உங்கள் சுய அடையாளத்தை இழக்க வேண்டாம்!

0

நிர்மலா ராகவன் 

நலம்… நலமறிய ஆவல்… 167

`நீங்கள் அப்படியே இருக்கிறீர்களே!’ பல வருடங்களுக்குப்பின் ஒருவரைப் பார்க்கும்போது புகழ்ச்சியாகக் கூறுகிறோம்.

அதனால், `நாங்கள் மாறவே மாட்டோம்!’ `எப்படி மாறவேண்டும் என்கிறீர்கள்?’ என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது.

மாற்றமில்லாத வாழ்க்கையால் நாம் பாதுகாப்பாக உணரலாம். நாளடைவில், அது சலிப்பைத்தான் உண்டுபண்ணுகிறது. புதிய அனுபவங்கள் சிந்தனையை வளர்த்து, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

அதனால்தான் விடுமுறைக்காக எங்காவது போய்விட்டு வந்தால், எவ்வளவு களைப்பாக இருந்தாலும், அப்போது எத்தனையோ  கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனம் என்னவோ உற்சாகமாக ஆகிவிடுகிறது.

`மாற்றம்’ என்றால் அஞ்சத் தேவையில்லை. சரியான வழியில் முன்னேறுவது ஆக்ககரமான மாற்றம்.

அந்தப் புதிய பாதை சில சமயம் சறுக்கலாம். எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய்ந்தால், அடுத்தமுறை அதைத் தவிர்க்கலாம். செய்த தவற்றிலிருந்து கற்பவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

`ஒவ்வொரு முறை விழுந்து எழும்போதும், முன்பு இருந்ததைவிட அதிக உயரத்தை எட்ட முடிகிறது!’ என்று வெற்றியாளர்கள் வியந்து கூறுகிறார்கள்.

செய்வதற்குமுன் எந்தக் காரியமுமே கடினமாகத்தான் தோன்றும். அதைச் செவ்வனே முடித்துவிட்டால் கிடைக்கும் திருப்திக்கு ஈடே இல்லை.

கீழே விழுந்திருந்தபோது நம்மைக் கேலி செய்தவர்கள் முயற்சி செய்யவே அஞ்சுகிறவர்கள். இது புரிந்தால், அவர்கள் நம்மைப் பந்தாட விடமாட்டோம்.

`நானாவது முயன்றேன். உனக்கு அதைச் செய்யக்கூட தைரியம் இல்லையே!’

இப்படி உரக்கச் சொன்னால், சண்டை வரும். மனத்துக்குள் திட்டலாம்.

மகிழ்ச்சியாக இருக்க அவசியமானது இலக்கு.

சக மனிதர்களாலோ, பொருட்களாலோ பெறும் நிறைவு எத்தனைக் காலம் நீடிக்கும்?

வாழ்க்கையில் எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி, நேராக அமைந்துவிட்டால் நிம்மதி கிடைக்கலாம். ஆனால், சுவை இருக்காது.

கதை

என் சக ஆசிரியை பார்பரா (Barbara), அரசாங்கம் அளித்த உபகாரச் சம்பளத்தில் உயர்கல்வி பயின்றாள். தான் ஆசிரியையாக வேலை பார்க்கப் போகிறோம் என்று முதலிலேயே தெரிந்துவிட்டது. அவளுடைய அண்ணன்மார்களின் நண்பனான விக்டர்தான் அவளுடைய கணவன் என்று இரு குடும்பத்தினரும் அவளுடைய சிறு வயதிலேயே முடிவு செய்துவிட்டனர்.

ஆக, பார்பராவுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நடப்பதே பெரும் சுமை என்பதுபோல் நடப்பாள். `நான் ஒரு பயந்தாங்கொள்ளி!’ என்று அடிக்கடி சொல்லிக்கொள்வாள்.

உத்தியோகமும், கணவனும் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க இயலாவிட்டால் என்ன? வேறு திறமைகள் இருக்காதா! அவற்றை வளர்த்துக்கொண்டிருக்கலாமே!

பார்பரா படித்தவள். உத்தியோகமும் இருந்தது. ஆனால், துணிச்சல் இருக்கவில்லை. அதையே தன் குறையென்று எண்ணியதால், தைரியமாகச் செயல்படுகிறவர்களின்மேல் அவளுக்கு ஆத்திரமும் பொறாமையும் எழுந்தன.

தன்னைப்போல் இல்லாத பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டால், திருப்தி எழுந்துவிடுமா!

நம்மைப் பார்த்துப் ஒருவர் பொறாமைப்பட்டால் முதலில் வருத்தப்படுகிறோம். எரிச்சலும் எழுகிறது.

மாறாக, பெருமைப்பட வேண்டிய சமாசாரம் இது. நாம் அவரைவிடச் சிறந்தவர் என்று கருதுவதால்தானே அந்த உணர்ச்சிக்கு ஆளாகிறார்! இயற்கையிலேயே எழும் இந்த உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, அதனால் ஆட்டுவிக்கப்படுவது ஒருவரைக் கீழேதான் இழுக்கும். தம் பொறாமைக்கு இலக்கானவர்கள்போல் தம்மையும் மாற்றிக்கொள்ளலாமே!

என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசை எவருக்கும் இருக்கும். ஆனால், `நம்மால் முடியுமோ, என்னவோ!’ என்ற தயக்கம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கவே தடங்கலாகிவிடுகிறது. பயத்தை வெற்றிகண்டால் சாதிக்கலாம்.

நாம் பிறரைவிட எல்லாவற்றிலும் சிறந்தோங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அது நடக்காத காரியம். அப்போது எழும் பொறாமையைத் தவிர்க்க இயலாது. நம்மால் இயன்றவரை முயல்கிறோம் என்ற திருப்தி போதுமே!

பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்று பழிப்பது இதுபோல்தான். `ஏதோ, இந்தவரை எழுதுகிறானே!’ என்று மகிழ்ந்து பாராட்டுவது நன்மை தரும்.

அவன் அப்படியேவா இருக்கப் போகிறான்? வயது கூடினால், மாறமாட்டானா?

கையெழுத்து மோசமாக இருந்தால்தான் என்ன? இப்போதுதான் கணினி வந்துவிட்டதே!

கல்வி வேறு, வாழ்க்கை வேறு.

“பள்ளியில் படிக்கும்போது நான் மிகச் சிறந்த மதிப்பெண்கள் வாங்கினேன். ஏனோ வாழ்க்கையில் பிரகாசிக்க முடியவில்லை!” என்று புலம்புகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

கதை

படிப்பிலும், பேச்சுப் போட்டிகளிலும் பரிசு பெற்றதில் ஆசிரியர்களுக்குச் செல்லப்பிள்ளை ஆனவன் குமார்.

`பள்ளிக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தருகிறான்!’ என்று அந்த வயதில் எல்லாருமே கொண்டாடினார்கள்.

தனக்கு நிகர் யாருமில்லை என்ற மதர்ப்புடன் வளர்ந்தான் குமார். வெளியுலகத்திலும் எல்லாரும் அப்படியே தன்னை ஓர் அபூர்வப் பிறவியாகக் கருதமாட்டார்கள் என்று அந்த வயதில் புரியவில்லை. உண்மை புலப்பட்டபோது அச்சம்தான் விளைந்தது. `யாருக்குமே தான் ஒரு பொருட்டாக இல்லையே!’ என்ற ஏக்கம் பிறந்தது.

தம் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாது, தகுதியில்லாத பிறருக்காக அதைச் செலவிடுவதில் திருப்தி காண முயன்றான்.

நண்பர்களின் குடும்பத்திற்காகத் தம் நேரத்தைச் செலவிட்டுவிட்டு, `வெளியில் எனக்கு எவ்வளவு நல்ல பெயர் தெரியுமா? வீட்டில்தான் என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை!’ என்று குறைப்படும் ரகம், இம்மாதிரியானவர்கள்.

இவர்களது உபயோகம் குறைந்ததும், அந்த நண்பர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சொந்தக் குடும்பம் இவர்களைக் கைவிடாது. அப்போது, `உண்மையான மகிழ்ச்சி எங்கே என்று முதலிலேயே புரிந்துகொள்ளாது போனேனே!’ என்று மனம் நோகும்.

எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. தொலைந்தபின்தான் புரிகிறது — நிழலின் அருமை வெயிலில் தெரிவதுபோல்.

பிறர் பாராட்டவேண்டும்

சிலர் வெகு பிரயாசைப்பட்டு, எல்லாருக்கும் நல்லவராக நடிப்பார்கள். அப்போது கிடைக்கும் புகழ்ச்சி இவர்களுக்கு வேண்டியிருக்கிறது. அதற்காக அதிக சக்தியை விரயம் செய்ய வேண்டிவரலாம். சந்திக்கும் எல்லாருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும் என்று நடப்பது (நடிப்பது?) கடினம்.

இப்படி நடித்துக்கொண்டே இருந்தால், தனக்கான அடையாளமே புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே!

நடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் பாடு, இன்னும் திண்டாட்டம்தான்.

கதை

Manmarziyaan என்ற இந்திப் படத்தில் எதற்கும் அடங்காத முரட்டுப் பெண்ணாக வருகிறார் கதாநாயகி டாப்ஸி பன்னு (Taapsee Pannu).

படம் முடிந்த பிறகும் அதன் பாதிப்பு விலகவில்லையாம். அவரைக் கேட்காது ஒருவர் படம் பிடித்தபோது, கடுமையாக நடந்துகொண்டதாகத் தகவல்.

`நான் சாதாரணமாக அப்படி நடந்துகொள்ள மாட்டேன். அந்தப் பாத்திரத்தை என் மனத்திலிருந்து அடியோடு அகற்ற இன்னும் முடியவில்லை,’ என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

வேறு ஒரு நடிகர் தம் பாத்திரத்திற்கான குணாதிசயத்தை உள்வாங்கிக்கொள்ள முயன்றார். எப்படி தெரியுமா? ஒரு மாதம் தனியாக ஓர் அறையில் தங்கியிருந்தார், எவருடைய தொடர்புமின்றி!

படம் முடிந்தது. ஆனால், இவரோ அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார். தன் பழைய நிலைக்கு மீண்டுவர, உளவியல் சிகிச்சைக்குப் போக வேண்டியிருந்தது. (தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது).

`ரொம்ப முக்கியம்!’ என்று முகத்தைச் சுளிக்காதீர்கள். வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கிறது. புரிந்துகொள்ள முயல்வோமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *