-இலந்தை சு. இராமசாமி 

ஆற்றுப்படலம்

பொதிகையில் சாரல் வீழப்
பொழிந்திடும் அருவிக் கூட்டம்
விதவித ஓசை யோடே
வீழ்ந்திடும், மூலி கைகள்
பதமுடன் தூக்கி வந்து
பாய்ந்திட, என்றென்றைக்கும்
புதுமையாய் ஓடும் ஆறு
பொருநையைப் பாடு கின்றேன். (12)

விண்ணினை வாரி வந்து
வீறுடன் விளங்க , இந்த
மண்ணிலே தருவன் என்றே
மனத்திடைக் கொண்டதைப்போல்
கண்ணிலே நல்ல வண்ணம்
காணவே பொதிகை மேட்டில்
பண்ணினைப் பாடிக்கொண்டு
பாய்ந்திடும் பொருநை வெள்ளம் (13)

பச்சைமா மலையின் வண்ணம்
பளிச்சிடும் திருமா லைப்போல்
உச்சிமேல் வெள்ளை நீத்தம்
உணர்த்திடும் அரனின் தோற்றம்
இச்சையாய் இரண்டு பேரும்
இணைந்தருள் செய்து நிற்க
விச்சையோ என வியக்க
மேவிடும் பொருநை வெள்ளம் (14)

தொன்மையால் பொருள்கள் ஏற்றுச்
சுமப்பதால், பாசம் காட்டும்
தன்மையால், மக்கள் தாகம்
தணிப்பதால், தெளிவு கொண்ட
நன்மையால், காலம் தாண்டி
நடப்பதால், உரம்கொ டுக்கும்
வண்மையால் தமிழைப் போல
வழங்கிடும் பொருநை வெள்ளம் (15)

கன்றெனக் குதிக்கும் , சட்டை
கழற்றிய அரவம் ஊர்ந்து
சென்றென நடக்கும், பின்னர்
சினைப்பசு வென்னப் போகும்
குன்றினை வளைக்கும், மக்கள்
கும்பியை நிறைக்கும், வாழ்வில்
ஒன்றிய உறவாய் நெஞ்சில்
உறைந்திடும் பொருநை வெள்ளம் (16)

தேடிடும் எதையோ காணச்
செல்வது போல வேகம்
ஓடிடும், வரவு கூறி
ஓமெனக் குரலெ டுத்தே
பாடிடும், பளிங்கு போலப்
பரிந்திடும், கரைகள் எங்கும்
கோடிடும், மக்கள் நெஞ்சில்
குழைந்திடும் பொருநை வெள்ளம். (17)

தத்தள தளத ளென்றே
தாளமும் போடும் ஓர்பால்
மத்தளம் இசைக்கும் ஓர்பால்
மௌனமே காட்டும் ஓர்பால்,
வித்தைகள் காட்டிக் கீழும்
மேலுமாய்க் குதிக்கும் ஓர்பால்
இத்தனை வயதென் னாத
இளமையே பொருநை வெள்ளம் (18)

மூலிகை தடவி மோந்து
முன்வரும் நாற்றி லெல்லாம்
பாலிகை தெளித்துப் பொங்கி
பாய்ந்திடும் நதியின் பக்கம்
நாலுகைக் கொண்ட வேழம்
நற்றுணைத் தாகம் தீர்க்கும்
சாலிகள் நீர் குடிக்கத்
தழைத்திடும் பயிர்கள் கூட்டம் (19)

வீழினும் நன்மை செய்யும்
மேலவன் போல, மண்ணில்
தாழினும் நன்மை செய்யத்
தழைத்திடும் பொருநை நீத்தம்
பாழினைக் கூட நல்ல
பசுமையாய் மாற்றி, வாழக்
கூழினை நல்கி, மக்கள்
கும்பிடப் பொங்கி ஓடும் (20)

பயிர்களில் ஜீவன் தூவிப்
படைப்பதால் பிரமன், பின்னர்
உயிர்த்தவை காப்ப தாலே
ஓங்கிடும் திருமால், பொங்கும்
துயர்தனை மாய்த்து நன்மை
சூழ்வதால் சிவனார் என்றே
செயத்தகும் முத்தொழில்கள்
செய்துமும் மூர்த்தி ஆகும் (21)

தமிழொடு பிறந்த நீத்தம்
சரித்திர மாகும், உண்ணும்
அமிழ்தென ஊட்டம் நல்கும்
அதன்வழி பசுமை ஆக்கும்
குமிழியிட் டோடும், தென்றல்
கூடவே சிந்து பாடும்
இமிழ்திரைக் கடலில் கூடி
எல்லையைக் கடந்து போகும் (22)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *