-திருச்சி புலவர் இராமமூர்த்தி
————————————————–

இறைவன் உலகில் முதன்முதலாக எழுந்தருளிய தலம் திருவாரூர் ஆகும். இங்கும் தில்லையிலும் சிவபிரான் முதலில் எழுந்தருளினார் என்று தேவாரம் பாடும். திருவாரூரில் பெருமானுக்கு அருகில் உள்ள திருமூலட்டானமும், தில்லையில் நடராசர் சந்நிதிக்கு அருகில்உள்ள திருமூலட்டானமும் இறைவன் மிகவும் முற்காலத்தில் தாமே தோன்றிய தலம் ஆகும் .தில்லையில் நடராசர் எழுந்தருளிய சபைக்கு வடபால் வேறாகத் திருமூலநாதர் எழுந்தருளி யிருக்கும் திருமூலட்டானம் போல, இங்குத் தியாகேசர் எழுந்தருளியிருக்கும் இடம் வேறு; புற்றிடங்கொண்டார் எழுந்தருளியிருக்கும் திருமூலட்டானம் வேறு. இதைக்கருதியே சேக்கிழார்,

‘’புற்றிடங் கொண்ட புராதனன்!’’ என்று பாடுகிறார்.புற்றிடங் கொண்ட புராதனனை-புற்றிலே என்றைக்கு வெளிப்பட எழுந்தளினார் என்றறியக் கூடாத படி மிகப் பழமையாயுள்ளவன்.

“மாடமொடு மாளிகைகண் மல்கு தில்லை
மணிதிகழு மம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே“ என்றும்,

“தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே“ என்றும்

வரும் திருத்தாண்டகங்களின் பொருளை உற்று நோக்குக. புராதனன் – மிகப் பழமை வாய்ந்தவன்.

“முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி“ – (திருத்தாண்டகம்) “முன்னைப் பழம்பொருட்குப் முன்னைப் பழம்பொருளே“ – (திருவாசகம்). என்று போற்றப் பெற்ற புற்றிடங் கொண்டவனும், பழமையுடையவனும் என்று பொருள் கூறுவர். மக்கள், தேவர், நரகர் ஆகிய அனைவருக்கும் தம்மையன்றி வேறு பற்றுக் கோடு இல்லாத பெரும்பொருள் என்று இதனைச்சேக்கிழார் சிறப்பிப்பார் . இப்பிரானை சுந்தரர் எவ்வாறுவணங்கினார் என்று மேலும் கூறினார்!

சுந்தரர் தியாகேசப் பெருமானின் சந்நிதிக்கு அருகில்உள்ள திரு மூலட்டானர் திருமுன்பு சென்று முதலில் வணங்கினார் . அப்போது அவர் தம்உடலின் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பட வீழ்ந்து வணங்கும் ‘’அட்டாங்கம் ‘’ , மற்றும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் படக் குனிந்து வணங்கும் ‘’பஞ்சாங்கம்’’ என்ற இருவகை விதிகளின்படி வணங்கினார்! அதனால் அவரது ஆசை அளவு கடந்து பெருகியது! இறைவன் திருவடியை அடைந்த ஆனந்தம் உண்டாயிற்று. அந்த இன்பப் பெருக்கில் முழுகியமையால் அவர்தம் ஐம்புலன்களும் ஒன்றிய பேரின்பத்தினுள் திளைத்தார். இதனைச் சேக்கிழார்,

‘’அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி முடிவிலாக் காதல் முதிர ஓங்கி
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி ன்நின்றே’’

என்று பாடுகிறார். அந்த நிலையில் அவர் இனிய பண் நிரம்பியதும் , வண்மை பொருந்தியதும் ஆன தேவாரப் பதிகம்பாடினார்! இதனை,

‘’இன்னிசை வண்டமிழ் மாலைபாட’’

என்று சேக்கிழார் பாடுகிறார். அட்டாங்கமாக வணங்கும் முறை – தலை (1), கைகள் (2),காதுகள் (2), நெற்றி (1), கால்கள் (2) ஆக எட்டு உறுப்புக்களும் நிலத்திற் பொருந்துமாறு வணங்குதல். பஞ்சாங்கமாக வணங்கும் முறை, தலை 1 கைகள் 2 பாதங்கள் 2 ஆகிய ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பதிய வணங்கும் முறை.

முன் அட்டாங்கமாகவும் பின் பஞ்சாங்கமாகவும் ஆக இவ்வாறு மூன்றுமுறை ஐந்து முறை முதலாக வணங்குதல் வேண்டுமென்பது விதி. இவ்விரண்டும் சேர்ந்தது ஒரு வணக்கமாதலின் அட்டாங்க பஞ்சாங்கமென்று சேர்த்துக் கூறினார். அவற்றில் முன்னர்ச் செய்யப்பெறுவதாதலின் அட்டாங்கத்தை முதலில் வைத்தார். (பெண்கள் அட்டாங்க வணக்கம் செய்யலாகாது.)

திருக்கோயிலிலே இறைவனைத் தவிர வேறு ஒருவரையும் அஞ்சலி செய்யாமை, தூபி முதலியவற்றின் நிழலை மிதியாமை முதலிய பல விதிமுறைகளையும் உள்ளிட்டு ‘முறைமையினால்’ என்றார்..

அன்பு பெருகி உள்ளம் அதில் சிக்குண்டு அலைந்து மேன்மேல் முதிரவே, ஆன்மாக்கள் எல்லாம் நாயகிகள் ஆகவும், இறைவன் அவர்களது நாயகனாகவும் உள்ள பாவனை முதிர்ந்தது; ஆகலின் “நாயகன் சேவடி எய்தப்பெற்ற இன்ப வெள்ளம்“ என்று கூறினார்.

“நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும்“ எனக் கூறுவதும் காண்க. நாயகன் சேவடி தைவருதல் (தடவுதல் – வருடுதல்) நாயகியின் இயல்.

“செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கமலக் கரத்தால்
வருடச் சிவந்தன“ என்பது (திருமாற்பேறு) திருவிருத்தம்.

நாயகன் – என்பதற்கு – இயவுள் – இயங்குபவன் என்றும், ஞான நாயகன் – என்பதற்கு உயிரறிவைச் செலுத்துபவன் – என்றும் பொருள் கூறுவர். என்று இவ்வாறெல்லாம் உரைகாரர்கள் பொருள் கூறினர்! இனி முழுப் பாடலையும் கற்று மகிழ்வோம்.

‘’அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி முடிவிலாக் காதல் முதிர ஓங்கி
நன்புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்ப வெள்ளத் திடைமூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் பாட ‘’

இப்பாடலில் சுந்தரர் முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமண மண்டபத்தில்

‘’அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் ‘’

என்று அருளாணை இட்டதை எண்ணி மகிழ்ந்தமை கூறப் பெறுகிறது.

நன்புலனாகிய ஐந்தும் ஒன்றி – “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள“ என்று கூறியபடி ஐம்புலனும் ஒன்றித்து அனுபவிக்கப் படுவதோர் இன்பம் உண்டு; அது சிறியது; சிற்றின்பம் என்பர். ஆயின், இங்குக் குறித்த இதுவும் ஐம்புலன்களும் ஒன்றித்துஅனுபவிக்கப்பெறுவதாயினும் அவ்வாறின்றிப் பெரிதாய், நன்மை தருவதாய், அழியாததாய் உள்ளது; ஆதலின் நன்புலனாகிய ஐந்தும் என்றார். ஐம்புலன்களே உலகவழிச் செல்லும்போது தீமையும், இறைவன்வழிச் செல்லும்போது நன்மையும் பயப்பனவாம். என்க.

இன்ப வெள்ளம் – ஏனைச் சிற்றின்பம்போ லல்லாது இன்பத்திலே கரைகாண முடியாத பெருமை யுடைத்தாதலால் வெள்ளம் என்றதாம். இதனை அனுபவித்தல் கன்மேந்திரிய ஞானேந்திரியங்களுக்கும் அந்தக்கரணங்க ளுக்கும் ஆன்மபோதத்துக்கும் எட்டாது இவை ஒருமைப்பாடு பெற்றவழி- ஐந்தும் ஒன்றி – அனுபவிக்கப்படுவதாதலின் மூழ்கி என்றார்.

இப்பாடலில் கூறப்பெறுவன யாவும் இறைவன் திருவாக்கே யாகும். பாட என்ற வினையெச்சம் அடுத்த பாடலுடன் வினை முடிபு கொள்ளும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *