-வையவன்

அமுதசுரபி தீபாவளி மலர் 2019 இல் வெளிவந்தது… 

“ஒரே ஒரு கணம் ..ஒரு கணம் பொறுங்கள். புதைந்திருக்கிற சக்கரத்தைச் சேற்றிலிருந்து எடுத்து விடுகிறேன். பிறகு நம் போர் தொடரட்டும்” கர்ணனது கெஞ்சல் இருவர் காதிலும் விழவில்லை. உத்தரவு வந்தது. வரவேண்டிய இடத்திலிருந்து வந்தது.

“கொல்”

வில்லை ஏந்தி நின்ற அர்ஜுனனை ஏவிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்

“நில்”

திடீரென்று வானம் கறுத்தது. இடி முழக்கம் கேட்டது.

மண்ணில் புதைந்திருந்த தேர்ச் சக்கரத்தை பிடுங்கி எடுக்கக் குனிந்தபடி வேண்டுகோள் விட்ட கர்ணன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் கால்களை உயர்த்திக் கனைத்ததால் சாரதி இல்லாத தேர், வலமும் இடமும் தள்ளாடி அசைந்தது . தேரோட்டி கைவிட்டுச் சென்று விட்டான். தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியன் ”நீயே ஓட்டிக்கொண்டு சென்று நீயே மாண்டு போ” என்பது போல் சென்றுவிட்டான்.

பெருமழை பெய்து குருக்ஷேத்திர பூமியை வெள்ளப் பெருக்கால் மூழ்கடித்து யுத்தத்தை நிறுத்திவிடுமா?

இல்லை. வானம் பயமுறுத்துகிறது. ஒருக்காலும் மழை பெய்து யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. அப்படியே மழை பெய்தாலும் கோவர்த்தன கிரியை இடையர்களுக்காக ஒற்றை விரலில் உயர்த்தி நிறுத்திய கிருஷ்ணனா விட்டுவிடுவான்?

அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகி, வில்லில் அம்பைப் பூட்டி நிற்கிறவனுக்கு உத்தரவு கொடுப்பவனைத் திரும்பிப் பார்த்தான். அவன் மட்டுமல்ல. குருக்ஷேத்திரத்தில் எல்லாத்தலைகளும் உயர்ந்து வானையே பார்ப்பதை கர்ணன் கண்டான்.

“நில்”

பூட்டிய அம்பை கர்ணன் மேல் விடாமல் அர்ஜுனன் ஏதோ ஒரு கட்டளை வந்தது போல் தாமதித்தான்.

அவனுக்கு நிராயுத பாணியான தன் மீது ஆயுதம் ஏவக் கூடாது என்ற தயக்கம் வந்து விட்டதா?

இல்லை. இல்லை இந்த யுத்தம் எப்படி முடியும் என்று கர்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

கிருஷ்ணன் தேரோட்டியாகச் சம்மதித்தான் என்று கேட்ட பொழுதே கர்ணன் மனதில் குருக்ஷேத்திர யுத்தம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் தர்மத்திற்குச் சிறிதளவாவது கிருஷ்ணன் மதிப்பு கொடுப்பான் என்று கர்ணன் நினைத்தான்.

முடிவு என்னவாயினும் தான் சார்ந்திருக்கும் பக்கம் சாய்ந்து விடாமல் தனது பெயருக்குக் களங்கம் வராது நடந்து கொள்வான் என்று உள்ளே ஓர் நினைவிழை ஓடியது.

நேற்றுப் போரிட்டு மூலையில் முடங்கிய தர்மன் கிளப்பிவிட்ட ரோஷம் கூடவா மறந்திருக்கும்?

தேரோட்டி சல்லியன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டுமோ? தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியனை அவமானப் படுத்தியது குற்றம் தானா?

தான் நாகாஸ்திரத்தை எடுத்ததுமே சல்லியன் சொன்னது நினைவு வந்தது.

“கர்ணா! நீ நாகாஸ்திரத்தை எடுத்துவிட்டாய். சரி அஸ்திரம் வீணாகக்கூடாது.அதை அர்ஜுனனின் மார்புக்கு குறி வை” எந்த விதி என்னை வீர தர்மம் குறித்துப் பேச வைத்தது.

“சல்லியா! மாட்டேன். அர்ஜுனன் ஒரு வீரன். நான் ஒரு வீரன். அதனால் நான் அவன் கழுத்துக்கு குறி வைப்பேன்” நடந்தது மீண்டும் நினைவில் புரண்டது.

“கர்ணா! நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறி வை. கழுத்துக்கு வைக்காதே”

நான் ஏன் எரிச்சலடைந்தேன்? எவர் பேச்சையும் கேட்க விடாது எந்தத்தீ என்னுள் எரிந்து கொண்டே இருக்கிறது!

“சல்லியா! ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். நீ கேவலம் ஒரு தேரோட்டி. நீ எனக்கு அறிவுரை கூறாதே”; என்று சொல்கிறான்.

தேரோட்டி மகன், தேரோட்டி மகன் என்று பார்ப்பவர்கள் எல்லாம் மனசிற்குள்ளாவது நினைக்க விட்ட அந்தத் தீ மீண்டும் சுடர் விட்டுவிட்டது. பொறிகள் தெறித்து அற்புதமான தேரோட்டியான சல்லியன் மீதும் பட்டு அவனைச் சுட்டுவிட்டன.

எனினும் மிகுந்த பெருந்தன்மையான சல்லியன் , “கர்ணா! ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். மெய்தான். ஒப்புக்கொள்கிறேன். அதுபோல் ஒரு தேரோட்டியைப் பற்றி இன்னொரு தேரோட்டிக்குத்தான் நன்றாய்த் தெரியும். இப்போது கிருஷ்ணன் அர்ஜுனனின் தேரோட்டி. மகா மாயாவி. என்ன சூழ்ச்சி செய்வான் என்று சொல்ல முடியாது. அவன் பொறுப்பிலே இருப்பது அர்ஜுனன். என் பொறுப்பிலே இருப்பது நீ. தயவு செய்து சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறிவை”

ஏன் கேட்காமல் போனோம்?

மீண்டும் நடந்தது நினைவில் வந்தது. அர்ஜுனனின் கழுத்தை நோக்கிக் குறிவைக்கப்பட்ட நாகாஸ்திரம் எப்படி மேலே உயர்ந்து அவன் மகுடத்தைத் தட்டித் தூக்கிக் கொண்டு போயிற்று?

அஸ்திரம் குறி தப்பிவிட்டதா? இல்லை. தேர் தான் கீழே தாழ்ந்துவிட்டது.

கிருஷ்ணனின் மாயை. தேரைத் தனது காலால் ஒரு அழுத்து அழுத்தி அவன் செய்த வெற்றிப் புன்னகை மனசில் மின்வெட்டியது . தேர் சில அங்குலம் பூமியில் அழுந்தி விட்டது

எதிராளியைத் தன்னுடைய திறமையினால் வில்லையும் தேரையும் இழக்கச் செய்துவிட்டு அவனை வீழ்த்தலாம், மாறாக வேண்டுமென்றே வில்லை. கீழே வைத்து விட்டோ அல்லது வேண்டுமென்றே தேரிலிருந்து இறங்கினாலோ தாக்கக்கூடாது. இது யுத்த தர்மம். அப்படியும் தாக்கினால் அது அதர்மம். தாக்குகிறவன் திறமையின்மையை வெளிப்படுத்தும் அதர்மம். அந்த யுத்த தர்மத்தை நினைவூட்டுவோம்

“கிருஷ்ணா, உனக்கும் எனக்குமிடையே ஒன்றுமில்லை. நீ என் பகைவன் அல்ல. நான் உன் பகைவன் அல்ல. நான் யாரென்று உனக்கு நன்றாய்த் தெரியும், யுத்த பூமியில் உறவுகள் கூறி சமாதானம் கேட்க முடியாது. என்னைப் பெற்றவள் யாரென்றும் உனக்குத் தெரியும். அவள் கேட்டுக்கொண்ட வரம் என்னவென்றும் எல்லாம் அறிந்தவனாக உனக்குத் தெரியும். இது சார்ந்திருக்கும் சார்புகளால் வந்த பகை இது. ஆனால் எல்லோருக்கும் பொதுவாய் ஒன்று உண்டு. யுத்த தர்மம்.அதைமறந்து விடாதே” என்றான் கர்ணன்.

அவன் மனதில் மரண திகிலின் கருமேகம் சூழ்ந்து வந்தது. சிறிது சிறிதாக நெஞ்சை அடைப்பது போல் அதன் ஆதிக்கம் பெருகியது. அவன் குரல் உடைந்தது. கம்மியது. விம்மல் பிறந்தது.

“எதைப் பற்றி யார் பேசுவது கர்ணா? “ இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு கிருஷ்ணன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் காலதேவனின் தீர்ப்புத் தொனி ஒலித்தது.

அப்போது வானின் கருமேகம் சிறிது சிறிதாகக் கலைந்து சென்றது. அர்ஜுனனின் குறிக்குத் தப்பாத அம்பு கர்ணனின் மார்போடு உறவு கொள்ளத் துடிப்பது போல் வெளிவாங்கிய வெளிச்சத்தில் மின்னியது.

“கிருஷ்ணா..கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சினான்.

“யுத்தத்தின் தர்மம் ஒன்றே ஒன்றுதான். ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பவன் தான் இங்கே தலைவன். மற்றவன் கீழ்ப்பட்டவன்” கெஞ்சுகிற கர்ணன்..

கிருஷ்ணனுக்குப் பரிதாபம் வரவில்லை.

“அடடே! எங்கே போயிற்று உன் வீரம்?” மார்புக் கவசங்களையும், காது குண்டலங்களையும் கழற்றிக் கொடுத்த உன் தான வீரம் எதற்கு உயிர்ப்பிச்சை கேட்க வேண்டும்? தீரமாக மரணத்தைச் சந்தி. தீமையின் சகதிகளில், தீய உறவுகளின் சேற்றில் நீ ஆரம்பம் முதலே புதையுண்டவன். தேரோட்டியின் மகனாக இருக்க விதிக்கப்பட்டவன். அதிலிருந்து விடுபட்டு.. உன் பொறாமையிலிருந்து, செருக்கிலிருந்து விடுபடு” என்று எத்தனை பேர் உனக்கு புத்தி சொன்னார்கள். அந்தத் தீமைகளின் உறுதிப் பிடிகளில் இருந்து விடுபடமுடியாத உனக்கு உயிர் வாழ ஒரு கணம் வழங்குவது கூட அதர்மம் தான்”

“கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சுகிற குரலில் வேண்டினான்.

“பாஞ்சாலியைச் சூதாடிகளின் அவைக்கு நிர்வாணமாக இழுத்துவரச் சொல்லி ஏவியவனை நீ தடுக்கவில்லை. ஊக்கப்படுத்தினாய். கர்ணா.. நீ தேரோட்டி மகன் என்று அவளது சுயம்வரத்திலே இகழ்ந்தவள் திரௌபதி. அவள் மீது உனக்கு வஞ்சம். அந்த வஞ்சத்தை மறக்காமல் துரியோதனன் போட்ட ராஜ்ஜிய பிச்சைக்கு யாசகம் போல் ஏற்ற சோற்றுக் கடன் தீர்க்கப் போராட வந்திருக்கிறாய். இப்போது தர்மம் பேசுகிறாய். எது தர்மம் சொல்? கர்ணா”

கர்ணன் முகம் இருண்டது. பிறவியே மீண்டும் ஈனப்பட்டது போல் கிருஷ்ணனின் சொற்கள் அம்புகளாக மாறி அவன் இதயத்தைத் துளைத்தன.

“அந்தண வேடமிட்டுப் பரசுராமரிடம் பொய் சொல்லி அஸ்திர வித்தை கற்று சாபத்திற்கு ஆளானாயே, அது தர்மமா? சக்கர வியூகத்திலிருந்து மீளத் தெரியாத பதினாறு வயது பாலகன் அபிமன்யுவைச் சுற்றி வளைத்துக் கைவேறு கால் வேறாக வெட்டிச் சிதைத்தீர்களே அது தர்மமா”

கிருஷ்ணன் நீதிதேவன் போல் கம்பீரக் குரலில் திருப்பித் திருப்பி நினைவூட்டினான்.

“கொல்”

அர்ஜுனனின் அம்பு கர்ணனின் மார்பைத் தொடும் முன் தாய் குந்திக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவில் எழுந்தது.

அம்பு கர்ணன் மார்பைத் துளைத்தது.

“அம்மா “ என்று அவன் அலறி வீழ்ந்தான்.

எங்கோ தூரத்தில் இருந்த குந்தியின் வயோதிக மார்பில் பால் சுரந்தது.

கர்ணன் வீழ்ந்தான் என்று குருக்ஷேத்திரத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

“மகனே”; அலறியபடி எல்லோரையும் விலக்கிக் கொண்டு குந்தி ஓடி வந்தாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *