), சொல்லால் எதிர்மறைப் பொருளைக் குறிப்பது (analytic). இவற்றில் இரண்டாவது வகை சங்க காலத் தமிழில் பயன்படுவதைப் பற்றியது இந்தக் கட்டுரை. இன்றைய தமிழிலும் இந்த இரண்டு வகையும் உண்டு: வராது, வரவில்லை. மற்றைய திராவிட மொழிகளிலும் இரண்டாவது வகை உண்டு. இந்தக் காரணங்களால் இந்த வகை சங்க இலக்கியத்தில் யாப்பு காரணமாக வருகிறது என்னும் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. வரலாற்று நோக்கில் இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த ஒரு நூலைத் தவிர வேறு எந்த ஆராய்ச்சியையும் இந்தக் கட்டுரை கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு சில ஆராய்ச்சிகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

  • P. Meenakshisundaran, A History of Tamil Langauge
  • S. Rajam, A Reference Grammar of Classical Tamil
  • Sanford Steever From Analysis to Synthesis (This covers all Dravidian languages)
  • Thomas Lehman has published a book in German on the grammar of old Tamil, a summary of it can be found in English in a chapter by him in the book Dravidian Languages edited by Sanford Steever

There ae so many publications of grammars of individual Sangam works.

இவற்றில் எதையும் கட்டுரை மேற்கோள் காட்டவில்லை. ஆய்வில் ஆய்வுப் பொருள் தொடர்பான ஆய்வு வெளியீடுகளைத் தேடல் முதல் படி. அதன் பிறகு வெளிட்டுள்ள முடிவுகளை வெட்டியோ, ஒட்டியோ, திருத்தியோ புதிய கருத்துகளைச் சொல்வதுதான் ஆராய்ச்சி.

இந்தக் கட்டுரையின் ஒரு பிழை மேலே சொல்லப்பட்டது. இன்னொரு பிழை இது. தவிர என்ற பொருளில் வரும் செய்வது அல்லது, செய்வான் அல்லான் என்பது போல் வினை-வினை அமைப்பு அல்ல. செய்வது வினைப்பெயர்; பெயரும் இந்த இடத்தில் வரலாம்: நல்வினை அல்லது இரண்டையும் ஒன்றுபோல் விளக்குவது பிழை. உண்ணலும் உண்ணேன் என்பது போன்ற வடிவங்களை உண்ணலும் செய்யேன் போன்ற வடிவங்களுக்கு இணையாகப் பார்க்கும்போது இன்றைய தமிழிலும் இப்படியான இணைவடிவங்கள் இருப்பதைக் காட்டலாம்: அடிக்கவும் அடிப்பான், அடிக்கவும் செய்வான்.

மேற்கண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை திருத்தி எழுதப்பட்டிருக்கிறது.

=======================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *