அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (20.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 224

  1. வானவில்

    வானில் தோன்றிய வெண்ணிலவு
    மஞ்சள் பூசி வந்ததோ மஞ்சள் நிலவாய்
    வியந்து விழித்த விழிகளில்
    காப்பியுடன் நின்றிருந்தாள்
    மஞ்சள் பூசி குளித்து முடித்த அன்னை இவள்
    வெட்டி கதை பேசி
    வீண் அரட்டை அடிக்கும் பாட்டியிடம்
    காரணம் கேட்டு அறிந்திட சென்றேன்
    மஞ்சள் பூசி மலர்ந்த முகத்துடன்
    உற்சாகமாய் சொல்ல ஆரம்பித்தாள்
    தீமை அண்டாமல் இருக்க தேகம் ஜொலிக்க
    மனம் விரும்பிய மணவாளன் கரம் பிடிக்க
    நினைவில் அவனை நிறுத்தி
    பலரும் மறந்து போன பழக்கமதை
    தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதை
    சொல்லி முடித்தாள்
    மஞ்சள் வண்ணம் ஒன்றிற்கே
    இத்தனை மகிமை இருக்கையில்
    இத்தனை வண்ணங்களை
    பூசி வந்து நிற்கும் இவள் யாரோ
    அன்பின் விழாவாக ஹோலி பண்டிகையை
    ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி
    அன்பை பரிமாறி நிற்க
    சுயநலமாய் சிந்தித்து பூசுகின்ற மஞ்சளுக்கே
    இத்தனை பலன்கள் இருக்கையில்
    இத்தனை வண்ணங்களை
    பூசி நிற்கும் இவள் மகிமை என்னவோ
    அடுத்தவர் மீது காட்டும் அன்பும் குறைந்து போகும்
    இரக்கம் கூட மெல்ல இறந்து போகும்
    களிக்கலாம் என்று கேலி பேசும் ஊரில்
    அன்பை அனைவருக்கும் இவள்
    அள்ளி அள்ளி கொடுத்திட
    அந்த வானவில்லே வியந்து
    தன் வண்ணங்களை
    இவள் மீது தூவி வாழ்த்தி நின்றதோ

  2. ஏக்கம்..
    ==========
    -ஆ.செந்தில் குமார்.

    ஏழ்வண்ணம் கொண்டதொரு.. எழிற்கொஞ்சும் வானவில்லாய்..
    வாழ்வதற்கு நினைத்திருந்தேன்.. வாய்ப்பேதும் கிட்டவில்லை..!!
    அலைகடலின் ஆழத்தில்.. அலைகின்ற மீன்களைப்போல்..
    அவனிதனில் மகிழ்ந்திருக்க.. நினைத்ததுவும் நடக்கவில்லை..!!

    புள்ளினங்கள் இன்புற்று.. உலவிடும்பெரு வான்வெளியில்..
    நல்லதொருப் பறவையாக.. நான்மாற வழியுமில்லை..!!
    வண்ணத்துப் பூச்சியாக.. வண்ணமிகு மலர்களிலே..
    வந்தமர்ந்து சிறகடிக்க.. எண்ணியதும் பலிக்கவில்லை..!!

    புல்மீதுத் தூங்குகின்ற.. பனித்துளியுள் ஒளிவீசும்..
    பகலவனின் பிம்பமாக.. மாறிடத்தான் நினைத்திருந்தேன்..
    வானத்து விண்மீனாய்.. மின்னுமொரு நிலையடைய..
    விழைந்ததுவும் விதிவிலக்காய்.. காரிருளாய் மாறியதேன்..??!!

    ஏழ்பிறவித் தொடரினிலேத்.. தொடர்ந்துவரும் ஊழ்வினையோ..
    வாழுமிந்தப் பிறவியிலே.. எனைமறந்துச் செய்திட்ட..
    பிழையேதும் காரணமோ.. பித்துப்பிடித் தலைகின்றேன்..!!
    மலையளவுத் துன்பத்தால்.. அலைக்கழிந்து வாடுகின்றேன்..!!

  3. இன்புற்று இருப்போம்

    வசனைப் பூ மகளே வசந்த வயலின்
    வாடாத புத்தம் புது மலர் மல்லிகையே
    வண்ண பொடிகள் வாரியிறைத்தால்
    வானவில்லானதோ உன் கன்னங்கள்

    கொண்டாட்டமே களிப்பு
    கொண்டாடுவோமே கவலை மறந்து
    கொடுத்தால் வளருமே அன்பு அதை
    கொடுத்தே பெறுவோம் அன்போடு

    எல்லையில்லா பால்வெளியின்
    எழுச்சிமிகு மின் மினியே
    எங்கும் ஒளிதரும் கதிர் போல
    எழிலே நீ எதிர் வந்தால் பொங்கும் மகிழ்சி

    பொன்நகை அணியா
    சின்னத் தாரகையே- உன்
    மின்நகைப் புன்னகையால்
    மண்ணில் அன்பு மீண்டும் தழைக்கட்டும்

    கார்குழலை வாரிமுடி
    கருணையல்ல உரிமை
    கட்டுத்தளைகளை வெட்டி எறி
    கட்டவிழட்டும் அடிமை முடிச்சு

    இனி இல்லை எங்கும் எல்லை
    இனிதாகுமே வாழ்வின் பயணம்
    இனிக்க இனிக்க வாழ்ந்திடுவோம்
    இன்புற்று இருக்க அன்புற்று இருப்போம்

    யாழ். நிலா. பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    noyyal.blogspot.in

  4. கண்களே…

    வான வில்லின் வனப்பு வேறு
    வண்ணம் பூசிக் குறைவ தில்லை,
    கானக் குயிலின் கீதம் என்றும்
    காக்கை கரைந்து மாறுவ தில்லை,
    ஆன மட்டும் சாயம் பூசி
    அழகினை மறைத்தும் அவளைக் காட்டிடும்
    மோன விழிகளின் பார்வை தானே,
    மோதும் விழிகளே மங்கைக் கழகே…!

    செண்பக ஜெகதீசன்…

Leave a Reply to ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்

Your email address will not be published. Required fields are marked *