நூலறி புலவ! ஆசிரியர் பெரும!

2

ஔவை நடராசன்

ஆசிரியர் தினமாகிய இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றிப் படருகிறது. 117 ஆண்டுகளுக்கு முன்னர், ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த திரு.துரைசாமி, திரு.மயிலாசனம், திரு.முத்துக்குமாரசாமி, திரு.சுப்பிரமணியன் ஆகிய மூவருக்குப் பின் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவராவார்.

என் தந்தையார் பிறந்த ஓர் ஆண்டுக்குள் இரட்டைப் பிறப்பில் ஒரு பிறப்பு மறைந்தார். என்னுடைய பாட்டனார் பெயர் திரு.சுந்தரம், என் பாட்டியார் பெயர் திருமதி சந்திரவதி அம்மையார். என் பாட்டியார் 6 அடி உயரத்திற்கு மேல் இருப்பார். சிவந்த தோற்றத்துடன் திகழ்ந்தவர்.

என் தந்தையார், திண்டிவனம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பதற்காக மயிலம் வழியாக அன்றாடம் சென்று வந்ததாகக் கூறியது என் நினைவில் உள்ளது. “எஎஎம்” என்று அழைக்கப்பெறும் அந்தப் பள்ளிக்கூடம், டானிசு பணி மன்ற அறத்தினால் நடைபெற்றதாக நினைவு.

என் தந்தையாரோடு காஞ்சி மாமுனிவரும் உடன் பயின்றதாக ஒரு முறை கூறினார். அந்தப் பள்ளியில் பயிலும்போதுதான் பள்ளிக்கு வந்த இரண்டு துரைசாமிகளுள் என் தந்தையார், ஔவை துரைசாமி என்று அழைக்கப்பெற்றார்.

பத்தாம் வகுப்புப் பயின்ற அவர், வேலூர் சென்று ஊரிசு கல்லூரியில் எப்.ஏ. என்னும் வகுப்பில் சேர முயன்று, வறுமைச் சூழலால் கல்வியை நிறுத்திக்கொண்டார். பின்னர், துப்புரவுக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியதாகவும் ஓராண்டுக்குள் கரந்தை சென்று, தமிழ்க் கல்வி தொடர்ந்ததாகவும் கூறினார்.

வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சுவரை அவர் மேடைப் பேச்சு நின்றதுண்டே தவிர, அவர் எழுதிய உரை முத்துகள் ஒருகணமும் நின்றதில்லை.

உரைவேந்தரின் உயர்ந்த புகழுக்குச் சிறந்த துணையாகத் தம் நலிந்த உடலோடு வாழ்ந்தவர் என் அன்னையார் திருமதி லோகாம்பாள்.

உரைவேந்தரின் பிள்ளைகள் என்று இன்று நாங்கள் பிறருக்குச் சொல்லும்போது எங்கள் உடலில் சில அணுத்துகளேனும் அறிவுத்திறம் அமைந்திருக்குமோ என்று எண்ணுகிறேன்.

117 ஆண்டுகள் முன்னர் இருந்த தமிழகம், இந்நாள் மிளிரும் தமிழகம் என எவ்வளவு மாற்றங்கள் பெற்றுள்ளன.

என் தந்தையார், பகலில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, அந்தி வந்தால் தன் வீட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை இரவு 08.00 மணிவரை நடத்துவார்.

ஆசிரியர் என்ற பெயரைத் தாம் வழிபட்ட முருகனுக்கு இட்ட பெயர் என்று சொல்லி, தான் கையொப்பம் இடும்போது தமிழ் ஆசிரியன் என்றே ஒப்பம் இடுவார். தந்தையாரின் புகழை நிறுவிய பெருந்தகைதான் புலவர் கா.கோவிந்தன் அவர்களாவார். ஆசிரியரை எண்ணும்போது, தம் 90ஆம் அகவையிலும் கண்களில் நீர் துளித்தபடி நிற்பார். ஆசிரியர் நாளன்று இப்படி ஆசிரியர் உரைவேந்தர் ஔவையை நினைக்கும்போது நெகிழ்கிறோம்.

சேயாறு உயர்நிலைப்பள்ளியில் என் தந்தையார் தமிழாசிரியராக வாழ்வு தொடங்கிய நாளில்,

“இன்று ஆசிரியர் ஓங்கினால்
நாளை நாடு ஓங்கும்”

“இன்று ஆசிரியர் தேங்கினால்
நாளை நாடு தேங்கும்”

“இன்று ஆசிரியர் தூங்கினால்
நாளை நாடு தூங்கும்”

என்று பேரறிஞர் அண்ணா, ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசிய பொன் வரிகளை நினைவுகூர்வது இன்றும் பொருத்தமானதே.

—–

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நூலறி புலவ! ஆசிரியர் பெரும!

  1. கால இடைவெளிகள் கடந்தும் அன்று சொன்ன கருத்து மட்டும் மாறவில்லை என்பது உண்மையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *