இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (297)

0

-சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வுலகில் மனிதராகப் பிறக்கும் எவரும் எத்தகைய சூழலில் , எங்கே, எப்படி பிறக்கப் போகிறோம் என்று தாமே கணித்துக் கொண்டு பிறப்பதில்லை. எமது கட்டுப்பாடில்லாமல் எங்கோ ஓரிடத்தில் விழுகிறோம். விழுவது பச்சைவளமா? இல்லை பாலைவனமா? என்பதும் எமது கையில் இல்லை.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறும் சமூகத்திலும், நீரின்றி வாடும் வறண்ட நாடுகளிலும், போரில் சிக்குண்டு சிதறியோடும் சமூகங்களிலும் வாழும் பலரின் நிலைகளை அன்றாடம் செய்திகளாகக் கேட்டும், காணொளிகளாகத் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அறிந்துகொண்டிருக்கிறோம். தமது உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்நிய நாடுகளில் புகலிடம் தேடியோடும் பயணத்தில் எந்த உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடுகிறார்களோ அந்த உயிரை இழந்து விடுவதையும் பார்க்கிறோம்.

இத்தகையதோர் அகிலத்தில் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு நாட்டில் வாழும் ஒருவரின் வாழ்க்கை, ஓப்பிட்டு முறையில் எத்தனையோ வகைகளில் மேலானதாக இருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவையிருப்பினும் ஒவ்வொரு மனிதரினதும் அடிப்படை வாழ்வாதரத் தேவைகளுக்காக அவர்கள் தவிக்க வேண்டியதொரு நிலை ஐக்கிய இராச்சியத்தில் அரிது என்றே கூற வேண்டும்.

இத்தகைய ஒரு காலகட்டத்திலே தான் இன்றைய ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் லண்டன் ஒரு பாரிய பிரச்சனையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அது என்ன என்கிறீர்களா? பல இளம் உயிர்களைக் காவுகொள்ளும் வன்முறைச் சம்பவங்களே அவை. கடந்து போன இந்த வார விடுமுறைக்குள் மட்டும் கத்திக்குத்துச் சம்பவத்தில் நான்கு உயிர்கள், லண்டனைச் சுற்றிய பகுதிகளில் பலியாகியுள்ளன. இவற்றில் எட்டுமாத கர்ப்பவதியாக இருந்த 27 வயதுப் பெண்மணியும் அடங்குகிறார். அப்பெண்ணின் உயிர் போனநிலையில் அங்கு வந்த அவசர மருத்துவ நிபுணர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவைக் காப்பாற்றியுள்ள போதும் அதன் நிலமை இன்றும் கவலைக்கிடமாக உள்ளது என்றே தெரிய வருகிறது.

அப்படியே அக்குழந்தை உயிர் பிழைத்து நலமடைந்தாலும் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தனது தாயை வன்முறைக்கு பலிகொடுத்த அக்குழந்தை எத்தகைய ஓர் மனநிலையுடன் வாழும் என்பது கேள்விக்குறியே!

வரலாற்றுக் குறிப்புகள் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை 2018ம் ஆண்டில் வன்முறையோடு சம்பந்தப்பட்ட கொலைகள் கடந்த பத்து வருடங்களில் அதியுயர்ந்த எண்ணிக்கையை அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஒன்பது வயதுச் சிறுவர்கள் கூட தமது பதுகாப்புக்காக என்று கத்திகளை தம் வசம் வைத்திருக்கும் ஒரு நிலையை இன்றைய இங்கிலாந்து கண்டு கொண்டிருக்கிறது.

எங்கே? எதற்காக? எவர் மத்தியில் இவ்வன்முறைச் சம்பவங்கள் தலை விரித்தாடுகிறது என்பது பல புத்திஜீவிகள் மத்தியில் அலசப்பட்டு வருகிறது. பதின்ம வயதுகளில் இருக்கும் இளைய சமூகத்தினரிடம் அதுவும் பெரும்பான்மையாக கறுப்பின சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கிடையிலே நடக்கும் ஒரு குழுநிலை மோதல் போன்றும் தோற்றமளிக்கிறது. போதை வஸ்து வியாபாரத்தினைக் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல குழுக்களுக்கிடையே நடக்கும் அதிகாரப் போரோ? என்று கூட இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன.

இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் லண்டன் மேயர் திரு சாடிக் கான் உட்பட பலரும் தவிப்பது போலத் தெரிகிறது. இதற்கான பலமான குற்றச்சாட்டு, இங்கிலாந்து அரசின் மீது சாட்டப்படுகிறது. இங்கிலாந்து அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து இலாக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இதனால் அதிகமான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது இங்கிலாந்தின் போலிஸ் இலாகா என்பது உண்மையே. இதன் காரணமாக இங்கிலாந்து மெட்ரோபோலிட்டன் போலிஸ் படையில் சுமார் 20,000 போலிஸ் உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டனர். வன்முறைச் சம்பவங்களைக் குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

போலிஸ் உத்தியோகத்தர்களின் ஆட்குறைப்பு இதற்குக் காரணமல்ல; இருக்கும் போலிஸ் உத்தியோகத்தினர்களின் நடவடிக்கைகளைச் சரியான வகையில் வழிநடத்த இலண்டன் மேயர் தவறிவிட்டார். இதன் முழுப் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் என்று அரசாங்கமும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் வாதிடுகிறார்கள். இங்கேதான் மக்களின் பொது நன்மையைக் கருத்திலெடுக்காமல் அரசியல் மோதல் நிகழ்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்கிலாந்தின் அரசோ கன்சர்வேடிவ் கட்சியினால் நடத்தப்படுகிறது, லண்டன் மேயரோ லேபர் கட்சியைச் சேர்ந்தவர் அவர்களுக்கிடையில் இருக்கும் அரசியல் வேறுபாடுகள் தலைதூக்குவது யதார்த்தமே!

அடுத்தொரு காரணமாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, அதுவும் குறிப்பாக, கறுப்பினத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளதால் அவர்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டு இத்தகைய வன்முறைக்குத் தள்ளப்படுகிறார்கள் எனும் வாதம் ஒருபுறமிருக்கிறது. இத்தகைய இளைய தலைமுறையை வழிநடத்தக்கூடிய பொதுநல அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் பல பொதுநல அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் தமது செயற்பாடுகளைக் குறைத்தும், நிறுத்தியும் விட்டதும் ஒரு காரணம் எனும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

லண்டன் மேயரான சாடிக் கான் மீது பல விமர்சனங்கள் எதிர்மறையாக வைக்கப்படுகின்றன. இவர் ஒரு இஸ்லாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பலரின் விமர்சனத்துக்கு இவர் உள்ளாகி வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கும் இவருக்கும் இடையிலான பிரச்சனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடன் அறிவித்த சில இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்களின் மீதான தடையின் போது எழுந்தது. அதேநேரம் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டன் நகர மேயராக இருப்பதை மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாத,  இனத்துவேஷம் கொண்ட சிலர், இப்பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக்குக்கிறார்களோ எனும் கருத்தும் சிலர் மத்தியில் நிலவுகிறது.

தற்போது பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கும் திரு பொரிஸ் ஜான்சன் அவர்கள் இருமுறைகள் லண்டன் நகர மேயராகப் பணியாற்றியிருக்கிறார். கருத்துக் கணிப்புகளின் படி இவரது பதவிக் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் லண்டனில் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இக்காலகட்டத்தில் போலிஸாருக்கு யாரையும் தடுத்து நிறுத்திச் சோதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவ்வதிகாரம் இனத்துவேஷம் கொண்ட காவல் படையினரால் கறுப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் தற்போதைய பிரதமர் தெரேசா மே அவர்களால் தடை செய்யப்பட்டது. இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட சமூகத்தினரிடையில் தான் நடைபெறுகிறது எனும் போது அச்சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தானே போலிஸார் தமது நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும் அதனை இனத்துவேஷம் என்று குற்றம் சாட்டினால் குற்றங்களை எவ்வகையில் தடுக்க முடியும் எனும் வாதம் நியாயமானதே!

அரசியல், தனிப்பட்ட கருத்து மோதல்கள், இனத்துவேஷம் எனும் கூப்பாடுகள் இவையெல்லாம் பலியாகிக் கொண்டிருக்கும் இளையோரின் உயிருக்கு பதில் கூறிவிட முடியுமா? ஐக்கிய இராச்சியம் போன்றதொரு முன்னேற்றமடைந்த நாடு என்று தன்னை விமர்சித்துக் கொண்டிருக்கும் நாட்டில் மனித உயிரின் மகத்துவத்தின் நிலைதான் என்ன எனும் கேள்வி எழுகிறது. இயற்கையும், மூட நம்பிக்கையும், தேவையற்ற போர்களும் உயிர்களைப் பலி கொள்வது ஒருபுறமிருக்க ஏனிந்த கண்மூடித்தனமான கொலைவெறி ஐக்கிய இராச்சிய சில இளையோர் மத்தியில் எழுகிறது எனும் கேள்விக்கு விடை காண வேண்டியது அவசியம். முளையிலே கிள்ளியெறிவதே அறிவான செயல் என்பதன் அடிப்படையில் பாலகர்கள் மத்தியில் இத்தகைய வன்செயல்களின் விளைவுகளை மனதினில் புகுத்தும் வகையிலான கல்விமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா? எனும் கேள்வியும் எழுகிறது.

“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடிய அவ்வை இன்று இருந்திருந்தால் அழுதிருப்பாளோ?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *