-செண்பக ஜெகதீசன் 

நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
-திருக்குறள் -924(கள்ளுண்ணாமை)

புதுக் கவிதையில்…

யாரும் விரும்பாத
கள்ளுண்ணல் என்னும்
கொடுங்குற்றத்தை
விடாமல் செய்வார்முன்,
நாணம் என்னும்
நல்லவளும்
நில்லாமல் சென்றிடுவாள்…!

குறும்பாவில்…

தகாதசெயலாம் கள்ளுண்ணல் பெருங்குற்றம,;
அதைச்செய்வாரை விட்டுவிலகிச் சென்றிடுவாள்
நாணம் என்னும் நல்லவள்…!

மரபுக் கவிதையில்

நல்லவள் நாணமாம் நங்கையவளும்
நீங்கியே புறமது காட்டிடுவாள்,
நில்லா துடனே போய்விடுவாள்
நிரந்தர மாகப் பிரிந்தேதான்,
பொல்லா தெனவே பிறர்விரும்பாப்
பெரிய குற்றமாம் கள்ளுணலைத்
தொல்லை யென்றே அறிந்திருந்தும்
தொடர்ந்து தீதிதைச் செய்வார்க்கே…!

லிமரைக்கூ..

கள்ளைக் குடிப்பார் விரும்பி,
குற்றமிதைத் தொடர்வோரை விட்டுச்செல்வாள்
நாணமெனும் நல்நங்கை திரும்பி…!

கிராமிய பாணியில்…

குடிக்காத குடிக்காத
கள்ளக் குடிக்காத,
குத்தமுண்ணு தெரிஞ்சியுமே
கள்ளக் குடிக்காத..

செய்யக்கூடாத செயலுண்ணு
தெரிஞ்சிருந்தும் கள்ளுகுடிக்கிற
தவறுயித
உடாமச் செய்யிறவன
உட்டு வெலவியே
வெக்கங்கிற நல்லவளும்
ஓடிடுவாளே திரும்பியே..

அதால
குடிக்காத குடிக்காத
கள்ளக் குடிக்காத,
குத்தமுண்ணு தெரிஞ்சியுமே
கள்ளக் குடிக்காத…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *