-நாங்குநேரி வாசஸ்ரீ

79. நட்பு

குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

சேக்கயா (நட்பா) இருக்கது போல ஒசந்த செயல் இல்ல. அதுகணக்கா பாதுகாப்புக்கு ஏத்த செயலும் வேற இல்ல.

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

அறிவுள்ளவங்கள சேக்காளிய வச்சிக்கிடதது வளர் பிறை கணக்கா. கூறுகெட்டவங்க கூட சேக்காளியா இருக்கது தேய்பிறை கணக்கா தேஞ்சுக்கிட்டே போவும்.

குறள் 783:

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

நல்ல புத்தகங்களப் படிக்கிதப்போயெல்லாம் சந்தோசம் உண்டாகுதது கணக்கா நல்ல கொணம் இருக்கவங்க கூட எப்பம் பழகினாலும் மகிழ்ச்சி உண்டாவும்.

குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு

ஒருத்தங்கூட சேக்காளியா இருக்கது எப்பமும் சந்தோசமா இளிச்சுக்கிட்டே இருக்கதுக்கு இல்ல. அவன் வேண்டாத வேலை செய்யுதப்போ கண்டிச்சு திருத்துததுக்குத் தான்.

குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

ஒருத்தங்கூட சேக்காளியா ஆவுததுக்கு ஒட்டுஒறவா இருக்கதோ கூடிக்குலாவுததோ அவசியமில்ல. ரெண்டுபேரோட நெனப்பும் ஒண்ணுபோல இருந்தாப் போதும்.

குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு

நேர்ல பாக்குதப்போ மொகத்துல மட்டும் சிரிப்பாணிய வச்சிக்கிட்டு மேலோட்டமா பழகுதது நல்ல சேக்க இல்ல. மனசார நேசத்தோட பழகுதது தான் நல்ல சேக்க.

குறள் 787:

அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

சேக்காளிய கெட்ட வழில போகவிடாம தடுத்து நல்ல வழியக் காட்டி கேடு வருத நேரம் அவன்கூட சேந்து சங்கடப்படுதது தான் உண்மையான சேக்க.

குறள் 788:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

உடுப்பு அவுந்து போவுத நேரம் கை எங்ஙன வெரசலா சரி செய்யுமோ,அது கணக்கா சேக்காளிக்கு சங்கடம் வருதப்போ வெரசலோ ஒதவுதவன் தான் உண்மையான சேக்காளி.

குறள் 789:

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

சேக்கைக்கு ஒசந்த நெல எதுன்னா எப்பமும் வித்தியாசமில்லாம தன்னால ஏலுத நேரமெல்லாம் சேக்காளிக்கு ஒதவி அவனத் தாங்குதது தான்.

குறள் 790:

இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

இவரு எம்மேல இத்தன பாசம் வச்சிருக்காரு. நானும் அப்டித்தான்னு ஒருத்தருக்கொருத்தர் அலங்காரப் பேச்சு பேசினாகன்னா சேக்க அல்பமா போயிடும்.

(அடுத்தாப்லையும் வரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *