அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (13.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 227

  1. ஒடுக்கப்பட்டோம் ஒளிவீசுவோம்

    ஓலைக்குடிசையில்
    ஓட்டை ஒடசலுடன்
    ஓரமாக ஒண்டிடும்
    ஓர் ஒளிக்கதிர்….
    ஓராயிரம் கனவுகளுடன்
    ஓயாத உழைப்புடனே
    ஓவியமென
    ஓய்ந்திருப்போனே…
    ஓடமாய் மனம் அலைந்திட
    ஒன்றுக்கும் வழியின்றியே
    ஒப்பற்ற நிலைக்கு
    ஒளிவிளக்காகிடவே….
    ஓரறிவுயிர்களும் ஒடுங்கிட
    ஒடுக்கினோர்கள்
    ஒழிந்துபோயினர்
    எல்லாம் ஒளிமயமே…
    ஓயாது உழைத்திடுவோம்
    ஊராரின் உள்ளமதில்
    ஓங்கி உயர்ந்திடவே
    ஓசோனில் கால்பதிப்போம்…
    வாராய் என் இளஞ்சிங்கமே,
    ஒளிவிளக்காவோம் அடிமை தளை அறுத்து,
    ஆர்வமுடன் நிலைநாட்டுவோம்…

  2. கீற்றுக் குடிசையின் கிழக்குச் சூரியன்
    நேற்று இன்றின் நீங்க துயரை- நாளை
    மாற்றும் நம்பிக்கையின் மின்னல் கீற்று
    காற்று புகா இடத்திலும் பாயும் ஓளியின் நாற்று

    இடிந்த சுவரை எண்ணி
    இடிந்திடாதே தம்பி
    இழந்ததை எண்ணி கலங்காதே
    இருப்பதைக் கொண்டு போராடு

    அள்ளக் குறையாத அறிவூறும்
    அட்சயப் பாத்திரம் தான்
    அருகில் இருப்பவை எல்லாம்
    அள்ளிப் பருகு ஆளுமை கொள்

    கீழகழ்ந்து தேடாமல் இருந்தவரை வைகையின்
    கீழடி கூட நம் காலடிக்கு கீழே தானே கிடந்தது
    கிளரித் தோண்டிய பின்னே தான் அது தமிழனின்
    கிட்டா பெருந்தனம் எனப் புரிந்தது

    தலைநிமிர் தடை தகர்
    தளையறு தடம் பதி
    விளையட்டும் புது விதி
    வீழட்டும் பழமையின் சதி

    கண்ணீர் சிந்தியொரு பயனுமில்லை
    காலத்தை பூட்டிட யார் கையிலும் சாவி இல்லை
    கடினம் ஆயினும் கனமாய் அடி
    கதவுகள் திறக்கும் கவலைகள் பறக்கும்

    வீணாய் கிடந்தால் வீழ்ச்சிதான் விரைந்தெழு
    விண்ணளக்கும் உன் உழைப்பால்
    மண்குடிசை வாசலையும் வா
    பொன் பளிங்கு மாளிகையாக்கலாம்

    யாழ். நிலா. பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    noyyal.blogspot.in

  3. நம்பிக்கையில்…

    பள்ளிக்குச் சென்ற
    பிள்ளை வந்துவிட்டான்,
    பணிக்குச் சென்ற
    பெற்றோர் வரவில்லை..

    மதிய உணவைப்
    பள்ளி பார்த்துக்கொண்டது,
    இரவு உணவுக்கு
    வழிதேடிச் சென்றவர்கள்
    வரவில்லை இன்னும்..

    வாசலில் காத்திருக்கிறான்
    வாடியே பிள்ளை
    நம்பிக்கையில்,
    வரட்டும் சீக்கிரம்-
    இப்போது பெற்றோர்,
    நாளை நல்வாழ்வு…!

    செண்பக ஜெகதீசன்…

  4. வழு இல்லா வாழாநிலை போல் ஒர் நெறி முறைக்குள் நிற்பவனாய்…… வாயில் தாண்ட வாஞ்சையின்றி வையம் நோக்கி இருப்பதேனோ.?

    வீட்டினுள்ளே காவல் காக்க வேருயிர் ஏதும் இருக்கிறதோ? – அன்றில் வெறும் வயிறு பசி தணிக்க வரும் நுந்தை வழி நோக்கி அமர்ந்தனையோ….?

    எதுவாகில் இருந்திடினும் – நீ இளைத்துப் போய் இருத்தல் வேண்டாம்…. வாழ்க்கையாம் வட்டத்திற்குள் வறுமை மட்டும் நிரந்தரமா ?

    நின் விழி தான் உரைக்கின்றதே இந்நிலை வென்றிடலாம் என்று என்று…….எனவே முடக்கிய கால் நிமிர்த்தி மடக்கிய கரம் தளர்த்தி முனைப்போடு தடம் பதித்து முன்னே வா செழுஞ்சுடரே…….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *