சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1

0

-நிர்மலா ராகவன் 

“நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்குப் போயிருப்பீர்கள்!” அமெரிக்காவில் பலரும் என்னை இதையே கேள்வியாகக் கேட்டார்கள்.

`என்னைப் பார்த்தால் செத்துப் பிழைத்தவள் மாதிரியா இருக்கிறது!’ என்று விழித்துப் போனேன்.

தென்கிழக்காசிய நாடாகிய மலேசியாவிலிருந்து வந்தவள் என்பதால்தான் அக்கேள்வி பிறந்தது என்று பின்புதான் புரிந்தது. இரு நாடுகளுக்குமிடையே விமானப் பயணம் மூன்று மணிக்கும் குறைவுதான்.

அவர்களைப் பொறுத்தவரை, இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவுதான் சொர்க்கம்.

“பாலியில் அப்படி என்ன இருக்கிறது?” என்று அவநம்பிக்கையுடன் என்னைக் கேட்டார் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவர்.

இயற்கை எழிலும், கலை நயமும் ஒருபுறமிருக்க, வேறு ஏதோ யுகத்திலிருந்து வந்தவர்கள் போன்று, நம்பவே முடியாத அளவுக்கு மனிதாபிமானம் நிறைந்த மனிதர்கள்தாம் இதற்குக் காரணம் என்று ஓரிரு நாட்களிலேயே தோன்றிப் போகிறது.

மலேசியாவில் பணிபுரியும் இந்தோனீசியர்களிடம், `நான் இந்தோனீசியா போயிருக்கிறேன்’, என்றால் ஜாவா அல்லது சுமத்ராவைத்தான் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில், இந்த இரண்டு தீவுகளிலும் இஸ்லாம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாலியின் வடக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் மட்டும் சிறுபான்மை முஸ்லிம்கள்.

“நாங்கள் இந்துக்கள். ஆனால், எங்கள் இந்து மதம் வித்தியாசமானது!” என்கிறார் வழிகாட்டி தேவா.

130 X 90 கிலோமீட்டர் பரப்புகொண்ட சிறிய தீவு பாலி. அதனுள் 300 கிராமங்கள்.

ஒரு கிராமத்திலுள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொழிலையே செய்கிறார்கள். தச்சு வேலை, சித்திரம் வரைவது, சிமெண்டுப் பலகைகளில் பூ வேலைப்பாடு (சுவரிலோ, தரையிலோ பதிப்பது), பெரிய காத்தாடிகள் செய்வது, வெள்ளி நகைகள் செய்வது என்று பல. கைத்திறன் கொண்டு செய்வது.

மரத்தாலான சிலைகள் செய்யுமிடத்திற்குப் போனேன். `இச்சிலைகளுக்குப் பயன்படுவது இந்தச் செம்பருத்தி மரம்’ என்று அங்கே இருந்த ஒன்றைக் காட்டினார்கள். மரத்தின் இலை மெல்லியதாக, கிட்டத்தட்ட செம்பருத்தி போல்தான் இருந்தது.

மிக அழகான வேலைப்பாட்டுடன், ஒன்றரையடி உயரமுள்ள சரஸ்வதி சிலை ஒன்றை ஆசையுடன் கையில் எடுத்தேன். அதன் விலையைக் கேட்டதும் மூச்சு நின்றுவிடும்போல் ஆகிவிட்டது. 3,000 அமெரிக்க டாலர்கள்!

மன்னிப்பு கேட்கும் தோரணையில், அசடு வழியச் சிரித்தேன். பலரும் அப்படித்தான் செய்திருப்பார்கள் போலும்! கடை விற்பனையாளரான பெண் என் சங்கடம் புரிந்து, தலையாட்டினாள்.

இப்படிப்பட்ட ஒன்றைப் படைக்க, அனுபவமும் தேர்ச்சியும் மிக்க ஸ்தபதி ஒருவர் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாத காலம் தியானம் செய்வாராம். அப்போது, `இந்த மரத்தால் எந்த கடவுளின் உருவை நான் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுக்கொள்வார். இடைவெளி விட்டு விட்டு இப்படி ஒரு சிலையைச் செய்ய மூன்று மாத காலம் ஆகிறதாம்.

மரத்தின்மேல் அனுமானமாக சித்திரம் வரைந்து கொள்வதெல்லாம் கிடையாது. ஒருவித மோன நிலையில் கை தன்பாட்டில் வேலை செய்யும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தால்கூட அதற்குப்பின் மரம் பிரயோசனப்படாது.

எங்கும் தெய்வீக மணம்

எல்லா முச்சந்திகளிலும் இருபதடி உயரச் சிலைகள். சரஸ்வதி, ராமர், அவர் எதிரே அனுமன் — இப்படி. பணக்கார வீடுகளின் வெளிச்சுவர் பண்டைக் கால அரண்மனையில் இருப்பதுபோல் கலைநயத்துடன் மிளிர்கின்றன.

“ஒவ்வொறு கிராமத்திலும் ஒரு `சிறிய’ கோயில் இருக்கிறது,” என்று தேவா தெரிவிக்க, `இதையா சிறியது என்கிறார்!’ என்று எனக்கு ஆச்சரியம் எழும் வகையில் அமைந்திருந்தன அவை.

பனை ஓலையில் செய்யப்பட்ட தொன்னையில் பற்பல வண்ணங்களைக் கொண்ட மலர்கள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை எங்கும் காணலாம். பேரங்காடி கல்லாவின்மேல், ஹோட்டலில் வழி நெடுக, மற்றும் தரையில், ஒவ்வோர் அறைக்கும் முன்னால் என்று காணும் இடமெல்லாம் பூக்கள் இறைந்து கிடக்கின்றன. பெரும்பாலும், காசித்தும்பை பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் காலையில் செய்யும் பூஜைக்கெனவே பெரிய நிலப்பரப்புகளில் இதனைப் பயிரிடுகிறார்கள்.

பிரம்மாவிற்குச் சிவப்பு வண்ண மலர்கள், சிவனுக்கு மஞ்சள் அல்லது வெள்ளை, விஷ்ணுவிற்கு நீலம் என்ற முறை இருக்கிறது. அவற்றைக் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டுமாம்.

கலைகளில் மிகுந்த ஈடுபாடு இருப்பதால் சரஸ்வதியைக் கொண்டாடுகிறார்கள். அண்மையில்தான் `கணேஷா’ என்று பிள்ளையார் சிலைகளைச் செய்கிறார்களாம். (அங்கேயே வசிக்கும் வேற்று நாட்டுக்காரரின் கணிப்பு).

`இந்தியாவில் பிரம்மாவுக்கு நிறைய கோயில்கள் கிடையாதாமே! ஏன்?’ என்று அதிசயப்பட்டார் தேவா.

-தொடரும். 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *