தமிழகம் கண்ட ஆன்மிகச் சீர்திருத்தவாதி!

0

-மேகலா இராமமூர்த்தி

 

இந்திய வரலாற்றில் அரசர்களுக்கு இணையான புகழொடு திகழ்பவர்கள் வள்ளல்கள். முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் என்று இவர்களை மூவகைப்படுத்திச் சொல்வார்கள். இவ்வரிசையில் கடையெழு வள்ளல்களே தமிழ்மரபில் தோன்றிய சிறப்புக்குரியவர்களாய்த் திகழ்கிறார்கள். அவ்வழிவந்த 19ஆம் நூற்றாண்டு வள்ளலே வள்ளலார் என்று தமிழக மக்களால் அன்போடும் பக்தியோடும் அழைக்கப்படும் இராமலிங்க அடிகள்.

தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாய், தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகவாய்த் தோன்றினார் இராமலிங்கர்.

தாம் இப்புவியில் பிறந்த காரணத்தை,

”அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்
          திருந்த உலகர் அனைவரையும்
     சகத்தே திருத்திச் சன்மார்க்க
          சங்கத் தடைவித் திடஅவரும்
     இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
          திடுதற் கென்றே எனைஇந்த
     உகத்தே இறைவன் வருவிக்க
          உற்றேன் அருளைப் பெற்றேனே” 5485) என்று என்று நமக்கு அறியத் தருகின்றார்.

இளமையிலேயே திருத்தணிகை முருகனின் அருட்காட்சியைக் கண்ணாடியில் கண்டவராக அறியப்படும் அடிகளார், முறையாகக் கல்விபயிலாமலேயே அனைத்தையும் இறையருளால் முற்றாகக் கற்றவர் என்பதற்கு அவருடைய பாடல்களிலேயே அகச்சான்றுகள் கிடைக்கின்றன.

”சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டாது அண்டபகி ரண்டம்
 
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே”
என்கிறார்.

இவ்வாறு முறையாகக்கல்வி பயிலாமலேயே ஞானம் கைவரப் பெற்றவர்களைச் சாமு சித்தர்கள் என்றழைப்பார்கள். அவர்கள் முற்பிறவிகளில் செய்த சரியை கிரியை யோகம் முதலிய உயர்செயல்களின் பயனாய் இப்பிறவியில் ஞானமார்க்கத்தில் நின்று சித்திபெறுவதற்கென்றே பிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி  ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
எனும் குறளின் கருத்துக்கு அடிகளின் வாழ்க்கை சிறப்பாய்ப் பொருந்துகின்றது எனலாம்.

இளமையில் முருகனைத் தம் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்த வள்ளல் பெருமானார், திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் கொண்டிருந்தார் என்பதனை அவர் வாழ்க்கை வரலாறு உணர்த்துகின்றது.

சென்னையில் 35 அகவை வரை வாழ்ந்த அவர், தம் பன்னிரண்டாம் அகவை தொடங்கி 35ஆம் அகவை வரை நிதமும் திருவொற்றியூருக்குச் சென்று இறைவனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒற்றியூரில் கோயில்கொண்டிருக்கும் ஒற்றியப்பரையும், வடிவுடையம்மையையும்,  முருகனையும் பல பதிகங்களில் பாடிப் பரவியிருக்கின்றார்.

திருவொற்றியூரிலுள்ள நந்தியோடை அடிகளாருக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அந்த நந்தியோடையின் கரையிலே தென்னஞ்சோலையின் ஒருமருங்கிலே அமர்ந்து, மெல்லென வீசுங்காற்றை நுகர்ந்தும், ஓடையிலே ஓடும் தெண்ணீரின் ஓட்டத்தைக் கண்டும் அதனை உண்டு மகிழ்ந்தும், மரநிழலின் அருமையை ஆரத்துய்த்தும் இன்புற்ற பொழுதெல்லாம் இறைவன் திருவருள் நலத்தையும் உன்னி உன்னி அதன்கண் திளைப்பார் அவர்.

இத்திளைப்பே பின்னர் அவர் பாடிய செய்யுள் ஒன்றிலே திறம்பட வெளிப்படுவதாயிற்று. அச்செய்யுள் இயற்சொற்களால் இயன்றுளதேனும், திட்பமும் நுட்பமும் பெற்றுப் பலநோக்குடன் திகழ்வதைக் காணலாம்.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
          குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
     ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
          உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
     மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
          மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
     ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
          ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே”

வள்ளலார் ஒற்றியூரில் வாழ்ந்தகாலத்தே நிகழ்ந்த வியத்தகு செயல்கள் சிலவற்றை அறிந்துகொள்வோம்.

திருவொற்றியூர்த் தேரடித் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் நீண்ட நாள்களாகத் துறவி ஒருவர் இருந்துவந்தார். அவர் உடை ஏதும் உடுத்துவதில்லை. தெருவழியாகப் போவோர் வருவோரையெல்லாம் அவரவர் குணங்களுக்கேற்ப, ‘மாடு போகிறது, கழுதை போகிறது, நாய் போகிறது, நரி போகிறது’ என்று சொல்லிக் கேலிசெய்து கொண்டிருப்பார்.

அடிகள் திருவொற்றியூருக்குச் செல்லும்போதெல்லாம் தேரடித்தெரு வழியாகச் செல்வதில்லை. தெற்குமாட வீதியிலுள்ள நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்தின் வழியாகச் சென்று கோயிலை அடைவதே வழக்கம். நெல்லிக்காய் ஊறுகாய்ப் பக்குவமாய்ச் செய்து அன்பர்களுக்கு இடும் பண்டாரமொருவர் அச்சந்தில் வசித்ததால் அஃது அப்பெயர் பெற்றது.

அடிகளும் உடன்செல்வோரும் சிற்சில சமயங்களில் அப்பண்டாரத்தின் வீட்டில் உண்பதுண்டு. வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் அடிகள் தேரடித் தெரு வழியாகச் சென்றார். அன்று புதிதாக அடிகளைக் கொண்ட அத்துறவி, “இதோ ஓர் உத்தம மனிதன் போகிறான்!” எனக் கூவியவாறே தமது கைகளால் மெய்யைப் பொத்திக்கொண்டார். அடிகள் அவரிடம் சென்று சற்று அளவளாவினார். அதன்பின்னர் அந்நிர்வாணத் துறவியார் அங்கில்லை. அன்றிரவே அவ்விடம் விட்டகன்றார். அடிகளைக் காண்பதற்காகவே அவர் அத்தனை நாள் அங்கே காத்திருந்தார் போலும்!

இதுபோன்றே, மற்றொருநாள் நள்ளிரவில் பசியோடு தம்வீட்டு வாயிற் திண்ணையில் அடிகளார் படுத்திருந்தபோது, ஒற்றியூர் அன்னையான வடிவுடையம்மை தம் அண்ணியாரின் கோலத்தில் வந்து தமக்கு அமுதளித்துப் பசிபோக்கியதை நெகிழ்ச்சியோடு தம் பாடலில் பதிவுசெய்திருக்கின்றார் வள்ளல் பெருமானார்.

இராமலிங்கர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்று அழைக்கப்படுகின்றது. ஆறு திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ள அத் திருப்பாடல்களின் எண்ணிக்கை 5818 ஆகும். இவையன்றி அடிகளார் அவ்வப்பொழுது தம் நண்பர்களுக்குக் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் எழுதிய தனிப்பாடல்களும் பலவுள.

உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்றிய அப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் இரண்டு உரைநடை நூல்களை அடிகளார் எழுதியுள்ளார்.

மனுமுறை கண்ட வாசகம் என்பது, ‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோனா’கிய மனுச்சோழன் முறைசெய்த வரலாற்றைக் கூறுவது.

அடிகளார் பதிப்பித்த நூல்கள் மூன்று. அவை ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை என்பன.

தொண்டமண்டல சதகத்தின் நூற்பெயர் இலக்கணம் குறித்த விளக்கத்தின் இறுதியில் இந்நூல் தொண்ட மண்டலமா, தொண்டை மண்டலமா என்று வினவுவோருக்கு விடையளிக்கும் வகையில்,

”ஆதொண்டச் சக்கரவர்த்தி என்பவர் தாம் அரசு செய்யும் காலத்தில் தம்மால் கட்டுவித்த ஆலயங்களில் தம் பெயரிலச்சினையைச் சிலையின்கண் பொறிப்பித்தனர். ஆண்டும் ஆதொண்ட என்றே இலக்கண அமைதி பெற்றிருக்கின்றது. இதனைத் திருவலிதாயம், திருமுல்லைவாயில் முதலிய சிவதலங்களில் சென்றேனும் கண்டு தெளியக் கடவர்” என்று கல்வெட்டுச் சான்றுகாட்டி முடிக்கின்றார்.

திருவலிதாயம், திருமுல்லைவாயில் கல்வெட்டுக்களில் ‘தொண்ட மண்டலம்’ என்றே காணப்படுகின்றது என்று அடிகள் கல்வெட்டுச் சான்றாதாரம் காட்டுவதிலிருந்து அவர் திருக்கோயில்களுக்குச் செல்லுங் காலங்களில் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை கல்வெட்டுக்கள் ஆகியவற்றை ஆராயும் வழக்கமுடையவர் என்பதை அறிகின்றோம். அவ்வகையில் தமிழகத்தின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே எனக் கருதுவதில் பிழையில்லை.

சிறந்த தமிழ்ப்பற்றாளரான அடிகளார், ஒருமுறை சென்னையில் சங்கராசாரிய சுவாமிகளுடன் உரையாட நேர்ந்தபோது சங்கராசாரியார் சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறியிருக்கின்றார். அதைக்கேட்ட அடிகளார், அஃது உண்மை அன்றென மறுத்ததோடல்லாமல், சமஸ்கிருதம்தான் தாய் என்றால் தமிழே தந்தைமொழி எனக்கூறித் தமிழின் சிறப்பை விளக்கியிருக்கின்றார். அத்தோடு அமையாது, தமிழ்மொழியே அதிசுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்கவல்லது என்பதையும் தெளிவாய்ச் செப்பியிருக்கின்றார்.

இறைநம்பிக்கை மிகுந்தவராக வள்ளலார் விளங்கியபோதினும், ஒற்றுமைக்கும், உண்மைக்கும் புறம்பான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றை மறுத்து அவற்றின்மீது லட்சியம் வைக்கத் தேவையில்லை என்கின்றார். இவற்றால் ஒரு பயனும் இல்லை, இவை சூதாகச் சிலவற்றைச் சொல்ல வந்த புனைந்துரைகள் எனவும் விளம்பிச் சனாதனக் கொள்கைகளின் வேரில் வெந்நீரை ஊற்றுகின்றார்.

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக… (3768)

என்று கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளைக் கருணையின் வடிவான வள்ளலார் கடுமையாய்ச் சாடுகின்றார். நால்வருணம் என்னால் படைக்கப்பட்டிருக்கின்றது என்று பகவத்கீதையில் கண்ணன் உபதேசிப்பதாய் உள்ளது. ஆனால் வள்ளலாரோ,

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலை …. (4174)

என்று தமது சீர்திருத்தத்தை அருட்பாவில் காட்டிச் சமுதாயப் பாகுபாட்டைச் சாடுகின்றார்.

தெய்வத்தை வழிபடுவதற்கு இடைத்தரகர்கள் தேவையில்லை என்றுரைக்கும் அவர், தெய்வத்திற்காக அதிகப் பொருட்செலவில் செய்யப்படும் பூசைகள், சடங்குகள் போன்றவற்றையும் மொட்டையடித்தல், காதுகுத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல் முதலியவற்றையும் பக்குவமும் பகுத்தறிவுமற்ற செயல்கள் என்று துணிந்துரைக்கின்றார்.

செத்தவர்களுக்கு செய்யும் பித்ரு காரியங்களான கருமாதி, திதி முதலிய சடங்குகளைக் கூட வீணாகப் பயனின்றிச் செய்யாமல் அந்த நாளில் அவர்களை (இறந்தவர்களை) நினைத்து ஏழைகளுக்கும், பசித்தவர்களுக்கும் அன்னதானம் செய்ய வலியுறுத்துகின்றார். பெண்களிடம் தாலி வாங்கும் சடங்கை ஒழிக்கவேண்டும். பிணத்தை எரிக்காமல் புதைக்கவேண்டும் என்பனவும் வள்ளலாரின் கொள்கைகளாகும்.    

சமரசத்தையும், சீவகாருண்யத்தையும் வள்ளலாரைப்போல் ஆழமாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தியவர்கள் வேறு எவருமில்லை எனலாம். 

”அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்!
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்!”
எனும் தம்முடைய உயர்ந்த எண்ணத்தைத் தமிழ் விண்ணப்பமாக இறைவனிடம் வைத்தவர் அவர்.

”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா வுயிரும் தொழும்”
எனும் குறளுக்கு இலக்கணமானவர்.

வாழ்வுக்கு வழிகாட்டும் வள்ளுவத்தை மக்களுக்குப் பாடமாக்கிச் சொல்ல திருக்குறள் வகுப்பை முதன்முதலில் தொடங்கிய ஆசான் அவர். எளிமையும் தன்னடக்கமும் வலிமையானவை என்பதை அண்ணல் காந்தியடிகளுக்கும் முன்னதாய்ச் செயலில் காட்டியவர். கூறுபோட்டு மனிதர்களைக் கொள்ளைகொண்ட சாதி, மதப் போக்குகளுக்கு இடையில் சோறுபோட்டு அவர்களுக்குச் சாகாக் கலையைச் சொல்லிக்கொடுக்கக் கடைவிரித்தவர்.

மதங்கடந்த மனிதநேயம், அதனையும் கடந்த ஆன்மநேயம் என்பதுதான் இராமலிங்க வள்ளலின் முடிமணியான கோட்பாடாய்த் திகழ்ந்தது. துன்புறும் உயிர்களுக்காக மட்டுமின்றி, வாடிய பயிர்களுக்காவும் வாடிநின்ற அந்தப் பேரருளாளரைப் போற்றுவோம்; அவர் வகுத்தளித்த கொலை புலை தவிர்த்த நன்னெறிப் பாதையில் பயணிப்போம்!

 கட்டுரைக்கு உதவியவை:

  1. http://www.tamilvu.org/ta/library-l5F31-html-l5F31noo-144976
  2. இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்.
  3. http://www.vallalar.org/tamil

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *