(Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம்

0

முனைவர் த. ஆதித்தன்

இணைப் பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.

இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதப்படும் பெரும் நிலப்பரப்பினையே குமரிக்கண்டம் என்கின்றனர். இப்பகுதி தொன்மையான தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர். கடலுள் மூழ்கிய கண்டம் ஒன்று இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று மேலைநாட்டு அறிஞர்கள் கூறியது குமரிக் கண்டத்தைத்தான் என்று நம்நாட்டு அறிஞர்கள் பலரும் கருதத் தொடங்கினர். அதன் அடிப்படையிலேயே லெமுரியா என்ற பெயரைக் குமரிக் கண்டத்தைக் குறிப்பதற்கு உரிய பெயராகக் கொண்டனர் எனலாம்.

கடலுள் மறைந்து போனதாகக் கருதப்படும் பெருநிலப்பரப்பிற்கு லெமுரியா என்னும் பெயர் எப்படி வந்தது என்பது குறித்து,  “குரங்கு இனத்தைச் சார்ந்த லிமர்(Lemur) எனும் விலங்கு பரிணாமப் படியில் சற்றே கீழ்மட்டத்தில் உள்ள ப்ரோசிமியன் (Prosimian) எனும் பிரிவைச் சார்ந்ததாகும்.  இந்தப் பிரிவில் உள்ள விலங்குகளில் ஒன்றான தேவாங்குகள்(Loris) இந்தியா உட்பட சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்கின்றன. லிமர்கள் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் தீவிலும், அருகிலுள்ள கொடுமாரெஸ் தீவுகளிலும் மட்டுமே வாழ்கின்றன. இங்கு 30 கிராம் எடையுள்ள எலி லிமர் (Mouse Lemur) முதல் ஏழு கிலோ எடையுள்ள இந்திரி, சிஃபாகா எனும் லிமர்வரை பலவகை உள்ளன. தோற்றத்தில் மரநாய், கீரி போன்ற லிமர்கள், மயிர் அடர்ந்த நீண்ட வால் கொண்டவை.  இவற்றின் உறவு வகைக் குரங்குகள் இந்தியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப்படுவதால் மேற்கூறிய பகுதிகளை ஒரு காலத்தில் நிலப்பாலங்கள் இணைத்திருக்க வேண்டும் என்பது ஹிக்கலின் வாதம்.

ஹிக்கல் கூற்றின் தொடர்ச்சியாக இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ஃபிலிப் ஸ்க்லேடர் (Philip Sclator) இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையே இந்து மகா சமுத்திரத்தில் இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு ‘லெமூரியா’  எனப் பெயரிட்டார்”1  என்று சு.கி. ஜெயகரன் விவரிக்கிறார்.(குமரி நிலநீட்சி, பக்கம் எண்.55-56) இதன் மூலம்  லிமூர் இன உயிரினங்கள் வாழ்ந்த இடப்பகுதி என்னும் அடிப்படையில் லெமூரியா, என்ற பெயரினை வழங்கியுள்ளனர் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழியல் ஆய்வாளர்களில் ஒரு பகுதியினர் லெமூரியா கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.  அதுவே கடலுள் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்றும் நம்பத் தொடங்கினர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முதல், இடைச்சங்கங்கள் முதலாகப் பல இடங்களும் கடல்கொண்ட இக்குமரிக்கண்டத்தில் இருந்ததாகவே குறிப்பிடுகின்றனர்.  மூன்று சங்கங்களையும் வைத்துத் தமிழ்வளர்த்த பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பெரும்நிலப்பரப்பு அது என்பது அவர்களின் வாதம்.  இதனை ஏற்றுக்கொள்ளுபவர்கள் குமரிக்கண்டம், மிகப் பழமையான நாகரிகச் செழுமையினைக் கொண்டது.  பெரும் பேரழிவினால் முழுவதுமாக மூழ்கிவிட்டது என்னும் கருத்தினைக் கூறி வருகின்றனர்.

புவியியல் ஆய்வாளர்கள், புவியின் உள்பகுதியில் உள்ள தட்டுகளின் இடப்பெயர்வு காரணமாகவே மேல்பகுதியில் உள்ள நிலப்பரப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் என்கின்றனர்.  அதனை அறிவியல் ரீதியாகவும் நிரூபித்துள்ளனர்.  அம்முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது மிகப்பெரிய நிலப்பகுதி ஒரே நேரத்தில் முழுமையாக அழிந்து போவதற்கு வாய்ப்புகள் குறைவு. இப்புவியியல் அறிஞர்களின் கூற்றுப்படி கடலுள் நிலப்பரப்பு மூழ்குவதும், புதிய நிலப்பகுதி மேலெழும்புவதும் நிகழக் கூடியதுதான்.  ஆனால் அது சிறிது சிறிதாக ஒரு காலவரிசையில் நிகழக் கூடியது என்கின்றனர்.

வெக்னர் என்னும் புவியியல் அறிஞரின் கண்டப் பெயர்ச்சிக் கொள்கையை உலகம் முழுவதும் உள்ள புவியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.  அவர் இன்று ஏழு கண்டங்களாக, தனித் தனி பிரிவுகளாக இருக்கின்ற நிலப்பரப்பு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கக் கூடும் என்கிறார்.  அந்த ஒருங்கமைந்த நிலப் பகுதியினைப் பாஞ்சியா என அழைக்கின்றனர்.

புவியின் உட்பகுதியில் உள்ள தட்டுகளின் நகர்வாலும் மோதலாலும் மேல் உள்ள நிலப்பகுதி இடம் பெயருகின்றது என்பது அவரின் முடிவு.  அக்கொள்கை வெக்னர் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

இக்கோட்பாட்டின்படி. மிகப் பெரிய நிலப்பகுதி ஒரே நேரத்தில் முழுவதுமாகக் கடலுள் மூழ்குவதில்லை என்கின்றனர் புவியியலாளர்கள்.  ஆனால் இந்தியாவின் தென் பகுதியான குமரி முனைக்குத் தெற்கே கடலுள் மூழ்கிப்போன நிலப்பகுதி உள்ளது என்பதற்குச் சில ஆவணச் சான்றுகள் கிடைத்துள்ளன.

கி.மு. 300 அளவில் இந்தியாவிற்குப் பயணம் வந்த கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்பில், இந்திய நிலப் பகுதியின் தெற்கே நில நீட்சி இருந்தது  குறித்தும் அவற்றிற்கு இடையே ஆறு ஓடியது என்பது குறித்தும் செய்தி இடம் பெற்றுள்ளது.2  இவை குறித்து அபிதான சிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அராபியத் தொன்மக் கதை ஒன்றிலும், இராமாயணக் கதையிலும் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையே உள்ள பாலம் குறித்த குறிப்பு உள்ளது.  இது ஆதாம் பாலம், இராம சேது, இராமர் பாலம் என பல பெயர்களால் வழங்கப் பெறுகின்றது. ஆங்கிலேயர்களால் கி.பி  1868இல் வெளியிடப்பட்ட ‘ மதுரா மேனுவல்’ (The Madura Country A Manual) என்னும் குறிப்பேட்டிலும்3 கி.பி.1972இல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் விவரக் குறிப்பேட்டிலும்4   (Gazetteer) இதனைக் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இதேபோல் கி.பி 1885இல் ஆங்கிலேய அரசால் வெளியிடப்பட்ட மெட்ராஸ் பிரசிடன்சி மேனுவல் (Manual of the Administration of the Madras Presidency) என்றும் விவரக் குறிப்பேட்டில் இந்த ஆதாம் பாலம் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கி.பி.1480 வரையில் தரைவழியாக நடந்து செல்லக்கூடிய வகையில் இப்பகுதி அமைந்திருந்தது  என்கிறது  அக்குறிப்பேடு.  இலங்கைக்கும் இந்தியாவிற்குமான வணிகத் தொடர்பிற்கு இது பெருந்துணையாக இருந்தது  என்றும் மக்கள் தரைவழிப் பயணமாகவே இரு நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர் என்பது குறித்தும் இவ்விவரக் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.5

இதன் மூலம் கி.பி.1480களில் நிலப்பகுதியாக இருந்த இராம சேது பகுதியானது இன்று கடலினுள் மூழ்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் கடலுள் சில அடிகள் ஆழத்தில் அப்பாலம் அதாவது நிலப்பரப்பு தென்படுவதை அறியலாம்.

இதேபோன்று கடலினுள் நிலப்பகுதி மூழ்குவதனைப் புவியியல் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.  நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது 49 நாடுகளையும், வேறு பல பெரும் பிரிவுகளையும் கொண்ட பெரும் நிலப்பரப்பானது முழுவதுமாகக் கடலுள் மூழ்கி போனதா என்பதைக் குறித்ததே ஆகும்.

இங்கு கண்டம் என்பது எதனைக் குறிக்கின்றது, இப்பொழுது நாம் குறிப்பிடும் பொருண்மையிலா?  அல்லது எப்பொருண்மையைக் கொண்டது என்பதைக் குறித்தும் ஆராய வேண்டி உள்ளது.

பிங்கல நிகண்டு ‘நாடு’ என்பதற்குரிய பல சொற்களைக் கூறும்போது கண்டம் என்ற சொல்லைக் குறிப்பிடுகின்றது.6  சூடாமணி நிகண்டும் கண்டம் என்ற சொல் நாடு என்னும் பொருளிலும் வழங்கப்பட்டதனை உறுதி செய்கின்றது7  கேரளப் பகுதிகளில் நாடு என்ற சொல்லிற்கு ஊர் என்ற பொருள் உள்ளதையும் நாம் அறிவோம்.  இவற்றை எல்லாம் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது குமரிக்கண்டம் என்பதில் உள்ள கண்டம் என்னும் சொல்லினை இப்பொழுது உள்ள பொருண்மையிலான  பெரும் நிலப்பரப்பாகக் கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவு.  குமரிக்கண்டம் என்பது கடலுள் மூழ்கிய சிறு நிலப்பரப்பாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனலாம்.  புவியியல் அறிஞர்களின் அறிவியல் பூர்வமான வாதங்களையும், ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு மேலாய்வுகள் மேற்கொண்டால் பரப்பளவு –  எல்லை போன்ற தகவல்களைத் துல்லியமாகப் பெறமுடியும். மேலும் அப்பகுதி குறித்த தொடர் ஆய்வுகள் ஆக்கப் பூர்வமான வகையில் நடைபெறும் பொழுது அந்நிலப்பரப்பின் தொன்மையும், நாகரிகச் செழுமையும் வெளிக்கொணரப்படும் என்பதில் ஐயமில்லை.

சான்றெண் விளக்கம்

  1. ஜெயகரன், சு.கி., குமரி நில நீட்சி, காலச்சுவடு, நாகர்கோவில், டிசம்பர் 2002
  2. சிங்காரவேலு முதலியார். ஆ, அபிதான சிந்தாமணி, சீதைபதிப்பகம், சென்னை 5, 10ஆம் பதிப்பு, ஆகஸ்டு 2012
  1. J.H., The Madura Country A Manual, The Asylum Press, Mount Road, William Thomas, Madras, 1868.
  2. A., Tamil Nadu District Gazetteers – Ramanathapuram, The Director of Stationery and Printing, Madras, 1972
  3. Maclean, C.D, Manual of the Administration of the Madras Presidency, The Asylum Press, Mount Road, William Thomas, Madras, 1868
  4. இலம்போதரன். சு. (ப-ர்), பிங்கல நிகண்டு, வசந்தா பதிப்பகம், சென்னை – 88, இரண்டாம் பதிப்பு- 2005
  5. ஆறுமுக நாவலர்(ப-ர்), சூடாமணி நிகண்டு, வசந்தா பதிப்பகம், சென்னை – 88, முதல் பதிப்பு 2005

=================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

இந்திய உபகண்டத்தின் தென்முனை நீட்சியாக இருந்ததாகக்  கருதப்படும் குமரிக் கண்டம் பற்றித் தமிழரிடையே மூன்று விதமான கருத்துகள்  இப்போது பரவி வருகின்றன. குமரிக் கண்டம் இருந்தது என்று நம்புவோர் ஒரு சிலர்.  குமரிக் கண்டம் என்றொரு நீட்சிப் பகுதி இருந்தது இல்லை, அது வெறும் கற்பனை என்று நம்பாதவர் / மறுப்பவர் பலர் உள்ளார்.  மூன்றாவது பிரிவினர், குமரிக் கண்டம் பற்றிக் கருத்துரை வழங்க விழையாதவர்.  நான் குமரிக் கண்டம் இருந்திருக்க வேண்டும் என்று கருதும் முதல் வகுப்பைச் சேர்ந்தவன். பூதளவியல், வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம் மூலம் ஆராய்ந்து ஏற்றுக்கொண்டவன். அதனால் என் மதிப்பாய்வு, ஆய்வாளருக்கு உடன்பாடாக அமைந்துள்ளது. குமரிக் கண்டத்தை இல்லையென்று மறுப்பவரின் மதிப்பாய்வு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும்.  ஆகவே நான்  எழுதிய இந்த மதிப்பாய்வு ஒருநோக்கு, முறையில் ஒருபோக்கு நெறியான கருத்தோட்டம் என்று முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

1,00,000 ஆண்டுகட்கு ஒருமுறை பனியுகம் தோன்றி  உலகக் கடல் நீர்வெள்ளம் சுண்டிப் போய், கடல் மட்டம் குறைந்து போவதும், பிறகு பல்லாயிர ஆண்டுகட்டுப் பின்னர்,  பனிக்குன்றுகள் உருகிக் கடல் நீர் மட்டம் உயர்வதும் பூமியில் பன்முறை நேர்ந்துள்ளன.  கடந்த 10,000 – 20,000 ஆண்டுகளில் அவ்விதம் நிகழ்ந்த பனியுகத்தில் கடல் நீர்மட்டம் சுமார் 300 அடி முதல் 1000 அடி வரை தாழ்ந்து மீண்டும் உயர்ந்துள்ளது என்பது என் யூகிப்பு. அப்போது கடற்கரைப் பகுதிகளில், நீர்மயம் சுண்டி நீட்சித் தளங்கள் தெரிந்தும், பிறகு  நீர் உருகி,  கடல் மட்டம் உயர்ந்து, அவை கடலுக்குள் மூழ்கியும் போயுள்ளன. இந்தியாவின் குஜராத் மாநில மேற்குக் கடலில் மூழ்கிய துவாரகாபுரி சுமார் 100 – 500 அடிக் கடலில் மூழ்கி உள்ளதைச் சமீபத்தில்  கண்டுபிடித்திருக்கிறார்.

ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள்! மலைச் சிகரங்களில் பனிமுடி! பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments]! கடல் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils]! மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள்! குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள்! 1960 ஆம் ஆண்டு முதலாக கடல்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.

ஆய்வாளர், குமரிக் கண்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது இடையில் ஐயப்படும் சில வினாக்களைக் கேட்டுப் பதில் கூறாது போயுள்ளது தெரிகிறது.  கட்டுரையில் குமரிக் கண்டம்  இருப்பு பற்றிச் சிறந்த சான்றுகள் கூறி இருப்பினும், ஆய்வாளர் முடிவில் தான் என்ன உறுதிப்படுத்துகிறார் என்பது தெளிவாக  வெளிடப்படவில்லை.  ஆயினும் குமரிக் கண்டம் இருந்திருக்கக் கூடும் என்பதற்குப் பல சான்றுகள் இந்த ஆராய்ச்சியில் எடுத்துக் காட்டி இருக்கிறார். பயனுள்ள ஆராய்ச்சி.

=================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *