-செண்பக ஜெகதீசன்

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
வொண்பொருள் கொள்வார் பிறர்.

-திருக்குறள் -1009 (நன்றியில் செல்வம்)

புதுக் கவிதையில்…

அடுத்தவரிடம்
அன்புகாட்டுதலை விடுத்து,
தன்னை வருத்தி
அறம் பாராது
ஒருவன் ஈட்டிய
அரும்பொருளைத்
தான் அனுபவிக்காமல் போய்,
பிறர் அபகரித்துக்கொள்ளும்
நிலைதான் வரும்…!

குறும்பாவில்…

பிறரிடம் அன்புகாட்டாமல் தனைவருத்தி
அறம்பாராது சேர்த்த செல்வமெல்லாம்
அவன் அனுபவிக்காதே பிறரைச்சேரும்…!

மரபுக் கவிதையில்…

அன்பது பிறரிடம் காட்டாமல்
அறத்தைச் சிறிதும் பாராமல்
தன்னுடல் நோகத் தனைவருத்தித்
தவறாய்ச் சேர்த்த செல்வமெல்லாம்,
தன்னால் அவற்றை அனுபவிக்கத்
தக்க வாய்ப்பே கிடைப்பதில்லை,
பின்னால் யாரோ அனுபவிக்கப்
பிறரைச் சேரும் அறிவாயே…!

லிமரைக்கூ..

அன்பறம் ஏதுமின்றிச் சேர்ப்பார்
பாடுபட்டுச் சேர்த்த பெருஞ்செல்வம் அவருக்கின்றிப்
பிறர்தான் அனுபவிக்கப் பார்ப்பார்…!

கிராமிய பாணியில்…

சேருசேரு செல்வம் சேரு
நல்ல வழியில செல்வம் சேரு..

அடுத்தவங்கிட்ட அன்புகாட்டாம
அறவழியில போகாம,
தன்ன வருத்திச்
சேத்த செல்வமெல்லாம்
தனக்கு ஒதவாமப்போகும்
அனுபவிக்க..

அது அவனுக்கில்லாம
வேற யாரோ அடுத்தவன்தான்
அனுபவிக்கப் போயிடுமே..

அதால
சேருசேரு செல்வம் சேரு
நல்ல வழியில செல்வம் சேரு…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *