-கௌசி (சந்திரகௌரி சிவபாலன்)

ஆண்டவன் சிருஷ்டியின் அற்பதப் படைப்பு மனிதன். இறைவன் மனிதன் கையில் முக்கிய பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு அமைதி காணுகின்றான். இப் பொறுப்புக்களில் ஒன்று உன்னத பண்பாகிய நன்மை செய்தல். நன்மை செய்தல் என்ற பதத்தினுள் அடங்கும் உதவி என்ற பதத்திற்குள் உள் நுழைவோம். கேட்பவர்க்கு இல்லையென்னாது வாரி வழங்கும் கொடையும் உதவியே. ‘உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கு இடுக்கண் களைவதும்”உதவியே

வாழ்க்கையிலே நிம்மதி இழந்து, உறவுகளைப் பறி கொடுத்து, அல்லல்பட்டு அடைக்கலம் எனப் புகுந்தவர்களை அந்நியநாடு, அன்புக்கரம் கொடுத்து ஆதரவு தந்து அடிப்படை தேவைகள் மட்டுமன்றி ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. சொந்தமா? பந்தமா? சொல்லிக் கொள்ளும் நட்பா? யாரென்று தெரியாத ஒரு அந்நியனை தன் உடன்பிறப்புப் போல் நினைத்து உதவுகின்றது. இங்குதான் உதவியின் உண்மைத் தன்மையை நாம் அடையாளம் காணமுடிகின்றது. இனவேறுபாடு, சாதிவேறுபாடு, மதவேறுபாடு என மனிதனை மனிதனே பங்கு போட்டுக் கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒரு எடுத்துக்காட்டாக நாம் புகுந்த மனை விளங்குகின்றது. அதைப் போற்றிப் பாடாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டியது எமது கடமை.

உதவி பற்றி நாம் விரிவாக நோக்குவோமேயானால், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய பொதுமறை திருக்குறள் தந்த தெய்வப்புலவர், திருவள்ளுவர் தான் அநுபவித்து உதிர்த்த வார்த்தைகளான,

“உதவி வரைத்தன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”

என்ற குறளை எடுத்து நோக்கினால், உதவியைப் பெறுபவர்க்கு நாம் செய்யும் உதவி எந்த அளவிற்கு பயன்படுகின்றதோ. அந்த அளவே உதவியின் அளவு அமையும். என்பதே அதன் உள்ளார்ந்த பொருள் ஆகும். நாம் உதவியை யாருக்குச் செய்கின்றோம் என்பது முதலில் அறியப்படல் வேண்டும். அதாவது “பாத்திரம் அறிந்து பிச்சை போடு”என்ற பழமொழியோடு இக்கருத்து ஒன்றி நிற்கின்றது. பசித்தவனுக்கு உணவு பரிமாறப்படல் வேண்டும். எனக்குப் பசியில்லை என்று கூறும் விருந்தாளியை நோக்கி இதுதான் சுதர்மம் என்று கூறி வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பது எந்தவகையில் நியாயமாகப்படும். கேட்டோமா? கொடுத்தார், பெற்றோம் என்று அவர் கூறும் நிலைதான் ஏற்படும். அவன் சால்பின் வரைத்துத்தானே உதவி அமைதல் வேண்டும். பழங்கள் இருக்கும் வரை பழமரத்தைப் பறவைகள் அண்மிப்பது போல ஒட்டி உறவாடிய சொந்தங்கள், வெறுமையாக வழியிழந்து நிற்கும் போது விட்டு விலகிவிடும். இது நடைமுறை வாழ்க்கை. நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற கருத்துக்களே உலகுக்கு ஏற்ற பொதுமொழியாக அமைகின்றன. மனிதனிடம் கொடுக்கப்பட்டிருப்பது அட்சயபாத்திரம் அல்லவே, கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் இருக்க. எனவே ‘தனக்குண்டு தானம் வழங்கு”என்பதும் சுயபுத்தி கொண்டு சுயமாகச் சிந்திக்க வேண்டியதுதான். ஆனாலும், மனிதன் கர்மம் செய்யப் பிறந்தவன். ஏதோ ஒருவகையில் அவன் கர்மம் செய்தேயாக வேண்டும் என பகவத்கீதை கூறுகின்றது. தனது மகனுக்காவது ஒரு மனிதன் கருமம் செய்திருப்பான். எனவேதான் இறுதிமரியாதையில் மகன் அவனுக்குக் கர்மம் செய்கின்றான் என அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் விளக்கியுள்ளார். கர்மம் செய். பலனை எதிர்பாராதே என பகவத்கீதை கூறுவது போல் ஒளவையும்

‘நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல்? என வேண்டா – நின்று
தளரா வளர் தெங்குதாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்”

என்று தன வாக்குண்டாம் என்றும் நூலில் கூறியிருக்கின்றார். அதாவது அடியிலேயிருந்து வேர் மூலமாகக் குடித்த நீரை இளநீராகத் திரும்பவும் தென்னைமரம் தருவதனால், அதேபோல் ஒருவருக்கு நன்றி செய்தால் அந்த உதவிக்கு எப்பொழுது பதில் உதவி புரிவாரோ என்று நினைக்க வேண்டியதில்லை.

உதவி பற்றிக் கீதையும் வள்ளுவமும் முரண்பட்டு நிற்பது போல் தோன்றினாலும் வள்ளுவம் கூறுவது, நீங்கள் செய்யும் உதவியின் பயன் அதனைப் பெற்றுக் கொள்ளுபவனின் மனதைப் பொறுத்தது. என்பது மட்டுமே. அந்தப் பலனைத்தான் எதிர்பார்க்காதே என்று கீதை சொல்கின்றது. வள்ளுவம் கூட பலனை எதிர்பார் என்று கூறவில்லை. பலனானது உதவி பெற்றுக்கொள்பவர் மனதைப் பொறுத்தே அமையும் என்கிறது. இந்துமதத்தின் அடிப்படை பகவத்கீதை. பகவான் கிருஷ்ணபரமாத்மா மூலம் இறைவாக்காக அருளப்பட்டது. கீதையைத் தலைமேற்கொண்டால், ‘உன்னுடைய கர்மம் நன்மை செய்வதாக இருந்தால், அதை யாருக்கு வேண்டுமானாலும் செய் அதுவே சுதர்மம்|| என்பதை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இதை அடிப்படை வித்தாக மனதிலே ஆழமாகப் பதிக்க வேண்டும். நன்மை செய்வதாக இருந்தால், சொந்தமோ, பந்தமோ, உறவோ, பகையோ, யாருக்கு வேண்டுமானாலும் செய்ய வேண்டும். இதனையே ஒளவைப்பிராட்டியும்

 ‘உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
  உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
  மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
  அம் மருந்து போல் வாரும் உண்டு”

என்கிறார். உடன்பிறப்பு, சுற்றம் என்று உன் கவனத்தைக் குறுக்கி விடாதே. உறவினர்கள் தான் நன்மை செய்வார்கள் என்றிருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மருந்து உன் நோயைத் தீர்க்கின்றது. அந்த மருந்து போன்ற அந்நியர்களும் உதவிக்கு வருவார்கள் என்று அழகாகச் சொல்லியிருக்கின்றார். அதனால் எமது பார்வையானது விரிய வேண்டும். அகலக்கண் கொண்டு பார்க்க வேண்டும்.

எனவே ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” “முடிவு இறைவன் கையில் இருக்கின்றது. நீ வெறுமனே செயற்படு” என்னும் வாக்கியங்களை அகங் கொண்டு ஆட்டி வைப்பவன் இருக்கின்றான். ஆவதைப் பார்ப்போம். எனத் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவோம். நாம் பெற்ற உதவிகளை மனதில் பதித்திருக்கும் என மனந்தெளிவோம். ஒரு கரம் வழங்க மறுகரம் அறியாதிருக்கும் எனத் தொழிற்படுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *