-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் 691:

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

ராசா கூட இருக்கவங்க நெருப்புல குளிர் காயுதது போல கிட்டக்க போவாமலும் தூர வெலகாமலும் இடையுல நின்னு பழகணும். 

குறள் 692:

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்

ராசா ஆசப்படுதது தான் தனக்கும் வேணும்னு நெனையாம இருக்கவனுக்கு ராசாவால நெலையான செல்வம் கிடைச்சிக்கிடும்.

குறள் 693:

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

ராசாகிட்டேந்து தன்னயக் காத்துக்கிட நெனைக்கவன் தப்பான காரியத்த செய்யக் கூடாது. ஒருக்கா ராசாவுக்கு சந்தேகம் தோணிப்போச்சுதுன்னா  அதத் தெளிய வைக்கது சங்கடந்தான். 

குறள் 694:

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து

பெரிய மனுசங்க முன்ன மத்தவன் காதுல ரகசியம் சொல்லுததும், அவன் கூட சேந்து சிரிக்குததும் கூடாது. 

குறள் 695:

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை

பதவியில இருக்கவங்க ரகசியமா பேசுதப்போ நின்னு ஒட்டு கேக்கக் கூடாது. பொறவு அது என்னனு கேட்டு தொந்தரவும் செய்யக்கூடாது. அவுகளா சொல்லுத வரைக்கும் விட்டுப்போடணும். 

குறள் 696:

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்

ஒருத்தங்களோட மனசப் புரிஞ்சிக்கிட்டு ஏத்த காலத்துல மனசுஒப்பாதத நீக்கிப்போட்டு நல்லதா அவுக விரும்புதாமாரி சொல்லணும். .     

குறள் 697:

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

விருப்பப்பட்டு கேட்டாக ன்னாலும் உருப்படியான விசயத்த மட்டும் சொல்லிப்போட்டு உருப்படாதத விட்டுப்போடணும். 

குறள் 698:

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்

பதவியில இருக்கவங்கள எனக்கு இன்ன மொறையில சொந்தம், என்னைய விட இளையவன் தான்னு எளக்காரமா பேசாம அவுகளுக்கு இருக்க புகழ நெனச்சி பாத்து நடந்துக்கிடணும். 

குறள் 699:

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்

தெளிஞ்ச புத்திக்காரங்க ராசாக்குதான் நம்மளப் புடிக்குமே ன்னு நெனச்சு துணிஞ்சு அவருக்கு பிடிக்காத காரியத்த செய்ய மாட்டாக.  

குறள் 700:

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
கெழுதகைமை கேடு தரும்

ராசாகிட்ட நெருக்கமா பழகுதோம் ங்குத காரணத்த வச்சிக்கிட்டு தகுதியில்லாத செயலச் செஞ்சாம்னா அது கெடுதலாதான் முடியும்.  

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *